August

August

யாழ். குடா இ. போ. ச டிப்போக்களுக்கு 7 பஸ்கள், உதிரிப்பாகங்கள் அனுப்பி வைப்பு

bus.jpgயாழ். மாவட்டத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை, காரைநகர், யாழ்ப்பாணம் டிப்போக்களுக்கு ஏழு பஸ் வண்டிகள், டயர்கள், மற்றும் உதிரிப் பாகங்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கை போக்குவரத்துச் சபையின் நாரஹேன்பிட்டிய தலைமைக் காரியாலயத்திலிருந்து ஏழு பஸ் வண்டிகளும் நேற்றுப் பகல் 12.30 க்கு புறப்பட்டுச் சென்றன. யாழ். குடாநாட்டிலுள்ள டிப்போக்களில் தற்போது உதிரிப்பாகங்கள் இன்றி டயர்கள், பட்டறிகள் இன்றி சேவையிலீடுபடுத்த முடியாமலுள்ள பஸ் வண்டிகளையும் சேவையிலீடுபடுத்த ஏதுவாக 36.9 மில்லியன் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்களை யாழ். நகருக்கு அனுப்பி வைக்க போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக நேற்றும் உதிரிப்பாகங்கள், டயர்கள், பற்றரிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

வடபகுதி போக்குவரத்துச் சபை பிரதம பிராந்திய முகாமையாளர் கே. கணேச பிள்ளை ஏழு பஸ் வண்டிகளையும் உதிரிப்பாகங்களையும் நேற்று போக்குவரத்துச் சபை தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். மூன்றாவது கட்டமாக அடுத்து வரும் சில வாரங்களில் வவுனியா, மன்னார் டிப்போக்களுக்குரிய மேலும் சில பஸ் வண்டிகளும் அனுப்பப்படவிருப்பதாகவும் கே. கணேசபிள்ளை தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் உள்ள இலங்கை போக்குவரத்துச் சபை தலைமை அலுவலகத்திலிருந்து பஸ் வண்டிகள் யாழ். நோக்கி புறப்படுவதற்கு முன்னதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண, இ. போ. ச. தலைவர் தம்மிக்க ஹேவாபத்திரன ஆகியோர் பஸ் வண்டிகளை பார்வையிட்டனர்.

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்ட டிப்போக்களிலிருந்து புதுப்பிக்கப்பட்ட பஸ் வண்டிகளே நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

7.6 ரிச்டர் அளவு அந்தமான் தீவு கடலில் 33 கி.மீ ஆழத்தில் நில நடுக்கம் – இலங்கை உட்பட ஐந்து கரையோர நாடுகளில் சுனாமி எச்சரிக்கை

திருகோண மலையிலிருந்து 1450 கிலோ மீட்டருக்கு அப்பால் அந்தமான் தீவுக்கு அருகில் கடலுக்கடியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் கரையோரப் பிரதேசங்களில் நேற்று அதிகாலை முதல் சில மணித்தியாலங்கள் அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது.

இலங்கை, இந்தியா, மியன்மார், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரையோரப் பிரதேசங்களிலேயே இந்த அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது. அந்தமான் தீவுக்கு அருகில் கடலில் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.6 ரிச்டர் அளவுக்கு நேற்று அதிகாலை 1.25 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்நில நடுக்கம் காரணமாக இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மியன்மார் ஆகிய ஐந்து நாடுகளும் சுனாமி பேரலை அச்சுறுத்தலை எதிர்கொண்டிருப்பதாக பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் உடனடியாக முன்னெச்சரிக்கை விடுத்தது.

இதேநேரம் இந்தியா, மியன்மார், தாய்லாந்து, இந்தோனேசியா போன்று நாடுகளின் கரையோரப் பிரதேசங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடலூர், சென்னை, குமரி, நாகபட்டினம் உட்பட பல பிரதேசங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடங்களும் அதிர்ந்துள்ளது டன் உயரமான இடங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்களும் கீழே விழுந்துள்ளன.

திருமலையிலிருந்து 1450 கிலோ மீட்டர் வடகிழக்காக நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது எமது நிலையத்தில் பதிவானதும். இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்த சில நிமிடங்களில் வடக்கு, கிழக்கு உட்பட்ட கரையோரப் பிரதேச மக்களுக்கு சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப் பட்டதாகவும் இலங்கை வானிலை அவதான நிலையப் பிரதிப் பணிப்பாளர் எஸ். ஏ. ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார். கரையோரப் பிரதேசங்களில் பொலிஸார் ஊடாக சுனாமி முன்னெச்சரிக்கை விடுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடலுக்கடியில் நில நடுக்கம் ஏற்பட்டிருப் பதால் அது சுனாமி பேரலைத் தாக்கமாக இருக்கும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்ட தால் இலங்கையின் வடக்கு, கிழக்கு உட்பட்ட கரையோர பிரதேசங்களிலும் ஏனைய நாடுகளின் காரையோர பிரதேசங்களிலும் வாழ் கின்ற மக்கள் மத்தியில் அல்லோலகல்லோல நிலை ஏற்பட்டது.  இந்த நிலைமை நேற்று காலை வரையும் சுமார் நான்கைந்து மணித்தியாலயங்கள் நீடித்தன. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோதும், மக்கள் தூக்கமின்றி பதற்றத்துடன் காணப்பட்டனர்.

கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் பாதுகாப்பு மிக்க உயரமான இடங் களை நோக்கி அலறி அடித்து ஓடிச் சென்றனர். 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்த பேரழிவே மக்களின் இவ்விழிப்பு நிலைக்குக் காரணம் என்று அவர் கூறினார். இருப்பினும் இந்நில நடுக்கத்தால் பாரிய சுனாமி பேரலை அனர்த்தம் ஏற்படவில்லை.

அதனால் நேற்று காலை 5.00 மணியளவில் சுனாமி முன்னெ ச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதாகவும் பிரதிப் பணிப்பாளர் ஜயசேகர கூறினார். இந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து தென்னிந்தியாவின் ஆந்திர முதல் குமரி வரையான கரையோரப் பிரதேச மீனவர்கள் பலர் வழமைக்கு மாறாக மீன்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்ப ட்டதை அவதானித்துள்ளனர்.

ஜப்பானிலும் நிலநடுக்கம்

இதேவேளை ஜப்பான் நாட்டின் ஷிசோகா கரையோரத்தின் நிலப்பகுதியில் நேற்று முன் தினம் இரவு 6.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நில நடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 14 மைல் ஆழத்தில் இருந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நில நடுக்கம் காரணமாக உயரமான கட்டடங்கள் காற்றில் தென்னை மரம் சாய்ந்து மீள்வது போன்று காட்சியளித்ததாக நேரில் பார்த்தோர் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் அச்சம் காரணமாக அலறியடித்தார்கள்.

இந்நிலநடுக்கம் இருதடவைகள் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 85 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஜப்பானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இலங்கை பாகிஸ்தான் இருபது 20 போட்டி இன்று

0308mahela.jpgஇலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது 20 சர்வதேச போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இதில் பாகிஸ்தான் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர் ஷஹீட் அப்ரிடி தலைவராக செயல்படவுள்ளார்.

அத்துடன் அண்மையில் நடந்த இருபது20 உலகக் கிண்ணத்தில் சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான் அணி, கடைசியக நடந்த இலங்கையுடனான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் இலகு வெற்றியீட்டியது. எனவே, இன்றைய தினம் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு கடும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறத்தில் சங்கக்கார தலைமையிலான இலங்கை அணி இருபது 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த பழியை தீர்ப்பதற்கு இன்று முயற்சிக்கும்.  நடந்து முடிந்த பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இலங்கை அணி இருபது20 போட்டியையும் இலகுவில் விட்டுக்கொடுக்காது என்பது நிச்சயம்.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இதுவரை 5 இருபது 20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் இலங்கை 2 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

சனத் ஜயசூரியவுடன் ஆரம்ப துடுப்பட்ட வீரராக மஹேல உடவத்த களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரே இருபது20 போட்டியாக நடைபெறும் ஆட்டம் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தொடர்ந்து தேர்தல்களை நடத்துவதால் மக்கள் மத்தியில் பெரும் சலிப்பு – வாக்களிப்பு வீத வீழ்ச்சிக்கு ஐ.தே.க. கூறும் காரணம்

அரசு தொடர்ந்து பகுதி பகுதியாக தேர்தல்களை நடத்திவருவதால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சலிப்புத் தன்மையினால் வாக்களிக்கும் வீதம் பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐ.தே.க., இதுவே பாரிய நிதி விரயத்துக்கும் காரணமாகியுள்ளதெனவும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்;

பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்தே நாம் தேர்தல்களை எதிர்கொண்டோம். அரசாங்கம் தனது அரச பலம் மற்றும் வளங்களை பாவித்து பிரசாரங்களை முன்னெடுத்தது. இது குறித்து நாம் தெரியப்படுத்தி வந்த நிலையில், தேர்தல் ஆணையாளரிடமும் முறையிட்டோம். இந்நிலையில், எமக்கு வாக்களித்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தேர்தல்களை நாம் நோக்குகின்ற போது வாக்களிப்பதில் மக்களின் ஆர்வம் குறைந்துள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக யாழ்ப்பாணத்தில் 80 வீதவாக்களிப்பு இடம்பெறாதுள்ள அதேசமயம், வவுனியாவில் 50 வீதமும் ஊவாவில் 30 முதல் 35 வீதமானவர்களும் வாக்களிக்க வில்லை.

இதற்கு காரணம், அரசாங்கம் தனது லாபத்துக்காக பகுதி பகுதியாக பிரித்து தேர்தலை நடத்தும் அதேவேளை, அரசவளங்கம் மற்றும் பலத்தினை பயன்படுத்துவதேயாகும். இதனாலேயே இத்தகைய தேர்தல் பெறுபேறுகளை அரசு பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முதல் பிரித்து பிரித்து நடத்தப்பட்ட தேர்தல்களில் வாக்களிக்காதோர் தொகை அதிகரித்திருப்பதை காணலாம். கடந்த ஒன்றரை வருடமாக அமைச்சர்கள், ஆலோசகர்கள் வேறு எந்த வேலையும் செய்யாது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் அதேசமயம், அரச வளங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒன்றாக நடத்தாது பிரித்து பிரித்து நடத்துவதாலும் பெருமளவு மக்கள் பணம் அநியாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே தென்மாகாணம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் இந்த அதிகாரத்தை பலப்படுத்தும் விளையாட்டை நிறுத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இனியாவது முன்வரவேண்டும். குறிப்பாக மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க முன்வர வேண்டும். மாகாண சபை ஆரம்பம் முதல் அக்காலப்பகுதியில் உள்ள அரசாங்கம் வெற்றி பெற்றதை நாம் காணலாம். 89 முதல் 94 வரையும் 94 முதல் 2002 வரையும் ஆட்சியில் உள்ள அரசாங்கம் மாகாண சபைகளை கைப்பற்றியது. இந்நிலையில், இம்முறை முடிவுகள் வழமையானதே. ஊவா மாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவராக உபாலி சமரவீரவை நியமிக்க கட்சிதீர்மானித்துள்ளது

வடக்கின் வசந்தம் செயலணியின் மீளாய்வுக் கூட்டம் இன்று

basil-raja.jpgவடக்கின் வசந்தம் செயலணியின் மீளாய்வுக் கூட்டம் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட பல முக்கியஸ்தர்கள்  கலந்து கொள்வர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பயணப்பாதுகாப்பு அனுமதி வழங்கும் நடைமுறையை இலகுபடுத்துவது பற்றி இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதையல் தோண்ட சென்ற 10 பேர் கைது

ரிடிகல காட்டுப்பகுதியிலுள்ள கீரியகஸ்வெவ பிரதேசத்தில் புதையல் தோண்டச் சென்ற பத்துப் பேரை நேற்று முன்தினம் இரவு ஹபரணைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :-

ஹபரணை பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் குறித்த இடத்துக்குச் சென்று பொலிஸ் குழு புதையல் தோண்டியோரையும் அதற்கு பயன்படுத்திய பொருட்கள் தீ. ஜி. றி. வி. 5808 இலக்கக் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கொழும்பு, மாத்தறைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை கெக்கிராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஸ்ரீநித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு – பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

musharap.jpgபாகிஸ் தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் அதிபராக முஷாரப் பதவி வகித்தபோது, 2007-ம் ஆண்டு அவசரகால நிலையை அமுல் செய்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகளை அவர் சிறையில் அடைத்தார். இவ்விதம் இரண்டு வாரகாலம் நீதிபதிகளை சிறையில் அடைத்தது அரசியல் சாசன விதிகளுக்கு எதிரானதாகும். எனவே அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு பாகிஸ்தான்  நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

முஷாரப் தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்லம் குமான் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அக்மல் ரஸா இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்

வெற்றி பெற்றோர் விபரம்: வர்த்தமானி அறிவிப்பு இவ்வாரம்

ஊவா மாகாண சபை மற்றும் யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளியிடப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி தெரிவித்தார்.

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பட்டியலை வழங்குமாறு பதுளை, மொனராகலை, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா அரச அதிபர்களிடம் கோரியுள்ளதாகவும், அதேவேளை, போனஸ் ஆசனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இந்த வாரம் வெளி யிடப்படவுள்ளது.

கே.பி.விவகாரம்; விசாரணை நடத்த மலேசியாவிடம் வலியுறுத்தல்

pathmanathan.jpg
விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதன் மலேசியாவில் எவ்வாறு தடுத்து வைக்கப்பட்டு, இலங்கைக்கு கொண்டு சென்றமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென புலிகளின் சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். செல்வராஜா பத்மநாதன் தொடர்பான விபரத்தை மலேசியா வெளியிட வேண்டுமென்றும் அவர் கேட்டுள்ளதாக ஏ.எவ்.பி. செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

செல்வராஜா பத்மநாதன் கோலாலம்பூரில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு பாங்கொக் ஊடாக இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த விடயம் குறித்து மலேசியரசு எந்தத் தகவலையும் கொண்டிருக்காவிடின் முழு விடயம் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டுமென நாம் வலியுறுத்துகிறோம் என்று ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

‘மொராக்கோ’ சூறாவளியால் மலைக் கிராமம் மண்ணில் புதைந்தது

பிலிப்பைன்ஸ், தாய்வான், சீனா ஆகிய நாடுகளில் கடந்த சில நாட்களாக வீசிய மொராக்கோ என்ற சூறாவளி காரணமாக தாய்வானில் உள்ள ஷியோலின் என்ற மலைக் கிராமம் முழுவதும்  மண்ணில் புதைந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை அங்கு மக்கள் அயர்ந்து தூங்கிகொண்டிருந்த போது திடீரென அக்கிராமமே மண்ணில் புதைந்துள்ளது.

இக்கிராமத்தில்  200 வீடுகளில் தங்கியிருந்த 600 பேரும் பலியானார்கள். தகவல் அறிந்ததும் அதிகாரிகளும்,  மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று சடலங்களை மீட்கும் பணியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.