16

16

தனி ஈழம் என்பதற்கு நாட்டில் இடம் இல்லை

rajetha.gifஇலங் கையில் தனி ஈழம் என்ற கருத்தை இனிவரும் காலங்களில் நாட்டில் அனுமதிக்க முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். புலிகளின் சர்வதேச தொடர்பாடல்களுக்கு பொறுப்பான குமாரன் பத்மநாதன் சர்வதேச தமிழீழ அரசு ஒன்றை உருவாக்கப் போவதாக தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் காரணமாக பல நாடுகள் பிளவு பட்டுள்ளன. எனினும் இலங்கையில் யுத்தம் முடிவடைந்த நிலையில் அவ்வாறானதொரு சாத்தியம் அற்றுப் போயுள்ளது. இதனை இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அவர் கூறியுள்ளார்.

நியுசிலாந்து அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை அணி அரையிறுதிக்கு தெரிவு

muralitharan-sri-lankas.jpgநியுசிலாந் துடனான இருபது 20 உலகக் கிண்ண “சுப்பர் 8′ போட்டியில் 48 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இலங்கை அணி  “எப்’ பிரிவிலிருந்து அரையிறுதிக்கு இலகுவாகத் தெரிவாகியது. இத் தொடரில்  இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடையவில்லை.

நொட்டின் ஹாமில்  “எப்’ பிரிவுக்காக இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கையணி டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய நியுசிலாந்து அணிக்கு சகல விக்கெட்டுகளையும்  இழந்து 110 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அதே நேரம் “எப்’ பிரிவுக்காக  பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தெரிவாகியுள்ளது.

இலங்கை
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/
டிஎம் தில்ஷான் பி. பிபி மெக்குல்லம் ப. டிஎல் வெட்டோரி 48   37   5   0
எஸ்டி ஜெயசூர்யா பி. ஆர்எல் டெய்லர் ப. நாதன் மெக்கல்லம் 0   1   0    0
எல்பிசி சில்வா பி. ஜேடிபி ஓரம் ப. கெய்த் மில்ஸ் 13   10   2   0
கேசி சங்கக்காரா பி. எஸ்பி ஸ்டைரிஸ் ப. டிஎல் வெட்டோரி 35   35   3   0
டிபிஎம்டி ஜெயவர்தனே அவுட்டில்லை 41   29   6   1
துஷார் இம்ரான் எல் பி டபுள்யூ ஐஜி.பட்லர் 8   5   1   0
ஆங்லோ மேத்யூஸ் அவுட்டில்லை 6   4   0   0
 
மொத்தம்: 158/5 (20.0) | ரன் விகிதம்: 7.90 | உதிரிகள்: 7 (பைஸ்- 1, வைடுகள்- 4, நோ பால்- 1, லெக் பைஸ்- 1, அபராதம் – 0) 

விக்கெட் வீழ்ச்சி
1-3(0.3), 2-25(3.5), 3-87(11.3), 4-137(17.4), 5-147(18.5)

(பந்து வீச்சாளர் /ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால்)
நாதன் மெக்கல்லம் 4.0 0 22 1 0 0
கெய்த் மில்ஸ் 4.0 0 41 1 1 0
ஜேடிபி ஓரம் 4.0 0 23 0 0 0
ஐஜி.பட்லர் 3.0 0 29 1 0 0
டிஎல் வெட்டோரி 4.0 0 32 2 2 1
எஸ்பி ஸ்டைரிஸ் 1.0 0 9 0 0 0

 நியூ ஸீலாந்து
(பேட்ஸ்மேன்/ ஆட்ட நிலை/ ரன்கள்/ பந்துகள்/ 4’கள்/ 6’கள்/)
பிபி மெக்குல்லம் பி. துஷார் இம்ரான் ப. இசுரு உதனா 10 12 2 0
ஏ.ஜெ. ரெ‌ட்மா‌ண்‌ட் பி. எல்பிசி சில்வா ப. எஸ்எல் மலிங்கா 23 13 3 1
எம்.ஜே.குப்டில் பி. ஆங்லோ மேத்யூஸ் ப. எஸ்டி ஜெயசூர்யா 43 34 4 1
ஆர்எல் டெய்லர் ஸ்ட. கேசி சங்கக்காரா ப. அஜந்தா மென்டிஸ் 8 8 1 0
எஸ்பி ஸ்டைரிஸ் போல்டு அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
ஜேடிபி ஓரம் போல்டு இசுரு உதனா 7 12 0 0
பி.டி.மெக்லாஷன் பி. துஷார் இம்ரான் ப. அஜந்தா மென்டிஸ் 2 3 0 0
நாதன் மெக்கல்லம் ரன் அவுட் எம் முரளிதரன் 2 4 0 0
டிஎல் வெட்டோரி பி. எஸ்எல் மலிங்கா ப. எம் முரளிதரன் 3 5 0 0
கெய்த் மில்ஸ் ரன் அவுட் டிஎம் தில்ஷான் 4 6 1 0
ஐஜி.பட்லர் அவுட்டில்லை 2 2 0 0
 
மொத்தம்: 110/10 (17.0) | ரன் விகிதம்: 6.47 | உதிரிகள்: 4 (பைஸ்- 0, வைடுகள்- 3, நோ பால்- 0, லெக் பைஸ்- 1, அபராதம் – 0)  

விக்கெட் வீழ்ச்சி
1-30 (2.6), 2-39 (4.5), 3-64 (8.1), 4-66 (8.4), 5-93 (12.6), 6-95 (13.4), 7-98 (14.3), 8-100 (15.1), 9-102 (15.4), 10-110 (16.6) 

(பந்து வீச்சாளர்/ ஓவர்/ மெய்டன்/ ரன்கள்/ விக்கெட்/ வைடுகள்/ நோ பால் )
இசுரு உதனா 3.0 0 17 2 0 0
எஸ்டி ஜெயசூர்யா 3.0 0 28 1 0 0
எம் முரளிதரன் 4.0 0 18 1 0 0
எஸ்எல் மலிங்கா 3.0 0 26 1 2 0
அஜந்தா மென்டிஸ் 3.0 0 9 3 0 0
டிஎம் தில்ஷான் 1.0 0 11 0 1 0

ஆட்ட நாயகன் அஜந்தா மென்டிஸ்

நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான முன்னேற்பாட்டுச் செயற்குழு: வி. உருத்திரகுமாரன்

tamilnational_.jpgநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது அவசியம் என தாயகத்திலும், வெளிநாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்கள் கருதுகின்றனர் என நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ருத்திரகுமாரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மானிடம் பேணும் சட்ட நெறிகளையும் மனித நாகரீகத்தின் அனைத்துப் பண்புகளையும் முற்றுமுழுதாக மீறி, கொடூரமிக்க, அதீத இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் சிங்கள அரசு, தமிழ் மக்களின் நியாய பூர்வமான தன்னாட்சித் தீர்மான முன்னெடுப்புக்களை நசுக்கிச் சிதைத்துள்ளது. வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொலைக்களரியானது முழு உலகையுமே பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த வேதனையிலும் அமிழ்த்தியுள்ளது.

குறிப்பாகப் பாவனைக்குத் தடைசெய்யப்பட்ட கனரகப் போராயுதங்களினாலும் அறாத்தொடர்ச்சியான எறிகணைகளாலும், பீரங்கிக்குண்டுகளினாலும் 30,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் கொன்று குவிக்கப்பட்டனர்.

இன்று சிங்கள இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்ட சிறை முகாம்களில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வன்னடைப்புச் செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடு சார்ந்த நிறுவனங்களும், பன்னாட்டு அரச நிறுவனங்களும், செய்தியாளர்களும் இந்த முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகாம்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களும் நடைப்பிணங்களாகவே வாழ்கின்றனர். யாழ் தீபகற்பம் ஒரு திறந்தவெளி மறியற்சாலையாகவே உள்ளது. கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சி நிலவும் நிலமாகவுள்ளது.

ஸ்ரீலங்காவின் தெற்குப்பகுதியில் சிங்களப் பேராதிக்கக் கட்டுப்பாட்டில் தமிழ் மக்கள் பாதுகாப்பற்று, பயமுறுத்தப்பட்டு, பல்வேறு இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுதல் நாளாந்;த நிகழ்வாயுள்ளது. தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காவே இவர்கள் குறிவைக்கப்படுகின்றனர். நன்கு திட்டமிட்ட கொலைகள், கடத்தல், காணமல் போதல், வன்மையான அடையாள அழிப்பு, தமிழீழ நிலப்பறிப்பு, இனச்சுத்திகரிப்பு போன்றவற்றினால் தமிழ் மக்களின் தேசிய இனத்துவ முழுமை சிதைக்கப்பட்டுவருகின்றது.

இலங்கைத தீவில் தமிழ் மக்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல் அவர்களது நியாய பூர்வமான அரசியல் அபிலாசைகளை எடுத்துரைக்கும் அரசுரிமைவெளியும் அழிந்துபோயுள்ளது.

மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் உயிராபத்தின் விளிம்பில் வாழ்கின்றனர். திரு யோசப் பரராசசிங்கம் (2005), திரு நடராசா ரவிராஜ் (2006), திரு க. ந. சிவநேசன் (2008) ஆகிய தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் ஆபத்தை எதிர் கொண்ட போதும் அசாத்தியத் துணிவுடன் பணியாற்றுகின்றனர்.

இவை தவிர இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பு, தேர்தல்; தொகுதிகளின் எல்லைகளைக் கபடமாக மாற்றியமைத்தல் போன்றவற்றினாலும், புதிய வாக்காளர்களைப் பதியாமல் விட்டமை, மற்றும் தொடர்ந்து போரினால் பாரிய அளவில் ஏற்பட்ட இடப்பெயர்வுகள் ஆகியனவும் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை எண்ணுக்கணக்கில் குறுகச் செய்துள்ளது. இவை அனைத்துமே இலங்கைத் தீவின் அரசியல் நீரோட்டத்தில் தமிழர்கள் பங்கு பெறுவதை சாத்தியமற்றதாக்கியுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவின் அரச அமைப்பிலும் அதன் யாப்பு முறையிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஆக்கபூர்வமான, பயன்தருவகையில் முன்னெடுப்பதற்கான எத்தகைய அரசியல்வெளியும் இல்லை. இத்தீவில் தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வழி எதுவுமேயில்லை. எனவே இலங்கைத் தீவுக்கு வெளியிலேயே தமிழர்கள் தமது உரிமைகளை நிலை நிறுத்துவதற்கான முன்னெடுப்பு முயற்சிகளைத் தொடரமுடியும்.

ஆகவே தமிழீழத்தில் வாழும் மக்களும் வெளிநாடுகளில் பரவி வாழும் தமிழீழத்தவர்களும் தற்பொழுதிற்கான நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (Provisional Transnational Government of Tamil Eelam) ஒன்றினை உருவாக்குதல் அத்தியாவசியமான மிகமுக்கிய பணியெனக் கருதுகின்றார்கள்.

சட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும், சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவதும் திட்டமிட்டு இன அழிப்பில் ஈடுபடுவதும் இவை போன்ற போர்க்குற்றங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும்; குழந்தைகளைக் கடத்துவதுமாகிய கொடூரங்களும் இவற்றினூடாக அரசியற் தலைவர்களை புறந்தள்ளலும் ius cogens அடிப்படை சட்டநெறித் தத்துவங்களுக்கு முற்றிலும் முரணானதாகும். இத்தகைய சூழலில் நாடு கடந்த நிலையில் சட்ட பூர்வமான அரசாட்சியை நிறுவுதற்கான தேவையினை செயற்படுத்துவதற்கு சர்வதேச சட்டமரபுநெறிகள் இடம் தருகின்றன.

இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை தற்பொழுதிற்கு அமைப்பதற்கான திட்டம் ஒன்றினை முன்வைக்க விரும்புகின்றோம். எமது செயற்பாடுகளும் திட்ட முறைமைகளும் ஜனநாயக அடிப்படையிலமைந்தவையாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றினை உருவாக்குவதற்கான கட்டமைப்புக்களை, பின்வரும் விடயங்களைக் கருத்திற் கொண்டு பணியாற்ற செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

1. 1976ல் வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டைப் பிரகடனத்தினதும், 1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும், பின்பு 1985ல் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும், 2003ல் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப்பகிர்வின் தளமாக அமைந்ததுமாகிய

தமிழர் ஓர் தேசிய இனம்

வடக்கு- கிழக்கு தமிழர் தாயக நிலம்

ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை

போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை ஈழத்தமிழரின் அரசியல் அபிலாசைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக் கொள்ளும் அனைத்துத் தமிழ் மக்களையும் ஓன்றிணைப்பது

2. 2001ம் ஆண்டு, 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல்களின்போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் அரசியல் கட்சியாகத் தமிழ் மக்களினால் ஏற்று உறுதி செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் ஈழத்தமிழரின் தன்னாட்சிக் கோட்பாட்டினை ஏந்தி ஆதரிக்கும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து செயற்படுதல்.

3.  சிங்கள தேசத்துடனான பேச்சுவார்த்தைகளுக்கான தமிழர் தேசத்தின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தல்.

4.  உலகனைத்தும் பரவி வாழும் ஈழத்தமிழர் மத்தியில் பன்னாட்டு மதிப்பினைப்பெற்ற நிறுவனம் ஒன்றினுடன் இணைந்து வாக்காளர் பட்டியல் ஒன்றினைத் தயாரித்;தல். இவ்வாறு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வாக்களிப்பை நடத்தி தமிழ்த் தேசியப் பேரவையினை தெரிவு செய்து இப் பேரவையினூடாக தமிழீழ அரசியல் யாப்பினை வடிவமைத்தலும்; தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காணும் நோக்குக்கு வழிகோலும் வகையில் பொது வாக்கெடுப்பினை பன்னாட்டு மேற்பார்வையில் நடத்த வழிசெய்தலும்.

5.  ஈழத்தமிழர் உலகப்பேரவை ஒன்றினையும், நிறைவேற்று அதிகாரக் குழு ஒன்றினையும் தெரிவு செய்யும் முறைநெறிகளை வரையறை செய்தல்.

6.  அரசுகளுடனும், பல்அரசுகள்சார்ந்த நிறுவனங்களுடனும் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

7.  உலகெங்கும் பரவிவாழும் ஈழத்தமிழரின் சமூக, பொருண்மிய, பண்பாட்டு மேம்பாடுகளைத் துரிதப்படுத்தல்.

8.  தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கிடையிலான வேறுபாடுகளை தமிழர் தன்னாட்சி உரிமைக்கெதிரான பயத்தை தோற்றுவிக்கும் கருவியாகக் கொள்ளாமல், முஸ்லீம் மக்களுடன் இணைந்து இரு சமூகத்தினரும் ஒருமித்து பங்குபெறும் அரசியல் வழிமுறைகளை இனம் காணுதல்.

9.  வடக்கு- கிழக்கில் வாழும் ஈழத் தமிழர்களினதும், உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களினதும் நலன் பேணும் வகையிலான செயற்பாடுகளை ஊக்குவித்தல்.

இலங்கையில் தொடர்ந்து நிகழும் இனப்படுகொலையினை நிறுத்துமுகமாக பன்னாட்டு அரசு சார் நிறுவனங்களுடனும், அரச சார்பற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்திச் செயற்டுவதனையும் இக்குழு தனது பணியாகக் கொண்டுள்ளது.

இவ்வாறு தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் ஈழத்தழிழரின் உயிர் இருப்பை உறுதி செய்தல் மற்றும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையும், தமிழ்ச் சிறுவர்கள்  மீதான வன்முறை சித்திர வதைகளையும் சிங்கள அரசும் அதன் இராணுவமும் மேற் கொள்ளாதபடி தடுத்து நிறுத்துதல், பிரிந்த குடும்பங்களை விரைவாக ஒன்று சேர்த்து இன்று கொடுமை முகாம்களில் வதைபடும் மூன்று இலட்சம் தமிழ் மக்களையும் அவர்களின் சொந்த வீடுகள், ஊர்களில் குடியமரும்படியான வழிவகைகளை இனம் காணுதல், தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டவர்களையும் மனித நேயத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைத் திட்டமிட்டுப் புரிந்தவர்களையும் நீதியின்படியாக விசாரணைக்கு உள்ளாக்குதல் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கை எடுக்கத் தூண்டுவதில் இக்குழு கவனம் செலுத்தும்.

தனக்குரிய கடமைகளை நிறைவேற்ற உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள் மத்தியிலுள்ள அமைப்புகளுடனும் குறிப்பாக புதிய இளைய தலைமுறையினருடன் இணைந்து செயற்படுதலில் இக்குழு கூடுதல் கவனம் செலுத்தும். மேற்குறிப்பிடப்பட்ட இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்படும் இச் செயற்பாட்டுக்குழு நாடுகள் தழுவியரீதியிலும் துறைகள் சார்ந்த வகையிலும் பல உபகுழுக்களை கொண்டியங்கும். இச் செயற்பாட்டுக்குழுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் நாம் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

இச் செயற்பாட்டுக்குழுவுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக பல்துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் சொர்ணராஜா (பிரித்தானியா) பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா) பேராசிரியர் பி. இராமசாமி (மலேசியா) பேராசிரியர் நடராசா சிறிஸ்கந்தராசா (சுவீடன்) கலாநிதி முருகர் குணசிங்கம் (அவுஸ்திரேலியா) வைத்தியக்கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா) கலாநிதி வசந்தகுமார் (பிரித்தானியா) சட்ட அறிஞர் கரன் பார்க்கர்(அமெரிக்கா) திரு செல்வா சிவராசா(அவுஸ்திரேலியா) திரு போல் வில்லியம்ஸ் (நெதர்லாந்து) பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்) ஆகியோர் இவ் ஆலோசனைக்குழுவில் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் இச் செயற்திட்டத்திற்குரிய குழுக்களில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு ஆர்வமுள்ள அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.

இக்குழு 2009ம் ஆணடு  மார்கழி மாதம் 31ம்; திகதி வரை செயற்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இத் திகதி வரையிலான செயற்பாடுகளை இக் குழு அறிக்கையாகச் சமர்ப்பிக்கும். இத் திட்டம் தொடர்பாக தமிழ் மக்களினது ஆக்கபூர்வமான கருத்துக்களை வரவேற்கிறோம். மக்கள் தொடர்புக்குரிய மின்னஞ்சல் முகவரி:  info@govtamileelam.org

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
16.06.2009

பெண்கள் உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியா

women-20-20.jpgஇங்கி லாந்தில் நடக்கும் பெண்கள் உலக கோப்பை டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மழை காரணமாக போட்டி18 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி18 ஓவரில் 6 விக்கெட் இழப்பற்கு 94 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா அணி சார்பில் பூனம் ராவுட் 40 பந்துகளில் 30 ரன்களும், மிதாலி ராஜ் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

மதுரையில் 15 டிபன் பாக்ஸ் குண்டுகள் சிக்கின – தீவிரவாத செயலுக்கு சதி?

16tiffin-box-bombs.jpgமதுரை ரிங் ரோடு அருகே உள்ள கானாத்தான் பாலத்துக்குக் கீழே மர்மமான முறையில் வைக்கப்பட்டிருந்த 15 டிபன் பாக்ஸ் குண்டுகளை போலீஸார் மீட்டுள்ளனர். தீவிரவாத செயலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் போலீஸாருக்கு வந்துள்ளது. தென் மாநிலங்களில் தீவிரவாதத் தாக்குதல்  நடக்கலாம் என உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதால், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளது.

குறிப்பாக சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட தீவிரவாத தாக்குதலுக்கான வாய்ப்பு உள்ள நகரங்களில் அதி தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மதுரை நகரமும் தீவிர பாதுகாப்பு  மற்றும் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் ஏற்கனவே உச்சகட்ட பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண அபிவிருத்தி தொடர்பாக இன்று வவுனியாவில் கலந்துரையாடல் -மீள்குடியேற்ற அமைச்சு தகவல்

vavuniya_discussion.jpgவடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் மூலம் வட மாகாணத்தை துரிதமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ,  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் மற்றும் வட மாகாண ஆளுநர் டிக்சன் தெல ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்துக்குட்பட்ட சகல பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
 

புலிகளுக்கு உதவிய மருந்தக உரிமையாளர் வெள்ளவத்தயில் கைது

police_spokesman_ranjith.jpgபுலிகளுக்கு பெருமளவு மருந்துப் பொருட்களை வழங்கியதாக நம்பம்படும் மருந்தக உரிமையாளர் ஒருவர் கொழும்பு, வெள்ளவத்த பிரதேசத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.

வெள்ளவத்த, பெரேரா ஒழுங்கை எனும் முகவரியில் இயங்கி வரும் நீலம் மருந்தகத்தின் உரிமையாளரான செல்வநாயகம் பாலசந்திரன் எனும் இந்த சந்தேக நபரை பயங்கரவாத புலணாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர்.

45 வயதான இவர் பதிவு செய்யப்பட்டுள்ள தமது மருந்தகத்தினூடாக பல மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை புலிகளுக்கு வழங்கியுள்ளதோடு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்களிடமிருந்தும் பெருமளவு மருந்துகளைக் கொள்வனவு செய்து புலிகளுக்கு விநியோகித்திருப்பதாகவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர் கைது செய்யப்படும்போது புலிகளுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 32 வகையான மருந்துப் பொருட்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன.புலிகளது மருத்துவப் பிரிவின் முக்கிய ஆதரவாளராக நம்பப்படும் இவர் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்

president_mahinda-returned.jpgஉத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு மியன்மார் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த 14ஆம் திகதி மியன்மாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அந்நாட்டின் தலைவர், பிரதமர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார,வர்த்தக மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

இலங்கையிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அடையாள அட்டை விநியோக நடமாடும் சேவை

uwa_provinces_and_districts.pngஎதிர் வரும் ஊவா மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் அடையாள அட்டைகள் காணாமல் போனவர்களுக்கும் அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நடமாடும் சேவை ஒன்றை நடத்த ஆட்பதிவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக மொனறாகலை மாவட்டத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அடுத்த கட்டமாக பதுளை மாவட்டத்தில் நடமாடும் சேவையை நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி அந்த மாவட்டத்தில் நாளை முதல் எதிவரும் 21 ஆம் திகதி வரை இந்தச் சேவை இடம்பெறவுள்ளது. ஹல்துமுல்லை மற்றும் ஹாலிஎல பிரதேச செயளக காரியாலயங்களிலும் உப காரியாலயத்திலும் நாளை நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

ஹப்புத்தலை மற்று வெலிமட பிரதேச செயலக காரியாலயங்களிலும் ஹப்புத்தலை நகர சபையிலும் பொரலந்த விவசாய மத்திய நிலையத்திலும் இச்சேவை நாளை மறுதினமான 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 19 ஆம் திகதி பண்டாரவளை மற்றும் ஊவாபரணகம  பிரதேச செயலக அலுவலகங்களிலும் அம்பகஸ்தென்ன விவசாய மத்திய நிலையத்திலும் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

பஸ்ஸர பதுளை லுணுகல தோட்டங்களுக்காக பஸ்ஸர கரவனல்ல வித்தியாலயம் மற்றும் லுணுகல பிரதேச செயலக அலுவலகம் ஆகியவற்றில 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  அன்றைய தினம் சோரணாதொட்ட பிரதேச செயலக அலுவலகம் மற்றும் கந்தேகெதர விகாரையிலும் இச்சேவை இடம்பெறவுள்ளது.

பதுளை மற்றும் கந்தேஹெட்டிய பகுதிகளுக்கான விநியோகம் எதிர்வரும் 21 ஆம் திகதி பதுளை பாரதி வித்தியாலயம்,  பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் கலஉட நூராணியா முஸ்லிம் வித்தியாலயம் ஆகியவற்றில் இடம்பெறவுள்ளது.(

கொரிய குடியரசின் இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக கொழும்பு வருகை

ships000.jpgகொரிய குடியரசைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதுபற்றி அமைச்சு மேலும் குறிப்பிடுகையில், சோய் யொங் மற்றும் டே ச்சியொங் எனும் பெயர்களைக் கொண்ட கொரிய கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பல்களை இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் சொய் கீ சுல்லுடன் கொழும்பில் உள்ள 200க்கும் மேற்பட்ட தென்கொரிய மக்கள் நேற்று கொழும்பு துறைமுகத்துக்குச் சென்று வரவேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கப்பல்களை வரவேற்கும் வைபவத்தின்போது இலங்கைக் கடற்படையினர் 21 துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து மரியாதை செலுத்தி இந்தக் கப்பல்களை வரவேற்றனர்.
 
இக்கப்பல்களில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு விநியோகிப்பதற்காக நிவாரணப் பொருட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. தென்கொரியாவினால் நட்புறவு அடிப்படையில் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இப்பொருட்களை கப்பல்களிலிருந்து இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுக வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மூன்று நாட்களுக்கு கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள இவ்விரு கப்பல்கள்களும் எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து  புறப்படவுள்ளன. இக்கப்பல்கலில் வந்துள்ள தென்கொரிய கடற்படையினருக்கும் இலங்கைக் கடற்படையினருக்கும் இடையில் கப்பல் தரித்து நிற்கும் 3 நாட்களும் நட்புறவு ரீதியான விளையாட்டுப் போட்டி ஒன்று இடம்பெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.