09

09

ஒடுக்கப்படுபவரின் எதிர்ப்பை ஒழுங்கமைப்பது எப்படி?: சேனன்

• 20ம் நூற்றாண்டில் 160 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுத்தத்துக்குப் பலியாகியுள்ளனர். இந்த நூற்றாண்டு தொடங்கியதில் இருந்து 4 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிர்கள் அநாவசியமாக அழிக்கப்பட்டுள்ளன. கொங்கோவில் 2 மில்லியன் ஈராக்கில் ஒரு மில்லியன் என்று விரியும் உயிரிழப்புகளில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழ் உயிர்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

• இந்த அக்கிரமங்கள் வெளிப்படையாகத் தெரிந்தாலும் உலகின் பெரும்பான்மை மக்கள் இந்தக் கொடூரத்துக்கு எதிராக ஒருங்கிணையவில்லை. ஒரு சிறுபான்மையினரே உலகெங்கும் இதற்கெதிரான எதிர்ப்பைச் சரியான வழியில் முன்னெடுத்து வருகிறார்கள். பெரும்பான்மை மக்கள் ‘சுயநலமானவர்கள்’ என்பதல்ல அதன் அர்த்தம். ஆளையாள் அடித்துச் சாக்காட்டிகொண்டு பெரும்பான்மை மக்களைப் பட்டினிபோட்டுச் சித்திரவதை செய்துகொண்டு – படுமோசமான பேய்க்காட்டல்களை அரசியலாகப் புலுடாவிட்டு – அடக்குமுறைகளை அநியாயங்களை ஜனநாயகமாகப் பாவனை காட்டி, உலகு ஒழுங்கமைக்கப்படுவது தவிர்க்கமுடியாதது என்று யாரும் நம்புவதில்லை. அடக்கும் வர்க்கத்தின் அரசியல் இந்த ஒழுங்கமைப்புக்கு வெளியே மாற்று இல்லை என்பதை நிறுவுவதன் மூலம் அடக்குவோர் ‘சுய நலன்களைத்’ தற்காத்துக் கொள்கிறது. ஒடுக்குவோர் நலன்சார் கலாச்சாரக் கட்டமைப்புக்களை அதிகாரமயப்படுத்தி-முதன்மைப்படுத்தி –அதையே நியாயமான வழியாகக் காட்டுகிறார்கள்.

• இதனாற்தான் ஒடுக்கப்படுவோர் உலக வழிமுறைகளை கடுமையாக எதிர்க்கவேண்டியுள்ளது. தற்காலக் கலாச்சார-அரசியல் கட்டமைப்புக்குப் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இருந்தாலும் அந்த எதிர்ப்பு ஒழுங்கமைக்கப்படுவதில் பல்வேறு சிதறல்களைக் காணக்கூடியதாக இருக்கிறது. மக்களின் பன்முகத்தன்மை அதற்குக் காரணமல்ல. மாறாகப் பன்முக வித்தியாசங்களைக் கூர்மைப்படுத்தி எதிர்ப்பின் ஒழுங்கமைவை உடைப்பதில் அதிகாரம் கட்டமைக்கும் விழுமியங்கள் இயங்குவதை நாம் அவதானிக்க வேண்டும். அதனாற்தான் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முன்வருபவர்கள் எதிர்ப்பின் வடிவங்களை சிந்திக்கவேண்டியது மிக முக்கியமானதாக இருக்கிறது.

• புனிதமான வழிமுறைகள் என்று எதுவுமில்லை. ‘சமூக விஞ்ஞானம்’ கணித முறை விதிகளுக்குள்ளால் இயங்குவதில்லை. நேர்கோட்டுச் சிந்தனை முறை சமூகத்தைப் புரிவதற்கோ எதிர்ப்பைக் கட்டமைப்பதற்கோ உகந்ததல்ல.

• நீண்டகால மனித வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்ட ஏராளமான அறிதல்கள் உண்டு. மனித-சமூக இயல்புகள் பற்றிப் பல அறிதல்களை நாம் வசப்படுத்தியுள்ளோம். அடக்குமுறைக்கு உட்படும் மக்கள் அதற்கெதிரான எதிர்ப்பைச் செய்வர் என்ற அடிப்படை அறிதலும் வரலாறும் எமக்குக் கற்று கொடுத்த ஒன்றே. எதிர்ப்பு பலவந்தமாக முடக்கப்பட்டாலும் அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்பு இருக்கும் என்பது கேள்விக்கப்பாற்பட்டது. சில சமூக அறிதல்கள் கேள்விக்கப்பாற்பட்டது என்று குறிப்பதன் மூலம் நாம் அவற்றை பொதுமைப்படுத்தப்பட்ட சமூக நிறுவல்களாக – சமூக விஞ்ஞானமாக புரிந்து கொள்கிறோம்.

• இதுபோன்ற சமூகம் சார்ந்த பரந்த அறிதலுக்கு மார்க்;சியம் மிகப்பெரும் பங்காற்றியுள்ளது. மார்க்சிய அறிதலை பயன்படுத்துபவர்கள் அடக்கு முறைக்கு எதிரான பெரும் சவாலைக் கட்டி மாற்று சமுதாயம் பற்றி சிந்திக்கிறார்கள். மார்க்சியம் போல் ஒடுக்குதலுக்கு எதிர்ப்பை பலப்படுத்திய உத்திகள் போல் பலம்வாய்ந்த உத்திகள் வரலாற்றில் இல்லை என்பதை உலக வரலாற்றை மேலோட்டமாக அறிந்தவர்களாலேயே உணர்ந்துகொள்ள முடியும். தற்போதய சமமற்ற உலகின் அதிகாரத்துக்கு பெரும் சவாலாக மக்களை திரட்டி பல்வேறு வெற்றிகளை பெற்று தந்தது மார்க்சியம்தான் என்பதை தெரிந்து கொள்வது கடினமானதல்ல.

• மார்க்சியம் வழிநடத்தும் எதிர்ப்பு வெற்றிகளை ஈட்டிதருவதாக இருப்பதால் அதிகாரம் தமது முழுபலத்தையும் கொண்டு மார்க்சியர்களை ஒடுக்குவதை நாமறிவோம். ஒடுக்குமுறைக்கு எதிரான நியாயமான எதிர்ப்பை செய்ய விரும்பும் ‘நேர்மையான’ நோக்குடையவர்கள் மார்க்சியத்தை நோக்கி நகர்வது தவிர்க்கமுடியாதது. எதிர்ப்பைச் சிதறடிக்கும் அடக்குமுறை கடந்த நூற்றாண்டில் மார்க்சிய எதிர்ப்பை முறியடிக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஈட்டியுள்ளது. இருப்பினும் வர்க்கங்களுக்கிடையிலான யுத்தமாக நகர்ந்துகொண்டிருக்கும் உலகவரலாற்றில் ஒடுக்கப்படும் மக்கள் மார்க்சியத்தை மீண்டும் மீண்டும் கண்டெடுத்து எதிர்ப்பை வடிவமைப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களுக்கு தொடர்ந்தும் வெற்றிகளை ஈட்டித் தந்துகொண்டிருக்கிறது.

• வறுமைக்குள் வீழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டுகொண்டிருந்த ரஸ்ய மக்களை விடுதலை செய்த ரஸ்ய புரட்சியின் வெற்றிகளை நாம் இன்றும் அனுபவித்து வருகிறோம். இருப்பினும் ஒடுக்குமுறையில் இருந்து மனிதகுலத்தை விடுதலை செய்தல்நோக்கி ரஸ்யப் புரட்சியின் வெற்றிகள் தொடரவில்லை. அதேபோற்தான் மாபெரும் சீனப்புரட்சியும் அடிமைகளாக மிருகங்களாக மிதிக்கப்பட்டுக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை அடிமைத்தளையில் இருந்து மீட்டெடுத்தது. கியூபா, சிலி, ஸ்பெயின், போர்த்துக்கல், கங்கேரி, ஈரான், கானா என்று சமூகம் விடுதலை நோக்கி நகர்ந்த உதாரணங்கள் உலகெங்கும் பரவிகிடக்கின்றன. இந்த நகர்வுகள் எல்லாம் வீணாய்ப் போன நடவடிக்கைகள் என்று அதிகாரம் வெற்றிப் பெருமிதத்திற் பூரித்துப் பம்மாத்து விடுவதை ஏற்றுகொள்ள முடியாது. எதிர்காலத்து எதிர்ப்புகளை முறியடிக்க இறந்தகால மக்கள் எழுச்சிகளை கேவலப்படுத்துவது அவர்களுக்கு அவசியமாக இருக்கிறது. ஆனால் அந்த எழுச்சிகள் மூலம் ஊருப்பட்ட(ஏராளம்) ஜனநாயக உரிமைகளை மக்கள் வென்றெடுத்துள்ளார்கள். எழுச்சிகளைக் கிண்டலடிக்கும் அதே தருணம் வென்றெடுக்கப்பட்ட இந்த உரிமைகளை மக்களிடமிருந்து மீண்டும் பறிக்க அதிகாரம் திணறிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

• இந்த உலகநியதியின் அடிப்படையிற்தான் சரியான எதிர்ப்பைச் சிந்திப்பவர்கள் சில தீர்க்கமான அறிதல்களை ஏற்றுகொள்கிறார்கள். வலதுசாரி அரசின் நலன்கள் ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் மக்கள் நலன்களில் இருந்து மாறுபட்டது என்பதை வரலாறு நமக்கு கற்று தந்துள்ளது. அதிகாரம் எந்த நலன்சார்ந்து இயங்குகிறது? -அது எவ்வாறு தனது நலன்களை நிலைநாட்டுகிறது? என்ற ஆழமான அறிதல் இன்றி அதிகாரத்துக்கு எதிரான எதிர்ப்பைக் கட்டுவது கடினமானது. அதிகாரத்தை அடையாளப்படுத்தி அதிகாரம்சார் நலனில் இயங்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு எதிர்ப்பை வடிவமைக்காமல் எப்படிப் போராடுவது? எதிரி யார் என்று தெரியாமல் எப்படி எதிர்ப்பைச் செய்வது?

• எதிரி யார்? என்பதன் விடை சுலபமானதல்ல. அதிகாரத்தை குறிவைத்து அதன் நலன்சார் அமைப்புகளைத் தகர்ப்பதற்கு எதிர்ப்பை ஒன்றிணைக்கும் மார்க்சியம் அதிகாரத்தை எல்லாத் தளங்களிலும் எதிர்க்கும் உத்தியாகிறது. அதனாற்தான் மார்க்சியம் எப்பொழுதும் ஒடுக்கப்படுபவர் நலன்சார்ந்து சிந்திப்பதாக இருக்கிறது.

• ஒடுக்கப்படும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை பலப்படுத்துவது எவ்வாறு? ஏதோ ஒரு வகையில் ஒடுக்குமுறைகளை செய்துகொண்டிருக்கும் அதிகாரங்களுடன் நட்பை பேணுவதன் மூலம் நாம் எமது எதிர்ப்பை பலப்படுத்தலாம் என்று நினைப்பது முட்டாள்தனமானது. காஸ்மீரில் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஒடுக்கும் இந்திய வலதுசாரி அரசு இலங்கை தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று எதிர்பார்ப்பது சரியா? தமிழரின் சுய நிர்ணய உரிமை வழங்கப்படுவதன் மூலம் இந்திய அதிகாரத்தின் பல்வேறு நலன்கள் திருப்திப்படுத்தப்படும் என்று காட்டுவதன் மூலம் இந்திய அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று சிலர் வாதிடுகிறார்கள். இந்திய அதிகாரத்தின் நலம் என்று நாம் எதைச் சொல்கிறோம்?. இந்தியாவில் பெரும்பான்மை மக்களை வறுமைக்குள் புரட்டி சுரண்டித் தள்ளிக்கொண்டிருக்கும் இந்திய அரசுக்கு இலங்கையின் வடக்கு –கிழக்கை மேலதிக சுரண்டலுக்காக நாம் திறந்து விடுவதன் மூலம் மக்களுக்கு விடிவு வரும் என்று நினைப்பது முட்டாள்தனமானதல்லவா? அடிமைச் சங்கிலியை உடைப்பதற்கு பதிலாக எந்த சங்கிலியால் அடிமைப்படுத்தப்படுகிறோம் என்று நாமாகத் தீர்மானிக்கும் உரிமை போதும் என்று சொல்வது போன்ற முட்டாள்தனமது.

• சில உரிமைகளை விட்டுகொடுத்துச் சில உரிமைகளை வெல்லும் உலகில் நாம் இல்லை. விட்டுகொடுக்கும் உரிமைகளை நாம் மீண்டும் பெற நாம் மீண்டும் பெரும்போர் செய்யவேண்டியிருக்கும். வென்றெடுக்கப்பட்ட எந்த உரிமைகளையும் நாமாக விட்டுகொடுக்க நாம் ஒருபோதும் முன்வரக்கூடாது.

• ஒடுக்கப்படுபவர்கள் ஒன்றுபடுவதுதான் அதிகாரத்துக்குக் கிலி உண்டாக்கும் விடயம். காஸ்மீரில் மற்றும் உலகெங்கும் ஒடுக்கப்படுபவர்கள் இணைவதுதான் எதிர்ப்பைப் பலப்படுத்த சிறந்த வழி. அதிகாரம் எம்மைவிட பலமாக இருக்கிறது என்பதற்காக நாம் அதிகாரத்துக்கு அடிபணிய வேண்டும் என்ற அவசியமில்லை. எதிர்ப்பு ஏதாவது ஒரு அதிகாரத்தின் உதவியுடன்தான் நிகழவேண்டும் என்று நினைப்பது மடத்தனமானது.

….தொடரும்.

லிப்ற் கொடுப்பதாகக் கூறி பாலியல் வல்லுறவு கொண்ட இருவருக்கு, 17 ஆண்டுகள் சிறை!!!

Rapists_Tharmaseelan_and_Arunanலிப்ற் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வல்லறவிற்கு உட்படுத்திய இரு தமிழ் இளைஞர்களுக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. தர்மசீலன் தங்கவேல் (27) அருணன் தனபாலசிங்கம் (30) ஆகிய இரு இளைஙர்களுமே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ளனர். யூலை 6ல் போற்ஸ்மோத் கிறவுண் நீதிமன்றத்தில் மூன்றுநாள் வழக்கின் முடிவில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவர்களுக்கான தண்டனையை வழங்கிய நீதிபதி கிரகாம் உவைற் தண்டனைக்காலம் முடிந்ததும் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் இவர்கள் குற்றவாளிகளாகக் கணப்பட்டு உள்ளதால் பாலியல் குற்ற ஆவணத்தில் அவர்களது பெயர் விபரம் காலவரையறையின்றி பதிவு செய்யப்படும். இதனால் இவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் தங்களது நகர்வுகள் இருப்பிடம் வாழ்விடம் பற்றி பொலிசாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 21 வயதான பல்கலைக்கழக மாணவி சம்பந்தப்பட்டவர்கள் எப்போதும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று விரும்பினாலும் அவர்கள் நீண்டகாலச் சிறைத் தண்டனை பெற்றது ஆறுதல் அளிப்பதாகத் தெரிவித்தார். இவர் மூன்று நாட்கள் நிதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தனக்கு நிகழ்ந்த கொடுமையை விபரித்து மற்றையவர்களுக்கும் அவ்வாறு நிகழ்ந்து விடாது தடுத்துள்ள அம்மாணவியின் துணிச்சலை டிடெக்டிவ் சார்ஜன் சூ முரே பாராட்டினார்.

பிரித்தானியாவின் ஹம்பசெயர் என்ற இடத்தில் உள்ள போஸ்ட்மவுத் பிரதேசத்தில் சவுத்சீ பகுதியில் வெளியே சென்று குடித்துக் கொண்டிருந்த மாணவியை தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் வீட்டில் இறக்கி விடுவதாக்க கூறி தங்கள் காரில் ஏற்றினர். காரில் ஏற்றியவர்கள் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இன்னுமொரு அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகக் கூறி அதில் தங்கலாம் தூங்கலாம் என அந்த மாணவிக்குத் தெரிவித்தனர்.

பின்னர் இருவரும் மாறி மாறி அந்த மாணவியுடன் பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். அந்த மாணவி எவ்வளவோ கெஞ்சிய போதும் இவர்கள் வல்லுறவு கொள்வதை நிறுத்தவில்லை என அம்மாணவி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் மீண்டும் அம்மாணவியை காரில் ஏற்றிவந்து சவுத்சீயில் வீதியோரத்தில் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் தர்மசீலன் தங்கவேலும் அருணன் தனபாலசிங்கமும் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதை மறுத்துள்ளனர். அம்மாணவியின் சம்மதத்துடனேயே அவருடன் உறவு கொண்டதாக அவர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

யூரிகள் மூன்று நாட்கள் வாதப் பிரதிவாதங்களைக் கேட்ட பின் மூன்று மணிநேரம் அவற்றை ஆராய்ந்து தர்மசீலன் தங்கவேல், அருணன் தனபாலசிங்கம் இருவரையும் குற்றவாளிகளாகக் கண்டனர்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் எட்டு ஆண்டுகளும் ஆறுமாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கடினமான குடிவரவு விதிகளுக்கமைய நீதிபதியின் பரிந்துரைக்கு அமைய குற்றவாளிகள் திருப்பி அனுப்புவதற்கு உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இளைஞர்கள் குழுக்களிடையே வன்முறையைப் போன்று பாலியல் துஸ்பிரயோகங்கள் பல இடம்பெற்றுள்ளன. ஆனால் ஊடகங்களில் மிகச்சிலவே வெளிவந்துள்ளது. வயது குறைந்தவர்களை பாலியல் இச்சைகளுக்கு உள்ளாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது. இவற்றில் ஈடுபட்ட பலர் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை.

பிரபல டென்னிஸ் வீரர் திடீர் மரணம்

matius.jpgபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் மத்தியூ மான்ட்கோர்ட் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். 24 வயதான அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே அதற்கான காரணம் தெரிய வரும். பாரிசில் உள்ள அவரது காதலியின் அடுக்குமாடி குடியிருப்பில் அவர் பிணமாக கிடந்ததாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

உலக தரவரிசையில் 199 ஆவது இடம் வகித்த மார்ன்ட் கோர்ட், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் 2 ஆவது சுற்று வரை வந்தார். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவருக்கு 5 வார காலம் தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை கடந்த திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வந்தது.

இந்த நிலையில் அவரது மரணம் ரசிகர்களை மட்டுமின்றி, பிரா ன்ஸ் நாட்டு டென்னிஸ் சங்கத்தையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 4 முறை பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஸ்பெயினின் ரபெல் நடால், மான்ட் கோர்ட்டுக்கு எதிராக விளையாடி இருக்கிறார்.

நடால் தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “மத்தியூ எனது நண்பர். அவர் இறந்த தகவலைக் கேட்டு இன்னும் என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. அந்தத் தகவலை என்னால் நம்பவே முடியவில்லை” என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.

சார்க் மாநாட்டில் கொழும்புப் பிரகடனம்! சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் தகவல்

saarc_colombo_2009.jpgசார்க் நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான அமைச்சர்களின் மா நாட்டின் போது கொழும்புப் பிரகடனம் முன்வைக்கப்படவுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி எம். சுமனதாச தெரிவித்தார். சார்க் அமைப்பு நாடுகளின் சிறுவர்கள் தொடர்பான சிரேஷ்ட அதிகாரிகளின் மாநாடு இன்று காலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் உத்தியோக பூர்வமாக அரம்பமானது.

இன்றைய அமர்வுக்கு தலைமை வகித்த சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இன்றைய அமர்வின் ஆரம்பத்தின் போது சார்க் வலய நாடுகளில் சிறுவர்களின் நலன் காக்கவும் மேம்பாட்டுக்காகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் தொடர்பான அறிக்கை ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின தெற்காசிய நாடுகளுக்கான பிராந்திய ஆலோசகர் கெப்ரியல் கோஹ்லரால் வாசிக்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில். சார்க் வலய நாடுகளில் சிறுவர்களின் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து கண்காணிக்கவும் அது தொடர்பான அறிக்கை சமர்பிப்பதற்கான பொறுப்பையும் சார்க் நாடுகள் யுனிசெப் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையே இன்று சமர்பிக்கப்பட்டது. வலய நாடுகள் சிறுவர்களுக்கான பல அபிவிருத்தித் திடடங்களை மேற்கொண்டு வருவது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த கால எல்லையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களே யுனிசெப் நிறுவனத்தின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு வருகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை,  இந்தியா,  பாகிஸ்தான்,  பூட்டான்,  அப்கானிஸ்தான்,  பங்ளாதேஷ், மாலை தீவு. நேபாளம் ஆகிய நாடுகளின் அமைச்சுக்களின் செயலாளர்கள்ää பணிப்பாளர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பிரதிநிதிகளாக இன்றைய அமர்வில் கலந்து கொண்டனர்.

புலிகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே பொய்யான தகவல்களை வழங்கினோம் – கைதாகியுள்ள ஐந்து டாக்டர்களும் தெரிவிப்பு

மனிதாபிமான நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தின்போது புலிகளின் அழுத்தங்கள் காரணமாகவே அரசாங்கத்திற்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்கள் ஊடாக வழங்க நேர்ந்ததாக புலிகளின் பிடியில் இறுதி வரையிருந்து சேவையாற்றிய ஐந்து டாக்டர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை அப்பொழுது வழங்கியமைக்காக தாங்கள் தற்பொழுது வருந்துவதாக தெரிவித்த அவர்கள், புலிகளின் துப்பாக்கி முனையில் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் அச்சுறுத்தப்பட்டமையினாலேயே உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

புலிகள் சில சந்தர்ப்பங்களில் தங்களுக்குத் தெரியாமல் தங்களது பெயர்களை பயன்படுத்தி பலாத்காரமாக பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கும் இணைய தளங்களுக்கும் வழங்கியதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா தெரிவித்தார்.

பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தின் போது புலிகளின் பிடியில் இறுதிவரையிருந்து சேவையாற்றிய வண்ணம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய ஐந்து டாக்டர்களும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஊடகவியலாளர்களை சந்தித்து தமது உண்மை நிலைமைகளை விபரித்தனர்.

இரகசிய பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் சின்னத்துரை சிவபாலன், முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் வீரகத்திப்பிள்ளை சன்முகராஜா, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் துரைராஜா வரதராஜா, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர் டாக்டர் தங்கமுத்து சத்திய மூர்த்தி மற்றும் முல்லைத்தீவு சுகாதார சேவை அதிகாரி டாக்டர் கதிரவேல் இளஞ்செழியன் வள்ளவன் ஆகியோரே இதில் கலந்து கொண்டனர்.

இவர்கள் இங்கு மேலும் தகவல் தருகையில்:- நாங்கள் அரசாங்க வைத்தியர்களாக இருந்த போதிலும் புலிகளின் ஆயுதங்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலிலேயே இறுதிவரை புலிகளுக்கும் சேவையாற்ற நேர்ந்தது. சிவிலியன்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டிய நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாக புலிகளுக்கும் சிகிச்சை வழங்க வேண்டியேற்பட்டது. எனினும் இறுதி வரை நாங்கள் அரசாங்கத்தின் சம்பளத்தையே பெற்றுக் கொண்டோம். நாங்கள் எமது சொந்த விருப்பத்திற்காக இவ்வாறு செயற்படவில்லை. எம்மையும், எமது குடும்பத்தையும் பாதுகாக்க இது தவிர எமக்கு வேறு வழியில்லை.

புலிகளின் தாக்குதல்கள் காரணமாகவே அதிகமானவர்கள் காயமடைந்தனர். எனினும் உயிரிழந்தவர்களதும், காயமடைந்தவர்களதும் எண்ணிக்கை தொடர்பில் மிகைப்படுத்தி கூறும்படியே புலிகள் அதிகமான சந்தர்ப்பங்களில் வற்புறுத்தி வந்துள்ளனர். உண்மையாக இந்தப் பிரதேசத்தில் மருந்து தட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு கூறும் பட்சத்திலே பலரது கவனத்தை ஈர்த்து யுத்தத்தை நிறுத்த வழி செய்ய முடியும் என்றனர்.

எட்டு தடவைகள் அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மருந்து, சத்துணவு போன்றவற்றை அனுப்பிவைத்திருந்தது. அவற்றில் பெரும் தொகையான மருந்துகளை புலிகள் எடுத்துச் சென்றனர் என்றனர். நாங்கள் காயமடைந்த சிவிலியன்களுக்கே அதிகமாக சிகிச்சை வழங்கியுள்ளோம். ஏனெனில் புலிகளுக்கு சிகிச்சை வழங்கவென தனியான வைத்தியசாலைகளை புலிகளின் மருத்துவக் குழுவினர் வைத்திருந்தனர். தேவையேற்படின் மாத்திரமே எம்மிடம் கொண்டு வருவார்கள் என்று டாக்டர் சன்முகராஜா தெரிவித்தார்.

இறுதியாக வந்த மூன்று கப்பல் பொருட்களையும் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.

எமது வைத்தியசாலையின் சுற்றுப் புறங்களில் புலிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வைத்தியசாலை மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது உண்மைக்கு புறம்பானது. எனினும் ஷெல் ஒன்று வைத்தியசாலைக்கு அருகில் வந்து விழுந்தது. நாங்கள் ஐ.சி.ஆர்.சி.க்கு அறிவித்தோம். பின்னர் புலிகளின் முகாம்களை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவர்கள் கூறினார்கள். நாங்கள் பல முறை தப்பிவர முற்பட்ட போதும் அது பலனளிக்க வில்லை. எமது குடும்பத்தினரும் உறவினர்களும் இங்கு சிக்கிக் கொண்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் நாங்கள் சேவையாற்றி வந்தோம். படையினர் முன்னேறி வர வர நாங்கள் எமது இருப்பிடங்களை மாற்றிக் கொண்டோம். இறுதியாக பொக்களை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் தற்காலிக வைத்தியசாலைகளை அமைத்து சேவையாற்றினோம்.

இறுதியாக பாதுகாப்புப் படையினர் நாங்கள் இருக்கும் இடத்தை நெருங்கினர். வெடிச் சத்தம் குறைந்த நிலையில் நாங்கள் இருக்கும் இடத்தை ஐ.சி.ஆர்.சி. ஊடாக அறிவித்து எம்மை பாதுகாக்குமாறு தெரிவித்தோம். மே மாதம் 15ம் திகதி நாங்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம். எங்களை பாதுகாத்தமைக்கான நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றனர்.

இராணுவத்தினரிடம் சரணடைந்து 50 நாட்கள் கடந்த நிலையிலேயே நீங்கள் செய்தியாளர் மாநாட்டை நடத்துகின்றீர்கள் என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மருத்துவர்கள். இராணுவத்தினரிடம் சரணடைந்த உடனடியாக எம்மால் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. அதற்குப் பின்னர் நாம் பல சட்டப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய தேவை இருந்தது.

அத்துடன் எமக்கு சில நோய்களும் ஏற்பட்டிருந்தன டாக்டர் வரதராஜா கையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேவையும் இருந்தது.  இது போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காகவே நாம் இக்கால தாமதத்துடன் இச்செய்தியாளர் மாநாட்டை நடத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதெனத் தெரிவித்தனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்களின் அச்சுறுத்தலில் பொதுமக்களின் இழப்புகள் குறித்து மிகைப்படுத்திய தரவுகளை வெளியிட்டதாகக் கூறிய நீங்கள் தற்பொழுது அரச கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு மாறுபட்ட தகவலைத் தருவதற்கு சாத்தியம் உள்ளது. அத்துடன் நீங்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் இன்னொரு நாட்டிலிருந்து இன்னொரு கருத்தையும் கூறும் சாத்தியம் உள்ளதே? எனக் கேட்டபோது.

இல்லை, நாம் தற்பொழுது சிறந்த முறையில் அரசினால் கவனிக்கப்பட்டு வருகின்றோம். எம்மை சிறையில் தடுத்து வைக்கவில்லை. குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் அலுவலகத்திலேயே தங்க வைக்கப்பட்டுள்ளோம். ஆதலால், நாம் தற்பொழுது கூறுவதுதான் உண்மை. இக்கருத்தையே நாம் என்றும் எங்கும் கூறுவோம் எனத் தெரிவித்தனர்.

வன்னி வைத்தியர்கள் அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே  முன்பு வழங்கிய தகவல்களை மறுத்துள்ளனர் – புலிகளின் ஆதரவு இணையத்தளம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அழுத்தம் காரணமாகவே தாம் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டதாக வன்னியில் இருந்து வந்து கைதாகி தடுப்புக் காவலில் உள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் அழுத்தத்தின் பேரில் வெளியிட்டுள்ளதாக சர்வதேச உரிமை அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

அரசின் அழுத்தம் காரணமாக இப்பேட்டிக்கு வரவில்லை – டாக்டர் ஷண்முகராஜா

டாக்டர் சண்முகராஜா பி.பி.ஸி. தமிழோசைக்கு விசேட பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.  தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை,  தமது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், விரைவில் விசாரணைகள் முடிந்து பணிக்கு திரும்ப முடியும் என்று தாங்கள் எண்ணுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், செய்தியாளர்களை சந்திக்க ஐந்து மருத்துவர்களும் தாங்களே முன்வந்ததாகவும், அரசின் அழுத்தம் காரணமாக வரவில்லை என்றும் தெரிவித்திருந்தார். அவரது பேட்டி நேற்றிரவு (08) பி.பி.ஸி.  தமிழோசையிலும் ஒலிபரப்பப்பட்டது.

மட்டக்களப்பில் புலி உறுப்பினர்கள் கைது

ltte_arrest.jpgமட்டக் களப்பு பகுதியில் புலி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி ராசா உதயங்க தெரிவித்தார்.
மாமங்கம் மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஒருவர் புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் என்றும் மற்றவர்  கடற்புலி உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களிடமிருந்து 10 கிலோ எடையுடைய பாரிய அமுக்க வெடி ஒன்றுடன்  ஹையேஸ் ரக வேன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ் அதிபர் எடிச குணதிலக்கவின் பணிப்புரையின் பேரில் தலைமை பொலிஸ் பரிசோதகர் எஸ். கிரியல்ல தலைமையிலான உயர்மட்ட பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர். 

சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவி நேற்று இலங்கை வந்து சேர்ந்தது!

saudi-arabia.jpgவவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்காக சவுதி அரேபிய அரசாங்கம் வழங்கிய  மனிதாபிமான உதவிகளில் முதல் தொகுதி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தக்கு வந்து சேர்ந்துள்ளது. 1000 கூடாரங்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 100 மெட்ரிக் தொன் எடையுள்ள நிவாரணப் பொருட்களை அரச அதிகாரிகள் நேற்று பொறுப்பேற்றனர்.

மொத்தம் 33 கோடி ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்க சவுதி அரேபியா முன்வந்துள்ளது. இந்த உதவியின் இரண்டாவது தொகுதியான மேலும் 100 மெட்ரிக் தொன் எடைகொண்ட உதவிகள் அடுத்த வெள்ளிக்கிழமை விமானம் மூலம் இலங்கை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கப்டன் கெலாராடோ கொழும்பை வந்தடைந்தது – நிவராணப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பேற்கும்

_vanankaman-captionali.jpgவடக்கி லிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு வணங்கா மண் கப்பலினூடாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தாங்கிய எம்.வி. கப்டன் கெலாராடோ எனும் கப்பல் இன்று காலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது. இது பற்றி இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், இந்தியாவின் சென்னைத் துறைமுகத்திலிருந்து வந்துள்ள இக்கப்பலில் காணப்படும் 650 மெற்றிக் தொண் எடைகொண்ட நிவாரணப் பொருட்களை கொழும்புத் துறைமுகத்தில் வைத்து இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கையேற்கவுள்ளது.

இப்பொருட்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இன்று முற்பகல் 11.00 மணியளவில் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவுள்ளனர். 531 பெட்டகங்களிலுள்ள இந்நிவாரணப் பொருட்களுள் அத்தியவசிய உணவு வகைகள்,  சிறுவர் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியன அடங்கியுள்ளன. இந்நிவாரணப் பொருட்கள் இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலுடன்; வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சார்க் சிறுவர்கள் தொடர்பான அதிகாரிகள் மட்ட மாநாடு இன்று ஆரம்பம்

சார்க அமைப்பின் சிறுவர்கள் தொடர்பான மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்துள்ள சார்க் நாடுகளின் அதிகாரிகள் மட்ட மாநாடு இன்று காலை 9.30 மணிக்கு கொழும்பு,  ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நான்காவது முறையாக நடைபெறும் இம்மாநாட்டின் இன்றைய அதிகாரிகள் மட்ட மாநாட்டில் சார்க அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி சீல் கான்ட் ஷர்மா பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.  13 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களின் நலன்களை பிராந்திய மட்டத்தில் பேணுதல் போன்ற விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை சார்க  நாடுகளின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாடு நாளை நடைபெறவுள்ளது என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இணைந்து வாழ்வதுபற்றிச் சிந்திக்கலாம்; இறைமைக்கு பங்கமில்லாத தீர்வுக்கு தயார்

nsri.jpgபிரிவி னைக்குப் பதிலாக இணைந்து வாழும் நிலை பற்றிச் சிந்திப்பதற்கும், பிளவுகளை மறந்து ஒற்றுமையாகச் செயற்படுவதற்கும் தயாரென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

அதேநேரம், நாட்டின் ஒற்றுமை, இறைமை, சமத்துவத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் தீர்வொன்றைக் காண்பதற்குத் தாயரென்றும் கூட்டமைப்பு உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிதியமைச்சுக்கான குறை நிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஸ்ரீகாந்தா,“அரசாங்கம் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளது. இனம், மதம், கலாசாரம் என பல வகையிலும் பொது அம்சங்களைக் கொண்டவர்கள் நாம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சிறந்ததொரு தீர்வைக்காண ஒன்றிணைந்து செயற்படுவோம்” எனவும் சர்வகட்சிக்குழு இதற்கு சிறந்ததொரு ஆரம்பமாகும்.

நாம் அனைவரும் இந்நாட்டு மைந்தர்கள் என்ற வகையில் நாட்டின் இறைமை, ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் தீர்வொன்றைக் காண்போம். எல்லாக் காலத்திலும் நாம் விடுதலைப் புலிகளின் சரி பிழைகளைச் சுட்டிக்காட்டியே வந்துள்ளோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வே எமது ஒருமித்த எண்ணமாக இருந்தது.

இன முரண்பாட்டுக்கு ஒரு நிலையான தீர்வைக் காண்பதில் நாம் அக்கறையாயுள்ளதால்தான் நாம் ஜனாதிபதியின் அழைப்பையேற்று சர்வகட்சிக்குழு கூட்டத்திற்குச் சென்றோம். அக்கூட்டம் நல்ல ஆரம்பமாக விருந்தது. நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு மூவினங்களும் இணைந்து பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது, யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்.

மாறி மாறி வந்த அரசாங்கங்களால் எமது கோரிக் கைகள் மறுக்கப்பட்டு எமது மக்கள் ஓரங்கட்டப்பட்டனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். மூன்று இலட்சம் மக்கள் முகாங்களில் அவதிப்படுகின்றனர். இவர்களை விரைவாக மீளக்குடிய மர்த்த நடவடிக்கை எடுப்பது அவசியம். மீளக்குடியமர்த்துவதற்கான நிலை ஏற்படும் வரை அரசாங்கத்திற்குச் சுமையாக இல்லாது இம்மக்கள் தமது உறவினர்களின் வீடுகளில் சென்று வாழ அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு இவர்களை ஏற்றுக்கொள்ள உறவினர்கள் தயாராகவுள்ளனர்.

இம்மக்களை மீளக் குடியமர்த்துவதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வொன்றை காண வேண்டும். அரசாங்கத்தின் ஆக்க பூர்வமான சகல நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளது.

எமது வரலாற்றைப் பலரும் பலவிதமாகக் கூறுகின்றனர். எமக்கு ஒரு சிறந்த பாரம் பரியம் உள்ளது. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கு மிடையில் நிகழ்ந்த உறவுகள் தொடர்ந்துள்ளன. எமக்குள்ளே பல பொதுவான அம்சங்கள் பண்புகள் உள்ளன. இந்நிலையில் பிரிவினைக்குப் பதிலாக இணைந்து வாழும் நிலைபற்றி சிந்திப்போம். பிளவுகளைப் பார்க்காமல் ஒற்றுமையைக் கவனத்திற் கொண்டு செயற்படுவோம். ஒரே நாட்டின் மைந்தர்களாக நாட்டைக் கட்டியெழுப்புவோம்.

தேசியப் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த அரசியல் தீர்வொன்றை எட்டுவோம். நாட்டின் ஒற்றுமை, இறைமை, சமத்துவத்திற்கு பங்கம் விளைவிக்காத வகையில் இத்தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.