27

27

சரணடைந்த புலிகளுக்கு சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக புனர்வாழ்வு அளிக்கப்படும் – அரசு அறிவிப்பு

sri-lanka.jpgபாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் பிரகாரம் கவனிப்பதற்கும், ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எஞ்சியுள்ள சந்தேக நபர்கள் பொலிஸாரிடமோ அல்லது இராணுவத்தினரிடமோ சரணடைவதற்கான காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இராணுவ முகாம்களிலோ சென்று சரணடையுமாறு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இலங்கை வங்கிக் கிளை

rizad_baduradeen1.jpg வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் கருதி வவுனியாவிலுள்ள இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இலங்கை வங்கிக் கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள இலங்கை வங்கியின் பிரதான காரியாலயத்துடன் இணைந்ததாக இயங்கவுள்ள இவ்வங்கியை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் திறந்து வைத்தார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஏனைய நலன்புரி நிலையங்களில் 7 நடமாடும் வங்கிக் கிளைகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வைபத்தில் அமைச்சர்களான விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

கே.பி.யைக் கைது செய்ய நடவடிக்கை – சர்வதேச பொலிஸார் தீவிரம்

Selvarasa_Pathmanathan_LTTEகே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்ய சர்வதேச பொலிஸார் வலை விரித்துள்ளனர்;.

இவரது மறைவிடங்கள் என்று கருதப்படும்  தாய்லாந்து. மலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் சில நாடுகளில் இவர் தொடர்பான புலன் விசாரணைகளை சர்வதேச பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் இலங்கை அரசும் இந்திய அரசும் விடுத்து கோரிக்கையையடுத்தே கே.பி.யைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர்கள் மீண்டும் அதே பதவியில் – அமைச்சர் ரிஷார்ட் நடவடிக்கை

rizad_baduradeen1.jpgபாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ள கிராம சேவை உத்தியோகத்தர்களை மீண்டும் அதே பதவியில் நியமிப்பதற்கு அனர்த்த நிவாரண சேவைகள் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம்.ஹாலிடீன் தெரிவித்தார்.

இவ்வாறு நியமனம் பெறும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு குடி நீர் மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

இறப்பு பிறப்பு தொடர்பான விடயங்களைப் பதிவு செய்வதற்கு உதவும் அதேவேளை நலன்புரி நிலையங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக முகாமைத்துவத்துக்கு அறிவிக்க வேண்டுமெனவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை வெற்றிபெறும் – அமைச்சர் சமரசிங்க நம்பிக்கை

mahinda_samarasinghe_.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களில் இலங்கை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அனர்த்;த முகாமைத்துவ மற்றும்  மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாகக் கூட்டப்பட்டிருக்கும் விசேட அமர்வில் இலங்கைக்குப் போதியளவு ஆதரவு இருப்பதாகவும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை என்பது நிரூபிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

எம்மீது விசாரணை நடத்தப்படவேண்டிய தேவை இல்லை. பல்வேறு தரப்பினரால் அரசியல் அறிக்கைகள் பல வெளியிடப்பட்டுள்ளன. இவற்றைக் கொண்டு நாம் உணர்ச்சிவசப்படத் தேவையில்லையென நான் கருதுகிறேன் என அமைச்சர் ஜெனீவாவில் ஊடகங்களுக்குத்  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடந்திருக்கும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை கூறியிருந்தார். எனினும், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் தேவையென மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் கூறவில்லையென அமைச்சர் சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எமக்கு எதிராகப் போர் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசா வழங்கவில்லையென்ற கேள்விகள் எதுவும் எழாது. ஏனெனில், உள்ளூர் விவகாரங்களை அரசாங்கம் சட்டரீதியாகக் கையாழும் என்றார் அமைச்சர். மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருப்பதுடன், அதற்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பதிலறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் உறுப்பு நாடுகள் மத்தியில் மாற்றுக் கருத்துக்கள் காணப்படுவதாகத் தெரியவருகிறது. சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலேசியா, பஹ்ரெய்ன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவுதி அரேபியா, எகிப்து, நிக்கரகோவா, பொலிவியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவு வழங்குகின்றன.

இலங்கைக்கு முன்னர் ஆதரவு வழங்கிய ஈராக் தனது நிலைப்பாட்டை மாற்றியதுடன், இலங்கை மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டுமெனக் கோரிக்கை விடுத்திருந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கில் இந்திய எண்ணெய் நிறுவன எரிபொருள் நிரப்பும் நிலையம்

loc_logo.jpgவடக்கு கிழக்கில்; புதிதாக தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களை திறக்கவுள்ளதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் 150 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நாடளாவிய ரீதியில் தற்போது  உள்ளன. மேலும் 300 நிலையங்களை புதிதாகத் திறப்பதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி ஒவ்வொரு நிலையத்துக்கும் 20 மில்லியன் ரூபா வீதம் இத்திட்டத்துக்கு 6 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். 

லாஹூர் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி!

பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரும் மீட்பு பணியாளர்களும் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களையும் காயமடைந்தவர்களையும் அருகிலுள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும் வெளியிடங்களிலும் தொடர்ச்சியான குண்டு வெடிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள்  இடம்பெற்றுவருவதன் காரணமாக பெருந்தொகையான சிவிலியன்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் இரண்டாவது அமர்வு இன்று

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களை மறுத்து ரஷ்யா மற்றும் சீனப் பிரதிநிதிகள் நேற்றைய அமர்வில் உரையாற்றினர். ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று உரையாற்றவுள்ளனர் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் உறவினரை காணவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் செயலாளரான தவராஐசிங்கம் சுபாஸ் (23 வயது) என்பவர் நேற்று அதிகாலை முதல் மர்மமான முறையில் காணாமல்போயுள்ளார். சென்னையிலிருந்து கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்த இவர் அங்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் , இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தியின் சகோதரியின் மகனான இவர் தனது பெற்றோருடன் கொழும்பிலேயே வசித்து வருகின்றார்.

நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்த சமயம் அங்கு வைத்து கைது செய்யப்பட்டடதாக தகவலறிந்த தாயார் இக்கைது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் ஊடாக பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டதாகவும், இதன் பிரகாரம் நேரடியாக வந்து அழைத்துச் செல்லுமாறு பொலிஸ் பொறுப்பதிகாரியினால் பதிலளிக்கப்பட்டதாகவும் இது தொடர்பாகக கூறப்படுகின்றது.

கொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

canada-2.jpgகொழும்பிலுள்ள கனேடிய தூதரகம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. கனேடிய அரசங்கம் விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கோஷங்களை எழுப்பியதுடன் பாதாதைகளையும் ஏந்தியிருந்தனர்