மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களினது பரீட்சை கட்டணங்களை இனிவரும் காலங்களில் மாகாண சபை மூலம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மாகாண முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இந்நடவடிக்கையின் பொருட்டு மத்திய மாகாணத்திலுள்ள 1400 பாடசாலைகளினது மாணவர்கள் நன்மையடையவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார். மத்திய மாகாண சபையின் 5 வது அமர்வின் போது அமைச்சர்களினது அறிவித்தல் தொடர்பான உரையாடலின் போது முதலமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். மத்திய மாகாண சபை சபையின் தலைவர் சாலிய பண்டார திசாநாயக்க தலைமையில் கடந்த 4ம் திகதி பல்லேகலையில் உள்ள மாகாண சபை மண்டபத்தில் கூடியது.
அமைச்சர் தொடர்ந்து அங்கு கூறுகையில்:- மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களினது பெற்றோர்களின் சுமையை ஓரளவேனும் குறைக்கும் வகையிலும் இன்னும் பல்வேறு நிலைமைகளின் நிமித்தம் இவ்வாறான நடவடிக்கையொன்றை மேற்கொள்ள தான் தீர்மானித்திருப்பதாக அவர் கூறினார்.
அரசியல் காலங்களில் வெளியிடப்படும் போஸ்டர் விவகாரங்களைப் போன்று பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு வெளியிட முடியாது. அரசியல் வேறு பாடசாலை, கல்வி முறைமை வேறு. தேர்தல் காலங்களில் வெளியிடப்படும் போஸ்டர்களில் எவ்வளவு எண்ணிக்கையான தொகைகள் அச்சடிக்கப்படுகின்றதோ அதற்காக செலுத்தப்படும் கட்டணங்களும் குறைக்கப்படுகின்றது.
அவ்வாறு நாம் பரீட்சை வினாத்தாள்களை அச்சடித்து வெளியிட முடியாது. மாறாக மாணவர்களினது பாடம் மற்றும் எண்ணிக்கைகளைப் பொறுத்து வரையறுக்கப்பட்ட ஒரு எண்ணிக்கையிலே நாம் இதனை மேற்கொள்ள வேண்டியுள்ளது.