30

30

மூன்று மருத்துவர்களையும் விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கோரிக்கை

da-de.gifபுலித் தலைமையின் பிடியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருகைதந்த நிலையில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டுள்ள வரதராசா, சண்முகராசா சத்தியமூர்த்தி ஆகிய மருத்துவர்களை அவர்களது உறவினர்களுடன் இணைப்பதற்கு உதவுமாறு  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்  ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

தயா மாஸ்டர் 5 மணி நேரம் வாக்குமூலம்

dayamaster000.gif
விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் எனும் வேலாயுதம் தயாநிதி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்பு ஆராச்சி முன்னிலையில் சுமார் 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் தொடர்ச்சியாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளரது உத்தரவின் பேரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சி.ஐ.டி.யினரால் தொடர்ந்தும் விசாரிக்கப்பட்டு வரும் தயா மாஸ்டர் தானாக முன்வந்து வாக்குமூலமளிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்தே நேற்று அவர் கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிரகாரம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் நீதிவான் முன்னிலையில் ஆயர்ப்படுத்தப்பட்டு பிற்பகல் 1.10 மணியளவில் ஆரம்பித்து மாலை 5.50 மணிவரை அவர் வாக்குமூலமளித்துள்ளார்.  பிரதம நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வைத்தே தயா மாஸ்டரிடம் இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

மொழி பெயர்ப்பாளர், தட்டெழுத்தாளர் தவிர சி.ஐ.டி.அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் அறையிலிருந்து வெளியேற்றி விட்டே நீதிவான் தயா மாஸ்டரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளார்.

வன்னியைச் சேர்ந்த 47 பேரின் சடலங்கள் மன்னாரில் அரச செலவில் அடக்கம்

ஜனவரி மாதம் 13 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 27 ஆம் திகதிவரை 47 சடலங்களை மன்னார் பிரதேச செயலகம் அரச செலவில் அடக்கம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னிப் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுமக்களில் உயிரிழந்த 47 பேரின் சடலங்களே இவ்விதம் அரசாங்க செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் மன்னார் மாவட்ட நீதிவான் ஏ.யூட்சனின் உத்தரவின் பேரில் அடையாளம் காண்பதற்காகவும் உறவினர்கள் உரிமை கோருவதற்காகவும் மன்னார் பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

எனினும், சடலங்களை எவரும் பொறுப்பேற்க முன்வராத நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரன்லி டி மெல்லின் ஏற்பாட்டில் குறித்த சடலங்கள் மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவ்விதம் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களில் ஜனவரி மாதத்தில் மட்டும் 15 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி

kovairamesh.jpg கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (30). சன் டி.வி.யில் வாரந்தோறும் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். பெண் வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்த நிகழ்ச்சியால் பிரபலமான ரமேஷ், தனியாக கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் நேற்றிரவு திருவாரூரில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் காங்கயம் – திருச்சி ரோடு கொடுமுடி பிரிவு என்ற இடத்தில் வரும்போது கோவையில் இருந்து மணல் எடுக்க கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாயினர்.

இதுபற்றி தகவலறிந்ததும் காங்கயம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புலிகளின் நிதியுதவியில் செயல்பட்ட ஊடகவியலாளர்கள் மீது விசாரணை – பொலிஸ் மா அதிபர்

விடுதலைப்புலிகளின் கொடுப்பனவுகளில் பல பத்திரிகையாளர்கள் செயற்பட்டதாகவும் அவர்களில் அநேகமானோர் சிங்களவர்கள் எனவும் கிளர்ச்சியின் போது அவர்களுக்கு அதிகளவு சம்பந்தம் இருந்தமை பிந்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண தெரிவித்திருக்கிறார். அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என். இற்கு வியாழனன்று அளித்த பேட்டியில் பொலிஸ் மா அதிபர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

இந்த தேசத்துரோக செயல் தொடர்பாக பொலிஸாருக்கு அதிகளவு விபரங்கள் தெரியும். மேலதிகமான விசாரணைகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் என்பதால் அவை யாவற்றையும் வெளியிட நான் விரும்பவில்லை. உன்னதமான தொழிலுக்கு அவர்கள் துரோகம் இழைத்துள்ளனர். இலங்கை தொடர்பாக திரிபுபடுத்தப்பட்டவற்றை மட்டுமன்றி, பணத்திற்காகவும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற ஏனைய அனுகூலங்களுக்காகவும் அவர்கள் அவ்வாறு செயற்பட்டுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

அண்மையில் இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளரான தயா மாஸ்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது கொழும்பிலுள்ள பத்திரிகையாளர்கள் புலிகளின் கொடுப்பனவுகளில் செயற்பட்டார்களா என்பது குறித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடிந்ததா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவை தொடர்பான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது உண்மை என்று பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார். இந்த ஆதாரங்களில் அநேகமானவை தம்மை வெட்கப்பட வைத்ததாகவும் அந்தப் பத்திரிகையாளர்களில் அநேகமானவர்கள் சிங்களவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

அவர்களில் பலர் சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் என்றும், எப்போதும் மக்களின் ஊடக சுதந்திரம், ஜனநாயக மனித உரிமைகளுக்காக கதைப்பவர்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அம்பலமானதுடன் அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் நாட்டை விட்டு சென்றதாகவும், உண்மையில் குற்றச் செயலில் சம்பந்தப்பட்டிருந்ததாலேயே அவர்கள் நாட்டைவிட்டு சென்றதாகவும், பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருக்கிறார். அவர்களால் இலகுவில் சட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். புலிகள் யுத்தத்தில் தோல்விகண்டு வந்த நிலையில் அவர்கள் வெளியேறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

புலிகளுக்கு சார்பாக அவர்களில் சிலர் தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாகவும், வெளியேறும் பொதுமக்களை புலிகள் சுட்டபோது பொதுமக்கள் மீது இராணுவம் செல்வீச்சு நடத்தியதாகவும் அவர்கள் தவறாக செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். விடுதலைப்புலிகளின் நண்பர்களுக்கு அவர்கள் திரிபுபடுத்தப்பட்ட ஆதாரங்களை வழங்க நிகழ்ந்ததாகவும் இலங்கைத் தலைவர்கள் மீது போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக புலிகளின் நண்பர்களுக்கு அவற்றை வழங்கியதாகவும் பொலிஸ் மா அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், அந்தப் பேட்டியின் போது ஆட்களின் பெயர்களை பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டிருக்கவில்லை.

வவுனியா முகாம்களில் 200 புலிச் சிறுவர்கள்

child_solders_.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுடன் புலிகளின் ஆயுதப் படையில் இருந்த 200 சிறுவர்கள் வவுனியா முகாம்களில் தங்கி உள்ளதாக ஐ.நா வின் யுனிசெப் நிறுவன இலங்கைப் பிரதிநிதி பிலிப் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 59 பேர் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்  அவர் மேலும் கூறினார். 

ஈரானில் குண்டுவெடிப்பு : 23 பேர் பலி

iran-bomb.jpgஈரானின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஜாகிதான் நகரில் உள்ள ஷிட்டி மசூதியில் மாலை நேர பிரார்த்தனை நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் சிக்கி பலியாகியவர்கள் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முகம்மது நபிகளின் மகளான பாத்திமாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பிரார்த்தனையின் போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம்

mahinda-0000.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் புனர்வாழ்வு குறித்து ஆராய்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வரவுள்ளார் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எம்.எல்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

“இலங்கை ஜனாதிபதி அடுத்தவாரம் இந்தியாவுக்கு வருவார் என நாம் எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் அவருடன் பேச்சுகள் இடம்பெறும். இலங்கையின் நெருக்கடிகள் தற்போது முடிவடைந்துள்ளன. அங்கு புனர்வாழ்வு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளன. அது மிகப் பாரிய பணியாகும்” என்றும் கிருஷ்ணா மேலும் தெரிவித்தார். 

இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகள் ஜுன் மாதம் பின்லாந்தில் கூடுகின்றன!

finland.jpgஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் நிதி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் பின்லாந்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இடம்பெயர்ந்த நிலையில் உள்ள பொதுமக்களின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கும் நோக்கிலேயே இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. பின்லாந்தின் ஹெல்சின்கி நகரில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாநாட்டில் ஐ.நா. மனிதமாபிமான நடவடிக்கைகளுக்கான அமைப்பில் அங்கம் வகிக்கும் 21 நிதி வழங்கும் நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான உதவித் திணைக்களமும் கலந்துகொள்ளவுள்ளன.  நிதிவழங்கும் நாடுகள் சங்கத்தின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள பின்லாந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அமைப்பின் பொது உதவி நிதிக்காக இவ்வருடம் 2 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்குத் திரும்ப விரும்பும் அகதிகளின் பெயர்கள் சேகரிப்பு

refugee_.jpgஇலங்கை திரும்ப விருப்பம் தெரிவிக்கும் அகதிகள் விவரத்தை பொலிஸார் சேகரித்து வருகின்றனர். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரினால் அங்கிருந்த மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். இவர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்ததையடுத்து, இங்குள்ள அகதிகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பும் அகதிகள் பட்டியலை பொலிஸார் தயாரித்து வருகின்றனர். உயிர், உடைமைக்கு பாதுகாப்பு இருக்கும் நிலையில் இலங்கை செல்ல இவர்கள் விருப்பம் தெரிவித்ததாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்