17

17

அரசியலில் ஒரு பொது ஊடகம் ……. சாராயம்: – ரி கொன்ஸ்ரன்ரைன்

Alchocol_Labelபல நூறு ஆண்டுகளாக உலக ராஜதந்திர அரசியலில் இரண்டு விடயங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது. இவற்றிற்கு அடிமையாகி மண்கவ்வியவர்கள் பலர். பெரியார் ஈ வே ராமசாமி ஊடாக அண்ணாத்துரையைத் தொட்டு நம்ம ஜோன் மேஜர் வரைக்கும் ‘பொம்பிளைப் பிரச்சினை’. சேர்ச்சில் தொடக்கம் சந்திரிக்கா ஊடாக விஜயகாந்த் வரைக்கும் ‘தண்ணிப் பிரச்சினை’.

தமிழ்நாட்டில் கறுத்தக் கண்ணாடி அரசியல்வாதிகள் வலம்வருவதற்கு இரண்டு காரணம் கூறப்படுகிறது. முதலாவது இவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை மற்றவர்கள் அவதானிக்க முடியாது. மற்றையது சம்பந்தப்பட்டவரின் கண்ணின் நிறத்தை அல்லது நிதானத்தை யாரும் கணிப்பிட முடியாது.

அண்மையில் 90 வயதை அடைந்த உலகப் பிரசித்திபெற்ற நெல்சன் மண்டேலாவைப் பற்றி அவருடைய நெருங்கிய நண்பர்கள் கருத்துத் தெரிவித்தபோது… அழகிய பெண்கள் மீது மண்டேலாவிற்கு இருந்த கவர்ச்சியைப் பற்றி பலமுறை தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். “What ever he did in his life Nelson Mondela always had an eye for a good looking women”.

சர்வதேச ராஜதந்திர அரசியல் ஒருபுறம் இருக்க நம்மட லோக்கல் விஷயத்திற்கு வருவோம். போர்க்காலங்களில் வடக்கு கிழக்கு மாகாணம் ஸ்ரீலங்காவின் மதுபான வியாபாரத்தில் முன்னிலையில் இருந்திருக்கின்றது. இவ் மதுபான வியாபாரம் சட்டரீதியாக இடம்பெறாத காரணத்தினால் இதுகுறித்த புள்ளிவிபரங்கள் கணிப்பீடுகள் ஒன்றும் வெளியாகவில்லை. வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற மதுபான வியாபாரத்தில் நேரடியாக ஈடுபட்ட இருபெரும் சிங்கள வியாபாரிகளின் கருத்தே இங்கு மூல காரணிகளாக மேற்கோள் காட்டப்படுகிறது. இவ்விரு சிங்கள வியாபார முதலாளிகளும் பல சொத்துக்களுக்கு அதிபதிகள். கொழும்பின் பிரபல வீதியில் மாளிகை போன்ற வீடுகளும் வெளிநாடுகளில் பல சொத்துக்களும் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டுகளில் ரணில் விக்கிரமசிங்க அரசு உட்பட சந்திரிகா அரசிற்கும் பணஉதவிகள் புரிந்தனர். இரண்டு முக்கிய கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் ஒரே நேரத்தில் பல லட்சக் கணக்கான பணத்தை வாரி வழங்கியவர்கள். யார் பதவிக்கு வந்தாலும் நாம் எப்போதும் வெல்லும் கட்சிதான் என்ற அரசியல் தத்துவார்த்தத்தை பின்பற்றுபவர்கள். இவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான வியாபாரத்தை தொடக்கி வைத்ததே சந்திரிக்கா அரசின் உயர் அதிகாரிகள் என்று தெரிவிக்கின்றார்கள். விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவும் பிள்ளையானும் பிரிந்தபின் இதே வியாபாரத்தை தாம் கிழக்கிலும் தொடர்ந்துள்ளார்கள். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் கிழக்கு மாகாண பிரிவின் பின் முஸ்லிம் பெயருடன் கூடிய ஒரு முக்கிய நபரும் தமது மதுபான வியாபாரத்தில் முக்கிய தொடர்பாளராக இருந்துள்ளதாக கூறுகிறார்கள்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் தமது வியாபாரத்தில் மிகுந்த மந்த நிலைமை தொடங்கியதாக கூறும் இவர்கள் விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மிக உயர்வாக மதிக்கிறார்கள். பண கொடுக்கல் வாங்கல்களில் விடுதலைப் புலிகளைப்போல் நேர்மையானவர்கள். ஒருவரும் இல்லை என பற்றுச் சான்றிதழ்கூட கொடுக்கிறார்கள். தங்களின் மதுபான பௌசர்கள் சொன்ன நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மிகவும் பவுத்திரமாக திருப்பி கையளிக்கப்படும். சம்பவங்களை பெருமையாக விபரிக்கின்றனர்.

வாழைச்சேனையிலும் அம்பாறையிலும் வவுனியாவிலும் கொள்வரவாகிய மதுபானங்களுக்காக London Tooting பகுதியிலுள்ள கடையொன்றில் பணம் கைமாறப்பட்டுள்ளது. ஜந்து பவுண் நோட்டில் உள்ள இலக்கம் குறிப்பிடப்பட்டு அந்த ஜந்து பவுணை இங்கு Tooting இல் கையளிக்கப்படும் பட்சத்தில் பல ஆயிரக் கணக்கான பவுண்கள் கைமாறப்பட்டுள்ளன. வருபவரை அடையாளப்படுத்துவதற்காக கையளிக்கப்படும் ஜந்து பவுண் நோட்டை ஏற்கும் லண்டன் கடைக்காரர் அந்த ஜந்து பவுணிற்கு சமனான ஜந்து பவுண் குத்திகளை கொடுக்கும் கண்ணியவராம்.
இவர்களின் கணிப்பின்படி போர்க்காலங்களில் ஸ்ரீலங்காவின் அனைத்து மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு கிழக்கு மாகாணத்தின் மதுபான வியாபாரம் அதிகளவில் இருந்திருக்கின்றது. சிங்கள பிரதேசங்களில் மதுபான வியாபாரத்தில் ஈடுபடும்போது இவர்கள் பலவிதமான இடையூறுகளையும் செலவுகளையும் ஈடுகொடுக்க வேண்டியிருக்கின்றது. பல தனிப்பட்டவர்களையும் பல திணைக்களங்களையும் தாஜாபண்ண வேண்டியிருந்தது. அதற்கும் மேலாக வரி செலுத்த வேண்டும். ஆக மொத்தமாக 295 ரூபாய்க்கு விற்பனையாகும் 750 ml சாராயத்திற்கு 200 ரூபாய் வரை செலவாகிறது. இதே மதுபானத்தை இவர்கள் வடக்கு மாகாணத்திற்கு விற்கும்போது 100 ரூபாய்தான் செலவாகிறது. மிகுதி அனைத்தும் நயம். அதுமட்டுமல்லாமல் பணம் பவுண்ஸில் லண்டனில் சுளையாகக் கொடுக்கப் படுகின்றது. அதிலும் குறிப்பாக வரி இல்லை. ஒரு இழுபறியோ தாமதமோ இல்லை.

போரில் இடம்பெற்ற உயிரிழப்பு மற்றும் ஏனைய அனர்த்தங்களுடன் இவ்வாறான சமுதாய குளறுபடிகளும் மௌனமாக கூட்டாக வளர்ந்துள்ளன. இதன் தாக்கங்களை சமுதாயம் வளரும் காலங்களில்தான் முகம்கொள்ளப் போகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மொக்குத்தனமான போராட்டம் முள்ளிவாய்க்காலில் கோரத்தனமாக முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. அதன் விளைவுகளை நாம் தொடர்ந்தும் சந்திக்கத்தான் போகின்றோம்.

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை; பலத்த காற்று

rain2.jpgநாட்டின் பல பாகங்களிலும் இன்று அதிகாலை முதல் தொடர்ச்சியாக மழை பெய்ததுடன் பல இடங்களில் பலத்த காற்றும் வீசியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் மத்திய மலை நாட்டின் சில பிரதேசங்களிலும் இன்று மழை பெய்துள்ளதுடன் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழைக்காலத்தில் காற்றும் வீசத் தொடங்கியுள்ளதால் நாட்டின் காலநிலையில் கடந்த புதன்கிழமை இரவு முதல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வளி மண்டலவியல் திணைக்களம், இந்நிலைமை தொடருமாக இருந்தால் நாட்டின் காரையோரப்பகுதிளிலும் மத்திய மலை நாட்டின் சில இடங்களிலும் கடும் காற்று வீசலாம் என எச்சரித்துள்ளது.

வடமாகாண ஆளுநர் இன்று பதவியேற்பு

chandrasiri.jpgவடக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.  இலங்கை இராணுவத்தின் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்திரசிறி பின்னர் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் விவகாரத்தைக் கையாளுவதற்கான தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் அவர் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். இதுவரை வடக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்துவந்த டிக்ஷன் தேலபண்டார மாலைதீவுக்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரட்டைக் குழந்தைகள் திடீர் வாந்தி ஏற்பட்டு மரணம்

சிலாபம், அக்கரையான் தொட்டுவ பகுதியைச் சேர்ந்த 1 1/2 வயதுடைய இரட்டைக் குழந்தைகள் திடீரென ஏற்பட்ட வாந்தி காரணமாக உயிரிழந்துள்ளன. இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை சிலாபம் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றுள்ளது. இக்குழந்தைகளுக்கு திடீரென வீட்டில் வாந்தி ஏற்பட்டதால் பெற்றோர் இருவரையும் சிலாபம் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சையளிக்கப்பட்டு வரும்போது காலை 10 மணிக்கு ஒரு குழந்தையும் பிற்பகல் ஒரு மணிக்கு மற்றக் குழந்தையும் மரணமடைந்தன.

இவர்களின் மரணத்திற்குரிய காரணத்தை தம்மால் அறிய முடியாதிருப்பதால் கொழும்புக்கு சடலங்களை அனுப்பி அறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிலாபம் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது.

அப்போலோ 11 பயணத்தை ஆரம்பித்த தினம்

19690717moon.jpgஅப்போலோ 11 விண்கலத்தின் நிலவுக்கான பயணம் ஆரம்பமான 40 வது ஆண்டு நிறைவு நேற்று அனுஸ்டிக்கப்பட்டது

அப்போலோ திட்டத்தின் கீழ் இருவரை நிலவுக்கு அமெரிக்கா அனுப்பியது. அதன் மூலம் அன்று ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான விண்வெளிப் போட்டியில் அமெரிக்காதான் முழு வெற்றி பெற்றதாக உணரப்பட்டது.

முதலாவதாக இறங்கி நிலவில் கால் பதித்தவர் நீல் ஆம்ஸ்ரோங்.

உண்மையில் நிலவில் கால் பதிப்போம் என்ற உறுதி மொழியை வழங்கியிருந்தவர், அமெரிக்க ஜனாதிபதியான ஜோண் எஃப் கென்னடி. ஆனால் அவரது கனவு நனவான போது அவர் உயிருடன் இல்லை.

நிலவில் கால் பதித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அப்போலோ திட்டத்தின் 40 வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்காக, அதில் பணியாற்றிய முன்னாள் விண்வெளி விஞ்ஞானிகள் எல்லாம் கேப் கனவெரலில் தற்போது கூடியிருக்கிறார்கள்.

இன்று அமெரிக்க விண்வெளி திட்டங்கள் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கின்ற போதிலும், இரண்டு மனிதர்கள் முதன் முதலாக நிலவில் கால் பதித்த அந்த தினம், அவர்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் மகிழ்ச்சியையும் இன்றும் தரும்.

ஈரான் விமான விபத்தில் பலியானோரை அடையாளம் காண முடியாத நிலை

iran-plane.jpgஈரான் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 168 பேரும் உயிரிழந்தனர். தலைநகர் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பகல் 11.30 மணியளவில் இந்த விமானம் புறப்பட்டது. பின்னர் சில நிமிடங்களில் விமானத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இந்த விபத்து ஏற்பட்டது. ஈரானில் இந்த ஆண்டு நிகழ்ந்த மிகப் பெரிய விமான விபத்தாக இது கருதப்படுகிறது- இதில் 153 பயணிகளும் 15 சிப்பந்திகளும் பயணம் செய்தனர்.
ஈரான் விமானம் விபத்துக்குள்ளான தெஹ்ரானின் வடமேற்குப் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளோரைக் காணலாம்.

பலியானோரில் 147 ஈரானியர்களும், 31 ஆர்மினிய நாட்டைச் சேர்ந்தோரும் அடங்குவர். இன்னும் நான்கு அமெரிக்கர்களும் இரண்டு ஜோர்ஜிய நாட்டைச் சேர்ந்தோரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விமானத்திலிருந்து மூன்று இன்ஜின்களில் ஒன்று தீப்பற்றிக்கொண்டதால் விமானி விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தலைநகர் தெஹ்ரானுக்குச் சற்றுத் தொலைவிலுள்ள எரிவின் என்ற இடத்தில் விமானம் நொறுங்கி வீழ்ந்ததாக சாட்சியாளர்கள் தெரிவித்தனர். விமானத்தின் டயர்கள் வெளியே தெரிந்தவாறு அது தீப்பற்றி எரிவதைக் கண்டதாகவும் சிலர் கூறினர். விமானத்தை விமானமோட்டி தரையிறக்க முயன்றுள்ளார் என்பதை இது காட்டுகின்றது.

ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் தேடும்பணிகளைத் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளைப் பணித்துள்ளார். எலும்புகளையும், சதைத் துண்டுகளையும் உடல் அவயங்களையும் தேடி எடுத்து பொதிகளில் சேமித்துள்ள மீட்புப் பணியாளர்கள் எவரையும் அடையாளம் காண முடியாதுள்ளதாகக் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த விமானம் கஸ்பியன் ஏயார் லைன்ஸ¤க்குச் சொந்தமானது.

ஐம்பது சிறிய, நடுத்தர விமானங்களைச் சேவையில் ஈடுபத்தியுள்ள கஸ்பியன் எயார் லைன்ஸ் விமான நிலையம் வாரமொரு தடவை ஈரான் மத்திய கிழக்கு கிழக்கைரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் விமான சேவைகளை நடத்துகின்றது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளிடமிருந்து விமான உதிரிபாகங்களைக் கொள்வனவு செய்வதிலிருந்து ஈரான் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்த வலுவுடைய இன்ஜின்கள் மற்றும் விமான உதிரிப்பாகங்களே ஈரானிடம் உள்ளன. சர்வதேச நாடுகள் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிதிது ள்ளதால் ஈரான் இவ்வாறான நிலைமைகளுக்கு முகங் கொடுக்க வேண்டியுள்ளது.

ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா செல்கிறார்

hillary_clinton.jpgஅமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார்.

இலங்கையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் கடல்சார்ந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான புதுடில்லியின் தீர்மானங்கள் தொடர்பாக அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். தமது விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் மிகவும் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கொள்கை,  கேந்திர ரீதியா சவால்கள்,  சுகாதாரம்,  கல்வி,  விவசாயம்,  பொருளாதாரம் மற்றும் அணுவாயுதப்பரிகரணம் உட்பட மிகவும் கடினமான விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

நல்லூர் கந்தன் திருவிழாவை முன்னிட்டு ஊரடங்கு நீக்கம்!

nallur-kovil.jpgஎதிர் வரும் 27 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு யாழ். ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லூர் கந்தன் பெருந்திருவிழா தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆராய . யாழ். மாநகர சபை ஆணையாளர் மு.செ. சரவணபவ தலைமையில நடைபெற்ற கூட்டத்தில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி,  ஆலயச் சுழலில் சட்டம்,  ஒழுங்கைப் பேணுவதற்காக 24 மணி நேரமும் பொலிஸார் பணியில் ஈடுபடுவார்கள். மின்சார குடி தண்ணீர் விநியோகம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் வழமைபோல் மேற்கொள்ளப்படும்.

ஆலயச் சுற்றாடலில் 13 வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும். வீதித்தடைகளில் அந்தந்த வீதிகளில் குடியிருப்பவர்கள் பற்றிய விபரங்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தொண்டர்கள் சேவையில் ஈடுபடுவார்கள்.  துவிச்சக்கர வண்டிகளுக்கான பாஸ் வழங்கும் நடவடிக்கைகளில் தவறுகள் இடம்பெறாத வகையில் கவனிக்கப்படும். ஆலயச் சுழலில் வாகனங்களின் நடமாட்டம் தடை செய்யப்படும

மக்களிடமிருந்து கோரிக்கை வரும் பட்சத்தில் அவர்களுக்கான சேவையை எந்த நேரமும் வழங்கத் தயாரான நிலையில் சென். ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவையும் இடம்பெறும்  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.கே.பட்டம்மாளின் உடல் மைலாப்பூரில் தகனம்

pattammal.jpgசென்னையில் நேற்றுக் காலமான பிரபல கர்நாடக இசை மேதை  டி.கே.பட்டம்மாளின் உடல் நேற்று மாலை மைலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.. பெருந்திரளான மக்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். மரணச்செய்தி கேட்டதும் இசை உலகைச் சோந்த பலர் டி.கே.பட்டம்மாளின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பால முரளி கிருஷ்ணா,  நடிகை வைஜயந்திமாலா,  கவிஞர் வாலி,  நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்,  பிரபல வீணை இசைக் கலைஞர் வித்தியா சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவு குறித்து அ..தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை தனது நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் பாடி தமது தேச பக்தியை வெளியிட்டவர் டி.கே.பட்டம்மாள் என அந்த அனுதாபச் செய்தியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

லிபிய நாட்டில் தொழில்வாய்ப்பு – முதற்கட்டம் 35,000 பேரை அனுப்ப முடிவு

housemaids.jpgலிபிய நாட்டுக்குத் தொழில் வாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்பும் பணி அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக 30-35 ஆயிரம்பேர் லிபியாவுக்கு அனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய் ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார்.

மருத்துவம், சுற்றுலாத்துறை, நிர்மாணம், கைத்தொழில் துறைகளில் இலங்கைக்குக் கூடுதல் வாய்ப்புகளை வழங்க உடன்பாடு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளாரென்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான உடன்படி க்கையின் அமுலாக்கம் குறித்து ஆராயவென அமைச்சின் செயலாளர் சுனில் எஸ். சிறிசேனவை லிபியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.