July

July

வவுனியா நகர சபை தேர்தல் பிரசாரத்தில் டக்ளஸ் மும்முரம் – பொதுமக்களுடனான சந்திப்பிலும் பங்குபற்றினார்

வவுனியா நகர சபைத் தேர்தல் பிரசார வேலைத்திட்டத்தில் சமூக சேவைகள் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அமைச்சரின் கட்சியான ஈ.பி.டி.பி தமது வேட்பாளர்கள் ஆறு பேரை நிறுத்தியுள்ளது.

தமது கட்சி வேட்பாளர்களுக்காக அமைச்சர் நேற்று முன்தினம் மாலை சகாயமாதாபுரத்திற்கு விஜயம் செய்து பொதுமக்களுடனான சந்திப்பில் பங்குபற்றினார்.

எங்களுக்கு தேவை உரிமை. அதற்காகவே நாம் அரசுடன் உறவை வைத்துள்ளோம். அவலப்படும் மக்களை கைதூக்கி விடுவதற்காகவே அரசுடன் கைகுலுக்குகின்றோம் என அமைச்சர் இங்கு பேசும்போது குறிப்பிட்டார்.

வரட்சி காலத்தில் தாம்குடிநீர் பெற்றுக்கொள்ளமுடியாமை குறித்து சகாயமாதாபுரம் மக்கள் அமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு வந்தபோது நீண்டகாலமாக உள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக குழாய்க் கிணறு ஒன்றினை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னாள் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார், வவுனியா மாவட்ட அமைப்பாளர் சிவன்சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையில் நேற்றுக் காலை நகர கலாசார மண்டபத்தில் வவுனியா வர்த்தக பிரமுகர்களை அமைச்சர் சந்தித்தித்தார்.

வவுனியா நகரத்தின் அபிவிருத்திக்கு தேவையான நிதியை அரசிடமிருந்துதான் பெற்றுக்கொள்ளவேண்டும் எனவே ஆளும் கட்சி சபையினை கைப்பற்றினால் கூடுதல் நிதியை பெற்று நகர அபிவிருத்தியையும் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளலாம் என வர்த்தக பிரமுகர்கள் மத்தியில் பேசும் போது குறிப்பிட்டார்

சர்வதேச சதுரங்க தினம் International Chess Day ஜுலை 20 – புன்னியாமீன்

viswanathananand.jpgசர்வதேச சதுரங்க தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. சர்வதேச தினங்கள் ஏதோ ஒரு முக்கியத்துவத்தின் அடிப்படையில் அனுஸ்டிக்கப்படுகின்றன. அல்லது நினைவுகூரப்படுகின்றன. குறித்த விடயத்தை அனுஸ்டிப்பதினூடாக அந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் பிரதான குறிக்கோளாகும். சில சர்வதேச தினங்கள் ஐக்கிய நாடுகள் சபையால் பிரேரணை மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலின் கீழ் நடத்தப்படுகின்றன. இன்னும் சில சர்வதேச தினங்கள் குறித்த விடயம் தொடர்பான சர்வதேச அமைப்புகளின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. எவ்வாறாயினும் இவற்றின் பிரதான நோக்கம் குறித்த விடயம் தொடர்பான விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் வழங்குவதாகவே காணப்படும்.

இந்த அடிப்படையில் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் World Chess Federation (FIDE), வழிகாட்டலின் கீழ் சர்வதேச சதுரங்க தினம் ஒவ்வொர் ஆண்டும் ஜுலை மாதம் 20ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது. FIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் “நாம் அனைவரும் ஒரே மக்கள்” என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. உலகில் பல விளையாட்டுகள் காணப்பட்ட போதிலும்கூட, உள்ளக விளையாட்டான சதுரங்கம் முக்கியத்துவமான விளையாட்டுக்களில் ஒன்றாக புராதன காலங்கள் தொட்டு இன்றுவரை மதிக்கப்படுகின்றது.

புராதன காலங்களில் அரசர்களின் விளையாட்டு என வர்ணிக்கப்பட்ட சதுரங்கம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டாகும். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ் விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 நிரைகளிலும், 8 நிரல்களிலும் (8X8) அமைந்த கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாக சதுரங்கள் கறுப்பு வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். சதுரங்கம் அதிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அல்ல. மூளைக்கு வேலைத்தரும் ஒரு விளையாட்டாகக் கருதப்படுகின்றது. மதியூகமும், தந்திரமும் இவ் விளையாட்டுக்கு முக்கியமானதாகும். அதேநேரம், இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு.

“சதுரங்கம் பொழுதுபோக்காகவும், போட்டியாகவும், விiயாட்டு அமைப்புகளின் சுற்றுப்போட்டிகளாகவும் நடத்தப்படுகின்றன. இத்தகைய போட்டிகள் பிரதேச மட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் என வியாபித்து நடத்தப்படுவதுமுண்டு. நவீன காலத்தில் இணையத்தளங்களிலும் சதுரங்கம் ஆடப்படுவதுண்டு. இதற்கான பல நூற்றுக்கணக்கான தனி இணையத்தளங்கள் இன்று இணையப்பின்னலில் காணப்படுகின்றன.

இருவரால் விளையாடப்படும். இந்த விளையாட்டில் தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனை வீழ்த்துவதே ஆட்டத்தின் எதிர்பார்க்கையாகும். தனது அரசனை காப்பாற்றிக் கொண்டு எதிர்த் தரப்பு அரசனை வீழ்த்தியதும் இவ்வாட்டம் நிறைவுபெறும். அரசனைக் காப்பாற்றியவர் வெற்றி பெற்றவராகவும், அரசனை இழந்தவர் தோல்வியடைந்தவராகவும் தீர்மானிக்கப்படுவார். சதுரங்க ஆட்டத்தில் சதுரங்கக் காய்கள் அரசன், அரசி, கோட்டை, மந்திரி, குதிரை, படைவீரன் போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.

இந்த விளையாட்டில் இரு அணிகளும் இரு படைகளாக கருதப்படுவர். அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும்.

காய்களை அடுக்கும்போது முதல் நிரலில் அல்லது வரிசையில் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் கறுப்புச் சதுரத்திலும் நிற்பதைக் குறிக்கலாம். இரண்டாவது நிரலில் எட்டு படைவீரர் காய்களும் நிறுத்தப்படும். எதிரணியில் மேற்குறிப்பிட்ட ஒழுங்கிலே காய்கள் அடுக்கப்பட்டாலும்கூட, இங்கு கறுப்பு அரசி கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் வெள்ளைச் சதுரத்திலும் நிறுத்தப்படுவர்.

வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். அரசன்: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும். ஆனால் முதல் முதலாக நகருவதாக இருக்கும் பொழுது மட்டும் இரண்டு கட்டங்கள் (சதுரங்கள்) நகரமுடியும். அரசி: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. மந்திரி மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. குதிரை: டகர வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. கோட்டை முன்னே பின்னே அல்லது இட வலமாக நகர நேரே எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படைவீரர் நேரே முன்நோக்கி முட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் அரம்பநிலையையில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் நகரமுடியும். படைவீரர் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாகவே மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.

சதுரங்க விளையாட்டின் ஆரம்பம் பற்றி பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட கோணங்களில் முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஏழாம் நூற்றாண்டு காலகட்டங்களிலிருந்தே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த விளையாட்டாகவே பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. எனவே, சதுரங்கத்தின் ஆரம்பம் இந்தயாவே என்று கூறலாம். பின்பு மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையிலான நாடுகளுக்கும் பல வேறுபாடுகளுடன் இவ்விளையாட்டு பரவியது. தொடர்ந்து மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்கும் வியாபித்ததாகக் கூறப்படுகின்றது. மேலும் சில தகவல்களின்படி இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய சதுரங்கம் பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியதாகவும் முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சா என்பவர் செஸ் பற்றி புத்தகமொன்றை எழுதியுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஸ் காய்களின் நகர்த்தல்களுக்கான விதிமுறைகளின் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படைவீரர்களை முதல் நகர்த்தும்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ராணி திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதி முறையும் இக்காலகட்டத்திலே புழக்கத்துக்கு வந்ததாக கூறப்படுகின்றது. சதுரங்க ஆரம்பகாலத்தில் மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே ராணிக்கு நகர அனுமதிக்கப்பட்டது. அதேநேரம் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. “இராணி” ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன.

“ஸ்டவுண்டன்” தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல்குக் என்பவரால் 1849ல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செஸ் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924ல் FIDE ஆல் உத்தியோக பூர்வமாகப் புழக்கத்தில் விட்டது.

உலக சதுரங்க ஆட்டத்தில் புகழ் பெற்ற சில வீரர்கள் வருமாறு: ஸ்டைநிட்ஸ், லாஸ்கர், காப்பபிளான்கா, அலேஹின், இயூவ், பொட்வின்னிக், சிமிஸ்லொவ், டால், பெட்ரொசியான், ஸ்பாஸ்கி, ஃபிஷர், கார்ப்பொவ், காஸ்பரொவ், கிராம்னிக், ஆனந்த் இவர்களுள் கடந்த 35 ஆண்டு காலத்தில் முக்கியம் பெற்றோரின் விபரம் வுருமாறு

அனத்தோலி யெவ்கேனியெவிச் கார்ப்பொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஆவார். மே 23 1951 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் (1970) உலக சாம்பியன் 1975-1985, (ஃபிடே) 1993-1999 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2655 (ஏப்ரல் 2008 ) எலோ தரவுகோள் 2780 (ஜூலை 1994) 1975 ஆம் ஆண்டில் இருந்து 1985 வரையில் உலக சாம்பியன் ஆகத் திகழ்ந்தவர். 1993 முதல் 1999 வரையில் இவர் ஃபிடே உலகச் சாம்பியனாகவும் இருந்தார். இவர் பங்குபற்றிய போட்டிகளில் 161இல் இவர் முதலாட்டக்காரனாக வெற்றி பெற்றார். 2005 ஆம் ஆண்டில் இருந்து இவர் ரஷ்யப் பொது அவையில் (Public Chamber of Russia) ஓர் உறுப்பினராக உள்ளார்.

காரி காஸ்பரொவ் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். ஏப்ரல் 13 1963 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் உலக சாம்பியன் 1985–2000 ஆகிய பட்டங்கள் பெற்றுள்ளார். எலோ தரவுகோள் 2851 (ஜூலை 1999) காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 2000ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் “மரபுவழி” உலக சதுரங்க வீரர் (“Classical” World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் “டீப் புளூ” கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.

விளாடிமிர் கிராம்னிக் ரஷ்யாவின் சதுரங்க வீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும் ஜூன் 25 1975 இல் பிறந்த இவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் மட்டும் உலக சாம்பியன் 2000—2006 (மரபுவழி) பட்டம் 2006—2007 (ஒன்றுபட்ட) உலக சாம்பியன் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார். FIDE தரவுகோல் 2772. எலோ தரவுகோள் 2809 (ஜனவரி 2002) அக்டோபர் 2008 பீடே தரவுப் பட்டியலின்படி 6ம் இடத்தில் இவர் இருந்தார். 2000 அக்டோபரில், இவர் லண்டனில் இடம்பெற்ற உலகப் போட்டியில் காரி காஸ்பரோவை வென்று உலக சம்பியனானார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் பீட்டர் ல்லேக்கோவை வென்று மீண்டும் உலக வீரர் ஆனார். 2006 அக்டோபரில், கிராம்னிக் பீடே சம்பியனான தப்பாலொவை வென்று உலக சம்பியன் பட்டத்தைப் பெற்றார். 2007 செப்டம்பரில், கிராம்னிக் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்திடம் தோற்றார்.

விஸ்வநாதன் ஆனந்த் இவர் சென்னை, இந்தியாவைச் சேர்ந்தவர் டிசெம்பர் 11, 1969இபிறந்த இவர் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி ஜூலை 2006ல் ஆனந்த் 2779 புள்ளிகள் பெற்றார். ஆனந்த் மாத்திரமே 2800 புள்ளிகளைத் தாண்டிய நால்வரில் ஒருவர். இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் புதிய உலக வெற்றிவீரர் ஆனார். இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இவர் இதுவரை பெற்றுள்ள சதுரங்க பதக்கங்கள் வருமாறு, 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர் 2000 சதுரங்க வெற்றிவீரர் 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர் 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் – 16 வயதில் 1984 தேசிய மாஸ்டர் – 15 வயதில் 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்

இவர் பெற்றுள்ள விருதுகள் வருமாறு சதுரங்க ஆஸ்கார் (1997, 1998, 2003 மற்றும் 2004) பத்மபூஷண் (2000) பிரித்தானிய் சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது 1998. ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது (1991-1992) தேசியக் குடிமகனுக்கான பத்மசிறீ விருது (1987) தேசிய விளையாட்டு வல்லுனருக்கான சதுரங்க விருது (1985)

அரச நிருவாக சேவையில் விரைவில் திருத்தங்கள் வரும்

அரச சேவை புரிவோர் திருப்தி காணும் வகையில் அரச நிருவாக சேவையில் பல திருத்தங்களை மேற்கொள்ள விருப்பதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரி வித்தார். இதன் பொருட்டு கடந்த காலத்தில் நிருவாகத்துறையில் ஏற்பட்டு வந்த பல்வேறுபட்ட குளறுபடிகள் அனைத்தும் களைந்தெறியப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கண்டி உடரட்ட கலைக் கூட மண்டபத்தில் கிராம சேவையாளர் நியமனம் வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மத்திய பிரதேசத்திற்கு சேவை புரியும் பொருட்டு புதிதாக 134 பேருக்கு கிராம சேவையாளர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

அமைச்சர் தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது:-மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள் ஆகிய மூவரையும் உள்ளடக்கிய வகையில் குழுக்களை நியமித்து அவர்களுக்கிடையில் ஒரு வகை தொடர்புகளை ஏற்படுத்தவும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.

கிராம சேவையாளர்களுக்கு நாம் அவர்களினது சேவைகளை சிறந்த முறையில் மேற்கொள்ளுமிடத்து அவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அமைச்சு செய்து கொடுத்துள்ளது. இந்த வகையில் இந்த கிராம சேவையாளர்களை நாம் அவதானிப்போம்.

புலிகள் பயன்படுத்திய மற்றுமொரு பாரிய நீர்மூழ்கி கப்பல் கண்டுபிடிப்பு வெள்ளமுள்ளிவாய்க்கால் கடலில் 40 அடி ஆழத்திலிருந்து மீட்பு

5555.jpgபுலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த மற்றுமொரு பாரிய நீர்மூழ்கிக் கப்பலொன்றினை இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியில் வைத்து கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்று தெரிவித்தார்.

மூன்று பேர் பயணிக்கக் கூடிய வசதியைக் கொண்டுள்ள இந்நீர்மூழ்கிக் கப்பல் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீன் போன்ற தோற்றத்தினையுடைய இந்நீர்மூழ்கிக் கப்பல் சுமார் 25 அடி நீளமும் 4 அடி அகலமும் 41/2 அடி உயரத்தையும் கொண்டிருப்பதாகவும் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறினார்.

வெள்ளைமுள்ளி வாய்க்கால் கடற்கரையிலிருந்து சுமார் 500 மீற்றர் கடலுக்குள் 40 அடி ஆழத்தில் இந்நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் தேடுதல்களை இராணுவத்தினர் நடத்தி வரும் அதேநேரம் இராணுவத்தின் சுழியோடிகள் கடலுக்கடியிலும் தேடுதல்களை நடத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இராணுவத்தின் சுழியோடிகள் வெள்ளை முள்ளி வாய்க்கால் கடற்பரப்புக் கடியில் தேடுதல்களை நடத்தியபோதே இந்நீர்மூழ்கிக் கப்பல் கைப்பற்றப்பட்டதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

புலிகளின் மேற்படி நீர்மூழ்கிக் கப்பலுக்குள்லிருந்து டீசல் என்ஜிகள், சமநிலை தாங்கி, சுழியோடிகளுக்கான அங்கிகள், தமது இருப்பிடத்தைக் காட்டும் கருவி ஆகியன மீட்கப்பட்டிருப்பதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார். இராணுவத்தின் 56 ஆம் படைப் பிரிவு மற்றும் எட்டாம் படையணியினைச் சேர்ந்த சுழியோடிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாகவே புலிகளின் இத்நீர்மூழ்கிக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் புலிகளால் பயன்படுத்தி வந்த பல நீர்மூழ்கிக் கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லை, கிளிநொச்சி மாவட்ட உள்ளக வீதி புனரமைப்புக்கு அரசு ரூ. 275 மில். ஒதுக்கீடு

விடுவிக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் உள்ளக வீதிகளைத் துரிதகதியில் புனரமைக்கவென அரசாங்கம் 275 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இவ் வீதிகள் துரித கதியில் புனரமைக்கப்படவுள்ளன. சில வீதிகளைப் புனரமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன என்று கிளிநொச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் நேற்று கூறினர்.

இந் நிதியில் 130 மில்லியன் ரூபா கிளிநொச்சி மாவட்டத்திற்கும், 145 மில்லியன் ரூபா முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் குறிப்பிடுகையில், வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பல உள் வீதிகள் துரிதமாகப் புனரமைக்கப்ப டவிருக்கின்றன. இதற்கென அரசாங்கம் 130 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

இந் நிதி கிளிநொச்சி உள்ளூராட்சி திணைக்களத்திற்கு 50 மில்லியன் ரூபாவாகவும், வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு 60 மில்லியன் ரூபாவாகவும், மகநெகும திட்டத்தின் ஊடாக 20 மில்லியன் ரூபாவாகவும் கிடைக்கப் பெற்றிருக்கிறது என்றார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் குறிப்பிடுகையில், வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் முல்லை மாவட்ட உள்ளக வீதிகளைத் துரிதமாக அபிவிருத்தி செய்யவென 145 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந் நிதியில் 125 மில்லியன் ரூபாவை தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஊடாகவும், மகநெகும திட்டத்தின் ஊடாக 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.இந் நிதி ஊடாக மாந்தை கிழக்கு, ஒட்டி சுட்டான், துணுக்காய் ஆகிய பிரதேசங்களிலிலுள்ள உள் வீதிகள் துரிதமாகப் புனரமைக்கப்படும் என்றார்.

முல்லை, கிளிநொச்சி மாவட்டங்களை மீளக் கட்டியெழுப்பும் மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைத் துரிதமாக மீளக் கட்டியெழுப்பும் நோக்கிலான மதிப்பீட்டு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த திணைக்களங்களின் தலைவர்களும், பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் அந்தந்தப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் அம்மாவட்டத்தின் கல்வி, விவசாயம், சுகாதாரம், உள்ளூராட்சி மன்றங்கள் கட்டிடம் ஆகிய திணைக்களங்களின் தலைவர்கள் இன்று 20ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம், சிவநகர், புதுமுறிப்பு, கோணவில், யூனியன்குளம், மலையாளபுரம், பாரதிபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

அதேவேளை இவர்கள் நாளை பளைப் பிரதேச மதிப்பீடுகளைச் செய்யவுள்ளனர். இதேநேரம் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் அம்மாவட்டத்தின் திணைக்களத் தலைவர்களும், பொறியியலாளர்களும், தொழில்நுட்பவியலாளர்களும் நாளை மறுதினம் புதன்கிழமை துணுக்களாய் பிரதேசத்திற்கு நேரில் சென்று மதிப்பீடுகளை மேற்கொள்ளவிருக்கின்றனர்.

பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள், அழிவுகள் குறித்து இவர்கள் மதிப்பீட்டின்போது விஷேட கவனம் செலுத்துவர்.

இம்மதிப்பீட்டு நடவடிக்கைகளைத் துரிதமாகப் பூர்த்தி செய்து அது தொடர்பான அறிக்கை வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியிடம் விரைவில் கையளிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர்கள் தெரிவித்தனர்.

மோசடி இடம் பெறும் வாக்கு சாவடிகளை இரத்துச் செய்க – தேர்தல் ஆணையாளர் உத்தரவு

election_cast_ballots.jpgமோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க உதவித் தேர்தல் ஆணையாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் தேர்தல் ஆணையாளர் தலைமையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்துக்கான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின்போதே தேர்தல் ஆணையாளர் மோசடி இடம் பெறும் வாக்குச் சாவடிகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் அப் பகுதிகளுக்கு பிறிதொரு தினத்தில் தேர்தலை நடத்த ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கூறியதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி கூறினார்.

நீதியானதும் நேர்மையானதுமான முறையிலும் வாக்காளர்கள் சுமுகமாக வாக்களிக்கும் வகையிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தேர்தல் ஆணையாளர் இச் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வதற்கான வாகன மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள், பணியாளர்கள் என்பன குறித்தும் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

அரச தலைவர் ஒருவர் ஆதிவாசிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய முதலாவது நிகழ்வு

mahi2222.jpgஆதிவாசி சமூகத்தினரின் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததுடன், அவர்களது பிரதான பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நேற்று முன்தினம் தீர்வு பெற்றுக் கொடுத்தார். மஹியங்கணையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த தம்பான ஆதிவாசி மக்கள் தங்களது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறிய போது இந் நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆதிவாசிகள் அவர்களது சம்பிரதாயப்படி தயாரித்த உணவுகளை ஜனாதிபதிக்கு வழங்கினர். அரச தலைவர் ஒருவர் ஆதிவாசிகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய முதலாவது நிகழ்வு இதுவாகும்.

அல் ஜெஸிராவை பலஸ்தீன அரசாங்கம் தடை செய்யவில்லை; சட்ட நடவடிக்கைக்கு முயற்சி – பிரதமர் சலாம்பயாத்

அல் ஜெஸிரா தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புக்கு அனுமதியளிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள பலஸ்தீன அரசாங்கம் இச் சேவையை முன்னர் தடைசெய்ய வில்லையென்றும் தெரிவித்துள்ளது.

அல் ஜெஸிராவின் தொலைக்காட்சி ஆதாரமில்லாத செய்தியை ஒளிபரப்பியமை தொடர்பாக அந்நிறுவனத்துக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் பலஸ்தீன அரசாங்கம் அறிவித்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் மற்றும் அவரது நிர்வாகம் தொடர்பாக அல் ஜெஸிரா மோசமான செய்தியை கடந்த வாரம் ஒளிபரப்பியது.

இஸ்ரேலுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் விசுவாசமாக மஃமூத் அப்பாஸ் நடந்து கொள்வார் என்பதே அந்தச் செய்தியாகும். இச் செய்தி வெளியான பின்னர் அல் ஜெஸிரா தொலைக்காட்சிச் சேவை பலஸ்தீனத்தில் தடை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக பலஸ்தீனப் பிரதமர் சலாம் பயாத் கூறிய தாவது:-

அல் ஜெஸிராவுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். அதைத் தடை செய்வதற்கான முயற்சிகளும் தொடரலாம். ஆனால் இதுவரை அல் ஜெஸிரா ஒளிபரப்பு பலஸ்தீனில் தடை செய்யப்படவில்லையெனக் கூறினார். தொடர்பாடல் அமைச்சர் இது பற்றிக் கூறுகையில், மேற்குக் கரை மக்களை அல் ஜெஸிரா தவறுதலாக வழிநடத்த முற்படுவதாகவும் இந்தச் செய்தியை வாசித்த ஊடகவியலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தொடராக ஆயுர்வேத சிகிச்சை – ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் நிறுவவும் திட்டம்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு தொடராக ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்துடன் கூடியதாக வட பகுதியில் பல சித்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்கப்படும், என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவசமாக மண் பாத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாடு முழுவதும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. மக்களனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார் என சிலர் கூறி வருகின்றனர். எமது நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கூறுவோரே இவ்வாறு கூறிவருகின்றனர். பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இவ்வாறு பொய்யான பிரசாரங்களைப் பரப்பி வருகின்றவர்களாவர். சிறுநீரக நோயினால் வருடாந்தம் பெருமளவு உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அனுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு இலவசமாக மண்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் (80000) குடும்பங்களுக்கு இதுவரையில் மண் பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.