இலங் கையின் வடக்கே மோதல் சூன்யப் பகுதியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உறுதியாக நிராகரித்துள்ளார். “மோதல் சூன்யப் பகுதி மீது நாங்கள் ஒரு போதும் பதில் தாக்குதலை மேற்கொள்ளவில்லை. அதற்குரிய சந்தர்ப்பத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளவும் இல்லை. பொதுமக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளவும் இல்லை’ என்று லண்டனில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் போகொல்லாகம “த ரைம்ஸ்’ பத்திரிகைக்கு இதனைத் தெரிவித்திருக்கின்றார். பொதுமக்கள் மீது நாங்கள் தாக்குதலை மேற்கொள்வற்தகு எம்மை ஆத்திரப்படுத்தும் விடயங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் வெளியேறிய போதே புலிகள் அவர்களை சுட்டதாகவும் பொதுமக்களின் மரணங்களுக்கு புலிகளே காரணம் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார். இராணுவ நடவடிக்கையால் எந்தவொரு பொதுமகனும் இறக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த மாதம் ஐ.நா. மதிப்பீடு செய்திருந்த அறிக்கையின் பிரகாரம் ஏப்ரல் இறுதியில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பலியாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கொழும்பிலுள்ள அமெரிக்கா, பிரிட்டன் உட்பட வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு இந்தப் புள்ளி விபரம் ஐ.நா. வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், 20 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களின் இழப்புகள் ஏற்பட்டிருக்கும் சாத்தியம் குறித்து ஐ.நா. வட்டாரங்கள் “த ரைம்ஸ்’க்குக் கூறியிருந்தனர்.
இவை இரண்டையும் அமைச்சர் போகொல்லாகம நிராகரித்திருக்கிறார். புள்ளி விபரங்களை வெளியிட்டமை தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. மன்னிப்புக் கேட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஐ.நா.வின் பிரதி செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் இந்த வாரம் “த ரைம்ஸ்’க்குத் தெரிவிக்கையில்; பொதுமக்களின் இழப்புகள் ஏற்றுக் கொள்ள முடியாதளவிற்கு அதிகமானவையாகவும் இது தொடர்பாக உரிய விசாரணையை இலங்கை ஆரம்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சுதந்திரமாக செல்வதை இலங்கை தடை செய்துள்ளது.
அங்குள்ளோர் விடுதலைப் புலிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் பற்றி சோதனைகள் முடிவடையும் வரைக்கும் அங்கு முழுமையாக மனிதாபிமான அமைப்புகள் செல்வதற்கு அனுமதிக்க முடியாது என இலங்கை கூறியுள்ளது. இந்தச் சோதனை நடவடிக்கை நீண்டவையாக இருக்கும் என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோஹன வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். வயது போனவர்கள் கூட உள ரீதியில் புலிகளுடன் இருந்திருக்கக் கூடும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மோதல் சூன்யப் பகுதியில் பணிபுரிந்த மருத்துவர்கள் புலிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது. மோதலின் இறுதிக் கட்டத்தின் போது அரசாங்கத்தின் ஷெல் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் இடம் மாற்றப்பட்ட ஆஸ்பத்திரி உட்பட மோதல் சூன்யப்பகுதியில் ஷெல் வீச்சு இடம்பெற்றதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறும் போது அவர்களுடன் வந்த இந்த மருத்துவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியதாக அமெரிக்கா கூறியுள்ளது. அவர்கள் சிறப்பாக பணியாற்றியதாக ஐ.நா. தெரிவித்திருக்கின்றது. இந்த மருத்துவர்கள் மீது விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க பி.பி.சி.க்குக் கூறியுள்ளார்.
விசாரணைகளிலிருந்து என்ன வெளிவரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சில சமயங்களில் அரச படைகள் ஷெல் வீச்சு நடத்தியதாகவும் ஆஸ்பத்திரிகளை இலக்கு வைத்ததாகவும் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படும் இந்த கருத்தை உள்ளடக்கிய சதியின் ஓர் அங்கமாக அவர்கள் இருக்கக் கூடும் என்றும் சமரசிங்க கூறியிருந்தார்.
இதேவேளை, அரசாங்கத்தின் ஆக்ரோஷமான வெளிப்பாடானது தமிழ்ச் சமூகத்தின் மீது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அவர்களின் உறுதிப்பாடு பற்றி நியாயபூர்வமான அச்சத்தை தோற்றுவிப்பதாக சேர்.ஜோன் ஹோமஸ் கூறியுள்ளார்.