யாழ். குடா நாட்டின் கடற் பிரதேசத்தில் மீனவர்களுக்கு மீன்பிடிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகள் யாவும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதன்படி 24 மணி நேரமும் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்பிற்கமைய வட மாகாண விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று யாழ். மீனவர்களுக்கு உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்தார்.
மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கென 303 மில்லியன் ரூபாவை உடனடியாக வழங்குவதாகக் கூறிய பசில் ராஜபக்ஷ எம்.பி., 15 முதல் 25 வரையிலான குதிரை வலு கொண்ட இயந்திரப் படகுகளைக் கொண்டு இன்று முதல் மின்பிடிக்கலாம் என்றும் கூறினார். கடலில் மீனவர்கள் செல்வதற்காக விதிக்கப்பட்டிருந்த தூரக்கட்டுப்பாடும் நீக்கப்பட்டு விட்டதாக அவர் அறிவித்தார்.
கட்டுமரம், தோணி என்பவற்றை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்ட அவர், ராடர் திரைகளில் அவை தெரியாத காரணத்தினாலேயே இவற்றை உபயோகிக்க வேண்டாம் எனக் கேட்பதாக தெரிவித்த அவர், ராடர் திரைகளில் பதிவாகும் விதத்தில் கட்டுமரம், தோணி என்பவற்றுக்கு சாதனங்கள் பொருத்தப்பட்டதும் இவற்றை உபயோகிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
பிடிக்கும் மீன்களை குளிரூட்டப்பட்ட லொறிகளில் (கூலர்) ஏற்றி நேரடியாக ஏ-9 பாதையூடாக கொழும்புக்கு கொண்டு வரவும் இன்று முதல் அனுமதி வழங்கப்படுகிறது. லொறிகளில் ஏற்றப்படும் மீன்களை அந்த இடத்திலேயே சோதனை செய்து சீல் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
யாழ். மீனவக் கிராமங்கள் அனைத்திலுமுள்ள உட்கட்ட மைப்பு வசதிகள், வீடமைப்புகள், மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு துறைகள், மீன்களின் மொத்த விற்பனைக் கூடங்கள் அனைத்தும் புனரமைப்பு செய்யப்படும் என்றும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.பிடிக்கும் மீன்கள் பழுதுபடாமல் பாதுகாத்து வைப்பதற்கான குளிரூட்டிகள் இல்லாத காரணத்தினால் கிழக்கிலிருந்து தற்காலிகமாக இரண்டு கூலர்களை யாழ். குடா நாட்டிற்கு கொண்டு வருவது என்றும் நேற்று தீர்மானிக்கப்பட்டது.
மீனவர்களுக்கு தேவையான மீன்பிடி உபகரணங்களுக்காக வழங்கப்படும் 303 மில்லியன் ரூபாவில் 78 மில்லியன் ரூபாவை கடற்றொழில் அமைச்சும், எஞ்சிய தொகை கமநெகும திட்டத்தினூடாகவும் வழங்கப்படவுள்ளது.
யாழ். குடாநாட்டின் மீள்குடியேற்றம் தொடர்பாக பசில் ராஜபக்ஷ எம்.பி. பேசும் போது, யாழ். குடா நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து சென்றோர் வவுனியா நிவாரணக் கிராமங்களில் இருப்பினும் தாமதமின்றி உடனடியாக அவர்கள் அனைவரும் குடாநாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
நேற்றுக் காலை யாழ். காரைநகரிலுள்ள தியாகராஜா வித்தியாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது யாழ். குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள மீனவர் சங்கங்கள் கலந்து கொண்டன. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ எம்.பியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா, விமல் வீரவன்ச எம்.பி., யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க, வட பிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அத்மிரால் டி. டபிள்யூ. சோமதிலக்க திசாநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்