15

15

புலம்பெயர் தேசத்தில் தமிழீழ அரசாங்கம் அமைக்க சட்ட அறிஞர் உருத்திரகுமார் தலைமையில் செயற்குழு : தவிபு அனைத்துலக இணைப்பாளர் பத்மநாதன்

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான விடுதலைப் போராட்டம் இன்று புதியதோர் கட்டத்தை எட்டியுள்ளது.

தாயகத்தின் யதார்த்த நிலையினைப் புரிந்து கொண்டு, நமது விடுதலை இலட்சியத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்குத் தேவையான அரசியல் வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய காலகட்டம் இது.

இதற்காக பொதுக்கொள்கையின் அடிப்படையிலான ஒரு சீரிய வேலைத் திட்டத்தின் முக்கியத்துவத்தினை உய்த்துணர்ந்து, அதற்குரிய ஆலோசனைகளையும் நமது மக்களிடமிருந்து கோரியிருந்தோம்.

நமது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற கருத்துக்களையும், புலமைசார் அறிஞர்களது ஆலோசனைகளையும் கவனத்திற் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை அமைப்பது (Provisional Transnational Government of Tamil Eelam) எமது அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு அவசியமானது என உணர்கிறோம்.

இத்தகைய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கான சகல முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒரு செயற்குழு, சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்குழுவிற்கு முழுமையான ஆதரவினையும் ஒத்துழைப்பினயும் வழங்குமாறு அனைத்துத் தமிழ் மக்களையும் தமிழர் அமைப்புக்களையும் வேண்டிக் கொள்கிறோம்.

தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகள் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து கட்டப்பட்டவை.

1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம், 1985 ஆம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 2003 ஆம் ஆண்டு இடைக்கால நிர்வாக அதிகாரசபைத் திட்டம் ஆகியன ஊடாக வெளிப்படுத்தப்பட்டவை.

இந்த அரசியல் அபிலாசைகள் உயிர்ப்பாகப் பேணப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டியவை.

இதேவேளையில் இன்றைய தாயகச் சூழலில் சிறிலங்காவின் இராணுவ ஆதிக்கப்பிடிக்குள் சிக்கியுள்ள நமது மக்களால் இந்த அரசியல் அபிலாசைகளை ஓங்கி ஒலிப்பது நடைமுறைச் சாத்தியமாகாது.

இந்த யதார்த்த நிலையைப் புரிந்து கொண்டு செயற்படுவது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் பொதுநோக்குடன் பொது உடன்பாட்டின் அடிப்படையில் தாயகத்திலும் புலத்திலும் இரு சமாந்திரமான செயற்திட்டங்களை தமிழர் தேசம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஜனநாயக முறையில் புலத்தில் அமைக்கப்படவிருக்கும் தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் உரிமைக்குரலையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்துலக அரங்கில் இயங்க வேண்டும்.

அதேவேளையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாஷைகளை தமது அரசியல் அடிப்படைகளாகக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் தாயக நிலைமைகளை பவித்திரமாகப் புரிந்து கொண்டு இயங்கும் வகையிலான தாயகச் செயற்திட்டம் அமைய வேண்டும்.

இந்த இரு செயற்திட்டங்களுக்கிடையில் ஓர் இணைவு இருக்க வேண்டும்.

இப்போது அமைக்கப்பட்டிருக்கும் செயற்குழு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் கோட்பாடுளை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடிய ஏனைய அரசியல் அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தி ஒரு பொது உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளையும் மேற் கொள்ளும்.

தனது செயற்பாடுகளை ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு சுயாதீனமாக முன்னெடுக்கவிருக்கும் இந்த செயற்குழு தனது செயற்பாட்டுத்திட்ட விபரங்களை மக்களுக்கு அறியத்தந்து மக்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்புகளைப் பேணிக் கொள்ளும்.

இந்த செயற்குழு தனது முயற்சியில் முழுமையான வெற்றி பெற நாம் அனைவரும் இன ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

குமரன் பத்மநாதனைக் கைது செய்ய சர்வதேசத்தின் உதவியை நாடுகிறது அரசாங்கம்

lttepathmnathan.jpg இலங் கையின் வட பகுதியில் இருந்து விடுதலைப்புலிகள் படையினரால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் குமரன் பத்மநாதன் மேற்கொண்டு வருவதாக நம்பப்படுகின்றது. இவரைக் கைது செய்வதற்காக சர்வதேசத்தின் உதவியை அரசாங்கம் நாடியுள்ளதாக ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

கடந்த ஜனவரி 30 ஆந் திகதி புலிகளின் தலைவர் பிரபாகரன், குமரன் பத்மநாதனுக்கு புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கே பத்மநாதனை கைது செய்வதற்காக அவர் தொடர்பான பல தகவல்களை சர்வதேச நாடுகளுக்குத் தாம் அனுப்பி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்திய ரசிகர்களிடம் தோனி மன்னிப்பு

t20-world-cup.jpgஇருபது20 உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்காக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். தோல்விக்கு பின்னர் தோனி கூறியதாவது,

நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டோம். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய ரசிகர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் அடுத்த உலகக் கிண்ணத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்போம் என்று உறுதியளிக்கிறேன். 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் (50 ஓவர்) நாங்கள் தோற்றது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமயமானது ஏமாற்றத்தை தந்தது. அதே போன்று தற்போது ஏமாற்றம் அடைகிறேன். பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்தனர். துடுப்பாட்ட வீரர்கள்தான் எடுபடவில்லை. 154 ஓட்ட இலக்கு என்பது எளிதானதுதான். துடுப்பாட்ட வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதுவே தோல்விக்கு காரணம்.

மஹ்மூத் அகமதி நிஜாத்துக்கு ஜனாதிபதி வாழ்த்து

president-ahamadinejad.jpgஈரானின் ஜனாதிபதியாக மஹ்மூத் அகமதி நிஜாத் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை இலங்கை மக்களுக்கு பேருவகை தரக்கூடியதொரு செய்தியாகுமென  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஈரானின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள மஹ்மூத் அகமதி நிஜாத்துக்கு ஜனாதிபதி அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியொன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில் உங்கள் தெரிவு இலங்கை மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

உங்களது புதிய பதவிக் காலத்தில் இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நல்லுறவுகள் மேலும் பலமடையும் எனவும் இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் திட்டங்களில் நெருக்கமான ஒத்துழைப்பு நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தமது வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

செட்டிக்குளம் தள வைத்தியசாலையில் 10 வருடங்களின் பின்னர் முதலாவது பிரசவம் இன்று

idp-100609.jpgவவுனியா, செட்டிக்குளம் தள வைத்தியசாலைiயில் சுமார் 10 வருடங்களின் பின்னர் இன்று முதலாவது பிரசவம் நிகழ்ந்துள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில்

வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பந்துல குணவர்தன,  திஸ்ஸ கரலியத்த மற்றும் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் செட்டிக்குளம் தள வைத்தியசாலையின் குறைபாடுகளைப் பார்வையிட்டனர்.

இவ்வைத்தியசாலைiயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரசவ அறை மற்றும் வைத்தியர்களுக்கான ஓய்வு அறை ஆகியவற்றையும் அமைச்சர்கள் இன்று திறந்து வைத்தனர். இன்று திறந்துவைக்கப்பட்ட பிரசவ அறையிலேயே 10 வருடங்களின் பின்னரான முதலாவது குழந்தை பிறந்துள்ளது.

இது தவிர ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத் தாபனத்தின் அனுசரனையில் அரச ஒசுசல நிறுவனமொன்றும் இன்று திறந்து வைக்கப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

டுவென்டி-20 உலக கோப்பை : அரையிறுதிக்கு தகுதிபெற்றது பாகிஸ்தான்

t20-world-cup.jpgஇங்கி லாந்தில் நடக்கும் இருபதுக்கு 20  உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில் ’எப்’ பிரிவில் அயர்லாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.. பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 9விக்கெட்டுகளை இழந்து 120ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் அணி 35 ஓட்டங்களால் அயர்லாந்தை வெற்றி கொண்டதால் அரையிறுதிக்கு தகுதிபெற்றது 

உலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டித் தொடரின் மிக முக்கியமான சுப்பர் எட்டு 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் இங்கிலாந்து வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் மோதுகின்றன.

நிவாரணக் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு விசேட வகுப்புகள் இன்று ஆரம்பம்

rizad_baduradeen1.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ள க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கென விசேட வகுப்புக்களை நடாத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.வவுனியாவில் உள்ள ஐந்து நிவாரணக் கிராமங்களிலும் உள்ள மாணவர்களுக்கான விசேட வகுப்புகள் மீள்குடியேற்றம் மற்றம் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் வவுனியா கதிர்காமர் நிவாரண கிராமத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உடபட மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

கொழும்பு மற்றும் வவுனியா ஆகிய இடங்களிலிருந்து விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர்களை அழைத்து வந்து இந்த விசேட வகுப்புகளை தெடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்த பிரபாகரன்

Pirabakaran V LTTEஇலங் கையில் 30 வருடகால உள்நாட்டு யுத்தத்தில் தமது அடுத்தகட்ட தந்திரோபாயத்தை வகுப்பதற்காக இந்தியத் தேர்தல் முடிவுகளுக்காக பிரபாகரன் காத்திருந்ததாகவும் தேசிய ஜனநாயக முன்னணி அல்லது மூன்றாவது அணி புதுடில்லியில் ஆட்சிக்கு வருமென எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், இலங்கை இராணுவம் வேறுபட்ட திட்டங்களை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய பாராளுமன்றத்தின் தேர்தல் முடிவுகள் மே 16 இல் வெளிவரும் வரை பிரபாகரன் காத்திருந்ததாகவும் தம்முடையதும் தமது இயக்கத்தினுடையதும் எதிர்காலத்தை முடிவு செய்வதற்காக அவர் இந்தியத் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்திருந்ததாகவும் ஆனால், அது மிகவும் காலம் பிந்திய ஒன்றாகவும் ஏனெனில் தப்பிச் செல்லும் சகல வழிகளையும் அச்சமயம் இலங்கை இராணுவம் துண்டித்துவிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

“அவர் (பிரபாகரன்) எவராவது தலையிட்டு இராணுவம் மோதல் சூனியப் பகுதிக்குள் பிரவேசிப்பதை நிறுத்துவார்கள் என எதிர்பார்த்திருந்ததாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக பி.ரி.ஐ. செய்திச்சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது. மே 16 பிற்பகல் அகப்பட்டிருந்த சகல பொது மக்களையும் விடுவிப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரப்போகின்றதென்பதை அறிந்த பின் அவர்கள் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதாக தெரிவித்திருந்தனர். காங்கிரஸ் கட்சியானது பிரபாகரனுடனும் புலிகள் அமைப்புடனும் பகையுணர்வு கொண்டிருந்தது என்பதால் அவர்கள் பொதுமக்களை வெளியேற அனுமதிப்பதாக அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகள் பிரபாகரனுக்கும், இயக்கத்தின் தலைவர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால், எதனையும் சிந்திப்பதற்கோ, திட்டமிடுவதற்கோ அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. அந்தத் தருணத்தில் அவர்கள் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

காங்கிரஸ் கட்சி போன்று தேசிய ஜனநாயக முன்னணியோ அல்லது மூன்றாவது அணியோ எதிர்ப்புணர்வு கொண்டவையாக இருக்காது என்று புலிகள் நினைத்திருந்தனர். மக்கள் யுத்த வலயத்தை விட்டு வெளியேற ஆரம்பித்ததும் இராணுவம் அவர்களை மீட்டு பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டு சென்றது என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. அ.தி.மு.க. வானது மூன்றாவது அணியும் அங்கமாக இருந்தது. அதன் தலைவி ஜெயலலிதா இலங்கைத் தமிழரின் நோக்கத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். புதுடில்லியில் தனது தேர்வுக்குரிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழீழத்தை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதாக அவர் கூறியிருந்தார்.

மே 16 பிற்பகல் விடுதலைப்புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் செல்வராஜா பத்மநாதன் ஒரு அறிக்கையொன்றை விடுத்திருந்தார். அதில் புலிகள் அமைப்பு தோல்வியை ஏற்றுக்கொள்வதாகவும் சர்வதேச சமூகம் வன்னியிலுள்ள மக்களை பாதுகாக்க வேண்டுமென்றும் அவர் கேட்டிருந்தார். இலங்கைப் படையினர் தம்மையும் தமது உதவியாளர்களையும் மிக விரைவில் சுற்றிவளைக்கும் என்று பிரபாகரன் எதிர்பார்த்திருக்கவில்லை என அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

கடற்புலிகளின் தலைவர் சூசையின் மனைவியிடமிருந்து இராணுவம் தகவல்களை பெற்றிருந்தது. நாட்டைவிட்டு வெளியேற சூசையின் மனைவி முயன்றபோது, அவர் கைது செய்யப்பட்டிருந்தார். அச்சமயம், பிரபாகரனும் உயர்மட்டத் தலைவர்களும் யுத்த வலயத்திற்கு உள்ளேயே இருந்தனர்.

மே 16 இல் இராணுவம் 2 சதுர கிலோமீற்றர் பரப்பளவை முழுமையாக சுற்றிவளைத்திருந்தது. புலிகளின் தலைவர்கள் தப்பிச் செல்வதற்கு அதனால் எந்தவொரு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

மே 16 /17 இரவு அந்தப் பகுதியில் எந்தவொரு பொதுமக்களும் இல்லை என்று இராணுவம் நிச்சயப்படுத்திக்கொண்டது. அதனை அடுத்து, நம்பிக்கையுடன் புலிகளின் தலைமைத்துவத்துக்கு எதிராக இறுதிக்கட்ட நடவடிக்கையை இராணுவம் ஆரம்பித்தது.

பொதுமக்களை மீட்கும் நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் எஞ்சியிருந்தவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழியமைத்து கொடுத்தது. இராணுவத்தின் 3 பிரிவுகள், புலிகள் கடைசியாக இருந்த பகுதி மீது நடவடிக்கையை ஆரம்பித்திருந்தனர் என்று அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. இறுதிக்கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின்னரே புலிகள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அச்சமயமே, தமது துப்பாக்கிகளை மௌனமடையச் செய்ய தாங்கள் முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளனர். இந்த யுத்தம் கசப்பான முடிவுக்கு கொண்டுசென்றது. எமது மக்கள் குண்டுகள், செல்கள், நோய், பட்டினியால் இறந்துகொண்டிருக்கின்றனர். மேலும், அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட நாங்கள் அனுமதிக்க முடியாது. நாம் ஒரேயொரு தெரிவுடன் இருக்கின்றோம். எமது துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுப்பதென நாம் தீர்மானித்துள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

மே 18 இல் 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட 3 தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்தது. பிரபாகரன், அவரின் மகன் சாள்ஸ் அன்ரனி, சூசை, பொட்டு அம்மான் மற்றும் ஏனைய தலைவர்கள் உட்பட சுமார் 600 விடுதலைப்புலிகளின் மரணத்துடன் இந்த மோதல் முடிவிற்கு வந்தது.

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டுள்ள முதலாவது இராணுவ முகாம்

08lorry-good.jpgயுத்தம் முடிவுக்கு வந்த பின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – வாழைச்சேனை (ஏ-15) பிரதான வீதியில் அமைந்திருந்த கும்புறுமுலை இராணுவ முகாம் மற்றும் சோதனைச்சாவடி ஆகியன இன்று திங்கட்கிழமை முதல் முற்றாக அகற்றப்பட்டுள்ளன. பல வருடங்களாக கும்புறுமுலை முச்சந்தியில் அமைந்திருந்த இவ் இராணுவ முகாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான முகாம்களில் ஒன்றாகக் கருதப்பட்டு வந்தது

இடம்பெயர்ந்தோருக்கு புனர்வாழ்வளிப்பதே அரசின் முதல் பணி – மியன்மார் தலைவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

meeting_with_chairman.jpgஇலங் கையின் வடக்கில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக  சின்னாபின்னமான இடங்களைப் புனரமைத்து அப்பகுதி மக்களுக்கு இயல்பான வாழ்வை மீளப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய பணியாகுமென மியன்மார் தலைவர் தான் ஷிவி நேபேதோரிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மியன்மாருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்நாட்டின் தலைவருக்குமிடையிலான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் பயங்கரவாதத்துக்கெதிரான மனிதாபிமான நடவடிக்கையை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய முடிந்தமைக்காக இச்சந்திப்பின்போது தனது திருப்தியை வெளியிட்ட ஜனாதிபதி,  நாடு வெற்றியடைந்ததன் பின்னர் மியன்மாருக்கே தாம் முதலாவது வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பௌத்த மதத்தின் போதனைகளின்படி எல்லா உயிர்களும் சமாதானத்துடனும் நல்லுறவுடனும் வாழ முடியும் என்றும் ஜனாதிபதி இச்சந்திப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.