யாழ். மாநகர சபைத் தேர்தலில் ஐ.தே.க. வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்படுவதுடன், யாழ் நகரம் நவீனமயப்படுத்தப்படுமென ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்தன தெரிவித்தார்.
யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஐ.தே.கட்சியின் வேட்பு மனுவை யாழ்.மாவட்டத் தேர்தல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை தாக்கல் செய்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று முற்பகல் 11 மணியளவில் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்புடன் மாவட்டச் செயலகத்தேர்தல் திணைக்களத்திற்கு வருகை தந்த ஜயலத் ஜயவர்தன , ஏ.எஸ்.சத்தியேந்திராவை முதன்மை வேட்பாளராகக் கொண்ட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ். மாநகர சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ள 29 வேட்பாளர்களும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களெனவும் இவர்களில் 28 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் உள்ளடங்குவதோடு, 5 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஜயலத் ஜயவர்தன எம்.பி.கூறுகையில்;
ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகத்தையும் நிலையான அமைதியையுமே விரும்புகிறது. வட பகுதியிலுள்ள மக்கள் யுத்தம் உட்பட பல்வேறு காரணங்களாலும் துன்பப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நடைபெறவுள்ள தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் நடைபெறுமா என்பது தொடர்பாக எங்களால் தற்போது எந்தக் கருத்தையும் கூற முடியாமலிருக்கின்றது. எவ்வாறான சூழ்நிலைகள் இருக்கின்ற போதிலும் எமது கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறது. நாங்கள் எந்தக் கட்சிக்கும் எதிராகச் செயற்படுபவர்கள் அல்ல.
நடைபெறவுள்ள தேர்தலில் எமது கட்சி வெற்றி பெற்றால் 24 மணித்தியாலங்களுக்குள் ஏ9 வீதி திறக்கப்பட்டு மக்களின் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். யாழ்நகரிலுள்ள மத்திய பஸ் நிலையம் மற்றும் நவீன சந்தை போன்றன மறு சீரமைக்கப்பட்டு யாழ்நகரம் நவீன மயப்படுத்தப்படும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக அணுகி அதற்குத் தீர்வு காண்பதன் மூலமே தேசியப் பிரச்சினைக்கு சுமுகமாகத் தீர்வு காண முடியும். இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
தமிழ் மக்கள் தன்னுடைய உறவினர்கள் என்றும் தமிழ்ச் சிறுவர்கள் தன்னுடைய பிள்ளைகள் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுவது பேச்சளவில் நின்றுவிடக்கூடாது. அதைச் செயலுருப்படுத்துவதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வைக் காண முடியும் என்றார். யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தயாராகிக்கொண்டிருக்கின்ற போதிலும் முதன் முதலாக வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது ஐ.தே.கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.