08

08

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியும் வவுனியாவில் ரிஎன்எயும் வெற்றி

election000.jpg யாழ்ப்பாணத்தில் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியாகவும் தேர்தல் நடைபெற்ற போதிலும் வாக்களித்தவர்களின் பங்களிப்பு குறைவானதாகவே காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியினர் முழுமையான வெற்றி பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படியும் அமைதியாகவும் நடைபெற்றதாகவும் வவுனியாவில் ரிஎன்ஏ 148 வாக்குகளால் 7ஆசனங்களையும், புளொட் 3 ஆசனங்களையும், இதர கட்சிகள் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

வவுனியாவில் அளிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளில் ரிஎன்ஏ 86 வாக்குகளையும், புளொட் 65 வாக்குகளையும், அரசஆதரவு கட்சிகளின் கூட்டணி 25 வாக்குகளையும், முஸ்லீம் காங்கிரஸ் 2 வாக்குகளையும் பெற்றிருந்தது தெரிந்ததே. இதே விகிதாசாரத்தில் மக்கள் வாக்களித்துள்ளதும்; மக்கள் அரசை திட்டவட்டமாக புறம்தள்ளியே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளததுமாக மக்கள் பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

Jaffna Municipal Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     United People’s Freedom Alliance  10602      50.67%      13
 
     Ilankai Tamil Arasu Kachchi  8008      38.28%     8
 
     Independent Group 1  1175       5.62%      1
 
     Tamil United Liberation Front  1007       4.81%     1
 
     United National Party  83       0.40%      0
 
     Independent Group 2     47   0.22%      0
 
Valid 20,922     93.90%
Rejected 1,358        6.10%
Polled 22,280        0.00%
Electors      100,417

Vavuniya Urban Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     Ilankai Tamil Arasu Kachchi    4279     34.81%      5 *
 
     Democratic People’s Liberation Front     4136     33.65%     3
 
     United People’s Freedom Alliance     3045    24.77%      2
 
     Sri Lanka Muslim Congress      587     4.78%         1
 
     United National Party     228     1.85% 0
 
     Sri Lanka Progressive Front  10     0.08%     0
 
     Independent Group 1      6        0.05% 0
 
     Independent Group 3     1       0.01% 0
 
     Independent Group 2      0     0.00% 0
 
Valid 12,292       95.66%
Rejected 558       4.34%
Polled 12,850      0.00%
Electors 24,626

ராஜீவ் படுகொலை செய்யப்படவிருந்தமை பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும்? – இந்திய ஊடகம் ஊகம்

pathmanathan.jpgஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படவிருந்தமை தொடர்பாக விடுதலைப்புலிகளின் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தலைவர் செல்வராஜா பத்மநாதனுக்கு முன்கூட்டியே தெரியும் எனவும் விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இந்திய தலைமைத்துவத்தை விரைவில் இலக்கு வைப்பார்கள் என 1990 நவம்பரில் செல்வராஜா பத்மநாதன் அல்லது கே.பி. தமிழ் நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர் ஒருவருக்குத் தெரிவித்ததாகவும் ராஜீவ்காந்தியின் பெயரை அவர் குறிப்பிட்டிருக்கவில்லை எனவும் “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை நேற்று தெரிவித்திருக்கிறது.

1991 மே 21 இல் சென்னைக்கருகே தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது புலிகளின் பெண் தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருந்தார். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பேயே வெளிநாட்டிலிருந்து தொலைபேசியூடாக இந்தத் தகவலை கே.பி. தெரிவித்திருந்ததாக எம்.ஆர்.நாராயண் சுவாமி “நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் எழுதியுள்ளார்.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கே.பி. மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன், அந்தக் கொலையில் அவர் நேரடியாக தொடர்புபட்டிருக்கவில்லை. காந்தி படுகொலை தொடர்பான பாரிய சதியை தற்போதும் விசாரணை செய்து கொண்டு வரும் பல் ஒழுங்கமைப்பு கண்காணிப்பு அதிகார சபையின் கண்களுக்கு இவர் ஒரு சந்தேக நபராக மட்டுமேயுள்ளார்.

படுகொலை தொடர்பாக முன்கூட்டியே கே.பி. அறிந்திருந்தமை குறித்து இந்திய பாதுகாப்பு முகவரமைப்புகள் கவனம் செலுத்தியிருந்தன. காந்தியின் படுகொலை தொடர்பாக ரகசியமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் எவ்வாறு கே.பி.க்குத் தெரியவந்தது என்பது பற்றிய கேள்விகள் எழுந்திருந்தன.

விடுதலைப் புலிகளின் சர்வதேச ஆயுதக் கொள்வனவின் முக்கியஸ்தராக கே.பி.யிருந்ததால் அவரில் புலிகள் முழுமையாக தங்கியிருக்க வேண்டியதாக இருந்தது என்று ஒரு தர்க்க ரீதியான விளக்கம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கடந்த மேயில் மரணமடைந்ததையடுத்து புலிகளின் தலைவராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டிருந்தார். ராஜீவ்காந்தியின் கொலையால் சர்வதேச ரீதயிலான ஆயுதக் கொள்வனவு மற்றும் சர்வதேச வலைப்பின்னல் அமைப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி முன்கூட்டியே கே.பி. அந்த விடயம் குறித்து அறிந்திருக்கக் கூடிய தேவையிருப்பதாக புலிகள் கருதியிருக்கக் கூடும்.

ராஜீவ்காந்தியின் படுகொலை தொடர்பாக முன் கூட்டியே அறிந்திருந்த புலிகளின் மற்றொரு சிரேஷ்ட உறுப்பினர் திருச்சி சாந்தனாகும். அவர் 1990 1991 காலப்பகுதியில் தமிழ் நாட்டில் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தவர்.

படுகொலையில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள், சிங்கப்பூர் கிரனேற் என்பவை தொடர்பாக கே.பி.யை விசாரணை செய்வதன் மூலம் இந்தியாவிற்கு அதிகளவு பயனுள்ள தகவல்கள் கிடைக்கக் கூடும். எவ்வாறாயினும் கே.பி.யை விசாரணை செய்வது தொடர்பாக தனது பாதுகாப்பு முகவர் அமைப்புகளிடம் கேட்பதற்கு இந்தியா முடிவு செய்யுமானால் அந்த இலக்கிற்குத் தேர்ந்தெடுப்பவர்கள் விடுதலைப் புலிகளின் விவகாரம் பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் தாழ்ந்த மட்டத்திலான அதிகாரிகள் குழுவொன்று உள்ளது. அக்குழு சேவையாற்றிக் கொண்டும் இருக்கிறது. ஓய்வு பெற்றும் உள்ளது. அவர்கள் விடுதலைப் புலிகள் தொடர்பாக பல தசாப்த காலம் தொடர்பாக பல விடயங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், கடந்த காலத்தில் தகுதிவாய்ந்த பலர் அடிக்கடி ஓரங்கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. 1983 இலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டியெழுப்புவதற்கு கே.பி. ஆற்றிய பங்களிப்பின் சிறிய பகுதியாகவே காந்தி கொலை தொடர்பாக அவரின் தொடர்பு காணப்படுகின்றது.

பிரபாகரன் இல்லாமல் விடுதலைப் புலிகள் இல்லை. கே.பி. ஒருபோதும் இராணுவ பயிற்சி பெற்றவர் அல்ல. அவர் இந்தியாவிலிருந்த போது 1984 இல் புலிகள் மட்டத்தில் யுத்த உபகரணங்களை உலகளாவிய ரீதியில் பெற்று அவற்றைக் கொண்டு செல்வதற்கு இரகசியக் குழுவொன்றை உருவாக்க பிரபாகரன் தீர்மானித்திருந்தார். அந்த வேலைக்கு கே.பி. தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அந்தத் தருணத்தில் கே.பி. வளர்ச்சியடைந்தார். மோசடி மற்றும் மறைவாகச் செயற்படுதல் என்பனவற்றில் இயல்பாகவே ஆற்றலுள்ளவராக இருந்த இந்த மனிதர் விரைவில் பல்தரப்பு அடையாளத்துவங்கள் கொண்டவராக தன்னை ஏற்படுத்திக் கொண்டார். கடவுச் சீட்டுகளையும் (இந்தியா உட்பட) பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர் படிப்படியாக புலிகளின் ஆயுதக் கொள்வனவு பிரிவைக் கட்டியெழுப்பினார். பல கம்பனிகளை உருவாக்கினார். (எஜமானன் அவரே) பல நாடுகளில் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன.

தங்கம், போதைவஸ்து, கடத்தல் நடவடிக்கைகளுக்காக இந்தக் கம்பனிகள் உருவாக்கப்பட்டிருந்தன. அந்தப் பணத்தைக் கொண்டு யுத்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு அவர் பயன்படுத்தினார். 1980 களில் இந்தியாவில் தமிழ் நாட்டில் பாற்பண்ணை ஒன்றை இரகசியமான முறையில் நடத்தி வந்தார். அத்துடன், விடுதலைப் புலிகளுக்காக இரகசிய கப்பல் போக்குவரத்துக் கட்டமைப்பையும் அவர் உருவாக்கியிருந்தார்.

அதன் மூலம் ஆயுதம் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன. முற்றிலும் இரகசியமான முறையில் அவர் இயங்கி வந்தார். பிரபாகரனுக்கு மட்டுமே விடயங்களைத் தெரிவித்து வந்தார். கே.பி.யின் மூலம் விடுதலைப் புலிகள் ஆயிரணக்கணக்கான தொன்கள் ஆயுதங்களைப் பெற்றது, நவீன பாதுகாப்பு நிலைமைகள், தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், சினைப்பர் துப்பாக்கிகள், மோட்டார்கள், ஆர்.பி.ஜி.க்கள், இரவில் பார்ப்பதற்கான உபகரணங்கள், கண்டு பிடிப்புக் கருவிகள், கண்ணாடி விலைப் படகுகள், நவீன வானொலி, கம்பியில்லா தொலைத் தொடர்புகள் போன்ற பல முன்னேற்றகரமான பாதுகாப்பு முறைமைகளும் இவற்றில் உள்ளடங்கும்.

கடந்த சில வருடங்களாக மலேசியாவிலே இவர் அறியப்பட்டவராக இருந்தார். 19801990 களில் இவர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். பல்வேறு அடையாளங்களுடன் இவர் லெபனான், தாய்லாந்து கம்போடியா கம்போடியா எல்லை, பிரான்ஸ், பிரிட்டன், சுவீடன், கிறீஸ், சைப்பிரஸ், கொங்கொங், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மியன்மார், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார்.

2006 இல் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிரிட்டனில் மரணமடைந்த போது, கே.பி. அங்கிருந்தார். விடுதலைப்புலிகள் தமது முதலாவது சிறிய ரக விமானத்தைப் பெற்றுக் கொண்டமை கே.பி.யின் மூலமேயாகும். எவ்வாறாயினும் கே.பி.யின் படிப்படியான வளர்ச்சி புலிகளுக்குள் பொறாமையை ஏற்படுத்தியது.

2003 தொடக்கம் பிரபாகரன் அவரை ஓரங்கட்டியிருந்தார். அவரின் இடத்திற்கு தனது மற்றொரு விசுவாசியான காஸ்ட்ரோவை கொண்டு வந்தார். ஆனால், கே.பி.க்குள்ள இயற்கையான ஆற்றல்களுக்கு அவர் பொருத்தமற்றவராக இருக்கவில்லை. ஆயினும் புலிகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்ததையடுத்து பிரபாகரன் நிலைமையை உணர்ந்து கே.பி.யை மீள பணிகளில் ஈடுபடுத்தினார். காலம் மிகவும் கடந்து விட்டதாக அமைந்தது.

கே.பி.யின் சிறகுகள் 6 வருடங்களுக்கு முன்னர் வெட்டப்படாதிருந்திருக்குமானால் பிரபாகரன் இப்போதும் இருந்திருக்கக் கூடும் என்று புலிகளின் அவதானிகள் பலர் நம்புகின்றனர்.

கனடிய அமைச்சர் இலங்கை வருகை

கனடாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான அமைச்சர் பிவேர்லே ஜே.ஒடா இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

கனடாவின் அபிவிருத்தித் திட்ட பங்காளிகளை சந்திப்பதற்காகவும் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்யவுமே அவர் வருகைதந்திருப்பதாகக் கனடிய ஊடகங்கள் தெரிவித்தன.

கனடிய ஊடகவியலாளர்களையும் ஒடா நேற்று வெள்ளிக்கிழமை சந்திக்கவிருந்தார்

“பிரபாகரனின் தொலைபேசியே பத்மநாதன் பிடிபட உதவியது’

pathmanathan.jpgவிடு தலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியே புலிகளின் புதிய தலைவர் செல்வராஜா பத்மநாதனை இலங்கை வெற்றிகரமான முறையில் கைது செய்வதற்கு வழிவகுத்ததாக ராய்ட்டர் செய்திச்சேவை தெரிவித்தது. மே 18 இல் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பிரபாகரன் மரணமடைந்த பின் அவரது சடலத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட செய்மதி தொலைபேசியை இலங்கையின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.

பிரிவினைவாதப் புலிகளையும் அவர்களில் மீதமாக இருப்போரையும் அழிப்பதற்கான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் போராட்டத்திற்கு புலிகளின் புதிய தலைவரான செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளமை அண்மையகால பரிசு என்று ராய்ட்டர் செய்திச்சேவை நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தது. கொழும்பில் பத்மநாதனிடம் விசாரணை நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூன்று குழுக்கள் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பத்மநாதனை தேடிச் செல்வதற்காக அனுப்பப்பட்டதாகவும் அவரைக் கைது செய்வதற்காக அல்ல என்றும் தம்மை இனங்காட்டிக்கொள்ள விரும்பாத சிரேஷ்ட இராணுவ வட்டாரங்கள் மூன்று தெரிவித்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு அவரைக் கொண்டு வரவேண்டுமென நாம் விரும்பியிருக்கவில்லை. ஆனால், அவ்வாறு செய்வதற்கு சூழ்நிலைகள் எமக்கு இடமளிக்கவில்லை என்று தம்மை அடையாளம் காட்ட விரும்பாத இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவர் ராய்ட்டருக்குத் தெரிவித்துள்ளார். உள்ளூர் புலனாய்வுத்துறை மற்றும் ஒத்துழைப்பாக செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பிரசன்னம் ஆகியவை அந்தத் திட்டத்தை நடைமுறைச்சாத்தியமற்றதாக்கியதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தாய்லாந்தில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் எந்த நாட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் கூற மறுத்துள்ளனர். அதேசமயம், தமது நாடுகளில் வைத்து பத்மநாதன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக தாய்லாந்து, மலேசிய அதிகாரிகளும் மறுத்துள்ளனர். பத்மநாதன் தொடர்ந்து இடங்களையும் தமது கையடக்கத் தொலைபேசி இலக்கங்களையும் மாற்றியிருந்ததாகவும் இது தாய்லாந்து, மலேசியா , இந்தோனேசியா , சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கண்காணிப்பை மேற்கொள்வதற்கு வழிவகுத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறுகிய நிலப்பரப்புக்குள் புலிகள் முடக்கப்பட்டிருந்த தருணத்தில் பத்மநாதன் தொடர்ந்து பிரபாகரனுடன் தொலைபேசித் தொடர்பைக் கொண்டிருந்தார். “நாங்கள் இப்போது காஸ்ட்ரோ போன்ற விடுதலைப் புலிகளின் ஏனைய தலைவர்களையும் மற்றைய முக்கியமான ஆட்களையும் ஏனைய நாடுகளில் தேடி வருகிறோம்’ என்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புனைபெயரில் வெளிநாடுகளில் இயங்கும் சிரேஷ்ட புலி உறுப்பினர் காஸ்ட்ரோவாகும். அவர் ஆயுதக் கொள்வனவு, புலனாய்வு விடயங்களை சேகரித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்ததாக ராய்ட்டர் செய்திச் சேவை கூறியுள்ளது. பத்மநாதன் மீது இன்ரர்போலின் இரு பிடியாணைகள் இருந்தன. அவர் பல கடவுச்சீட்டுகள் வைத்திருந்தார். அத்துடன், அதிகளவு பணமும் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. கடத்தல் மற்றும் நடவடிக்கைகள் மூலம் வருடாந்தம் 200300 மில்லியன் டொலர்களை புலிகள் சம்பாதித்ததாக நம்பப்படுவதாக ராய்ட்டர் மேலும் கூறியுள்ளது.

வடக்கில் கண்ணி வெடிகளை அகற்ற பிரிட்டன் நிதியூதவி

british_flag.jpgஇலங் கையின் வடக்கே யுத்தத்தின் போது அரசு மற்றும் புலிகளினால் புதைக்கப்பட்ட பெரும் தொகையான கண்ணி வெடிகளை அகற்றுவதற்கென பிரித்தானிய அரசு 5 லட்சம் பவுண்களை வழங்க முன்வந்துள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்து உள்ளது.

ஆனால்,  உலக வங்கி இலங்கைக்கு கடன் உதவியாக 2 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு பிரித்தானியா எதிர்ப்பு தெரிவித்ததுடன் அமெரிக்கா இதற்கு ஆதரவு வழங்க கூடாது எனவும் கேட்டுக் கொண்டிருந்தது. மேலும் இலங்கையில் யுத்தம் இடம் பெறுகையில் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் டேவிட் விலிபாண்ட் உடனடியாக யுத்த நிறுத்ததினை ஏற்படுத்துமாறு இலங்கை அரசினை வலியுறுத்தி இருந்தார்.

இலங்கை அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்ததுடன் இலங்கை பிரித்தானிய காலனித்துவத்தில் தற்போது இல்லை என்பதினை உணரவேண்டும் எனக் கூறியும் இருந்தது.  மேலும் இலங்கைக்கென ஒரு விஷேட சமாதான தூதுவரை பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிரவுண் நியமித்த பொழுது அதனையும் இலங்கை நிராகரித்தது.

எனினும்  பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டே இந்த நிதியுதவியினை தாம் வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இந்திய படையினர் இலங்கையில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடதக்கது. 

வவுனியாவில் அமைதியான வாக்களிப்பு

election000.jpgவவுனியா நகரசபைக்கான வாக்களிப்பு மிகவும் அமைதியான முறையில் நடைபெறுவதாகவும், நண்பகல் வரையில் 35 வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றதாகவும் வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காலை முதல் வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு சீராக நடைபெற்றதாகவும் அசம்பாவிதங்கள் எதுவும் வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 எனினும், பட்டாணிச்சூர், புளியங்குளம், தாண்டிக்குளம், கற்குழி உட்பட்ட சில பகுதிகளில் மாற்றுக் கட்சிகளின் ஆதரவாளர்கள், கட்சி உறுப்பினர்களிடையே சிறுசிறு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், சில கைகலப்பு சம்பவங்களும் இடம்பெற்றதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சம்பவம் ஒன்றில் தமது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் ரீ.சித்தார்த்தன் தெரிவித்தார்.

இலங்கையுடனான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி இலகு வெற்றி

cricket1.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய 4 வது போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் பகல் – இரவுப் போட்டியாக ஆரம்பமானது.

இப்போட்டியில் பாகிஸ்தான் அணித் தலைவர் யூனுஸ்கான் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டி தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதாக அறிவித்தார்.

அதன் அடிப்படையில் பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய விக்கெட் காப்பாளர் கம்ரன் அக்மல் மற்றும் இந்தியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடி விலக்கப்பட்டிருந்த இம்ரான் நமர் மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக அழைக்கப்பட்டு விளையாடினார். இம்ரான் நமர் 29 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரி உட்பட 23 ஓட்டங்கள் பெற்றிருந்த போது துஷாரவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து சென்றார்.

மற்றொரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கம்ரான் அக்மல் 64 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி உட்பட 57 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மாலிங்க பண்டாரவின் பந்து வீச்சுக்கு ஆட்டமிழந்து சென்றார். பின்னர் வந்த முகம்மது யூசுப் 12 பந்துகளை எதிர்கொண்டு 6 ஓட்டங்களைப் பெற்று இருந்தபோது மென்டிஸின் பந்து வீச்சில் ஜயவர்த்தனவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து சென்றார். இப்போட்டியில் உமர் அக்மால் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் தனது கன்னி சதத்தைப் பெற்றமை விசேட அம்சமாகும்.

322 வெற்றி இழக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி  36.1 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 175 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. தரங்க 80 ஓட்டங்களையும், சங்கக்கார  39 ஓட்டங்களையும் பெற்றனர்.

PAKISTAN
Kamran Akmal b Bandara     57
Imran Nazir b Thushara    23
Younus Khan c Kapugedera b Thushara                  89
Mohammad Yousuf c Jayawardene b Mendis   6
Misbah-ul Haq lbw b Bandara                    9
Umar Akmal not out                  102
Shahid Afridi not out                     2
Extras: (b4, w29)                    33
Total (for 5 wkts, 50 overs)                  321

Did not bat: Rana Naved, Mohammad Aamer, Rao Iftikhar, Saeed Ajmal.
Fall of wickets: 1-61 (Nazir), 2-106 (Kamran Akmal), 3-115 (Yousuf),
4-130 (Misbah), 5-306 (Younus).

Bowling: Malinga 10-0-79-0 (w22), Thushara 10-0-74-2 (w7), Mathews 8-0-48-0,
Bandara 10-0-44-2, Mendis 10-0-56-1, Kandamby 2-0-16-0.

SRI LANKA
U. Tharanga c Kamran b Iftikhar                  80
M. Jayawardene c Aamer b Naved     19
K. Sangakkara c Nazir b Iftikhar                 39
T. Kandamby c Younus b Ajmal     15
C. Kapugedera c Naved b Ajmal     8
T. Samaraweera c Kamran b Iftikhar    2
A. Mathews st Kamran b Afrid   8
M. Bandara c Misbah b Afridi    0
T. Thushara b Iftikhar    0
L. Malinga c Misbah b Iftikhar   0
A. Mendis not out     0
Extras: (lb1, w3)    4
Total(all out, 36.1 overs)  175

Fall of wickets: 1-36 (Jayawardene), 2-101 (Sangakkara), 3-130 (Kandamby),
4-157 (Kapugedera), 5-159 (Samaraweera), 6-166 (Tharanga),
7-167 (Bandara), 8-171 (Thushara), 9-175 (Mathews), 10-175 (Malinga).

Bowling: Aamer 5-0-34-0 (w1), Naved 7-0-46-1, Iftikhar 8.1-0-30-5,
Afridi 9-0-40-2 (w1), Ajmal 7-0-24-2 (w1).

ஊவா, யாழ்., வவுனியாவில் இன்று தேர்தல்

election000.jpgஊவா மாகாண சபை, யாழ்ப்பாணம் மாநகர சபை, வவுனியா நகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் இன்று (08) நடைபெறுகின்றன.

வாக்கெடுப்பு இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை நடைபெறும். முதலாவது முடிவு நள்ளிரவுக்குப் பின்னர் வெளிவரும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் இம்முறை வாக்களிப்பதற்கு எட்டு இலட்சத்து 75 ஆயிரத்து 456 பேர் தகுதிபெற்றுள்ளனர். 23 கட்சிகளிலும், ஏழு சுயாதீனக் குழுக்களிலுமாக 600 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

இவர்களுள் 30 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 814 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 5 இலட்சத்து 74 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். 14 கட்சிகளிலும் நான்கு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 432 வேட்பாளர்களுள் 21 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். மொனறாகலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 642 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும், இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாகப் போட்டியிடும் 168 வேட்பாளர்களில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தல் கடந்த 12 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஒரு இலட்சத்து 412 பேர் தகுதிபெற்றுள்ளனர். நான்கு கட்சிகளிலும் இரண்டு சுயேச்சைக் குழுக்களிலுமாக 174 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுள் 23 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

யாழ். மாநகர சபைத் தேர்தல் இறுதியாகக் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி நடைபெற்றது. இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாநகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் 1997 மே மாதம் 17ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். அதற்குப் பின்னர் இப்போதுதான் முதன் முறையாகத் தேர்தல் நடைபெறுகிறது.

யாழ். மாநகர சபைத் தேர்தலில் இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கென 16 வாக்குச் சாவடிகள் அடங்கலாக மொத்தம் 86 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், புத்தளம், அநுராதபுரம் ஆகிய இடங்களில் 15 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

யாழ். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள 75 பேர் வாக்களிக்க அரியாலை பார்வதி வித்தியாலயத்திலும் வாக்குச்சாவடியொன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநகர சபைக்கு வெளியில் இடம்பெயர்ந்த ஆறாயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் பீ. குகநாதன் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுள் கொழும்பில் 285 பேரும், கம்பஹாவில் 871 பேரும், களுத்துறையில் 249 பேரும், புத்தளம் 4418 பேரும், அநுராதபுரத்தில் 132 பேரும் யாழ்ப்பாணத்தில் 75 பேருமாக 6030 வாக்காளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 4978 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.

வவுனியா நகர சபைக்கான தேர்தல் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இந்தத் தடவை இங்கு வாக்களிக்கவென 24 ஆயிரத்து 624 பேர் தகுதிபெற்றுள்ளதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ். கருணாநிதி தெரிவித்தார். 6 அரசியல் கட்சிகளிலும், 3 சுயேச்சைக் குழுக்களிலுமாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில் 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தல் பணிகளுக்கென 638 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைதியான தேர்தலை நடத்துவதற்காக தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஊவா, யாழ்ப்பாணம், வவுனியாவில் எவ்வித பதற்றமும் இன்றி மிகவும் சுமுகமான நிலைமை காணப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூன்று இடங்களிலும் சுமுகமான நிலை இருப்பதால் நீதி, நேர்மையான தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாக அவர் கூறினார்.

கடந்த கால தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை வன்முறைகள் மிகவும் குறைவாக இருக்கிறதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கென 638 அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

கே.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

pathmanathan.jpgஆசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் நேற்றுக் காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி, இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கெஹலிய கூறினார். கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்று நடந்தது. இந்த மாநாட்டிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.

தன்னைத்தானே தலைவரென உரிமை கோரியிருந்த கே.பி.யின் கைது ஊடாக உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ, புலிகளின் தலைவர்தான் தானென கூறிக்கொண்டிருந்தாலோ அவர்களை கைதுசெய்யும் ஆற்றல் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு உண்டு என்பதை கே.பி.யின் கைது மூலம் சர்வதேசத்துக்கு உணர்த்தியிருக்கிறோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து புலிகளின் அடுத்த தலைவர் நான்தான் என கூறிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வந்த கே.பி, சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த நபர் மட்டுமன்றி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் நேரடி தொடர்பு கொண்டவராகவும் தேடப்பட்டு வந்துள்ளார்.

இவரைக் கைது செய்வதற்காக இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் ஆசிய நாடுகளின் புலனாய்வுப் பிரிவொன்றும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

கே.பி. எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது:

பலராலும் தேடப்பட்டுவந்த கே.பி, இப் போது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டும் விட்டார். அவர் ஆசிய பிராந்திய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று மட்டுமே கூறமுடியும் என்றார்.

ஆசிய பிராந்தியத்திலுள்ள எமது நட்பு நாடுகளின் புலனாய்வுப் பிரிவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. பல நாடுகளினாலும் தேடப்பட்டு வந்தவர். இந்தியாவும் அவரை கைது செய்யவிருந்தது. இந்த நிலையில் இவ்வாறான நாடுகள் அவரை தம்மிடம் ஒப்படைக்கும் படி கேட்டால் ஒப்படைப்பீர்களா? ஏதாவது ஒரு நாடு இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறதா? என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:

எந்தவொரு நாடும் தனிப்பட்ட விதத்தில் இவ்வாறான கோரிக்கையை இதுவரை விடுக்கவில்லை. எனினும் பொது நலவாய நாடுகளுக்கிடையே இவ்வாறான கைதுகள் பரிமாற்றம் தொடர்பான ஒவ்வொரு விதமான உடன்படிக்கைகள் அமுலில் உள்ளன. இவ்வாறான உடன்படிக்கைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றின் பிரகாரம் செயற்படவும் நாம் ஆயத்தமாகவும் உள்ளோம் எனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலியவுடன் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. ரத்நாயக்க, விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேக்கர, ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

1955 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காங்கேசன்துறையில் பிறந்த கே.பி.யின் இயற்பெயர் சன்முகம் குமரன் தர்மலிங்கம் ஆகும்.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் சிங்கள மொழிகளில் இவர் நல்ல பரிச்சயமிக்கவர். 1983 ஆம் ஆண்டு இவர் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபாச இறுவட்டுகள் விற்றவர் கைது

சீதுவையில் ஆபாச இறுவட்டுகளை விற்பனை செய்து வந்த வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சினிமா படங்களின் பெயரில் இவற்றை இவர் பாடசாலை பிள்ளைகளுக்கு விற்பனை செய்து வந்தார் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வீட்டில் வைத்து கணினியில் ஆபாசப்படங்களை இறுவட்டுகளில் பதிவு செய்து வந்தார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரிடமிருந்து 500 ஆபாச இறுவட்டுகள், கணினி என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவரின் விற்பனை நிலையத்தில் மாணவன் ஒருவன் மூலம் ஒரு இறுவட்டை வாங்கி அதனை கணினியின் மூலம் பார்த்த போது இவரது வியாபார நடவடிக்கை தெரியவந்தது.