ஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்திய நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் குரோனிக்கல்’ நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், “பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, ஈழத் தமிழர் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் பழ.நெடுமாறன் ஆகியோர் தயாராகவில்லை” எனவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார்.
பிரபாகரன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பதாக வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் தொடர்ந்தும் தெரிவித்துவருவது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, “அவர்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டச் சமரின் போது எமது தலைவரும் மற்றும் போராளிகளும் வீரச்சாவு அடைந்தார்கள்” எனவும் செல்வராஜா பத்மநாதன் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உடலைப் பெற்றுக்கொள்வதற்குத் தான் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், இருந்தபோதிலும் அவரின் உறவினர்கள் எவரும் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளும் ஈழத் தமிழர்களின் துன்பங்களையிட்டு தமது கரிசனையை வெளிப்படுத்திவருவதாகவும் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்தார். “தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது” எனவும் அவர் தமது தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக விபரிக்கையில் தெரிவித்தார்.
“ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்” எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், “இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார்.