“மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவெடுத்துவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இதன் காரணமாக, போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான தேசியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றது” என்று மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். பல்லின மக்களைக் கொண்ட இந்நாட்டில் தேசிய நல்லிணக்கத்தையும் தேசிய அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இதற்கு நிதியுதவி பெரிதும் அவசியமானது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைத்தல் என்ற தேசிய செயற்றிட்டம் தொடர்பிலான கருத்தரங்கை, கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் மனித உரிமைகள் அமைச்சு மற்றும் சர்வதேச தொழில் ஸ்தாபனம் ஆகியன இணைந்து வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்தன.இக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய அமைச்சர் தனது தலைமையுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதில் சர்வதேச தொழில் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டைன் ஸ்டெயர் மோஸ், சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன, நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் சுகத கம்லத் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த உள்ளூர் வெளியூர்ப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் அங்கு மேலும் கூறுகையில்,
“30 வருட காலமாக நாட்டில் புரையோடிப் போயிருந்த பயங்கரவாதம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் பயனாக இலட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டனர். தற்போது வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் போராளிகள் என இனம்காணப்பட்டுள்ளனர்.
இனங்காணப்படாத இன்னும் பலரும் அங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இதுவரை காலம் போராளிகளாக இருந்தவர்களுக்கு சமூக அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே எமது அமைச்சு, போராளிகளுக்கு புனர்வாழ்வு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எமது இத்திட்டத்திற்கு பல தரப்பு யோசனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரிவான கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலேயே போராளிகளை சமூக வாழ்வில் ஒருங்கிணைப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
மோதல் காரணங்களால் நாம் பல்வேறு அசௌகரியங்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுத்துள்ளோம். பொருளாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை, சுற்றுலாத்துறையில் மந்தநிலை என சகல துறைகளும் வீழ்ச்சி கண்டன. எனினும், தற்போது அவ்வாறான நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு. இதில் நாம் கூடிய கவனம் செலுத்தி வருகிறோம்.
கடந்த காலக் கசப்புணர்வுகள் மறக்கப்பட வேண்டும் என்பதுடன், மன்னிப்பு அளிப்பதும் அவசியமானது. அப்போது தான் நல்லதொரு சமுதாயத்தையும் சமாதானத்தையும் இங்கு காணமுடியும். இதன் மூலமே நம்பிக்கையையும் கட்டியெழுப்பக் கூடியதாக அமையும். முன்னாள் போராளிகளை சமூகத்தில் அந்தஸ்துள்ளவர்களாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கு அவர்களின் கல்வி அறிவு மேம்படுத்தப்படுதல் வேண்டும். அத்துடன், அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களையும் உறுதிசெய்வது இன்றியமையாதது.
இவ்வாறு பல திட்டங்களை அரசு கொண்டிருப்பதன் காரணம், மீண்டும் ஒரு முறை துப்பாக்கி ஏந்திய ஆயுதக் கலாசாரமும் பயங்கரவாதமும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும். இதன் பிரகாரமே, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.