இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளரும், உலக சாதனையை தன் வசம் வைத்துள்ளவருமான முத்தையா முரளீதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
இதுகுறித்து முரளீதரன் கூறுகையில், மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்தான் எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும். அப்போது எனக்கு 38 வயதாகி விடும். எனவே இதுதான் ஓய்வு பெற சரியான சமயம் என நான் கருதுகிறேன். இருப்பினும் ஒரு நாள் போட்டிகள், டுவென்டி 20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்.
அடுத்த உலகக் கோப்பைப் போட்டி வரை ஒரு நாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில ஆண்டுகளுக்கு டுவென்டி 20 போட்டிகளில் விளையாட விரும்புகிறேன் என்றார் முரளீதரன். 1992ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார் முரளீதரன். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெரும் சாதனையாளர் முரளீதரன். முரளிக்கும், ஆஸ்திரேலியாவின் ஷான் வார்னுக்கும் இடையில் உலக சாதனை படைப்பதில் கடும் போட்டா போட்டி நிலவியது.
இதில் முதலில் சாதனை படைத்தவர் ஷான் வார்ன். இருப்பினும் 2007ம் ஆண்டு வார்னின் சாதனையை (708 விக்கெட்கள்) முறியடித்து புதிய சாதனை படைத்தார் முரளீதரன். தற்போது 127 போட்டிகளில் ஆடி 770 டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்தி அசைக்க முடியாத இடத்தில் இருக்கிரார் முரளீதரன். இவரது பந்து வீச்சு சரசாரசி 22 ஆகும். 800 விக்கெட்களை வீழ்த்தக் கூடிய திறமை இன்னும் முரளியிடம் உள்ளது.
ஒரு நாள் போட்டிகளிலும் முரளீதரன்தான் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ளஆர். ஒரு நாள் போட்டிகளில் முரளிதரன் வீழ்த்திய விக்கெட்களின் எண்ணிக்கை 507 ஆகும். இலங்கை அணியின் அசைக்க முடியாத சொத்தாக இருப்பவர் முரளீதரன். அவரது ஓய்வு நிச்சயம் இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே தமிழர் முரளீதரன் என்பது குறிப்பிடத்தக்கது.