பிரபாகரனே!
உன்னைப் பற்றியும் உனது போராளிகளைப் பற்றியும் உனக்கோர் கடிதம் எழுத வேண்டும் என எண்ணி எத்தனையோ தடவைகள் முயற்சித்துள்ளேன். உனது மனத்திடல், வீரம், விவேகம், தந்திரம், உன்னால் வளர்க்கப்பட்டு வந்தவர்களின் பண்பு, பணிவு, ரகசியக்காப்பு, மரியாதையான பேச்சு பற்றி மட்டுமல்ல, உன்னிடம் தெரிந்த குறைகள் பல பற்றி எல்லாம் எழுத வேண்டும் என எத்தனித்த போதெல்லாம் மாற்றுக் கருத்துக்கும் மரண தண்டனையே நியதி என்ற உனது சட்டத்தை அறிந்த நான் எனது வாழ்நாளை நீட்டிக்க விரும்பி உயிர் பேராசையால் பேனாவை மூடிக்கொண்டேன். ஆனால் இன்று என்னையும் அறியாமல் உன் பற்றிய செய்தி என்னை எழுதத் தூண்டிவிட்டது.
நீ இறந்துவிட்டாயாம் என்பது அரசியல் மட்டங்களில் உறுதி செய்யப்பட்ட செய்தி. அடிமட்ட ஈழத்து மக்களில் இருந்து அறிவு ஜீவி இலங்கைத் தமிழன் வரை நம்ப முடியாத, நம்பக் கூடாத, நம்பியும் நம்பாத செய்தியாகவே இருக்கின்றது அது. என்றாலும் கூட நீ இருந்தாலும் நலமே. ஏனெனில் எந்த ஒரு உயிரும் இயற்கை தவிர மனிதனால் அழியக் கூடாதென்பதே என் விருப்பம். என்றாலும் நீ இல்லை என்றாயின் நீ இல்லாத இவ்வேளையில் நீ தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்களையே உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.
நீ இறந்தாய் என்ற செய்தியை இல்லை என்று சொல்பவர்கட்கும், சொல்லப்படுபவர்கட்கும் நீ இறந்தாய் தான் என்ற உண்மை நன்றாகவே தெரியும் என்பது உனக்குத் தெரியுமா? மற்றவரை முட்டாள் ஆக்குகிறோம் என்ற பெருமையில் தாங்களே தங்களை முட்டாள்கள் ஆக்கிக் கொண்டும், ஏமாற்றிக் கொண்டும் திரியும் இவர்கள் பூட்டிய அறைக்குள் கிடந்து விம்மி விம்மி அழுகிறார்கள் என்பதையும் நீ அறிவாயா?
தற்கால, எதிர்கால அரசியல் ஆதாயம் கருதி உன் மரணத்தையே மறைப்பவர்கள் மத்தியில், உனது மரணமென்பதே பொய்ச் செய்தி என்ற நினைப்பில், இந்தச் செய்தியை அலட்டிக் கொள்ளாத உனது அப்பாவி உறவுகளும் உள்ளார்கள் என்பதையும் நீ அறிவாயாக. பாவம் அவர்கள் கணணி பற்றியோ, இணையத்தளங்கள் பற்றியோ, மின் அஞ்சல் பற்றியோ, மாற்று ஊடகங்கள் பற்றியோ எதையும் அறிந்திராத அப்பிராணி சனங்கள். தங்களுக்கு என்று தங்களால் ஏற்படுத்தப்பட்ட ஊடகச் செய்திகளை மட்டுமே கேட்டும், பார்த்தும் பழக்கப்பட்ட ஆட்டுமந்தை கூட்டங்களான அவர்கள் உன் மரணச் செய்தியை கூட ஒரு கேலிச் செய்தியாகவே கேட்கிறார்கள்.
நீ ஒன்றே ஒன்று செய்திருக்க வேண்டும். நீ இறந்த பின் அம்மக்கள் உனக்காக என்ன செய்திருப்பார்கள் என்பதைக் காண்பதற்காய் நீ முன்பே ஒரு முறை இறந்ததாக ஒரு ஒத்திகை நாடகம் நடத்தியிருக்க வேண்டும். அப்போது நீ அறிந்திருப்பாய் உனது மக்களின் முட்டாள் தனத்தையும், சந்தர்ப்பவாதத்தையும். சரி தான் நான் இறந்தால் இவர்கள் என்ன தான் செய்திருக்க வேண்டும் என்று தானே நீ கேட்கிறாய்? என்ன இப்படிக் கேட்கின்றாய். செய்தி கேட்ட நிமிடமே ஈழத்துத் தமிழன் வாழ்வு நிமிடத்தில் ஒரு கணமேனும் ஸ்தம்பித்திருக்க வேண்டாமா? நீ குண்டு கட்டி தன்னை மாய்த்த சமூகத்தில், நீ உயிர் வாழ வேண்டி தீய்க்குளித்து மாண்ட சமூகத்தில், உன்னைப் பாதுகாக்க வேண்டி பட்டினி விரதமிருந்த சமூகத்தில், ஊர்கூடி தேர் இழுத்தது போல் பாதை மறித்து தவமிருந்து போராட்டம் நடத்திய சமூகத்தில் நீ இறந்தாய் என்ற செய்தி கேட்டவுடன் துடித்து, வெடித்து உயிர்துறக்க யாரும் இருக்கவில்லையே. இப்போதாவது தெரிந்ததா இவையெல்லாம் அரிதாரம் பூசாமல் அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகம் என்று.
உனக்குத் தெரியுமா? உனக்குத் தெரியும்.
உன்னை கிருஸ்ணனின் அவதாரம், சூரியக் கடவுள் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது என்ன சொல்கிறார்கள்? கடவுளுக்கு மரணம் ஏது என்கிறார்கள். உன் படம் பதித்த பதாதைகள் ஏந்தி பாதை மறித்து ஊர்வலம் சென்ற புலம்பெயர் வாழ்வுகள் உன் மறைவு கேட்டு என்ன செய்தார்கள்? ஒரு கண்ணீர் அஞ்சலிக் கூட்டம் கூட்டினார்களா? ஒரு மௌன ஊர்வலம் போனார்களா? இல்லை ஒரு சோககீதப் பாடல் தான் ஒலிபரப்பினார்களா?
இந்த 27 வருடங்களில் உனது இயக்கத்தில் இருந்தவர்கள் எவரேனும் இறந்தால் கடையடைப்பு, கர்த்தால், கண்ணீர் அஞ்சலி, கறுப்புக்கொடி என்று எத்தனை புதினங்கள் செய்வார்கள். ஆனால் இயக்கமே அடியோடு அழிந்துவிட்டது என்ற செய்தி கேட்டும் ஏன் இவர்கள் எதுவும் செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்று கேட்க நீ இல்லை என்ற தைரியம் அது என்பதை நீ அறிவாயா?
உன் இயக்கத்தில் மூன்றாம் தரத்து தளபதி இறந்தாலே 3 நாட்களுக்கு முகாரி பாடி வசூல் செய்யும் புலத்து தொலைக்காட்சிகள், நீ முதல் தலைவன் இறந்த செய்தி கேட்டு என்ன செய்தார்கள்? அட உன் இறப்பு செய்தியைத் தான் அவர்களால் நம்பமுடியவில்லை அதை விட்டுவிடு. உன்னோடு கூடவே இருந்த உனது முதல்தர, அடுத்தகட்ட தலைவர்கள் எல்லாரும் தான் இறந்துவிட்டார்கள் என்று நம்பியவர்கள், அவர்களுக்காகவேனும் ஒரு நிமிடம் சோககீதம் பாடாததென்ன. கருணாவின் துரோகத்தை சுட்டிக்காட்ட குத்திக் காட்டும் பாடல்களைத் தேடிப்பிடித்து ஒலிபரப்பியவர்களுக்கு உனக்காக ஒலிபரப்ப, உன்னைப் பற்றி புதுவை இரத்தினம் எழுதிய ஒரு பாடலாவது கிடைக்காமல் போனதேன்?
மாவீரனென்றும், மாமனிதனென்றும், வீரவேங்கையென்றும் பட்டங்கள் கொடுத்த உனக்கு எந்தப் பட்டமுமே இவர்களால் சூட்டமுடியாத அளவுக்கு இருந்தும் இல்லாத, இல்லாமலும் இருக்கும், கேள்விப் பொருளாகி விட்டாயே நீ.
மாவீரர் உறங்குவதற்கு கட்டிய கல்லறைகளையே கலைக்கூடமாக அழகியல் தன்மையோடு அமைத்தவன் நீ. உனக்கோர் கல்லறை தான் கிடைக்கவில்லை என்றாலும் கூட ஒரு மண்ணறை கூட கிடைக்கவில்லை என்பதை நினைக்கும் போது தான் நெஞ்சம் கனக்கிறது.
உன்னால் மலரப்போகும் தமிழீழத்துக்கு தேசியகீதம் அமைப்பது யார் என்பதில் ஈழத்துக் கவிஞர்கட்கும் வைரமுத்துவுக்கும் இடையில் ஒரு இழுபறிச் சண்டையே நடந்ததாம். விதியின் விளையாட்டைப் பார்த்தாயா? உனக்கொரு இரங்கல் பா கூட எழுத முடியாமல் போய்விட்டது அவர்களால். எழுதக் கூடாது என்பது அவர்கள் முடிவல்ல. எழுதக் கூடாது என்பது உன்னால் வளர்க்கப்பட்டவர்களின் கட்டளை. உனக்கேற்பட்ட நிலை கண்டு நீ எதிரி என்று நினைத்தவர்களே இளகி உடைந்து நிற்கும் போது இவர்கள் மட்டுமேன் இப்படி கல்லாய் நிற்கிறார்கள். உனக்காக ஒரு இரங்கல் பா எழுதவென்று மூளைநிறைந்த வரிகளோடு, மூடிய பேனா வெடிக்கும் தறுவாயில், முலை சுரந்த தாயின் வலி போல உனக்காக எழுதவென்று நடுநிலை எழுத்தாளர் பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நீ அறிக.
நீ நல்லவனா? கெட்டவனா? நீ செய்ததெல்லாம் சரியா? தவறா? என்ற ஆய்வின் அடிப்படையில் நான் இதை எழுதவில்லை. நானும் நீயும் ஓரினம் என்பதால், மனிதம் பற்றிப் பேசவே இதை எழுதுகின்றேன்.
நீ வாழ்ந்த காலத்தில் எத்தனையோ பேருக்கு தம்பியாகவும், அண்ணனாகவும், செஞ்சோலை சிறார்களுக்கு தந்தையாகவும், புலம்பெயர் குழந்தைகளின் மாமனாகவும், ஏழை எளியவர்களின் மகனாகவும் மட்டுமல்ல, எங்கள் தேசியத் தலைவன் என்றும் மதிக்கப்பட்டவன். அப்படிப்பட்ட உனது இறுதி ஊர்வலம் எப்படி நடந்திருக்க வேண்டும். புலிக்கொடி போர்த்திய உன் உடல் பேழையை, உன் உயிர் தோழர்கள் தம் தோள்களில் சுமந்து வர, வெள்ளைப் புறாக் கூட்டம் போல் செஞ்சோலைச் சிறார்கள் முன்னே வர, நீ வளர்த்த போர் வீரர்கள் நேர் பார்வையும் நிமிர்ந்த நெஞ்சுமாய் அணிவகுப்பு செய்து வர மங்கல கீதத்தை மகளிர் படையினர் பாடிவர, மாணவ மாணவியர் மலர்கள் தூவிவர, மாவீரன் பிரபாகரனே, எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் தேசியத் தலைவனே போய் வா. நீ சாந்தி பெறு என்று சொல்லி தமிழ் மக்கள் கண்ணீருடன் வழியனுப்பி வைக்கப்பட வேண்டிய உன் இறுதி ஊர்வலம் இப்படியா நடந்திருக்க வேண்டும்.
அப்பா என்று சொல்லியழ மகளில்லை, கொள்ளிவைத்து கடமை செய்ய மகனில்லை, மார்பில் வீழ்ந்தழ மனைவியில்லை, என் மகனே என்று சொல்லியழ தாய் தகப்பன் இல்லை, தம்பி என்று சொல்லியழ சகோதர சகோதரியில்லை, மாமாவென்றழ மருமக்களில்லை, ஏன்………… இவன் என் தலைவன் என்று ஏற்றுக் கொள்ள ஒரு தடி மகனேனும் துணிவுடன் முன்வரவில்லை. இப்படி எதுவுமே இல்லாமல் அல்லவா நீ ஏகபிரதிநிதிப்படுத்திய மக்கள் உன்னை அனுப்பி வைத்தார்கள். எத்தனை மரணங்களுக்கு நீ உரிமை கொண்டாடியிருப்பாய். உரிமை கொண்டாடப் படாத, அநாதைப் பிணமாக எரிக்கப்பட்ட முதல் தேசியத் தலைவன் நீ ஒருவனாகத் தான் இருப்பாய்.
உன் மறைவுக்குப் பின் அழுவதைப் போலவும் நடிக்கிறார்கள். நடிப்பதைப் போலவும் அழுகிறார்கள்.
இந்த வேளையில் நீ மட்டும் மீண்டும் வந்தால் எதிரியாய் நிற்கும் உன் தமிழ் மக்கள் நிலை கண்டு என்ன சொல்வாய் தெரியுமா? என் மக்கள் பட்டதெல்லாம் போதும். இனியும் இழப்பதற்கு எதுவுமில்லாத அவர்களை விட்டுவிடுங்கள். என் பெயர் சொல்லி பிழைப்பு நடத்த என் மக்களை பயன்படுத்தாதீர்கள் என்பாய். அதிலும் இந்த தமிழ்நாட்டு அரசியல் வாதிகளிடம் நீ கேட்க வேண்டிய கேள்விகள் பல உண்டு. அவர்களிடம் நீ கேட்டிருப்பாய், கோப்பெருந்தேவியின் சிலம்பல்ல கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பென்று வாதாடிய கண்ணகியிடம் ஆயிரம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுத் தன்னை குற்றமற்றவன் ஆக்கிக் கொள்ளத் துடித்த பாண்டிய மன்னனைப் போல் இறந்த உன் உடல் பற்றி வைகோவும், நெடுமாறனும் எழுப்பும் சந்தேகங்களும், கேள்விகளும் சின்னப்பிள்ளைத் தனமானது என்றிருப்பாய். இறந்த உடலின் கண்கள் ஒரு தடவை முடியிருந்ததென்றும் மறுதடவை திறந்திருந்ததென்றும் சொல்கிறார் வைகோ. உனது கழுத்துக்கு மேற்பட்ட பகுதி பொருத்தப்பட்டதாம் என்கிறார் நெடுமாறன். உனது உடலொன்றும் மேடம் ருஸாட் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மெழுகுச் சிலையல்ல என்பதையும், நீ சிங்கள அரசின் எதிரி, அவர்கள் கையில் அகப்பட்ட உன் உடலை ராஜ மரியாதையுடன் பாதுகாத்திருக்க மாட்டார்கள் என்பதையும், கால் நூற்றாண்டுக்கும் மேலாக உன் காலடித் தடத்தைக் கூட காண முடியாத அளவுக்கு அவர்கள் கண்களில் விரல்விட்டு ஆட்டிய உன் உடல் கிடைத்தவுடன் அதை எப்படி எல்லாம் பந்தாடியிருப்பார்கள், அதில் என்னென்ன சேதமெல்லாம் ஏற்பட்டிருக்கும் என்பதைக் கூட அறியாத அரசியல் வியாபாரிகளின் கவலை என்ன தெரியுமா? இனி என்ன ஆவான் இலங்கைத் தமிழன், தமிழனுக்கு என்றொரு தனி நாடே இனியில்லையா? என்பது தான். ஈழத்தமிழர் உயிர்கொடுத்து தனிநாடு பெறவேண்டுமாம். அதில் இவர்கள் பெருமை கொள்ள வேண்டுமாம். இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உயிர்ப்பலி கொடுக்கப் பண்ணியவர்களே ஏன் உங்கள் நாட்டில் எட்டுக்கோடி தமிழர்களில் எங்கள் தொகை தமிழர்களை இழந்தேனும் ஒரு தனித்தமிழ் நாட்டை அமைத்துக் கொண்டு இழந்த இடத்துக்கு எங்களை சேர்த்துக் கொள்ளலாமே. அதை விடுத்து என் மக்கள் நெருப்பில் நீங்கள் ஏன் குளிர்காய விரும்புகிறீர்கள் என்று நீ மீண்டும் வந்தால் கட்டாயம் கேட்பாய்.
உன்னோடு சக கருத்து முரண்பாடு உண்டென்ற போதிலும், இன்று வரை உன்னில் சிறு மரியாதையையும் நம்பிக்கையையும் வைத்திருந்தேன். உன்னில் இருந்து கருணா பிரிந்து போனதில் இருந்து இதுவரை நீ எதுவித கருத்தும் சொல்லவில்லை. இருந்தும் உனது ஊதுகுழல்களும், ஊழியர்களும் பேசியவற்றுக்கு நீ எந்த மறுப்பும் கூட சொல்லவில்லை. சந்தர்ப்பமும், நிர்ப்பந்தமும் கூட காரணமாக இருந்திருக்கலாம். ஒரு வேளை ஒரு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் இவர்கள் மண்டைக்குள் அடைத்து வைத்திருக்கும் மலங்களை அகற்றிச் சுத்தம் செய்வாய் என்றிருந்த சிறு நம்பிக்கை கூட கைகூடாமல் போய்விட்டதே என்பதே என் கவலை. உனக்கொன்று தெரியுமா? தவறு செய்பவர்கள் எல்லோருமே கிழக்கு மாகாணத்தான் என்பது தான் உனது ஊழியர்களின் நம்பிக்கையும், பரப்புரையும். இப்போது KP கூட கிழக்கானாகத்தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். யார் கண்டார் நாளடைவில் தேசியத் தலைவர் பிரபாகரன் கூட கிழக்கான் தானென்று உன்னைக் கூட இவர்கள் சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
நீ இறந்தாய் என்ற செய்தி கேட்ட நிமிடம் தொட்டு, தாயைப் பிரிந்த கன்றுகள் போல போகுமிடம் தெரியாமலும், நடந்த உண்மை அறியாமலும், வாடிய முகமும் சோர்ந்த நடையுமாய் அலைந்து திரிகிறதே ஒரு இளைஞர் கூட்டம். அவர்கள் தான் உன்னை நேசித்தவர்கள், நேசிப்பவர்கள், தமிழீழத்தை கனவில் சுமந்தவர்கள்.
நீ இறந்திருந்தால் மீண்டும் பிறந்து வர முடியாது. ஆனாலும் நீ இறந்திருந்தாலும் கூட இன்னும் பலமுறை இறப்பாய். பிறப்பில்லா உனது பல இறப்புகளை இவர்கள் அரங்கேற்றுவார்கள். நீ உயிரோடு இருப்பாய் ஆயின் தங்கள் பதவிக்கும் பணத்துக்கும் ஆபத்தெனும் போதிலெல்லாம் உன்னைச் சாகடிப்பார்கள். இனிவரும் காலங்களில் நீ வந்த வாகனம் மோதி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாக உன் உடல் உருக்குலையும், நீ ஓட்டிவந்த படகு நீரில் மூழ்கி உன்னை மீன் விழுங்கும்………… இப்படிப் பற்பல கோணங்களில் சாகடிக்க தமிழ்நாட்டு அரசியலில் தான் சாத்தியம் உண்டு.
நீ எத்தனை தரம் இறப்பினும் அத்தனை தடவைகளிலும் உன் ஆத்மா சாந்தியடைய உன் விசுவாசிகளுடன் சேர்ந்து பிரார்த்தித்து உனக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தும் இவன்.