மைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கம் வருகிற செவ்வாய்க்கிழமை லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறவுள்ளது. உடல் அடக்கத்திற்கு முன்னதாக ஜாக்சனின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளதாக மைக்கேல் ஜாக்சனின் நிகழ்ச்சி வடிவமைப்பாளர் ரான்டி பிலிப்ஸ் கூறியுள்ளார்.
ஏஇஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலதிகாரியாகவும் இருக்கும் பிலிப்ஸ் கூறுகையில், லாஸ் ஏஞ்சலெஸ் நேரப்படி காலை 10 மணிக்கு இறுதிச் சடங்குகள் தொடங்கும். அங்குள்ள ஸ்டேப்பி்ள்ஸ் மையத்தி்ல் ஜாக்சன் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெறும்.
20 ஆயிரம் பேர் அந்த மையத்தில் அமர முடியும். ஆனால் பெருமளவில் கூட்டம் கூடும் என்பதால், மையத்திற்கு வெளியே பிரமாண்ட திரைகள் அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படும். இடம், நேரம் தவிர மற்ற அனைத்து விஷயங்களும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஜாக்சன் குடும்பத்தினருடன் இறுதியாக பேசிய பின்னர் அவையும் தீர்மானிக்கப்பட்டு விடும் என்றார்.
ஜாக்சனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள மையம், கால்பந்து சங்கத்திற்குச் சொந்தமானதாகும். முன்னதாக ஜாக்சனுக்குச் சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் உடல் அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதில் சிக்கல்கள் இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.