07

07

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களுள் 51 பேர் 12 ஆம் திகதி நாடு திரும்புவர் – பிரதியமைச்சர் நியோமல்

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 164 இலங்கை மீனவர்களில் 51 பேர் எதிர்வரும் 12 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விசாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

ஏனையோர் அவர்களுக்குரிய விவாரணைகள் நிறைவடைந்ததும் படிப்படியாக நாடு திரும்புவார்கள். இதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் நீரியல் வள அமைச்சும் வெளி விவகார அமைச்சும் இணைந்து மேற்கொண்டு வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியக் கடல் எல்லையில் அத்துமீறிப் பிரவேசித்துள்ளமை உட்பட பல்வேறு காரணங்களுக்காக இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பிரதியமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கமைய விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த இவர்கள் ஒவ்வொரு கால கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என்பதால் அதற்கேற்பவே அவர்களது விசாரணைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கிணங்க படிப்படியாக அவர்கள் விடுவிக்கப்படுவர் எனவும், இவர்களை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல் மின் திட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்வுக்கு பாதிப்பில்லை – ஜனாதிபதி ராஜபக்ஷ

he_at_norochcholai-2009-07-05.jpgநுரைச் சோலை அனல் மின்நிலைய நிர்மாணத்தினால் அப் பிரதேசத்திலுள்ள சொத்துக்களுக்கோ அல்லது பிரதேசவாசிகளின் இயல்பு வாழ்க்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருக்கிறார்.  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட சனிக்கிழமை அங்கு சென்றிருந்த போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

மின் உற்பத்தி நிலையத்தை சூழவுள்ள பகுதிகள் பசுமை பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது குறிப்பிட்டிருக்கிறார். இதன் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும் நாட்டின் மின் விநியோகத்திற்கு மேலும் 900 மெகாவற் மின்சக்தி சேர்க்கப்படுமென்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

அத்துடன், அந்தந்த பிரதேசங்களில் உரிய அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது முக்கியமென்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அனைத்து துறையிலும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்றும் நிகழ்வில் பங்கு கொண்ட மதகுருமார்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதேநேரம், மின்உற்பத்தி நிலைய நிர்மாணத்திட்டதுடன் அந்த பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளையும் அபிவிருத்தி செய்யவும் அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ இதன் போது மேலும் தெரிவித்திருக்கிறார்.

தவறான அறிக்கைக்காக தமிழரிடம் மன்னிப்புக் கோரியுள்ள ஏ.பி.சி.

தவறான விதத்தில் செய்தி வெளியிட்டதற்காக அவுஸ்திரேலியாவின் ஏ.பி.சி.தொலைக்காட்சி தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.
மே 18 இல் 7.30 இல் ஒளிபரப்பான செய்தி அறிக்கையில் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பாக தவறான விதத்தில் அறிக்கையிட்டதாக பார்வையாளர் ஒருவர் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து ஏ.பி.சி.தொலைக்காட்சி மன்னிப்புக் கேட்டுள்ளது.

200 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷாரால் பெருந்தோட்டத் துறைக்கு கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களின் பரம்பரையினர் இலங்கைத் தமிழர்கள் என்று ஏ.பி.சி.தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களில் ஒருபகுதியினர்

தொழிலாளர்களின் வம்சாவளியினராக இருக்கின்ற போதும் அநேகமானோர் 2 ஆயிரம் ஆண்டுகால இலங்கைத் தமிழ் கலாசார பரம்பரையினராகும். ஏ.பி.சி.யின் கெய்ரன் டொய்ல் இந்தத் தவறை ஏற்றுக்கொண்டுள்ளார். உங்கள் கவலையை ஏ.பி.சி. ஏற்றுக்கொள்கிறது. தமிழ் மக்களின் வரலாறு தொடர்பாக தவறாக குறிப்பிடப்பட்டதையும் தவறான வழிகாட்டலுக்கு இட்டுச்செல்வதாக அமைந்திருந்ததையும் ஏ.பி.சி.ஏற்றுக்கொள்கிறது. இதற்கு ஏ.பி.சி.மன்னிப்புக் கோருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக கிரீன் லெவ்ற் வீக்லியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கி.பி.2 ஆம் நூற்றாண்டிலிருந்தே தீவில் இலங்கைத் தமிழ் மக்கள் இருந்து வருவதை ஏ.பி.சி.விளங்கிக்கொள்கிறது. அநேகமான இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தின் வம்சாவளியினர் என்றும் ஏ.பி.சி.குறிப்பிட்டுள்ளது.

பிரபல குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ மரணம்

_arguello.jpgதென் அமெரிக்க நாடானா நிகராகுவாவைச் சேர்ந்த பிரபலமான குத்துச் சண்டை வீரர் அலெக்ஸிஸ் அர்கில்லோ தனது வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அலெக்ஸிஸ் மூன்று முறை உலக குத்துச் சண்டை பட்டத்தை வென்றவர். 1995 ஆம் ஆண்டு குத்துச் சண்டை போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற அவர் உலகளவில் 82 வெற்றிகளை பெற்றுளார். அதில் 65 முறை எதிரிகளை முழுதாக வீழ்த்தியும் உள்ளார்.

மூன்று பிரிவுகளில் உலகப் பட்டத்தை வென்றுள்ள ஆறு பேரில் அலெக்ஸிஸும் ஒருவர் என்பது குறிப்பிட்த்தக்கது.1968 ஆம் ஆண்டு தொழில்முறை ரீதியில் போட்டியிட தொடங்கிய இவர் உலகப் போட்டிகளில் ஃபெதர் வெயிட், சூப்பர் ஃபெதர் வெயிட் மற்றும் லைட் வெயிட் பட்டங்களை வென்றவர்.

கண்ணிவெடி அகற்றும் பதினாறு தொழிலாளர்கள் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டனர்;

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதிகள் பதித்து வைத்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஐ. நா. சபை உதவி பெற்ற நிறுவனம்ஒன்று ஈடுபட்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் 16 பேர் கோஸ்ட் மாநிலத்தில் இருந்து பக்டியா மாநிலத்துக்குச் செல்வதற்காக பயணம் செய்த போது கடத்திச் செல்லப்பட்டனர்.

அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியவர்கள் தான் அவர்களை கடத்திச் சென்றனர். இந்த கடத்தல் லோகார் கார்டெஸ் சாலையில் நடந்தது. தலிபான்களின் வேலையாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இந்த சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆட்களை கடத்துவது என்பது தீவிரவாதிகளுக்கு லாபம் தரும் தொழிலாக இருக்கிறது. கடத்தப்பட்டவர்களை மீட்ப தற்காக பெரும் தொகையை பணயத் தொகையாக அவர்கள் பெறுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் கண்ணிவெடியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள். அல்லது காயம் அடைந்தனர். பாகிஸ் தானுக்கு அருகாமையிலுள்ள பகிற்ரா மாகாணத்திலே இக்கடத்தல் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஸ்வாட் பிரதேச ராணுவ நடவடிக்கைகளில் தோல்வியை நெருங்கும் தலிபான்கள் இத்தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர்.

இதனூடாக ஆப்கான் பாகிஸ்தான் அரசுகளைப் பணியவைக்கும் வேலைகளில் தலிபான்கள் ஈடுபடலாம். கடத்தப்பட்டோர் உள்ளூர் தொழிலாளர்களாகவுள்ளதால் சர்வதேச சமூகம் இக்கடத்தல் விடயத்தில் அதிக அக்கறை செலுத்தாது எனக் கருதப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானிய கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் 1800 வெளிநாட்டுப் பணியாளர்களும் எட்டாயிரம் உள்ளூர் வாசிகளும் ஈடுபட்டுள்ளனர். இது வரை மூன்றில் இரண்டு பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப் பட்டு துப்பரவு செய்யப்பட்டுள்ளன. 2001 ஆம் ஆண்டிலிருந்து இது வரை 21 வெளிநாட்டு தொழிலாளர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் களூடாக கடத்தப்பட்டோரை விடுவிக்க முயற்சிகள் செய்யப்படவுள்ளன.

பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள்

yusuf.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஆடிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் சார்பாக பரணவித்தான 49 ஓட்டங்கள் பெற்றதே அதி கூடிய ஓட்டமாக இருந்தது. பந்து வீச்சில் அமீர், சஹிட் அஜ்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைப் பெற்றனர். கான் 2 விக்கெட்டையும் அப்துர் ரவுப், உமர் குல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதே வேளை 168 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்று பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி ஆட்ட நேர முடிவில் 71 ஓட்டங்கக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணி சார்பாக மெண்டிஸ், மெத்திவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடரும்.