இலங்கை அகதி முகாம்களின் நிலைமை வரலாற்றிலேயே மோசமானவையாக இருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று நடத்தப்படாமல் போர்க்குற்றவாளிகள் போன்றே தமிழர்கள் நடத்தப்படுவதாகவும் மனித உரிமைகள் பணியாளரும் சட்டத்தரணியுமான நிமால்கா பெர்னாண்டோ கூறியுள்ளார். எக்ஸ்பிரஸ் செய்திச் சேவைக்கு அளித்துள்ள பிரத்தியேகப் பேட்டியிலேயே நிமால்கா பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், முகாம்களிலுள்ள மக்களுக்கு பற்தூரிகையும், சவர்க்காரமும் ஆடம்பரப் பொருட்களாக உள்ளதாகவும், முகாம்களுக்கு வரும்போது கொண்டு வந்த ஆடைகளையே தொடர்ந்தும் அணிந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்று தமிழர்கள் நடத்தப்படவில்லை. மாறாக போர்க்குற்றவாளிகள் போன்றே அவர்கள் நடத்தப்படுவதாகவும், பொதுமக்களே இந்த மாதிரியாக நடத்தப்படுவதென்றால் புலி உறுப்பினர்கள் மற்றும் அங்கவீனர்களின் நிலைமையைத் தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியாதுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலி உறுப்பினர்கள் விசேட தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். நிலக்கண்ணிவெடி ஆபத்தை எதிர்கொள்வதாலேயே இடம்பெயர்ந்த மக்களைப் பலவந்தமாகத் தங்கியிருக்கச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் நிமால்கா, கண்ணிவெடிகளில் சிக்காமல் தமிழ் மக்கள் முகாம்களுக்கு வரமுடியுமென்றால் அதே பாதையால் அவர்களால் ஏன் திரும்பிச் செல்ல முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் பகுதிகள் மீது ஷெல் வீச்சு அதிகரித்தமையும் பட்டினி நிலைமையுமே அகதி முகாம்களுக்கு அவர்கள் வருவதற்கான நிர்ப்பந்தமாக அமைந்ததாகவும் நிமால்கா குறிப்பிட்டுள்ளார். மதுரை கூடல் நகரிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்றிருந்த நிமால்கா இலங்கையிலுள்ள அகதி முகாம்களையும் கூடல் நகர் முகாமையும் ஒப்பிட்டுக் கூறுகையில்; கூடல் நகர் முகாமில் சுதந்திரமான நடமாட்டத்திற்கான காற்றைச் சுவாசிப்பதை உணர முடிவதாகவும் அது இலங்கையில் இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.
அகதிகள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவது கடினமானதென்றும் தமது படகுகள், விவசாய உபகரணங்கள், நிலங்கள் என்பனவற்றை மீளப் பெற்றுக்கொள்வது கடினமான விடயம் என்றும் நிமால்கா கூறியுள்ளார். அரசாங்கம் பலவந்தமாக அவை எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதாகத் தெரிவித்த அவர் புனர்வாழ்வுக்காக வெளிநாடுகள் கொடுத்த நிதியும் யுத்தத்தால் ஏற்பட்ட கடனுக்கு நஷ்ட ஈடாக வழங்குவதற்காக திசை திருப்பப்படக்கூடும் என்றும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன் கிடைக்காமல் போகும் என்றும் நிமால்கா பெர்னாண்டோ கூறியுள்ளார்.
அத்துடன், அவர் இந்தியாவில் இருந்து வெளிவரும் குமுதம் இதழுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் தெரிவித்த சில முக்கியமான கருத்துக்கள்:-
சிறுபான்மை சமூகத்தின் அடையாளங்களை அழிப்பதற்காகவே, தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ள முனைவதாக இலங்கை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இந்த முன்னெடுப்புகள் மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள பொது மக்கள், பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வரும் நிலையில், மகிந்த ராஜபக்ஷ தமிழர்களுக்கு உணவை வழங்குவாரே தவிர தீர்வை வழங்க மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து கிடைக்கின்ற பாரிய அழுத்தங்களே, இலங்கை தமிழர்களின் தலையெழுத்தை மாற்றும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு 13ம் திருத்த சட்ட அமுலாக்கம் ஒன்றே சிறந்த தீர்வாக அமையும் என தெரிவித்த அவர், எனினும் அதனை அரசாங்கம் அமுல்படுத்தும் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலி தொடர்பாளர்கள் என விசாரணை செய்துவரும் அரசாங்கம், இந்த விசாரணைகளில் குற்றமற்றவர்கள் என்று நிரூபணமானவர்களை விடுவித்துவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, தொலைக்காட்சிகளில் இராணுவத்தினர் காட்டிய சடலம் மற்றும் அடையாள அட்டை என்பன பிரபாகரனுடையது இல்லை என குறிப்பிட்டுள்ளார். பிரபாகரன் இறந்து விட்டமை உண்மை என இராணுவம் அறிவித்த போதும், அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.