July

July

யாழ். குடாவில் சகல பொருட்களையும் கொழும்பு விலையில் விற்பதற்கு ஏற்பாடு

யாழ்.  குடாநாட்டில் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சகல பொருட்களும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுத் தெரிவித்தார். சமூக சேவைகள், சமூக நலன்புரித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப அரசாங்கம் இதற்குத் தேவையான சகல ஒழுங்குகளையும் செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். நல்லூர் பிரதேச செயலாளர் ப. செந்தில் நந்தனன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவ்வைபவத்தின் போது நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இவ்வைபவத்தில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தமிழ்மொழியில் உரையாற்றினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ். குடாநாட்டிலுள்ள மொத்த வியாபாரிகளை நாளை (இன்று) கொழும்பு க்கு வரவழைத்து முக்கிய கூட்டமொன்றை நடத்தவிருக்கின்றோம். இக்கூட்டத்தின் போது யாழ். குடாநாட்டில் சகல பொருட்களையும் கொழும்பு விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பு விலைக்கு யாழ். குடா நாட்டில் பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இப்போது பயங்கரவாதப் பிரச்சினை இல்லை. மக்கள் அச்சம் பீதியின்றி சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதேநேரம், வடபகுதி மக்கள் 24 மணி நேரமும் சுதந்திரமாகக் கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை

mahinda_raajapakse11.jpgஅணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு இன்று எகிப்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று எகிப்துக்குப் பயணமானதுடன் இன்று மாநாட்டில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.

நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் எகிப்தின் கைரோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னே, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் எகிப்துக்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதுடன் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

118 நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் 15 வது உச்சிமாநாடு 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை எகிப்தின் ஷாம் அல்ஷேக் நகரில் நடை பெறுகிறது. 12ம் திகதி இடம்பெற்ற வெளிவிவகார அமைச் சர்களுக்கான அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டார்.

இன்று நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.

“அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் எதிர்வரும் மூன்று வருட காலங்களுக்குள் அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் நோக்கங்கள் சம்பந்தமாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளன.

அத்துடன் 2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் 14 வது உச்சிமாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வளர்ந்து வரும் மனித சமூகத்திற்குள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கிய அவர், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய மாற்றங்கள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள பாரிய வெற்றிகளுக்குக் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

1955ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய – ஆபிரிக்க மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் 118 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் 17 கண்காணிப்பு நாடுகளும் இடம்பெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு நாடுகள் அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெறுகின்றன. உலக சனத்தொகையில் ஐம்பது வீதத்தினர் இதில் உள்வாங்கப்படுகின்றனர். இதில் பெரும்பாலானவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பீ.வி. ஜயசுந்தரவின் மனுவை விசாரிக்க உச்சமன்று தீர்மானம்

அரசாங்கத்தின் எந்த பதவிகளையும் பொறுப்பேற்பதில்லையென்று தான் கொடுத்த உறுதிமொழியை மீளப்பெறுவதற்காக திறைசேரியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.வி. ஜயசுந்தர சமர்ப்பித்த மனுவை ஏற்பதற்கு உச்சநீதிமன்றம் நேற்று முடிவு செய்தது. இது தொடர்பான விசாரணை ஓகஸ்ட் 3ம் திகதி எடுக்கப்படவுள்ளது.

கலாநிதி ஜயசுந்தரவின் மனு தொடர்பாக நேற்று ஆராய்ந்த உச்சநீதிமன்றம் சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு அறிவுறுத்தல் அனுப்பும்படி பணிப்புரை விடுத்தது. ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, கலாநிதி ஜயசுந்தர சார்பில் ஆஜரானார்.

அரசாங்கத்தில் எந்தவித பதவிகளையும் ஏற்பதில்லையென திறைசேரியின் முன்னாள் செயலாளர் பி.வி. ஜயசுந்தர 2008ம் ஆண்டு ஒக்டோபர் 16ம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு உறுதிமொழி வழங்கியிருந்தார். கலாநிதி ஜயசுந்தர தனது மனுவில் கூறியுள்ளதாவது;

தேசிய நலனைக் கருத்தில் கொண்டு திறைசேரி, மற்றும் நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளராக தன்னை பொறுப்பேற்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். என்றாலும் லங்கா மரையன் சேர்விஸ் லிமிட்  நிறுவனம் தொடர்பான வழக்கொன்றால் அதற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆகவே தன்னால் வழங்கப்பட்ட உறுதி மொழியை மீளப்பெற ஆவண செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி நியமிக்கலாம். அந்த நியமனம் அமைச்சரவை கலைக்கப்படும் வரையில் செல்லும்படியாகும்.

மீள்குடியேற்றத்தில் ஒரேமாதிரி செயற்பாடு: வடக்கு அரச அதிபர்களுக்கு பசில் பணிப்பு

basil-raja.jpgவட மாகாண மாவட்ட அரசாங்க அதிபர்கள் பங்குகொண்ட உயர்மட்ட மாநாடொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வட மாகாண அபிவிருத்திச் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்பட்ட இந்த மாநாட்டில், வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ், கிளிநொச்சி அரச அதிபர் நா. வேதநாயகன், முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், மன்னார் அரச அதிபர் ஏ. நிக்கலஸ்பிள்ளை, ஆகியோரும் வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், மாகாண பிரதான செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகத் தமது திட்ட அறிக்கைகளை நேற்று சமர்ப்பித்துள்ளனர். எனினும், சகல அரச அதிபர் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான மீள்குடியேற்ற திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான அறிக்கைகளைத் தயாரிக்குமாறு வடக்கு செயலணியின் தலைவர் பா. உ. பசில் ராஜபக்ஷ, அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலதிகமாக ஆராயவென, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் தலைமையில் அடுத்த வாரம் வவுனியாவில் கூட்டமொன்றை நடத்துவதெனவும் நேற்றைய மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் மூன்றாம் கட்டப் பணி விரைவில் வவுனியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அடுத்த வாரம் இறுதிக் கட்ட திட்ட அறிக்கையொன்றை வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் சமர்ப்பிக்கவுள்ளார்.

நலன்புரி நிலையங்களுக்கு எதிர்க்கட்சியினர் செல்ல அனுமதித்திருந்தால் சர்வதேச குற்றச்சாட்டு எழுந்திருக்காது

எதிர்க்கட்சியினரை இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களுக்கு அனுமதித்திருந்தால் அகதி முகாம்களை உரிய முறையில் பராமரிக்கவில்லையென்ற சர்வதேச குற்றச்சாட்டு எழுந்திருக்காதென ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

வவுனியா நலன்புரி நிலையங்கள் சரியாக பராமரிக்கப்படவில்லையென ஊடகங்கள், இணையத்தளங்கள் வழியாக அறிய முடிகின்றது. உரிய முறையில் பராமரிக்காததன் விளைவாகவே சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு எழுமெனத் தெரிந்தே எதிர்க்கட்சியினரை அனுமதிக்குமாறு ஜே.வி.பி. கோரியது. இவ்வாறு அனுமதிக்கப்பட்டிருந்தால் எமது கட்சியின் செந்தாரகை செயலணியூடாக நாம் உதவிகளை வழங்கியிருப்போம்.

இந்நிலையங்களில் உள்ளோருக்கு உணவு வழங்குவோர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஓரிரு நாட்ளுக்காக அல்ல 4 மாதங்களாக உணவுக்காக பணம் வழங்கப்படவில்லை. அகதிகளுக்கான ஒருநாள் சாப்பாடுக்கான தொகை 120 ரூபாவாகும். அப்படியானால் எவ்வளவு தூரம் நிறைவு செய்யப்பட்டதை தெரிந்து கொள்ள முடியும்.

அரசாங்கம் பேச்சு ஜாலங்களை விட்டு விட்டு செயலில் காட்டி மக்களை மக்களாக மதித்து சரிவர செயற்பட முற்பட வேண்டும். எமக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட அனுமதி தாருங்கள் என மீண்டும் கேட்கின்றோம் என்றார்.

விபத்தில் சிக்கிய மே.ஜெனரல் ஜகத் டயஸ் தேறி வருகிறார்

jegath-dias.jpgஹவ்லொக் டவுனில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இராணுவத்தின் 57 வது படைப்பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதியும், ஜேர்மன் நாட்டுக்கான புதிய இலங் கைத் தூதுவருமான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தற்பொழுது தேறி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப் பாளர் டொக்டர் ஹெக்டர் வீரசிங்கம் தெரிவித்தார்.

இந்த வாகன விபத்தில் மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த டொக்டர், அவரது வலது கால் நேற்றைய தினம் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜகத் டயஸ் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

ஹவ்லொக் டவுன், பொலிஸ் மைதானத்திற்கு அருகிலு ள்ள வீதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் டயஸின் காருடன் வான் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்தது.

இந்த சம்பவத்தில் காரில் சென்று கொண்டிருந்த மேஜர் ஜெனரலும் வானில் சென்ற மூவரும் காயமடைந்தனர். மேஜர் ஜெனரலின் வலது காலில் பலத்த காயம் ஏற் பட்டது.

இணையதளத்தை தடுத்ததாக இலங்கை அரசாங்கத்தின் மீது கண்டனம்

இலங்கை அரசாங்கத்தை அடிக்கடி விமர்சனம் செய்யும் லங்கா நியூஸ் வெப் என்னும் இணையதளத்தை இலங்கையில் உள்ளவர்கள் அணுகுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கண்டித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மகனான நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறித்து தாம் வெளியிட்ட ஒரு செய்திதான், தமது இணையதளம் தடுக்கப்படுவதற்கான உடனடிக் காரணம் என்று தாம் நம்புவதாக அதன் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதி மோதலால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நாமல் ராஜபக்ஷ சென்றபோது அங்கிருந்தவர்கள் அவர்மீது கல்லெறிந்தார்கள் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த இணையதளத்தை தடுத்ததற்கான காரணம் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

ஏழ்மை என்ற வசனத்தை இலங்கையிலிருந்து நீக்குவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda_raajapakse11.jpgஎல்லைக் கிராமம் என்ற வசனம் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது போல ஏழ்மை என்ற வசனத்தை இலங்கையிலிருந்து நீக்கிவிடுவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நாட்டிலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு அங்குள்ள மக்களும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை அனுபவிக்கவேண்டும். அதற்காக அரசாங்கத்தின் சகல அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் இருக்கின்றார்கள என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொனராகலை மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது:

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்கின்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவத்திற்கு அடிமைப்பட்ட நாடல்ல இலங்கை. ஒரே கொடியின் கீழ் செயற்படுகின்ற கௌரவமிக்க நாடே. எங்களுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்பார்த்திருக்கின்ற பிரிவினருக்கு எமது மக்களின் தீர்ப்பு என்னவென்பதை நாங்கள் காண்பிக்கவேண்டும்”

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருந்த மொனராகலை மாவட்டம் அபிவிருத்தியில் ஓரளவுக்கு பின்னடைந்த மாவட்டமாகும் என்பதால் அந்த மாவட்டத்திலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கு வழங்கப்படவிருக்கின்றது.

அதற்காக சரியான தலைமைத்துவத்தை தேர்ந்தெடுத்து கொள்வது பிரதேச மக்களின் பொறுப்பாகும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தி ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததன் பின்னர் நடத்தப்படுகின்ற முதலாவது தேர்தலே ஊவா மாகாண சபைத் தேர்தலாகும்.

உலகத்திலுள்ள சிலர் கடந்த காலங்களில் எங்களுக்கு முடிந்தளவு அழுத்தங்களை கொடுத்தனர். எமக்கு வந்த சகல அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம். அவ்வாறானவர்கள்,  நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பில் மக்கள் எவ்வாறான பதிலை வழங்கப் போகிறார்கள் என்பதனையே அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கவேண்டிய நல்ல சந்தர்ப்பமே இந்த தேர்தலாகும்.

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போன்று பராமரித்தமையே மக்களுக்கு மன நோய் ஏற்படக் காரணம்

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

முகாம்களைக் காட்டி சர்வதேசத்திடம் கையேந்துவதால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கமும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இடைத்தங்கல் முகாம் வாழ்மக்கள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்

அணிசேரா அமைய உச்சிமாநாடு இன்று எகிப்தில் ஆரம்பம்

111111.jpgஎகிப்தின் ஷார்ம் எல்சேக்கில் இன்றும் நாளையும் இடம்பெறும் அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் 118 நாடுகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளதுடன் இருதரப்பு சந்திப்புகளையும் அரசாங்கங்களின் தலைவர்கள் நடத்தவுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் கிலானியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள மன்மோகன் சிங் இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, நேபாளம், வியட்நாம் அரச தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை மேற்கொள்வாரென ஐ.எ.என்.எஸ். செய்திச் சேவை தெரிவித்தது.

அணி சேராமை இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடாகும். ஜவஹர்லால் நேரு உத்தியோகபூர்வமாக அறிவித்த காலம் முதல் இது அடிப்படைக் கொள்கையாக இருந்து வருகிறது. நம்பிக்கைக்கான அணிகலனாக அது எம்மிடம் உள்ளது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

கெடுபிடி யுத்தத்தின் பின்னரான காலகட்டத்தில் இரு இராணுவ அணிகளாக உலகம் நீண்ட காலத்திற்கு பிளவுபட்டு இருக்கவில்லை. உலக ஒழுங்கில் பங்களிப்பினை வழங்கக் கூடிய விதத்தில் அணிசேரா அமையம் தோற்றம் பெற்றுவருகிறது.

அணிசேரா அமையத்தின் வேறுபட்ட தன்மையும் உலகளாவிய தன்மையும் இன்றைய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு தனித்துவமான வாய்ப்பை வழங்குவதாக இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் அபிவிருத்தி இலக்கு, காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, சக்திப் பாதுகாப்பு, பயங்கரவாதம், சர்வதேச ஆட்சி முறைமை, வடிவமைப்பில் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பாக அணிசேரா அமைய உச்சி மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.