18

18

நெலுங்குளத்தில் மூன்று புலி உறுப்பினர்கள் சுட்டுக் கொலை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

police_spokesman_ranjith.jpgவவுனியா, நெலுங்குளம் பகுதியில் இன்று காலை மூன்று புலி உறுப்பினர்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் இன்று காலை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா விஷேட பொலிஸ் பிரிவினர் வாகனம் ஒன்றை சோதணை செய்ய முற்பட்டபோது இந்த மூன்று புலி உறுப்பினர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதனை வெற்றிகரமாக முறியடித்த பொலிஸாரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இம்மூவரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார். 

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 11 இல் ஆரம்பம் – ஓகஸ்ட் 23 இல் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை

examination_department.jpgஇவ் வருடம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கான நாட்களை பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அகதி முகாம்களுக்குச் செல்ல அனுமதி மறுப்பு : எதிர்க்கட்சிகள் வழக்குத் தாக்கல்

court-unp.jpgவடக்கில் நடந்து முடிந்த யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் பலர் முகாம்களில் அகதிகளாக அவலப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை எமது நாட்டு எதிர்க்கட்சிகளுக்கோ மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கோ அரசு வழங்கவில்லை.

எமது நாட்டு மக்களின் நிலையை நேரில் சென்று அறிய முடியாத நிலையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்தன, லஷ்மன் செனவிரத்ன, மங்கள் சமரவீர, ஹசன் அலி, மனோ கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று பிரதம நீதியரசர் அசோக் டி சில்வாவின் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விவாதத்தின் பின்னர் இம்மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கைதான இந்திய மீனவர்கள் விடுதலை

fishermen.jpgஇலங்கைக் கடற்படையினரால் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுவிக்கப்பட்ட இவர்கள் இந்திய கடலோர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

சீன அபிவிருத்தி வங்கியால் 25 மில்லியன் டொலர் நிதியுதவி

ranjith_siyambalapitiya.jpgநாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு சீன அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் டொலரை நிதியுதவியாக வழங்க முன் வந்துள்ளதுடன் அதற்கான பினைச் சாண்றிதழ் ஒன்றை சமர்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பதில் நிதி அமைச்சரான ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய சமர்பித்திருந்தார்.

இந்தக் கடனுதவித் தொகை மூலம் விவசாயம் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய 7 இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் கைது

arrest.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏழு இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் இரண்டு இராணுவ மேஜர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இராணுவப் புலனாய்வுப் பிரிவில் கடமையற்றிய இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.குறித்த இராணுவ உயரதிகாரிகள் தொடர்பில் விரிவான இரகசிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதன் காரணமாக அவர்ளது விபரங்களை வெளியிட முடியாதென பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்

இலங்கை அணி மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதக் குழு பிரதான அங்கத்தவர் கைது!

sl-cricket-teamattack.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதக் குழுவின் பிரதான அங்கத்தவர் ஒருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ள தாலிபான் அமைப்பொன்றின் உறுப்பினரான இந்த நபர் நேற்று லாகூர் நகரில் முகம் மறைக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் முன்னிலையில் நிறுத்தப்பட்டார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொண்ட இந்த நபர்,  இத்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை வீரர்களைக் கடத்திச் செல்வதே தமது இலக்காக இருந்தது என்றும் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தாக்குதல் நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமது குழுவினர் லாகூர் நகருக்கு வந்து அங்குள்ள சிறு வீடொன்றினுள் இருந்தே தாக்குதல் திட்டங்களை வகுத்ததாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

இலங்கை அணி கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்தபோது இலங்கை வீரர்கள் பயணம் செய்த பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 6 பேர் கொல்லப்பட்டதோடு இலங்கை வீரர்கள் 6 பேரும் ஒரு பயிற்றுவிப்பாளரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளி ஒலிபரப்பும் உரிமை அரச ஊடகங்களுக்கு

anura_priyadarshana_yapa_1806_press.jpgஎதிர் வரும் காலங்களில் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை ஒளி,  ஒலிபரப்பும் உரிமையை அரச ஊடகங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், விரைவில் இலங்கையில் நடைபெறவுள்ள இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை அரச ஊடகங்கள் ஒளி,  ஒலிபரப்புச் செய்யும்.

இலங்கை கிரிக்கட் அணியினர் ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் ஒப்பந்தங்களை ரத்துச் செய்வது தொடர்பான நடவடிக்கைகளை கையாளும் அதிகாரத்தை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

வட மாகாண மக்களுக்கு தனித்துவமான அரசியல் தீர்வு – பசில் ராஜபக்ஷ எம். பி. தெரிவிப்பு

basil.jpgவட மாகாண மக்களுக்கு நாட்டுக்கே உரிய தனித்துவமான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் பெற்றுக் கொடுக்குமென்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்,  வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வட மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் தனித்துவமான செயற் திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்படுமென்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பாக வவுனியா மாவட்டச் செயலகத்தில்; நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தில் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த அதிகாரிகளை ஈடுபடுத்துகின்றோம். அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வளங்களை மேம்படுத்தி,  தனித்துவமான ஓரு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்போம்.

அனுசரணை செயற் திட்டத்திற்கும் அப்பால்,  நாட்டுக்குப் பொருத்தமான செயற்திட்டத்தையே வடக்கில் நடைமுறைப்படுத்துகின்றோம்.

வீதி அபிவிருத்தி,மின்சாரம்,குடிநீர், விவசாயத்துறை மேம்பாடு ஆகிய பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள திட்டமிட்டு செயற்படுகிறோம். யாழ்ப் பாணத்திற்கான ஏ-9 பாதை, வவுனியா ஹொரவப் பொத்தானை வீதி உள்ளிட்ட வட பகுதியின் முக்கிய வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

இராகலை நகரில் ஒரே நேரத்தில் 10 கடைகளில் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடிவிட்டுச் சென்ற வர்த்தகர்கள், நேற்றுக் காலை கடைக்கு வந்தபோது கடை கள் உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பஸ் தரிப்பு நிலையம், உடபுசல்லாவை வீதி, பிரதான வீதி ஆகியவற்றில் உள்ள கிராமிய வங்கி, மளிகைக்கடை, மதுபான விற்பனை சாலை, புடவைக் கடை, இரசாய னப் பொருள் விற்பனை நிலையம், உள்ளிட்ட பத்து நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் கொள்ளை மேற்கொள் ளப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு பன்னிரண்டு மணிக்குப் பின்னரே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளதாக வர்த்தகர்கள் சந்தேகிக்கின்றனர். கடைகளின் பூட்டுகள் லாவகமாகக் கழற்றப்பட்டுள்ளதோடு, காசுப்பெட்டிகளிலிருந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

கடைகளில் பெருமளவு பணம் இருக்காததால், கொள்ளையர்கள் பொருட்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதில் 10, 20 பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகி க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து நுவரெலியா பொலிஸாருடன் இணைந்து இராகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். பொலிஸ் மோப்ப நாய்களும் புலனாய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.