30

30

ரூ. 2200 மில். செலவு ஊவா வெல்லஸ்ஸ பல்கலை ஆக. 5 ஜனாதிபதியால் திறப்பு

university-of-sri.jpgஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இதற்கு 2200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, ஊவா மாகாணத்தின் கல்வி மற்றும் உயர் கல்வி மேம்பாட்டுக்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, ஊவா பிரதேச மக்களின் நலனுக்கென அமைக்கப்பட்டுள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தை ஜனாதிபதி திறந்து வைக்கிறார். இங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறும் முதலாவது மாணவர் குழுவுக்கு இப்பொழுதே தொழில் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இலங்கைக்கு ஜி15 இன் தலைமைத்துவம்

இந்தியா உட்பட 15 வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி15 கூட்டமைப்பின் தலைவர் பதவியை ஏற்க இலங்கை இணங்கியுள்ளது. முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும் இது. இந்த அமைப்பின் தலைவர் பதவி தற்போது இலங்கை வசம் வந்துள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த ஜி15 அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக இலங்கை உள்ளது.

இந்த அமைப்பில் இந்தியா, அல்ஜீரியா, ஆர்ஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஜமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, பெரு, செனகல், வெனிசூலா, சிம்பாப்வே ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.

சொஹைப் அக்தார் மீண்டும் சிக்கலில்…

cricket.jpgகிரிக்கெட் உலகில் அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சர்ச்சைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தர் மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளார்.

சொஹைப் அக்தார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்துத் தெரிவித்தது  பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அனுமதி பெறாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்ற விதிமுறையை அவர் மீறியதாகவும் அதற்கு விளக்கம் அளிக்கும்படியும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன் பதில் அளிக்குமாறு அக்தாரிடம் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும்,  அதிசயம் நிகழ்ந்தால்தான் அவரால் தேசிய அணிக்கு திரும்ப முடியும் என்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வஸீம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

லங்காபுத்ர அபி. வங்கியின் கிளை மட்டக்களப்பில் திறப்பு

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்புக் கிளை நேற்று மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ இவ்வங்கியினை திறந்து வைத்தார்.

இவ்வங்கியின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இவ்வங்கித் திறப்பு விழாவில் தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர்அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வங்கியின் கொடுக்கல், வாங்கல் நடவடிக்கை யினை பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத் திட்டத்தின் கீழ் கிழக்கு உதயத்தின் மூலம் மட்டக்களப்பு மாவ ட்டத்தில் திறக்கப்பட்ட முதலாவது லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் கிளை இதுவென்பது குறிப்பிட த்தக்கது

மைக்கல் ஜாக்சனின் மரணத்தில் புதிய தகவல் – அவரின் டாக்டர் மீதான சந்தேகம் அதிகரிப்பு

maical-jak.jpgமைக்கல் ஜாக்சனின் திடீர் மரணத்திற்கு அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முரே கொடுத்த மயக்க மருந்தே காரணம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாப் இசைப் பாடகர் மைக்கல் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்சின் ஹோல்ம்பி ஹில்ஸ் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, கடந்த மாதம் 25ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். அப்போது அவருடன் இருந்தவர் அவரின் தனிப்பட்ட டாக்டர் கன்ராட் முர் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த இதய சிகிச்சை நிபுணர்.

ஜாக்சன் மரணம் அடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், “புரபோபல்’ அல்லது “டிப்ரீவன்’ என அழைக்கப்படும் மயக்கம் தரும் மருந்தை அவருக்கு கொடுத்துள்ளார். அதுவே ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாகியுள்ளது என்றும் புலனாய்வுத் துறையினர் கூறியுள்ளனர். ஜாக்சனின் மரணம் தொடர்பாக பல வதந்திகள் கிளப்பி விடப்படுகின்றன. அவற்றுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாது.  ஜாக்சனின் உயிரை பறிக்கக் கூடிய மருந்துகள் எதையும் என் கட்சிக்காரர் பரிந்துரை செய்யவில்லை என இதற்கு பதிலளிக்கும் டாக்டர் முரேயின் வக்கீல் எட் செர்னோப் கூறியிருக்கின்றார்.

ஜாக்சன் மரணமடைந்த போது,  டாக்டர் முரேதான் அங்கு இருந்துள்ளார். அதனால், அவரின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தனக்கு எதிராக பரப்பப்படும் செய்திகளால் டாக்டர் முரே வேதனை அடைந்துள்ளார். 24 மணி நேரமும் பாதுகாவலருடன் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரால் தன் டாக்டர் பணியை தொடர முடியவில்லை. எங்கு சென்றாலும்,  அவருக்கு பல வகையிலும் தொந்தரவுகள் உருவாவதால்,  அவரால் நிம்மதியாக டாக்டர் பணியாற்ற முடியவில்லை என்று எட் செர்னோப் மேலும் கூறியுள்ளார்.

ஜாக்சனின் மரணம் தொடர்பாக டாக்டர் முரேயிடம்,  போலீசார் இதுவரை இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளனர். மூன்றாவது விசாரணை கடந்த 24ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால்,  திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஹஸ்டனில் உள்ள அவரின் மருத்துவமனை அலுவலகம் மற்றும் மருந்துகளை தேக்கி வைக்கும் பிரிவை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

காலி, வெலிவத்தயில் இளைஞன் சுட்டுக்கொலை

காலி, வெலிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளை ஞரொருவர் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று (29) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.

வீட்டுக்குள் அதிகாலை புகுந்த ஆயுதக் குழுவொன்று குறித்த நபரை சுட்டும் கூரிய ஆயுதங்களினால் தாக்கியும் கொலை செய்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இறந்தவரின் சடலம் காலி கராபிட்டிய ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட டுள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடி க்கப்படவில்லை எனவும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று பிற்பகல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.