June

June

ஊடக சுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்தை பாதிக்கக் கூடாது – அமைச்சர் நிமல்

26parliament.jpgஇலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தின் மூலம் மற்றைய தரப்பினர் மாத்திர மன்றி, ஊடகத் துறையினரும் நன்மையடையலாமென்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை விடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த நாட்டில் காட்டுச் சட்டத்தையா அமுல்படுத்தச் சொல்கிறது? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை மீள செயற்படு த்த வேண்டியது அவசியமில்லை என எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்த போதே அமைச்சர் நிமல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று (26) வெள்ளிக்கிழமை காலை 9.30 இற்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில் கூடியது. முதலில் சபாநாயகர் நேற்று முன்தினம் சபையில் தெரிவித்த ஒரு கருத்துக்குத் திருத்தமொன்றை அறிவித்தார். 1997ஆம் ஆண்டு பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமைச்சராக இருந்தபோது பாராளுமன்றம் ஊடகங்கள் தொடர்பில் ஒரு நீதிமன்றமாக செயற்படக் கூடிய அதிகாரங்கள் நீக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது தவறு என்றும் அது உண்மையில் 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி மங்கள சமரவீர அமைச்சராக இருந்தபோதே நிகழ்ந்திருக்கின்றது என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின், நேற்றைய ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியான ஒரு செய்தி குறித்து ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு அமைய இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளாரென்றும், உண்மையில் தமது கட்சி அவ்வாறான ஒரு கோரிக்கையையோ, இணக்கத்தையோ தெரிவிக்கவில்லை என்றார். அதேநேரம், சபையிலிருந்து ரவூப் ஹக்கீம் எம்.பி. எழுந்து கருத்துக் கூறுகையில் :-

ஏற்கனவே உள்ள ஒரு சட்டத்தை மீளச் செயற்படுத்த வேண்டியது அவசியமில்லை என்றும், இவ்வாறான விடயங்களுக்கு பாராளுமன்ற குழுக் கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்படும் கருத்துககைளக் கருத்திற்கொள்ளக்கூடாது என்றதுடன் வத்தளையிலிருந்து ஒரு பெண் ஊடகவியலாளர் கண்டிக்குக் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்’ என்றார்.

அவ்வேளையில் சபையிலிருந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ‘அவ்வாறான பிரச்சினைகளால்தான் சட்டம் அவசியமாகிறது. அப்படியானால் முஸ்லிம் காங்கிரஸ் காட்டுச் சட்டத்தையா அமுல்படுத்தச் சொல்கிறது. இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் இவ்வாறான சட்டம் உள்ளது. ஊடகச் சுசுதந்திரம் மற்றவரின் சுதந்திரத்தைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இங்கு எத்தனையோ பேர் பல முறைப்பாடுகளைச் செய்கிaர்கள். எல்லாவற்றுக்கும் இந்தச் சட்டத்தால் நன்மைதான் கிடைக்கும்’ என்றார்.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்திற்கு உலக நாடுகள் நிதிஉதவி – அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த

11edu-min.jpgஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் பல தமிழ்க்கட்சிகளுடன் இணைந்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.இந்த மாவட்டங்களில் பல நகர அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலையில் அதனை பிரதான நோக்கமாகக் கொண்டு நாம் போட்டியிடுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். புதன்கிழமை மாலை வவுனியா நகரசபை தேர்தலுக்குரிய வேட்பு மனுவை தாக்கல் செய்தபின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது மேற்கண்டவாறு கூறினார்.

நாம் நகரசபையை கைப்பற்றினால் மக்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான சகல தேவைகளையும் செய்வோம்.எங்களுடைய கட்சி சின்னத்தில் ஈ.பி.டி.பி.,ஈரோஸ், ரெலோ சிறி அணியினர் இணைந்து போட்டியிடுகின்றனர். அத்துடன் அமைச்சர் றிசாட் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸு இணைந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

யுத்தம் முடிந்துவிட்டது.அபிவிருத்தியே முக்கிய இலக்காகவுள்ளது. வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அபிவிருத்தி வேலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் ரிசாட் பேசுகையில்; வடக்கே மூன்று சமூகங்களையும் சேர்ந்த மக்களை ஒரே அணியில் தேர்தலில் பங்கு கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த இந்த அரசாங்கத்திற்கு நாம் நன்றி தெரிவிக்கவேண்டும். தேவைகள் இனம்காணப்பட்டு வடக்கின் வசந்தம் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் அதற்காகவே ஒரு அணியில் போட்டியிடுகிறோம் என்றார்.

தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – தோமஸ் எம்.பி.

26parliament.jpgதமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தோமஸ் தங்கத்துரை வில்லியம் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை திருத்தச் சட்ட மூல விவாதத்தில் கன்னி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;  இன்று இலங்கையில் தீவிரவாதம் என்ற சொல் இல்லாமல் போய்விட்டது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அரசு முயற்சிகளை முன்னெடுத்தால் அதற்கு நாம் எமது ஆதரவை வழங்குவோம். எனவே, தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றபோதும் அவை மிகவும் மந்த கதியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

மூன்று புதிய வெளிநாட்டு முதலீடுகளுக்கு முதலீட்டுச் சபை அங்கீகாரம்!

26boi.jpgமூன்று  புதிய வெளிநாட்டு முதலீடுகளுக்கு இலங்கை முதலீட்டுச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இம்மூன்று முதலீடுகளும் 171 மில்லியன் ரூபாவைக் கொண்டதாக உள்ளதுடன் இதில் ஒன்று ஆடை தயாரிக்கும தொழிற்சாலைக்கானதாக உள்ளது.

300 முதலீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இத்தொழிற்சாலை மூலம் 250 தொழில் வாய்ப்புகள் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படும் இத்தொழிற்சாலை  மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

இதேவேளை ஆடைஉற்பத்தி சார்ந்த மற்றுமொரு தொழிற்சாலை 57 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. போரளஸ்கமுவை பகுதியில் 69 மில்லியன் ரூபா செலவில் மற்றுமொரு தொழிற்சாலையை நிருவ இலங்கை முதலீட்டுச் சபை அனுமதியளித்துள்ளது. பொருட்கள் பொதி செய்யும் இதன் மூலம் மேலும் 100 பேருக்கு தொழில் வாய்ப்புக் கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உருளைக் கிழங்கு வடிவத்தில் கொண்டுவரப்பட்ட 2.5 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது

ஒருகோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான 21/2 கிலோகிராம் ஹெரோயினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் உருளைக்கிழங்கு வடிவத்திலான 46 பெட்டிகளில் இந்த ஹெரோயின் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

இந்த உருளைக் கிழங்கு கொள்கலன் பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திலிருந்து கடந்த ஞாயிறு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது சுங்கப்பகுதியின் உறுகொடவத்த புதிய பரிசோதனை நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே சுங்கப்பகுதியினரால்யினரால் கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இது தொடர்பில் போதைப் பொருள் ஒழிப்பு அத்தியட்சர் எம்.விக்கிரமரட்ண மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளார்.

“இலங்கையில் வருடாந்தம் 3 இலட்சம் வாகன விபத்துகள்’

26parliament.jpgஇலங் கையில் வருடாந்தம் மூன்றுலட்சம் வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன. இதில் 2300 பேர் வரை பலியாகின்றனரென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் கிழமை இடம்பெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

தினமொன்றுக்கு எட்டரை லட்சம் மக்கள் கொழும்புக்குள் வருகின்றனர். இவர்களில் 3 இலட்சம் பேர் ரயில்மூலமும் ஐந்தரைலட்சம் பேர் 12 ஆயிரம் பஸ் வண்டியிலும் 1,75000 பேர் ஏனைய வாகனங்கள் மூலமும் வருகின்றனர்.

வருடாந்தம் 3 இலட்சம் விபத்துகள் இடம்பெறுகின்றன இதில் 2300 பேர் உயிரிழக்கின்றனர். எனவே, உரிய வீதி அபிவிருத்தி தேவைப்படுகின்றது. அதனை இலக்காகக் கொண்டே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

களனி மேம்பாலம் கட்டப்படுவதற்கு பெரும் தொகைப்பணம் செலவிடப்பட்டதாக சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த மேம்பாலம் அமைக்கப்படுவதற்கு முன் இந்த வீதியில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டிருந்தது.

24 மணி நேரத்தினுள் 8 மணி நேரம் ரயில் பாதை மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக எரிபொருள் வீண்விரயமாகியது. எரிபொருள் சுமார் 1.5 பில்லியன் ரூபாவரை வீண்விரயமாகியது தற்போது இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் வெட்டு

tap_water.jpgகொழும் பின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகக் குழாய்களில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்படவிருப்பதால் இன்று காலை 8 மணி முதல் இந்த நீர் வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. களனி, பேலியகொட, ஹெந்தல,  வத்தளை, மகர மற்றும் கிரிபத்கொட ஆகிய பிரதேசங்களிலிலேயே இந்த நீர் வெட்டு அமுலாக்கப்படும். எனவே முன்கூட்டியே நீரைச் சேமித்துக்கொள்ளுமாறு பொது மக்களுக்கு சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அரசினால் திணிக்கப்பட்ட தேர்தலில் போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் – தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன்

மூன்று இலட்சம் மக்கள் அகதியாகவுள்ள நேரத்தில் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் எம்மீது திணிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியுள்ளோம். இந்த தேர்தல் ஊடாக அரசு யுத்தத்தின் பிற்பாடு தமிழ்மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை நாடிபிடித்து பார்க்கும் ஒரு குட்டி தேர்தலாகவே இது அமைந்துள்ளதென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

நகர சபைக்குரிய வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் பேசும்போது கூறியதாவது; யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள், மனக்காயங்கள் தமிழ் மக்கள் மனதில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் இலங்கை தமிழரசுக் கட்சி அமோகவெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய மீள்குடியேற்றம், தமிழ்மக்களுடைய நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய அரசியல் தீர்வுகளை முன்னெடுப்பதற்காக எமது கட்சி தொடர்ந்தும் உழைக்கும். நகர சபைக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி நகர எல்லைக்குள் பல்வேறுபட்ட பணிகளை எம்மால் செய்ய உத்தேசித்துள்ளோம்.

பாராளுமன்றம் தவிர்ந்த ஏனைய நாட்களில் நாம் எமது தொகுதியில்தான் தங்கியுள்ளோம். மாவட்டத்தைவிட்டு வெளியேறவில்லை. மக்களோடு மக்களாகவே தங்கியுள்ளோம். நகர எல்லைக்குள் உள்ள வடிகால் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கரையோர ரயில் சேவை அஹங்கமை வரை

train_.jpgஅவசர திருத்த வேலை காரணமாக தெற்கு ரயில் சேவை மூன்று தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

அதன்படி சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 29 ஆம் திகதி அதிகாலை 3 மணி வரை கரையோர ரயில் சேவைகள் அஹங்கம ரயில் நிலையம் வரை மட்டுமே இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

அஹங்கமவுக்கும் வெலிகமைக்கும் இடையிலான ரயில் பாலத்தின் திருத்த வேலைகள் இடம்பெறுவதால் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது 

தோட்டப்புற தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் வழங்கப்படவில்லை

பெருந் தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை. ஐந்து மாதங்கள் கடந்துவிட்டபோதிலும், இன்னும் இவை தமக்கு வழங்கப்படாமை குறித்து தபால் சேவகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது, தமது சொந்த சைக்கிள்களையே கடமையின்போது பயன்படுத்திவரும் இவர்களுக்குச் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, தோட்டப்பகுதிகளில் கடிதங்களைச் சேகரிக்க ஆங்காங்கு குறிப்பிட்ட இடங்களில் தபால் பெட்டிகளைப் பொருத்துவதென முடிவு செய்யப்பட்டபோதிலும் இன்னும் அவை பொருத்தப்படவில்லை.

மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் நான்கு பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் பதினாறு பேரும் கொழும்பு மாவட்டத்தில் ஏழு பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.

எனவே, தபால் திணைக்களம் இவர்களுக்கான சீருடை, சைக்கிள் என்பனவற்றை வழங்க முன்வருவதுடன், ஏற்கனவே அறிவித்தபடி இரண்டாம் கட்டத்திலான தபால் சேவகர்களையும் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், தபால் சேவகர்களைச் சேர்த்துக்கொள்ளும் முகமாக வெளியிடப்பட்ட அறிவித்தல்கள் உரியமுறையில் தோட்ட இளைஞர்களிடையே போய்ச் சேரவில்லையெனவும் இதனால், தகுதியும் திறமையும் இருந்தும் பலர் நியமனம் பெறும் வாய்ப்பை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.