July

July

கைரேகைகளுடன் அடையாள அட்டை

elc-ic.jpgநாட்டில் தற்போது பாவனையிலிருக்கும் தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதிலாக கைரேகைகளுடன் கூடிய தேசிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் இவ் ஆண்டின் இறுதியில் வழங்கப்படவுள்ளன. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் அனைத்தும் இலத்திரனியல் அடையாள அட்டைகளாக மாற்றப்படும். 1972 ஆம் ஆண்டு முதல் தற்போது பாவனையில் உள்ள அடையாள அட்டைகள் மனித வலுவைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. இதனால் அவற்றில் இலகுவாக மோசடி செய்ய முடிகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் முழுவதுமாக கணினி மயப்படுத்தப்படுவதுடன் மத்திய தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆகையால் அவை மேலும் பாதுகாப்பானவையாக இருக்குமென்றும் அவற்றில் மோசடிகள் செய்ய முடியாதென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 480 கோடி ரூபாவை அரசு செலவிட உள்ளது. இதற்கான கேள்வி கோரல் விடப்பட்டு தகுந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளர் டாக்டர் உபநந்த விதானபத்திரன தெரிவித்தார்.  இந்தத் திட்டத்தை உலக வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்வதற்கே தொடக்கத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. அதில் ஏற்பட்ட தாமதங்களால் அனைத்துச் செலவுகளையும் தானே பொறுப்பேற்றுக் கொள்வதென்று அரசு தீர்மானித்துள்ளது.

புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தற்போதுள்ள அடையாள அட்டைகள் 2015 ஆம் ஆண்டுடன் நாட்டிலிருந்து முற்றாக அகற்றப்பட்டுவிடும். அவற்றின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் மட்டுமே என்பதால் இயல்பாகவே அவை பாவனையிலிருந்து மறைந்து விடும். இலத்திரனியல் அடையாள அட்டைகளுக்காகப் பொதுமக்களிடமிருந்து எவ்வளவு பணம் அறவிடப்படப்போகின்றதென்ற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நாடுமுழுவதும் உள்ள 331 பிரதேச செயலகங்கள், இலத்திரனியல் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிக்கு அனுசரணை வழங்கவுள்ளன. புதிய அடையாள அட்டைகளில் ஒருவரின் தனிப்பட்ட விபரங்கள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் பதியப்பட்டிருக்கும். அத்துடன் கைரேகைப் பதிவும் ஒளிப்படமும் இணைக்கப்பட்டிருக்கும்.
 

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி

cricket1.jpgபங்களா தேஷ் கிரிக்கெட் அணி மே.தீவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரு கிறது. 2 டெஸ்டிலும் வென்று பங்களாதேஷ் அணி தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இரு அணிகள் மோதிய முதல் நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. “நாணயச் சுழற்சியில் வென்ற மே. தீவு முதலில் பங்களாதேஷை “பேட்டிங்” செய்ய அழைத்தது.

பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ஓட்ட ங்கள் எடுத்தது.  முகம்மது அஸ்ரப் 57 ஓட்டமும், தற்காலிக கப்டன் சகிப் அல்-ஹசன் 54 ஓட்டமும் மகமதுல்லா 42 ஓட்டமும் எடுத்தனர். ரோச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய மே.தீவு அப்துல் ரசாக்கின் அபாரமான பந்து வீச்சால் திணறியது. அந்த அணி 43.4 ஓவரில் 194 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி பெற்றது. மே.தீவில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

மே.தீவு அணியில் சுமித் அதிகபட்சமாக 65 ஓட்டம் எடுத்தார். அப்துல் ரசாக் 39 ஓட்டம் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். அவரே ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார்.இந்த வெற்றி மூலம் 3 போட்டித் தொடரில் பங்களாதேஷ் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

ஆபாச இணையத் தளங்களை மூடிவிடுமாறு உள்நாட்டு சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தல்

computer.jpgபாலியல் மற்றும் ஆபாச விடயங்களை உள்ளடக்கிய இணையத் தளங்களை மூடிவிட உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நேற்று சகல உள்நாட்டு இணையத்தள சேவை வழங்குநர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாலியல் விடயங்களுடன் தொடர்புள்ள 12 இணையத் தளங்களை தடை செய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் நிஷாந்த ஹப்புஆராச்சி இலங்கை தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவுக்கு விடுத்த உத்தரவுக்கு அமையவே இந்த அறிவுறுத்தலை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  இவ்வாறான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் என மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத் திறப்பு விழா

புளியங்குளம் ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியன எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சகல வசதிகளையும் கொண்ட இந்த பொலிஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள இந்த வைபவத்தில் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் அரசியல் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்

மாணவி மீது வல்லுறவு ஒருவருக்கு விளக்கமறியல்

images000.jpgபாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இருபிள்ளைகளின் தந்தையை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. குருவிட்ட புஸ்தல்ல மகாவித்தியாலயத்தில் 8 ஆம் தரத்தில் கல்விகற்கும் 13 வயதான இம்மாணவி பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருக்கையில் அருகிலுள்ள நீர் நிலையொன்றுக்கருகில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு வல்லுறவுக் குட்படுத்தப்பட்டதாக மாணவியின் தாயார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரத்தினபுரி பட்டுகெதர பகுதியில் மறைந்திருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம்.மிஹால் உத்தரவிட்டார்.

யாழ். குடாவில் சதொச விற்பனை நிலையம் – இன்று அங்குரார்ப்பணம்

யாழ். குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கும் நோக்குடன் மூன்று கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களை அங்கு (சதொச) அமைக்க வர்த்தக நுகர்வோர் அமைச்சு தீர்மானித்துள்ளது. முதலாவது கூ. மொ. வி. நிலையம் யாழ். வின்சர் திரையரங்கில் இன்று (28) காலை திறந்து வைக்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் வர்த்தக நுகர்வோர் அமைச்சர் பந்துல குணவர்தன, சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, சதொச தலைவர் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

யாழ். குடாவில் அத்தி யாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்ப ட்ட அதிகாரிகளுக்குப் பணித்திருந்தார். இதன்படி அங்கு கொழும்பு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் வழங்குவதற்காக கூ. மொ. வி. களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனைய இரு கூ. மொ. விகளும் விரைவில் திறக்கப்படவுள்ளன

‘உயிர்க்கும் தமிழீழம்’ – நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் ஐரோப்பா வருகை

rudrakumaaran_v.jpgஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளனர். ‘உயிர்க்கும் தமிழீழம்’ என்ற பெயரில் இந்த மாபெரும் பேரெழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் உயிர் கொடுத்து வளர்த்த தலைவன் இலட்சியம் தோற்காது என்ற கொள்கைப் பிடிப்போடு அணிதிரளுமாறும் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்கப்பிரகடனமும் இந்நிகழ்வில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1 ஆம் 2 ஆம் நாள் நிகழ்வுகளில் சுவிஸ், யேர்மனியில் நடைபெறும் கருத்தமர்வுகளில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் எதிர்வரும் 2 ஆம் நாள் சுவிஸ் சூரிச் அல்விஸ் கூட்டிலி மண்டபத்தில் நடைபெறும் மாபெரும் பேரெழுச்சி நிகழ்வான ‘உயிர்க்கும் தமிழீழம்’ நிகழ்விலும் கலந்துகொண்டு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டிய எதிர்காலப் பணிகள் தொடர்பாக கருத்துரை வழங்கவுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான விசுவநாதன் உருத்திரகுமாரன் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் சுவிஸ் தமிழர் பேரவை தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அவசரமாய் தரையிறங்கிய ஷார்ஜா விமானம்

27-air-arabia-a.jpgசென்னை யிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் மீண்டும் அவசரமாக சென்னை அண்ணா சர்வதேச விமான நிலையத்தில் மிக அவசரமாகத் தரையிறங்கியது. சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலை ஏர் அரேபியா ஏர்வேஸ் விமானம் 128 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்டது. விமானம் பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதையடுத்து விமானத்தை உடனடியாக தரையிறக்க அனுமதி கோரினார் விமானி. இதைத் தொடர்ந்து அந்த விமானம் 9.30 மணிக்கு பத்திரமாகத் தரையிறங்கியது.

விமானத்தில் இருந்த 128 பயணிகளும் இறக்கப்பட்டு சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம்

indonesiya.jpgஇந்தோ னேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இன்று காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் இது 6.2 என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.  இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

வனாட்டு தீவிலும்…

ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள வனாட்டுத் தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்த தீவில் இருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. நில நடுக்கம் ரிக்டர்கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் கொழும்பு தினசரி பஸ் சேவை குறித்து இன்று இறுதித் தீர்மானம்

bussss.jpgகொழும்பு யாழ்ப்பாணத்திற்கு இடையில் ஏ9 வீதியூடாக இ.போ.ச.பஸ் சேவையை தினசரி சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பான இறுதித்தீர்மானம் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஏ9 வீதியூடான தனியார் போக்குவரத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை.

இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை நாளாந்தம் நடத்துவது குறித்து இன்றைய உயர்மட்ட சந்திப்பில் முடிவு செய்யப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். வடக்கு அபிவிருத்திக்கென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையிலான செயலணிக்குழுவின் பிரதிநிதிகளும் இலங்கை போக்குவரத்து சபை பிரதிநிதிகளும் பாதுகாப்பு தரப்பினரும் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் அமைச்சர் அழகப்பெரும தெரிவித்தார்.

இதேநேரம், ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான இ.போ.ச. பஸ் சேவையை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ எம்.பி. கடந்த 22ஆம் திகதி யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

எனினும் அது பரீட்சார்த்த சேவை ஆரம்பமேயென தெரிவித்த டலஸ் அழகப்பெரும, இன்று நடைபெறும் கூட்டத்திலேயே நாளாந்த சேவை குறித்து இறுதி முடிவெடிக்கப்படுமென்றும் கூறினார்.

இன்றைய கூட்டத்தின் இறுதியில் எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய, இம்மாத இறுதிக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குமான ஏ9 வீதியூடான நாளாந்த இ.போ.ச. பஸ் சேவையை ஆரம்பித்து விடமுடியுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம், தனியார் போக்குவரத்துக்கான அனுமதி பற்றி கேட்டபோது, எதிர்வரும் நாட்களில் நிலைவரங்களுக்கு அமைய ஆராய்ந்து அதற்கான அனுமதிகள் வழங்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், “ஏ9 வீதியூடான பொது போக்குவரத்து சேவைகள்’ எனும் விடயத்தின் கீழ் தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தினூடாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்;

“”யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்ல அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து சோதனை சாவடிகளும் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்குமென்பதுடன், ஏனைய தேடுதல் நடவடிக்கைகளும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். எவ்வாறிருப்பினும், யாழ்ப்பாண மக்கள் கொழும்பு வந்து திரும்பிச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இ.போ.ச. பஸ் சேவைக்கான அனுமதியே இங்கு வழங்கப்பட்டிருப்பதுடன், தனியார் போக்குவரத்துகளுக்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.