கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’
வன்னியில் இடம்பெற்ற அவலத்தை கற்பனையிலோ எழுத்திலோ கொண்டுவர முடியாது. அந்த அவலம் அவ்வளவு கொடியது. அதிலிருந்து தப்பிய மக்கள் இன்று இலங்கை அரசு நலன்புரி முகாம்கள் என்று சொல்லும் முட்கம்பி வேலிக்குள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். இம்முகாம்களின் நிலை பற்றி மிக விரிவாக சர்வதேச ஊடகங்களே தொடர்ச்சியாக எழுதி இலங்கை அரசின் முகத்திரையைக் கிழித்து வருகின்றன. ஆனால் மறுமுனையில் இந்த முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு லண்டனில் உள்ள சில அமைப்புகள் முட்டுக்கட்டையாகவும் உள்ளன.
குறிப்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம், லண்டன் அம்மன் ஆலய நிர்வாகிகள் சிலர் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவ முன் வருபவர்களுக்கு எதிராக அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கையெழுத்து வேட்டையில் இறங்கி உள்ளனர்.
பொதுவாக உரிமை மீறல்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகளைக் கோரி கையெழுத்துப் போராட்டங்கள் நடத்தப்படுவது வழமை. ஆனால் மாறாக தங்கள் சுயநல நோக்குகளுக்காக இந்த ஜனநாயக நடைமுறையை கையெழுத்து வேட்டையை சிலர் நடாத்த முயல்கின்றனர். நுனிநாக்கில் ஜனநாயகம் பேசும் இவர்கள் தமிழ் மக்களின் நலன்தொடர்பில் ஆபத்தானவர்களாக உள்ளனர். ஒரு சிலரின் தூண்டுதலால் முழுமையான புரிதல் இன்றி கையெழுத்து இடுவோர் ஒரு சிலரின் சுயநலன்களுக்கு துணை போய்விடுகின்றனர்.
காரைநகர் நலன்புரிச் சங்கம் ஏற்கனவே சாதியச் சங்கம் என்று பெயரெடுத்துக் கொண்டது. லண்டன் குரல் 19 (ஒக்ரோபர் 2007 – நவம்பர் 2007) இதழிலும் அதற்கு முன்னர் வெளியான இதழ்களிலும் காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் சாதியப் போக்குத் தொடர்பாக விரிவாக எழுதப்பட்டு இருந்தது. ( காரைநகரும் சாதிய முரண்பாடும் :காரை முகுந்தன் ) சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அதன் உறுப்பினர் ஒருவரை சாதிப் பெயரைச் சொல்லி விழித்ததைத் தொடர்ந்து இச்சர்ச்சை உருவாகியது. தற்போது காரைநகர் நலன்புரிச் சங்கம் தனது சாதியச் சிந்தனைக்காக மற்றுமொரு தடவை சர்ச்சைக்குள் சென்றுள்ளது. ( காரை மக்களைத் தலைகுனிய வைத்த காரை நலன்புரிச் சங்கம் :காரை முகுந்தன் )
வன்னி முகாம்களில் உள்ள மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கிழக்கு லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடலில் யுத்தத்தில் சம்பந்தப்படாத பகுதிகளைச் சேர்ந்தவர்களை அந்தக் கிராமத்தவர்கள் பொறுப்பெடுத்து பார்க்க முடியும் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன்வைத்தார். காரைநகர் நலன்புரிச் சங்க உறுப்பினரான இவர் காரைநகரில் பல கல்வீடுகள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. வன்னி முகாம்களில் உள்ள காரைநகர் மக்களைப் பொறுப்பேற்று அவர்களை காரைநகரில் மீளவும் குடியமர்த்தலாம் என்ற யோசனையை பி சோமசுந்தரம் முன் வைத்தார். அதனைப் பலரும் அன்று வரவேற்றனர். சோமசுந்தரம் தனது யோசனையை பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. உத்தியோகபூர்வமாக செயற்பாட்டிலும் இறங்கினார்.
இலங்கை அரசுக்கு தனது யோசனையை எழுதிய சோமசுந்தரம் காரைநகர் மக்களை மீளவும் காரைநகரில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டார். சோமசுந்தரம் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால் சர்வதேசமே இன்று இலங்கை அரசிடம் மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும் படியே கேட்கின்றது. அதற்கு பதிலளித்த இலங்கை அரசு இதுதொடர்பாக பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டிருந்தது.
இதனை காரைநகர் நலன்புரிச் சங்கத்திற்கு சோமசுந்தரம் தெரியப்படுத்தினார். இது தொடர்பாக காரைநகர் நலன்புரிச் சங்கம் மே 31 2009ல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து காரை மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பாகவும் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தடன் பேசுவதற்கும் ஒரு உபகுழுமைக்கப்பட்டது. அதில் சோமசுந்தரம் பிரபல வானொலி அறிவிப்பாளர் தயானந்தா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் உப குழுவோ அல்லது காரைநகர் நலன்புரிச் சங்கமோ மேற்கொண்டு நடவடிக்கையில் இறங்க மறுத்தனர். இலங்கைத் தூதரகத்துடன் வன்னி முகாம்களில் உள்ள மக்கள் பற்றி பேசுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு ( Letter_Prepared_for_SLHC )அனுப்பப்பட முடிவெடுக்கப்பட்ட போதும் அதனை காரைநகர் நலன்புரிச் சங்கம் அனுப்பி வைக்கவில்லை.
சோமசுந்தரம் தானே நேரடியாக மின் அஞ்சலில் அக்கடிதத்தை அனுப்பி வைத்தார். அதற்கு யூன் 16 2009ல் பதிலளித்த இலங்கைத் தூதரகம் யூன் 26 2009ல் சந்திப்பதற்கு நேரத்தை ஏற்பாடு செய்து வழங்கியது.
இதற்கிடையே இந்த உப குழு அமைக்கப்பட்ட பின் காரைநகர் நலன்புரிச் சங்கத்தை சேர்ந்த சிலர் இந்த மீளக் குடியமர்த்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்தனர். ‘தூதரகத்துடனோ துரோகக் கும்பல்களுடனோ சங்கம் தொடர்புகொள்வதை நிறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்.’ என்று லண்டன் வாழ் காரைநகர் மக்கள் என்ற பெயரில் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு பலரிடம் கையெழுத்தும் பெறப்பட்டு உள்ளது. ( Karai_Diasporas_Petition ) இந்தப் பிரசுரத்தை காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் சோமசுந்தரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கையழுத்து இட்டவர்களின் பட்டியலை செயலாளர் சிவா ரி மகேசன் வெளியிடவில்லை. கையெழுத்து இட்டவர்களின் பட்டியலை சோமசுந்தரம் கேட்டிருந்த போதும் இதுவரை அப்பட்டியல் வழங்கப்படவில்லை.
இலங்கை அரசு வன்னி மக்களைத் தடுத்த வைத்துள்ள நிலையில் அவர்களிடம் பேசுவதற்கு என்ன உள்ளது என்பது நியாயமானதாக இருந்தாலும் கடிதத்தின் உள்நோக்கம் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மேலும் காரைநகர்ச் சங்கத்தின் கடந்தகால வரலாறும் சந்தேகத்திற்குக் காரணமாக இருக்கின்றது.
இந்தச் சூழ்நிலையில் தொடர்ந்தும் இந்த உபகுழுவில் இருப்பது அர்த்தமற்றது என்று கூறி பி சோமசுந்தரம் யூன் 21 2009ல் உப குழுவில் இருந்து வெளியேறினார். தான் மக்களுக்குச் செய்ய வேண்டியதை சுயாதீனமாக சிறிய அளவில் செய்வேன் என்றும் அவர் தனது ராஜினாமாக் கடிதத்தில் தெரியப்படுத்தி இருந்தார்.
யூன் 22 2009ல் இலங்கைத் தூதரகத்திற்கு காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் சிவா ரி மகேசன் அச்சந்திப்பில் தவிர்க்க முடியாத காரணங்களால் தங்கள் உறுப்பினர்கள் கலந்தகொள்ள முடியாது எனத் தெரிவித்து பதில் எழுதினார். ( KWS_Letter_to_SLHC )
இச்சம்பவங்கள் பற்றி சிவா ரி மகேசனுடன் யூலை 4ல் தொடர்பு கொண்ட போது காரைநகர் நலன்புரிச் சங்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தமையால் தாங்கள் மேற்கொண்டு செயற்பட முடியவில்லை என சிவா மகேசன் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் ‘அந்த மக்கள் முகாம்களுக்கு வெளியே வந்தபின் அவர்கள் உதவிகளை வழங்க விரும்புகிறார்கள்’ என்றார். உதவி தேவைப்படும் போது தானே செய்ய வேண்டும். இப்போது தானே அவர்களுக்கு உதவி தேவை என்ற திருப்பிக் கேட்ட போது ‘அவர்களுடைய ஆதரவு இன்றி தாங்கள் செயற்பட முடியாது’ என்றும் சிவா மகேசன் தெரிவித்தார்.
வன்னி முகாம்களில் உள்ள காரை மக்களை காரைநகரில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளில் மீளக்குடியமர்த்துவது பற்றிய யோசனையை சோமசுந்தரம் முன்வைத்த போது உடனேயே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ‘கண்ட கண்ட ஆட்களையும் எங்களின் வீடுகளில் இருத்தவோ?’ எனச் சிலர் முறுகியதாக லண்டன் குரலுக்கு செய்திகள் எட்டின. அதுபற்றி சிவா மகேசனிடம் காரைநகரில் கைவிடப்பட்டுள்ள லண்டனில் வாழும் ‘உயர் சாதி’ இனரின் வீடுகளில் ஏனைய சாதிக்காரர்கள் குடியிருப்பதை தடுப்பதற்காகவா இந்த முயற்சி கைவிடப்பட்டதா? என்று கேட்ட போது, சிவா மகேசன் முற்றாக அதனை மறுத்தார். ‘சாதிப் பிரச்சினை அங்கு ஒரு விடயமாகப் பார்க்கவில்லை’ என்றார் சிவா மகேசன்.
ஆனால் ‘கையெழுத்து வைத்து இதனை எதிர்த்தவர்கள் பெரும்பாலும் காரையில் உள்ள தங்கள் வீடு வளவுகளில் ஏனைய சாதியினர் வந்துவிடுவார்கள் என்பதாலேயே எதிர்த்தனர். அதற்கு அவர்கள் வைக்கும் காரணங்கள் நொண்டிக் காரணங்களைக் கூறுகின்றனர்’ என இத்திட்டத்தை ஆதரித்தவர்கள் லண்டன் குரலுக்குத் தெரிவித்தனர். ‘கையெழுத்து இட்டவர்கள் யார் என்ற பட்டியலை வெளியிட்டால் இந்த உண்மை வெளியே வந்துவிடும்’ என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். புது றோட்டு – களபூமி என்று பிரிந்து நிற்கும் உயர் சாதி உப பிரிவுகள் இரண்டும் இந்த காரையில் உள்ள கல்வீடுகளில் வன்னி முகாம்களில் உள்ளவர்கள் குடியமர்த்தப்படுவதை கடுமையாக எதிர்ப்பதில் ஒன்றாகவே செயற்படுவதாகவும் குடியேற்றத் திட்டத்தை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.