நாட்டில் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதே அரசின் இன்றைய முக்கிய பணியாகும். அதை விடுத்து 13 ஆவது சட்ட திருத்தத்துக்கோ, அரசியல் தீர்வுக்கோ அரசாங்கம் முக்கியத்துவமளிக்கவில்லையென என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, இடம்பெயர்ந்துள்ள எமது சகோதர மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் முதலாவதும் இரண்டாவதும் மூன்றாவதுமான பணியாகும்;
தரைவழியாகவும் கடல் வழியாகவும் ஆகாய மார்க்கமாகவும் இராணுவ ரீதியில் இன்று பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளனர். அதன் சிதைவுகளை அகற்றும் பணியில் இன்று படையினர் ஈடுபட்டுவருகின்றனர். யுத்தத்தின் பின்னர் தோன்றியுள்ள உணர்வுபூர்வமான மனிதநேய பிரச்சினைகளுக்கு இன்று நாம் முகம் கொடுத்துள்ளோம்.
ஆனால் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி நாட்டின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் முயற்சியில் சில சக்திகள் இறங்கியுள்ளன. இடம்பெயர்ந்தவர்களின் இயல்பு வாழ்வைத் தோற்றுவிக்கும் சவாலை அரசாங்கம் ஏற்று அதனை முன்னேடுத்துச் செல்கின்றது. இதனை நாம் உரிய முறையில் நிறைவேற்றத் தவறினால் மனிதாபிமான நடவடிக்கையால் நாம் அடைந்து வெற்றியால் முழுப் பயனையும் அடைந்து கொள்ள முடியாமல் போகும்.
எனவேதான் பெருந்தொகைப் பணச் செலவில் அந்த மக்களை மீள்குடியமர்த்தும் பணிகளை அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. அந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரிந்து சென்ற குடும்பங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சமைத்த உணவுக்குப் பதிலான அவர்களே தாம் விரும்பிய சுவையில் சமைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
13 ஆவது அரசியில் திருத்தச் சட்டம் எங்கே? யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் எஞ்சிய பணமெங்கே? அதிகாரப் பரவலாக்கம் எங்கே? இறுதித் தீவெங்கே? என்றெல்லாம் இன்று அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இவையெல்லம் இரண்டாம் தரப்பிரச்சினைகளே. எமது முதலாவது இலக்கு இடம்பெயர்ந்த எமது சகோர மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்பதேயாகும்.
இலங்கையின் சனத்தொகையில் 2 சதவீதமானோர் இன்று இடம்பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்குள்ள ஒரே பிரச்சினை தமது இயல்பு வாழ்வில் மீண்டும் இணைந்துகொள்வதே. அதனை சீராக செய்து முடிப்பதையே இன்று அரசு தனது முதற்தர பணியாகக் கொண்டுள்ளது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அடிப்படை உரிமைகள் அனைத்தையும் இழந்த அப்பாவி மக்கள்தான் இன்று நலன்புரி முகாம்களில் உள்ளனர்.
ஒருவனின் ஆணைக்கு அடங்கிப்போன இந்த மக்களுக்கு ஜனநாயம் என்ற சொல்லின் அர்த்தம்கூடப் புரியாது. அந்த அடக்கு முறையிலிருந்து இந்த மக்கள் இன்று மீண்டுள்ள போதும் அவர்களுக்கு இன்னும் வசதியான வாழ்வு அமையவில்லை. அதனை அரசாங்கம் கூடிய விரைவில் பெற்றுக்கெடுக்கும். பயங்கரவாதத்தை துரத்தியடிக்க ஊடகவியலாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். அதேபோன்று இன்று நாடு எதிர் நோக்கும் சவால்களை அரசு வெற்றி கொள்ளவும் ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தொடாந்து வழங்கவேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்