பிரபாகரன் கொல்லப்பட்டதுடன் கொல்லப்பட்டதா எம்மினத்தின் போராட்டம்? ஈழத்தமிழனுக்கு விடுதலை கிடைத்து விட்டதா? இல்லையென்றால் எங்கே உங்கள் போராட்டங்கள்? தரைப்போர், கடல்போர், வான்போர், நட்சத்திரப்போர், கெரில்லாப்போர், அறப்போர் பனிப்போர் எனப் பலபோர்கள் உலகெங்கும் நடந்தும், எமது தேசத்தில் மட்டுமே மனநோயாளியின் தனிப்போர் நடந்து மிககேவலமான முறையில் முடிவடைந்தது. மிருகத்தின் பெயரைக் காவித்திரிந்ததால் ஆறாம் அறிவு வெளியே தாவிவிட்டதா? பங்கருக்குள் இருந்து வெளியே வந்திருந்தால் இன்னொரு உலகம் இருப்பது தெரிந்திருக்கும். எதிர்காலம் அறியும் திறன், தீர்க்கதரிசனம், மக்கள்நேயம், உலகஅரசியல், பொருளாதார மாற்றங்கள் என்பன பற்றிய ஏதாவது ஒரறிவிருந்திருந்தாலாவது குறைந்தபட்ச உடன்பாட்டுடன், எம்மக்களின் அழிவைக் குறைத்து தமிழீழம் தவிர்ந்த ஏதாவதொரு அரசியல் தீர்வுடன் எம்மக்களின் சுபீட்சமான வாழ்வுக்கான, விடுதலைக்கான அடுத்த படியில் கால்வைத்திருக்கலாம்.
எம்மக்களைக் காப்பாற்றுங்கள், போரை நிறுத்து, இனவழிப்பைச் செய்யாதே என்று ஐரோப்பிய வட அமெரிக்கத் தெருவெங்கும் கொடிகொண்டு கோசம் போட்டுத் திரிந்தோரே! உங்கள் கோரிக்கைகள் பிரபாகரன் இறந்ததுடன் நிறைவேறிவிட்டதா? நீங்கள் யாருக்காகப் போராடினீர்கள்? உங்கள் போராட்டங்கள் எல்லாம் பிரபாகரனைக் கொல்வதற்கென்றே ஆகிவிட்டதே. அறப்போர் மறப்போர் என்று உண்ணாவிரதங்கள், ஊர்வலங்கள் எனக் குறைப்போர் நடத்தினீர்கள் அறமழிந்து மக்கள் அகதியாக அவலப்படுகிறார்கள் எம்மண்ணில். எங்கே உங்கள் போராட்டம்?. மக்கள் மக்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்த மாற்றுக் கருத்தாளர்களே! மாறாக் கருத்தாளர்களே! அந்த மக்களுக்கான விடிவும், தீர்வும் கிடைத்ததா? ஏன் மௌனம்? போரை நிறுத்து மக்களைக் காப்பாற்று என்றீர்களே போரைவிட கொடுமையான பசி, பட்டினி, சித்திரவதைகளையல்லவா எம்மக்கள் நாள்தோறும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். தெருத்தெருவாய் கொடிபிடித்துக் கோசம் போட்டுப் பட்டினிப்போர் நடத்தியோரே! இன்று எம்மக்கள் பட்டினியுடன் முள்கம்பி வேலிகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். நீங்களோ பிரபாகரனுடன் தமிழினமே அழிந்துவிட்டது எனக் கருதி ஒரு பிணவாழ்வைத் தொடங்கிவிட்டீர்கள். போராட வேண்டிய காலம் இதுதான். நீங்கள் நடத்திய தெருப்போராட்டங்கள் பிரபாகரனையும், புலித்தலைமையையும் காப்பாற்றத்தான் நடத்தினீர்கள் என்பது வெளிச்சம் போட்டே காட்டப்பட்டுவிட்டது. உங்கள் பக்திவாதமும் பகட்டும் பொடிப்பொடியான பின்பு, எரியும் வீட்டில் பிடுங்கிய கொள்ளி மிச்சம் என்பதுபோல், மாடு செத்ததும் உண்ணி களர்வதுபோல் களன்று, பிரிந்து, சேர்த்த காசுகளைப் பங்குபோடுவதிலும், முதலீடு செய்வதிலும் கண்ணும் கருத்துமாக இருந்து அடிபடுகிறீர்கள். உங்கள் தலைமையைக் காக்க இவ்வளவுகாலமும் தம்முயிர் உடமைகளைக் கொடுத்த தியாகச்சின்னங்கள் முள்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டு, வதைப்பட்டு சித்திரவதைக்கப்பட்டுச் செத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கே உங்கள் போராட்டம்? எங்கே உங்கள் மக்கள்?
வெளிநாட்டு பங்கர்களுக்குள் ஒளித்திருந்த பலர் சிறு சிறு குழுக்களாகப் புலிவழியே பணம் பறிக்கக் கிளம்பியிருக்கிறார்கள். புலிகளோ உடைத்த உண்டியலை பங்குபோடுவதிலும், மீண்டும் புதிதாக உண்டியல் கொண்டு திரிவதற்காக அதாவது புலம்பெயர் தமிழர்களிடம் மீதமிருப்பதையும் பிடுங்குவதற்காக தலைமையைப் பங்கு போடுவதிலும் அக்கறை காட்டுகிறார்கள். மாற்றுக்கருத்தாளர்கள் பலர் புலிகள் பாணியிலே வன்னிமக்களைச் சாட்டிக் கொண்டு உண்டியலுடன் திரிகிறார்கள். இப்படி முன்பு சேர்த்த பணங்கள் போய் சேரவேண்டியவர்களுக்கு சேர்ந்ததாகத் தெரியவில்லை. இங்கே எல்லா மாற்றுக்கருத்தாளர்களையும் குறிப்பிடவில்லை. நீங்கள் எவரும் புலிகளை விடச்சிறந்தவர்கள் என்று கூறி விட முடியாது. புலியும் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நிதிதிரட்ட உண்டியலுடன் வந்தார்கள். இதன் மறுவடிவம்தான் நீங்கள் இன்று மக்களிடம் கொண்டு வரும், கொண்டுவரவிருக்கும் உண்டியல்கள். சிலமாறாற்றுக்கருத்தாளர்களின் உதவிகள் உரிய இடத்தில் போய் சேர்ந்தாலும். போகும் வழியில் தேன் எடுக்கப்போறவன் விரல் நக்காதிருப்பானா? என்ற மாதிரியாகி விடுகிறது.
கோடிக்கணக்கில் மக்கள் கொட்டிக் கொடுத்துப் போராட்டம் கோட்டை விடப்பட்ட பின் இன்று மக்களிடையே இருப்பது என்ன? வங்கியில் வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டமுடியாது தவிக்கிறார்கள் புலம்பெயர்ந்தோர். உலகெங்கும் உள்ள அரசுசாரா நிறுவனங்களும், அரசு சார்நிறுவனங்களும் அகதிகளாய் அல்லலுறும் எம் வன்னிமக்களுக்கு உதவிசெய்யத் தயாராக உள்ளார்கள். இவர்களையும் வெளிநாட்டு ஊடகங்களையும் உள்ளே அனுப்ப என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? போராட்டங்கள் எங்கே நடத்தப்பட்டன? என்ன அழுத்தங்கள் உயர்மட்டங்களில் பிரயோகிக்கப்பட்டன? வரிசைப்படுத்திச் சொல்லுங்கள் பார்க்கலாம்? அந்த வன்னிமக்கள் அன்று புலிகளின் பாதுகாப்புக்குக் கேடயமாக இருந்தார்கள். இன்று அரசின் பணப்பைக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த வாய்பேசா ஜீவன்களை என்னசெய்யப் போகிறீர்கள். இவர்களுக்கான போராட்டம் எங்கே? கூட்டம்கூடி உண்டியல் கொண்டு திரிந்து யாருடைய பணப்பைகளை நிரப்ப நிற்கிறீர்கள்? தோல்வியை விட அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு முழுமையான சரணாகதியடைவதால் எம்மினத்தை நாமே எதிரியிடம் அடைவு வைக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.
புலிகள், மாஜிப்புலிகள், பிரிந்தபுலிகள், ஆயுதம் தாங்கிய தாங்காத தமிழ் அரசியல் கட்சிகள், மாற்றுக்கருத்தாளர்களே! இன்று வன்னிமக்களுக்காக இணைந்து வெளிநாட்டு உதவிநிறுவனங்களையும் ஊடகங்களையும் வன்னிக்கு அனுப்புமாறு போராடுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள், தயங்குகிறீர்கள்?. யார் தலைமைதாங்குவது என்று பிரச்சனையா? தனிமனித பக்தியை விட்டுவிட்டு எல்லோருமே தலைமை தாங்குங்கள். இன்று நீங்கள் தனிமனிதராகவோ, குழுக்களாவோ கொண்டு திரியும் உண்டியல்கள் அரசுக்கும், அங்குள்ள ஆயுதம்தாங்கிய குழுக்களுக்கும், அநியாயக்காரர்களுக்கும் நீங்கள் எடுத்துக் கொடுக்கும் தலையணையாகும். வெளிநாட்டு அழுத்தங்களினூடாக அவர்கள் உள்நுளையும் போதுதான் அங்குள்ள அநியாயங்கள், அஜாரகங்கள், அடக்குமுறைகள், போரின் வடுக்கள், இனவழிப்புத்தடயங்கள், பாலியற்பலாற்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் என அனைத்தும் வெளிவரும். ஏன் நாயணநிதியம் கொடுத்த உதவிப்பணங்கூடச் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்ற கண்காணிப்பும் இருக்கும். வெளிநாட்டு அரசுசார்ந்த சாரா நிறுவனங்கள் வன்னியில் நின்றால் மட்டுமே உதவிப்பணங்கள் சரியான முறையில் குறைந்தது 20 சதவீதமாவது வன்னிமக்களுக்குக் கிடைக்கும்.
அகதிகளை இப்படி சிறைப்பிடித்து வைத்திருப்பதினூடாகப் பெறும் வெளிநாட்டு உதவிகளினால் தம்குடும்பத்துப் பணப்பைகளை நிரப்பவதுடன், போர்தடையங்களை தடையங்களை மறைக்கவும், சர்வதேச நீதிமன்றின் நிற்கும் நிலையை தவிர்க்கவும், போரின் செலவுகளை சரிக்கட்டலாம் என்பதை அரசு நன்கறியும். வன்னி அகதிகளை வெளிநாடு போகவிடும் அரசு ஏன் அவர்களை தத்தமது வாழ்விடங்களுக்குப் போக அனுமதிக்கவில்லை. இதனால் இலாபம் பெறுபவர்கள் பலர். வெளிநாடு போகும் தமிழன் போனால் போனதுதான் என்பது தெரிந்ததே. வெளிநாடு போவதற்கு மற்றைய இயக்கங்கள், அரசபடைகள் அடிபட்ட அகதிகளிடமே பணத்தை வாங்கியபின் கொண்டு போய் விடுகிறார்கள் இப்பணங்களின் ஒருபகுதி இராஜபக்சவின் கூட்டுக்குப் போய்சேருகிறது. இப்பணங்கள் புலம்பெயர் தமிழர்களால் அனுப்பப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. சுருங்கச் சொல்லின் தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதிலும், அழிவதிலும் அரச கூட்டின் பணப்பை நிரம்புவதிலும் அரசு அக்கறையாக இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ இவர்களுக்கு தலையணை எடுத்து வைத்துத் தாலாட்டுகிறது புலம்(ன்) பெயர் உண்டியல்கள்.
அமெரிக்கா வரும் என்று பிரபாகரன் இருந்தாராம், அவர்கள் ஏமாற்றி விட்டார்களாம். புதுக்கதைகள் புறப்படுகின்றன. புலிகள் அமெரிக்காவுடனும் போருக்கு நின்றவர்கள்தானே. நல்லபிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு நாசமாய் போனதுதான் முடிவு. அமெரிக்காவின் நிபந்தனைக்கு இணங்கினால்தான் நாணயநிதியத்துக் கடன் கிடைக்கும் எனப்பரப்புரை விட்ட அமெரிக்கா அடுத்த நாளே இலங்கை கேட்ட 190 கோடி அமெரிக்க டொலர்களுக்கு மேலாக 250 கோடியாக கொடுத்துள்ளது. இதுவே அமெரிக்காவின் வழமையான நாடகம். பாலஸ்தீனருக்காய் கண்ணீர் விட்டுக்கொண்டு இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்காவை நம்பிய பிரபாகரனின் அரசியல் தலைமையை என்ன என்பது. மக்களை நம்பிப் போராடவக்கில்லாதவர் அமெரிக்காவை நம்பிப் போராடினாராம். இது திருநாவுக்கரசுவின் திருகுதாளமா? அமெரிக்கர்களைக் கொண்டுவந்து புலிகளுக்குக் கேடயமாக வைத்திருக்கலாமே. இறந்தவர்களுக்கும் நோபல் பரிசு கொடுக்கிறார்களாம். பிரபாகரனுக்கு கொடுங்கள் என்று திருநாவுக்கரசு முன்மொழிகிறாரே? அமெரிக்க சார்வானவர்களுக்குத்தானே அமைதிக்கான நோபல்பரிசும் கிடைக்கிறது.
குறிப்பிட்ட ஊர், சாதி, மதத்தவர்கள் தம்மவர்க்காக உண்டியலுடன் திரிகிறார்கள். முக்கியமாக சிலஊரைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாட்டில் அதிகமாக உள்ளார்கள். அப்படியானால் மற்றக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? மற்றக் கிராமத்தவர்களும் உண்டியல் கொண்டு திரியலாமே என்று கேட்பது கேட்கிறது. அதற்கு போதிய மக்கள் வெளிநாட்டில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இது பிரதேசவாதத்தை ஊக்குவிப்பதாகவும் அமையும். பிரதேசவாதம் கொண்டு ஐரோப்பா வடஅமெரிக்காவில் பல எண்ணற்ற கொலைகள் நடந்தேறின. மதங்களினூடு உதவிகள் சேரும்போது மதமாற்றம் தலைதூக்குகிறது. மதம் என்பது இருக்கிறதோ இல்லையோ என்பதற்கு அப்பால் மனிதனின் நம்பிக்கை என்பது அவனது அடிப்படை உரிமை என்பதை யாரும் மறக்கக்கூடாது. ஒருவன் தான் மாக்ஸ்சிட் என்று எப்படி நம்ப உரிமை உண்டோ அதேயளவு உரிமை தான் என்ன மதத்தைத் தழுவுகிறேன் என்பதிலும் உண்டு. சாதி என்பது அடியுடன் தவிர்க்க, அழிக்கப்படவேண்டிய ஒன்று. ஆதலால் பிரிவுகள் எதுவாகவும் இருக்கட்டும் உடனடியாக அந்த பாவப்பட்ட வன்னிமக்களுக்காக புலம்பெயர் மக்களே போராட்டத்தை ஆரம்பியுங்கள். உங்களின் வரிப்பணத்திலும் தான் அரசுசார்- சாரா அமைப்புகள் இங்கு இயங்குகின்றன. இவ்வுதவிகள் எம்மக்களை அடையாவிட்டால் அது வேறு எங்கோ ஒருநாட்டில் கொடுக்கப்படும். அதை ஏன் எம்மக்கள் பெறக்கூடாது. ஒன்றாய் கூடி, இணைந்து நாம் வாழும் நாடுகளின் கதவுகளைத் தட்டுவோம். வன்னிச்சிறை உடையும். எப்போ? எப்போ??
அகதிகளைக் கருத்திற் கொண்டு அரசிடம் போனவர்கள் அவர்கள் சொன்னதைக் கேட்டு பெட்டிப்பாம்பாய் அடங்கி சலுகைகளைப் பெற்றுத் திரும்பி வந்துவிடுகிறார்கள். மனிதவுரிமை சாசனத்தில் (கொன்வென்சனில்) இப்படியாக அகதிகளை நடத்த முடியாது என்பது அரசுக்குத் தெரியும். ஐ.நா வுக்கும் தெரியும், ஆனால் ஐ.நா என்பது ஐக்கியமற்ற நாக்காக அல்லவா இருக்கிறது. இவ்வம்மணங்களை மறைத்துக் கொண்டு அமைதியாக இருப்பதற்குக் காரணம் என்ன? எம்மக்களின் மேல் பிரயோகிக்கப்படும் பலாற்காரங்களையும் சித்திரவதைகளையும் வெளிநாடுகளில் அம்பலப்படுத்தவும் உயர்மட்ட அழுத்தங்களை ஏற்படுத்துவதினூடாக இலங்கை அரசின் சித்திரவதைச் சிறைக்கூடமாக இருக்கும் வன்னி முகாங்களைத் திறப்பதற்கான போராட்டங்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும். இதைவிட்டுவிட்டு யேசு சீவிக்கிறார் என்பதுபோல் பிரபாகரன் இருக்கிறார், கே.பி புல(ன்)பெயர்ந்த தமிழ்ஈழம், அகதிகளுக்கு உதவி, கல்வி என மாற்றுக்கருத்தும் மாறாக்கருத்தும்கொண்டு உண்டியலுடன் ஓடித்திரியாது, அங்குள்ள மக்களை கருத்திற் கொண்டு பொதுப் போராட்டங்களை இங்கே ஆரம்பியுங்கள். உங்கள் உண்டியல்களால் அங்குள்ள வயிறுகள் நிறையப்போவதில்லை. இந்த உண்டியல்களால் உங்கள் உண்டிகள்தான் நிரப்பப்படுகிதோ யார் அறிவார்? வெளிநாட்டு பொது நிறுவனங்கள் உள்நுளையும் போதுதான் சிறைப்பட்ட மக்களின் நிலை, உணர்வுகள், தேவைகள் என்பன எமக்கும் என்பது எமக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும், மனிதஉரிமை அமைப்புகளுக்கும் நீதியின் கண்களுக்கும் தெரியவரும். அங்குள்ள மக்களின் தேவைகளும் தீர்க்கப்படும். எம்மக்களுக்கான போராட்டத்தை புலத்தில் இருந்தும் நாம் தொடரலாம், தொடரவேண்டும். இப்படியான போராட்டங்களை உருவாக்கி நடத்துவதனூடாக மாற்றுக்கருத்துக்களும் மாறாக்கருத்துக்களும் ஒன்றினைந்து மக்கள் கருத்தாகப் பிரணமிக்கும் வாய்ப்புகள் உண்டு. வெளிநாடுகளிலுள்ள அரசியல், பொதுநல, அரசுசார்ந்த, அரசுசாரா அமைப்புக்கள், தொண்டர் நிறுவனங்கள், ஐ.நா, மனிதநேய அமைப்புகள் என எல்லாக் கதவுகளையும் ஒன்று சேர்ந்து தட்டுங்கள். எம்மக்கள் சிறைப்பட்டிருக்கும் வன்னிச் சிறைக்கதவுகள் உடையட்டும். செய்வீர்களா? எப்போ? வன்னிஅகதிகள் மரணவீட்டிற்குப் பின்பா?
ஆயுதப்போராட்டம் அடக்கப்பட்டு, பிரபாகரனும் கொல்லப்பட்டு, புலிகள் பிரிக்கப்பட்டு, வன்னி மக்கள் அகதிச்சிறையில் அடைக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஓடிவிட்டன. வன்னிமக்களுக்காக நாங்கள் ஒவ்வொருவரும் எடுத்த முன்னெடுப்புக்கள் என்ன? வரிசைப்படுத்துங்கள்? அன்று புலிகளும் அதன் சகோதர அமைப்பான ரிஆர்ஓ வும் கொண்டு ஓடித்திரிந்த உண்டியல்களை சின்னதாக உருமாற்றி மற்றவர்கள் அனைவரும் கொண்டோடித் திரிகிறார்கள். ஆரம்பத்தில் புலிகளும் சின்ன உண்டியலுடன்தான் ஓடித்திரிந்தார்கள். உண்டியல் கொண்டு உங்கள் உண்டிகளை நிரப்புவதை விட்டுவிட்டு, வன்னி மக்களுக்கு போதியளவு உண்டி கொடுக்க வெளிநாட்டுதவிகளை அனுப்ப உங்கள் போராட்டங்களை முன்வையுங்கள். அமைதியாக அசந்து தூங்கும் புலமும் புலத்து அரசுசின் காதுகளும் கதவுகளும் அதிரட்டும். எமது மூன்றாம் உலகநாடுகளின் பாட்டன் பீட்டனின் பணத்திலும் உடமைகளிலும் தான் ஐரோபியர்கள் கோட்டை கட்டியவர்கள். எம்மினத்தின் அழிவுக்கு வழிகோலியவர்களில் ஐரோப்பியர்களுக்கும் பங்குண்டு. எம்பங்காளிகளை நாவறுக்கக் கேட்பதும், அவர்களின் அமைதியைக் கலைத்து துலைத்து எமது உரிமைகளை நிலைநாட்ட முயற்சிப்பதில் எந்தத்தவறும் கிடையாது. இன்னும் மாறி மாறாக்கருத்து என்றில்லாது மக்கள் கருத்துக்காக எம்கரங்களை எம்வன்னி மக்களுக்காக உயர்த்துவோமா?