தெருக்கதைகள்: 1
நான்: யோசப்பு அண்ணை! எல்லாம் உப்புச்சப்பு இல்லாமல் முடிஞ்சு போச்சுது. நீங்கள்தான் புலிகளின்டை முதல் புள்ளியாக நிண்டனீங்கள்.
யோசப்பு: ஓம் தம்பி எங்கடை காலகஸ்டம் இப்படியாப்போச்சு. யாருக்குத் தெரியும் இவன் உப்பிடிப் படம்காட்டுவான் எண்டு.
நான்: நீங்கள்தான் தலைவரைத் தலையிலை கொண்டு திரிந்தனீங்கள். இப்ப உப்பிடிக் கதைக்கிறியள்.
யோசப்பு: கொண்டு தெரிஞ்சனாங்கள் தான். எங்களுக்கு விடுதலைவேணும் தானே தம்பி.
நான்: நீங்கள் மட்டும்தான் உண்மையைச் சொல்லுறியள். உங்களுக்கு மட்டும்தான் விடுதலை வேணும் எண்டு. புலியள் மக்களுக்கு விடுதலை, மக்களுக்கு விடுதலையெண்டு தங்களுக்குக்குத் தானே நாடு கேட்டவங்கள், நாடு நாடாய் காசு சேர்த்தவங்கள்.
யோசப்பு: நான் எங்களுக்குகெண்டது மக்களுக்குத் தான் தம்பி.
நான்: அப்ப நீங்கள் என்னும் மாறேல்லை?
யோசப்பு: நான் மாறிட்டன் அப்பு. கே.பின்டை பக்கம் மாறிட்டன். நான் இப்ப புலியில்லை.
நான்: அப்ப கே.பின்டை குழுவை என்னெண்டு சொல்லுறது?
யோசப்பு: அது பிரபாகரன் புலி இது கேபியின் புலி.
நான்: உங்கடை புலி என்ன செய்யப்போகுது?.
யோசப்பு: செய்தியள் பாக்கிறதில்லையோ? நாடுகடந்த தமிழ்ஈழத்துக்கான போராட்டம் தொடங்கிட்டம். எங்கடை அரசியல் போராட்டம்தான்.
நான்: நீங்கள் எல்லாரும் வைச்சால் குடும்பி வழிச்சால் மொட்டைதான்? ஒண்டில் ஆயுத போராட்டம் இல்லையெண்டால் அரசியல் போராட்டம்.
யோசப்பு: ஆயுதப்போராட்டம்தான் எல்லாம் முடிஞ்சுபோச்சே. உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து எங்களை நாசம் அறுத்துப்போட்டுதே. போதாதே தம்பி?.
நான்: வெளிநாடுகளைக் குறைசொல்லாதையுங்கோ? நீங்களும் அமெரிக்காவேடையும் சண்டைக்கு நிண்டனியள்தானே. எண்டைக்கு அரசியலைப்பற்றி யோசிச்சனியள்? சரி கிடைச்ச தீர்வுகளையாவது வைச்சுக் கொண்டு தொடர்ந்து போராடியிருக்கலாம் தானே? நீங்களும் எங்கடை மக்களையே கொன்றுபோட்டு இராணுவம் கொல்லுது என்று உலகுக்குப் படம் காட்டினியள் தானே. உங்கடை திருகு தாளங்களையெல்லாம் சற்றலைட்டிலை மற்றநாடுகள் பாத்திருக்கும். சொந்த மக்களையே பயணக்கைதியாக வைத்திருந்த ஒரேயொரு போராட்டம் உங்கடைதான்.
யோசப்பு: நடந்ததைக் கதைச்சுப் பிரயோசனம் இல்லை, நடக்க வேண்டியதைப் பாப்பம்.
நான்: இனி நடக்க என்ன கிடக்கு. ஊரை அடிச்சு அரசாங்கத்துக்குக் குடுத்தியள். போராட்டம் என்று போராடும் சக்திகளான மக்களையே கொன்று குவிச்சியள். மிச்சம் மீதியாய் கொஞ்சச்சனம் தப்பி ஒட்டி இருக்குதுகள். தொடருங்கோ உங்கடை போராட்டுங்களை. கிழக்கிலை நீங்கள் வளத்துவிட்ட நம்பிக்கை நட்சத்திரங்கள் கிளம்பிட்டினம். இனி இந்தியாவும் தன்ரை பங்குக்கு தமிழ்குழுக்களுக்கு காசும் ஆயுதப்பயிற்சியும் குடுத்துவிடும் சீனனை இலங்கையிலை இருந்து எறிய.
யோசப்பு: என்னடா தம்பி நம்பிக்கையைக் கைவிடக்கூடாது. இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்.
நான்: எல்லாம் செய்து முடிச்சுப்போட்டு இப்ப எங்களிட்டை வாறியள். அப்ப சொன்னம் கேட்டனியளோ? இப்பவும் நீயோ நானோ என்று பிரிஞ்சு நின்று அடிபடாமல் எல்லாருமாய் சேர்ந்து சேர்த்த காசுகளை அந்தமக்களுக்குக் கிடைக்கச் செய்கிறதோடை ஆயுதம் அது இது என்று அவசரப்படாமல் நிதானமாய் எப்படி உலகநாடுகளின் அனுசரணையோடை எம்மக்களுக்கு குறைந்தபட்ச அரசியல் தீர்வு ஏதாவது கிடைக்குமோ என்று பாருங்கோ.
யோசப்பு: அதைத்தானே எங்கடை கேபியும் சொல்லுறார். பிரபாகரன் இருக்கிறார் எண்ட மற்றக்குழு பிரபாகரன் வரட்டும் எண்டு பாத்துக் கொண்டிருக்கினம்.
நான்: கேபி சொல்லுறது சரி தமிழீழம் என்றும் சொல்லுறியள். உலகநாடுகளே சொல்லிப்போட்டுது சின்னத்தீவைப் பிரிக்க ஏலாது எண்டு. இப்ப பிரபாகரன் இருக்கிறாரோ இல்லையோ எண்டதில்லை இண்டைய பிரச்சனை. இருந்தா வரட்டும், அவர் வரமாட்டார் சனத்தைப்படுத்தின பாட்டுக்கு சனமே அடிச்சுச் சாக்காட்டிப் போடும். உங்கடை கேபியும் தமிழீழம் எண்டு காலத்தை இழுத்தடிக்கிறதை விட்டுப் போட்டு ஏதாவது உடனடியாக சூட்டோடை சூடா உலகத்தின்ரை பார்வை மற்றப் பக்கங்களுக்கு திரும்பமுன்னம் நடக்க வேண்டியதைப் பாருங்கோ. ஆறினால் கஞ்சி பழங்கஞ்சிதான்.
நான்: (யோசப்புவின் நண்பர் ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு போகிறார்) அண்ணை உங்கடை பிரெண்டு உங்களைக் கண்டும் காணாத மாதிரிப்போறார்.
யோசப்பு: அவர் என்ணோடை கொஞ்சம் மனக்கசப்புத் தம்பி. எல்லாம் புலிப்பிரச்சனைதான். வேறை என்ன காசுதான்.
நான்: புலிக்கெண்டு வாங்கி உங்கடை பொக்கட்டை நிரப்பிப்போட்டியள் போலை?
யோசப்பு: தம்பி உப்பிடிக் கதைக்கப்படாது. நான் புலிக்கு விசுவாசத்தோடைதான் காசு சேத்தனான். எங்களுக்கு, சேர்க்கிற காசிலை 15 விகிதகொமிசன் தந்தவங்கள்தான். நாங்கள் எங்கடை வேலை வில்லட்டியை விட்டுப்போட்டுத்தானே காசு சேர்க்கப் போனனாங்கள். போற இடத்திலை எத்தினை கேள்வி நியாயம். மழை வெய்யில்…காடு கரம்பையெண்டு திரிஞ்சனாங்கள்.
நான்: சரி மனச்சாட்சிப்படி சொல்லுங்கோ உது உதவியோ தொழிலோ?
யோசப்பு: உதவிதான் தம்பி. மற்றவை எல்லாம் வீட்டிலை குளிரிலை நித்திரை கொள்ளேக்கை நாங்கள் மட்டும் உந்தப் பனிக்கிள்ளையும் குளிருக்கிள்ளையும் திரிஞ்சு காசு சேத்தனாங்கள்.
நான்: அதுக்குத்தானே உங்களுக்கு கொமிசன் தந்தவங்கள். உங்களுக்குக் காசு தந்தவங்கள் எல்லாம் வானத்திலை இருந்து கொட்டுண்டதைப் பொறுக்கித்தரேல்லை.
யோசப்பு: நீ என்ன தம்பி உதிலைபோன என்ரை பழைய பிரெண்டு மாதிரிக்கதைக்கிறாய். அவரும் உப்பித்தான்; தந்தகாசைத் திருப்பித்தா எண்டு கேட்கிறார். போராட்டத்துக் கெண்டு கொடுத்துப்போட்டு என்னட்டைக் கேட்டால் நான் எங்கை போறது தம்பி.
நான்; கனக்கவே தந்தவர்? வாங்கின கொமிசனிலை குடுக்கவேண்டியது தானே.
யோசப்பு: ஒரு இலட்சம். அந்தக்காசை ஒவ்பிசிலை குடுத்திட்டன். போய் அவங்களைக் கேட்க வேண்டியது தானே.
நான்: உங்களிட்டைத் தந்த காசை எப்படி அவங்களிட்டைக் கேட்கிறது. உங்களுக்குத் தெரியுமோ அந்தாள் பொலிசுக்குப் போகலாமமெண்டு.
யோசப்பு: அதுதானே முடியாது தம்பி. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு எப்படி காசு குடுப்பாய் என்று கேட்டு அவரையுமெல்லோ உள்ளுக்குப் போடுவாங்கள்.
நான்: ஓகே..கொஞ்சப்பேர் வந்து தன்னை வெருட்டிக்காசு கேட்டது என்று சொல்லலாம் தானே. புலியள் வெருட்டிக்காசு வாங்கிறது ஐரோப்பா முழுக்கத் தெரியும் தானே.
யோசப்பு: அதுக்குத்தானே நான் கே.பின்டை பக்கம் போட்டேனே. பொலிஸ் வந்தால் நான் கூட்டிக் கொண்டுபோய் யாருட்டை காசு கொடுத்தனான் எண்டு காட்டுவன். பேந்து புலிகளும் அவரும் பட்டபாடு. இல்லையெண்டால் சொல்லுவன் நான் இப்ப கேபியின் பக்கம் புலியைப்பற்றி எனக்குத் தெரியாது எண்டு.
நான்: உப்பிடிச் சொல்லி நீங்கள் நழுவேலாது. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு காசு சேர்க்கிறதற்கு சட்டம் இடங்கொடுக்காது. காசுகுடுத்த எல்லாரும் சேர்ந்து பொலிசுக்கோ கோட்டுக்கோ போனால் வாங்கின காசுக்கு நீங்கள் தான் பொறுப்பு.
யோசப்பு: அதுதானே பிரபாகரனின்டை கையெழுத்தோடை றிசீட்டுக் கொடுத்திருக்கிறம். போய் பிரபாகனிட்டைக் கேட்க வேண்டியது தானே.
நான்: நீங்கள் சொல்லுறமாதிரி பிரபாகன் மேசையிலை இருந்து உந்த றிசீட்டுக்களுக்கு கையெழுத்துப் போட்டுக் கொண்டு இருந்ததாலைதான் போராட்டம் தோத்துப் போனதாக்கும். என்ன கதைவிடுகிறியள் அண்ணை. உந்த றிசீட்டே கள்ளவேலை தான். ஒண்டைப் பிடிக்கப்போய் எல்லாம் பிடிபடப்போகுது.
யோசப்பு:அப்ப என்ன தம்பி செய்கிறது.
நான்: போய் பிரபாகரனிட்டைக் கேழுங்கோ.
யோசப்பு: தம்பி என்னை நடுத்தெருவிலை விட்டுவிட்டுப் போகிறீர்.
நான்: நீங்கள் எல்லாரும் கறக்கிறதையெல்லாம் கறந்து போட்டு எங்களையும் மக்களை நடுத்தெருவிலைதானே விட்டுனீங்கள். வருவன் இப்பவில்லை… காசெண்டு வந்தால் பொல்லோடை வருவன்…