இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த பிப்ரவரி திங்களில் இருந்து சுமார் நான்கு மாத காலமாக என் உடலில் தவிர்க்க முடியாததும் அபாயம் நிறைந்ததுமான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை நடைபெற்று, அதன் தொடர்ச்சியாக உடல் நலிவுற்று-இன்னமும் நடக்க முடியாமல், சக்கர நாற்காலியில் தான் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக திருச்சி கூட்டத்திற்கு சென்றதாலும், வேறு சில மண விழாக்களில் பங்கேற்றதாலும் மீண்டும் உடல் நலிவுற்று, திரும்பவும் மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. தேர்தல் பிரசாரக் கூட்டங்களைத் தவிர்க்கவும் ஒரு சூழ்நிலை உருவானதை அனைவரும் அறிவர்.
இந்த உடல் நலிவுடன் அரசு நிர்வாகப்பணிகளில் முழு கவனம் செலுத்த இயலவில்லை. வாரம் ஒன்றுக்கு நூறு கோப்புகளுக்குக் குறையாமல் பார்த்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. மேலும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு வாரியப்பணிகள் மற்றும் அரசுத்துறை பணிகளை எல்லாம் அன்றாடம் கலந்து பேசி முடிவெடுத்து செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு கவனிக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
எனவே இந்தப் பணிகளை நிதியமைச்சர் பேராசிரியர் ஏற்று நடத்த முடியுமா என்று அவரிடம் விவாதித்ததில் அவருக்கும் உடல் நிலை இடந்தராத நிலைமையை எடுத்துச்சொல்லி, அதன் பிறகு நாங்கள் இருவரும் கலந்து பேசி இரண்டொரு முக்கிய துறைகளின் பொறுப்புகளை மட்டும் நான் வைத்துக் கொள்வதென்றும் பேராசிரியர் அவையின் முன்னவராகவும், நிதி அமைச்சராகவும், தொடர்வதென்றும், எங்கள் இருவருக்கும் அடுத்து இப்போது பகிர்ந்தளிக்கப்படுகிற இலாக்காக்களையும் பொறுப்பேற்று துணை முதல்வர் என்ற நிலையில் மு.க.ஸ்டாலின் செயல்படுவதென்றும் முடிவு செய்து அதற்கான அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.