June

Sunday, September 19, 2021

June

சிறுமி உட்பட 3 பெண்களின் சடலங்கள் நுவரெலியா பகுதி வீடொன்றிலிருந்து மீட்பு – 3 வயதுச் சிறுவனைக் காணவில்லை

நுவரெலியா, அம்பேவல பட்டிப்பொல பகுதியில் வீடொன்றிலிருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மூவரது சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவர் உட்பட 3 பெண்களது சடலங்களே மீட்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். பட்டிப்பொல ஜனப்பதிய என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; சந்திரதிலக என்பவர் மகியங்கனை தெகியத்தகண்டியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி, பிள்ளைகள் ஜனப்பதிய கிராமத்தில் வசித்து வந்தனர்.

சந்திரதிலக ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்துள்ளார். எனினும் வீடு பூட்டியிருக்கவே அந்தக் கிராமத்தில் உள்ள மைத்துனரின் வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு நேற்றுக் காலை அங்கு வந்தபோதும் வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, மனைவியும் அவரது தாயும் மகளும் இறந்துகிடந்தனர். இது குறித்து அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு தெரிவிக்கவே பொலிஸார் அங்கு வந்து சேர்ந்தனர்.

இறந்துகிடந்த மூவரும் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதேநேரம், வீட்டிலிருந்த 3 வயது மகன் காணாமல் போயுள்ளார். பிரேமவதி (80 வயது) அவரது மகளும் சந்திரதிலகவின் மனைவியுமான மல்லிகா (35 வயது) மற்றும் அவரது 10 வயது மகளுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கான காரணம் குறித்து நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைக்காக 3 சடலங்களும் நானுஓயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டன. காணாமல் போன சிறுவனை பொலிஸார் தேடி வருவதுடன், கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

த.ம.வி.பு. கட்சி சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்துகொள்வோரின் விபரம்

tmvp_logo.jpgதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் சர்வ கட்சி மகாநாட்டில் கலந்து கொள்ளும் புதிய பிரதிநிதிகளின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரான யூடி தேவதாசன் ,மற்றும் அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான மொகமட் மிஹிலார் மொகமட் ஹன்தஷிர் (ஆசாத் மௌலானா) ஆகியோர் சர்வ கட்சி மகாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்கனவே சர்வ கட்சி குழுவில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீத்தா பிரபாகரன் இடம் பெற்றிருந்தார்.அவர் அக் கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே அவரது இடத்திற்கு யூடி தேவதாசன் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முருகையன் “புத்திஜீவிக் கவிஞன்’ மறைவு தமிழ் இலக்கியத்திற்கு பேரிழப்பு – பேராசிரியர் சிவத்தம்பி

Kvingar Murugaiyan Photo - Thamayanthyகவிஞர் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்லாது தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பேரிழப்பாகுமென பேராசிரியர் கா.சிவத்தம்பி தெரிவித்துள்ளார். முருகையனின் மறைவு குறித்து அவர் வெளியிட்ட அஞ்சலியில்;

கவிஞர் முருகையன் காலமாகிவிட்டார் என்ற செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைலாசபதியுடன் யாழ்.இந்துக் கல்லூரியில் சக மாணவனாக இருந்த முருகையன் பின்னர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் போது சிவஞானசுந்தரம் ஆகியோரது நட்பு மூலமாக நன்கு பிணைப்புற்றிருந்தோம்.

கல்விப் பிரசுரத் திணைக்களத்தில் பதிப்பாளர் பதவி வெற்றிடமானதும் அவர் கொழும்புக்கு வந்து முதன் முதலில் எழுதிய கவிதை நாடகம், முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் இடம்பெற்ற, “குற்றம் குற்றமே’ எனும் கவிதை நாடகமாகும். கல்வி மொழித் திணைக்களத்தில் அவர் பதிப்பாசிரியராக செய்த பணிகள் பலப்பல. அக்காலத்தில் பலருக்கும் தெரியாதிருந்த இரகசியம், முருகையனும் நானும் மகாகவியுடன் கொண்டிருந்த உறவாகும்.

நாம் முருகையனை மாத்திரமே விதந்து பேசுகின்றோம். மகாகவியைப் பற்றி எதுவும் பேசுவதில்லையென்ற ஒரு குற்றச் சாட்டிருந்தது. ஆனால், அக்காலத்தில் நாங்கள் இடம்வகித்த இலங்கைத் தமிழ் நாடக நடனக் குழுவில் மகாகவியின் நூல்களுக்கே ஒரு தடவை முதல் பரிசு கிடைத்தது.

முருகையன் தனது மனதிற்குள் பல விடயங்களை வைத்துக் கொள்வார். அவற்றை எடுத்துக் கூறும் பண்பே அலாதியானது. முருகையனை intelectualist Poet என்றே நான் எல்லாக் காலத்திலும் போற்றுவதுண்டு. உண்மையில் முருகையனின் மறைவு ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு மாத்திரமல்லாமல் தமிழ் இலக்கியம் முழுவதற்குமே பாரிய இழப்பாகும்.

முருகையன் போன்றவர்களுடைய முழுக் கவிதைத் தொகுதியும் ஒன்றாகச் சேர்த்து பதிக்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை யார் செய்வார்களென்ற எதிர்பார்ப்புடன் நட்பு நினைவுகளிலிருந்து விடைபெற முடியாதவானாய் நிற்கின்றேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தூதரக அதிகாரிகளை விடுவிக்குமாறு இரானிடம் பிரிட்டன் கோரிக்கை

இரானின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் நான்கு ஊழியர்களை இரானிய அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கோரியுள்ளார். இரானின் நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் நியாயமற்றவை என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நால்வரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள இரானிய அரசின் பேச்சாளர், பிரிட்டிஷ் தூதரகத்தைச் சேர்ந்த ஐந்து ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு விட்டதாக முன்னதாக தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இரானியப் பிரஜைகள். நாட்டில் சர்ச்சைகுரிய அதிபர் தேர்தலை அடுத்து அங்கு ஏற்பட்ட கலவரங்களில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனிடையே நாட்டில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அதியுயர் சபையான கார்டியன் கவுன்சில், அங்கு பதிவான வாக்குகளில் ஒரு பகுதியை மீண்டும் எண்ணும் பணிகளை தொடங்கியுள்ளது. எதிர்கட்சித் தலைவரான மிர் ஹொசை முசவி தேர்தல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோருகிறார்.

கனகரட்ணம் எம்.பியை பிரதமநீதிவான் பார்வையிட்டார்

tna_mp-kanagarathnm.jpgகொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தை நேற்று கொழும்பு, பிரதம நீதிவான் நிஸாந்தஹப்பு ஆராய்ச்சி சென்று பார்வையிட்டார்.

கனகரட்ணம் எம்.பியைத் தொடர்ந்தும் தடுத்து வைத்து விசாரணை செய்யக் கோரும் குற்றத்தடுப்புப் பிரிவின் விண்ணப்பத்துக்கு நீதிவான் அனுமதியளித்தார் வன்னி மக்களுடன் இடம்பெயர்ந்து வவுனியா முகாமில் தங்கியிருந்த வேளை, கனகரட்ணம் எம்.பி. விசாரணைக்காகப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

கொக்காவிலில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள்

வடக்கில் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெறும் அதேசமயம் அதற்கு சமாந்தரமாக கொக்காவில் பகுதியில் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.இதன் பொருட்டு 170 அடி உயரமுடைய புதிய ஒளிபரப்புக் கோபுரமொன்று அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய கோபுரம் இருந்த இடத்திலேயே புதிய கோபுரமும் அமைக்கப்படவிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போது பழைய கோபுரம் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கண்ணிவெடி அகற்றல் மற்றும் நிர்மாணப் பணிகளுக்கு ஏற்புடைய வகையில் நிலத்தை மட்டமாக்குதல் போன்ற அடிப்படை முன்னேற்பாடுகள் அனைத்தும் இராணுவத்தின் விசேட படையணி3 இனால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வரை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு நிலையம் வடக்கு முழுவதும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஒருவருக்கு பன்றிக்காய்ச்சல்

19swine-flu.jpgபன்றிக் காய்ச்சல் வைரஸான நொவல் இன்புளுவன்சா ஏ.எச்.1.என்.1 தொற்றுடைய மேலுமொருவர் ஞாயிற்றுக்கிழமை இனங்காணப்பட்டிருக்கிறார். இனங்காணப்பட்டவரும் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்தவரென வைத்திய ஆய்வு நிலையத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் டாக்டர் கீத்தானி விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்.

இலங்கையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுடையவராக கண்டுபிடிக்கப்பட்டவரும் அவுஸ்திரேலியாவில் வந்த ஒருவராகவே இருந்தார்.  இதுவரையில் பன்றிக்காய்ச்சல் தொற்றுடைய 14 பேர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதுடன், 9 பேர் இன்னும் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் கீத்தானி விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமல்லாது பன்றிக் காய்ச்சல் தொற்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும் 5 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

பத்திரிகைகளை அச்சுறுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்-ஆனந்தசங்கரி

uthayan_logoகருத்துக் களை கருத்துக்களால் வெல்ல வேண்டுமே தவிர, கருத்துக்களைக் கருவிகொண்டு அடக்க முற்படக் கூடாது. பத்திரிகைகளைத் தீயிட்டுக் கொளுத்துவதும், அவற்றின் பணியாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுவதும் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகும்  என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். நகரில் வெளியாகும் தினசரி பத்திரிகைகளை தீயிட்டு கொளுத்திய அதே கும்பல் “உதயன்”பத்திரிகை களும்,  அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கும் பெரும் மரண அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

இதை தமிழ் விடுதலைக் கூட்டணி வன்மையாகக் கண்டிக்கின்றது. வடக்கில் வசந்தத்தை வீசச் செய் வோம்; ஜனநாயகத்தை மலரச் செய் வோம் என்று வெறும் வார்த்தைக ளால் மட்டும் சொன்னால் போதாது. அதை செயலிலும் காட்ட வேண் டும். ஜன நாயகத்தின் ஆணிவேரான பத்திரிகைகளை  தீயிட்டு கொளுத் துவதும், மரண அச்சுறுத்தல் விடுவ தும் அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும். கருத்துகளை கருத்துகளால் வெல்லவேண்டுமே தவிர, கருத்துகளை கருவி கொண்டு அடக்க முற்படக்கூடாது. மக்களை தவறான பாதைகளுக்குத் திருப்பாத கருத்துகளை சொல்வதற்கும், எழுதுவதற்கும் ஊடகங்களுக்குச் சுதந்திரம் இருக்கவேண்டும். அப்போதுதான் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பமுடியும்.

இவ்வாறான வன்முறைச் செயற் பாடுகள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைக்கவேண்டுமாயின், அரசின் அனுமதியைப் பெற்று ஆயுதம் வைத்திருப்பவர்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும். அனைவரும் சுதந்திரமாக  பேசவும் செயற்ப டவும் அனுமதிக்க வேண்டும்

194 தமிழ் அகதிகளுடன் சென்ற படகை அவுஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

boat.jpg194 அகதிகளுடன் சென்ற படகு ஒன்றை அவுஸ்திரேலியக் கடற்படை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற இடத்தில் 194 பேருடன் வந்த படகு ஒன்றையே அவுஸ்திரேலிய கடற்படை கைப்பற்றியுள்ளது.

அதில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று சந்தேகப்படுவதாக அவுஸ்திரேலிய உட்துறை அமைச்சர் பிரன்டன் கோனர் தெரிவித்துள்ளார். படகில் பெண்கள் எவருமில்லை எனவும் அனைவரும் ஆண்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் இதுவரை அவுஸ்திரேலியாவை நோக்கி தமிழர்கள் உள்ளிட்ட அகதிகள் வந்த படகுகளின் எண்ணிக்கை இத்துடன் 15 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

பிரிட்டனின் ஷரியா நீதிமன்றங்கள்

பிரிட்டனில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் 85 நீதிமன்றங்கள் இயங்குவதாகவும், அவை பிரிட்டிஷ் நீதித்துறைக்கு சவாலாக உருவெடுத்துள்ளதாகவும் சிவிட்டாஸ் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகின்றது. பிரிட்டிஷ் அரசாங்கம் 1996 இல் கொண்டுவந்த சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி இந்த நீதிமன்றங்கள் செயற்படுகின்றன.

ஒரு பிரச்சினை தொடர்பில் தீர்வுகாண விளையும் இரு தரப்பினரும் விரும்பும் பட்சத்தில், அவர்களுடைய பிரச்சினையில் முடிவு சொல்ல தீர்ப்பாயங்களை அந்த சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சில முஸ்லிம் விசாரணை மன்றங்கள் அதற்கும் மேலாக அதிக தூரம் போய்விடுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.

முஸ்லிம் பள்ளிவாசல்களில் இயங்கும் இத்தகைய ஷரியா நீதிமன்றங்கள், பிரிட்டிஷ் நீதி முறைமைகளுக்கு முரணாக, தனிப்பட்ட நபரின் வாழ்க்கைக்குள்ளும் தமது அதிகாரத்தை செலுத்த விளைவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

பலதார மணம், மனைவியிடம் பலவந்தமாக பாலியல் உறவு கோருவதற்கான கணவனின் உரிமை மற்றும் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களை திருமணம் செய்யக் கூடாது என்பன போன்ற விடயங்களை வலியுறுத்தும், பிரிட்டிஷ் சட்டங்களுக்கு பொருந்தாத தீர்ப்புக்களை இந்த நீதிமன்றங்கள் வழங்குவதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.