வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை, முகாம்களில் தடுத்து வைத் திருப்பது அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, அதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மனுவை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து சார்பில் சட்டத்தரணி நிலாந்தி டி.சில்வா நேற்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இதேவேளை இடம்பெயர்ந்து கொடிகாமம் மற்றும் வவுனியா முகாம்களில் தங்கியுள்ள ஐவர் சார்பில், சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா, அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜெகத் பாலபட்டபென்டி, சந்திரா ஏக்கநாயக்கா ஆகியோரைக்கொண்ட ஆயம், ஆட்சேபனைகளை எதிர்வரும் பதினேழாம் (17) திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றுக்கொள்கை நிலையத்தின் மனு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் நலன்புரி நிலையங்களில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அவசரகாலச்சட்டத்தின் 19(1) என்ற விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இது சட்ட விரோதமான செயற்பாடு. இதனால் அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.
அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரம், சம அந்தஸ்து, பொதுச் சுதந்திரம் என்பன இவ்வாறான தடுத்துவைத்தல் மூலம் மீறப்பட்டுள்ளன.
இவர்கள் சுதந்திரமான முறையில் வெளியில் நடமாட தடைவிதித்திருக்கும் நடைமுறைக்கு எதிராக ஒரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் விடுக்கவேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கொடிகாமம், வவுனியா ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் ஐவர் சார்பாக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் தமது ஆட்சேபங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கொடிகாமம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணிக்கராஜா சிவபாக்கியம், சோபிகா சுரேந்திரநாதன், வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜெயராணி சுரேந்திரநாதன், பொன்னுச்சாமி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் ஆகியோர் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் உறவினரான சட்டத்தரணி அன்னபாக்கியம் சிதம்பரப்பிள்ளையின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக யாழ்.அரச அதிபர், தென்மராட்சி பிரதேச செயலர், யாழ்.படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பட்டாணிச்சிப்புளியங்குளம் கிராம சேவையாளர், வவுனியா பிரதேச செயலர், வவுனியா அரச அதிபர், வவுனியா சைவப்பிரகாச நலன்புரி நிலைய கிராம சேவையாளர், வன்னி படைகளின் தளபதி, நலன்புரிநிலைய இணைப்பதிகாரி ஆகியோர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.