இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பின்பும் நாம் கேட்டு வளர்ந்த வார்த்தைகள் சுயாட்சி, சமஸ்டி, ஐம்பதுக்கு ஐம்பது, இன்னும் ஒருபடி மேல் போய் ஈழ விடுதலை, தமிழ் ஈழம் என இப்படியே பலர் எம்மக்களை ஏமாற்றியே வந்திருக்கின்றனர். முதற் கூறிய சுயாட்சி, சமஸ்டி, ஐம்பதுக்கு ஐம்பது பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்ட அன்றைய தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டவை. அன்றைய அரசியல்வாதிகள் இளையோர் மற்றும் பொது மக்களைக் கொல்லவில்லை.
1980ம் ஆண்டு தொடக்கத்தில் தமது சுய தேவைகளுக்காக தமிழ் மக்களை பிழையான பாதையிலே வழி நடத்தி பாரிய கொலைகளையும் கொள்ளைகளையும இந்த விடுதலை அமைப்புக்கள் நடத்தி ஏறக்குறைய 100 000 தமிழர்களை கொன்று குவித்திருக்கிறார்கள்.
யார் இவர்கள்? எப்படித் தோன்றினார்கள்? இவர்கள் பின்னணி என்ன? கொஞ்சமேனும் தமிழினம் சிந்திக்க தவறி விட்டது. ஏன்? எதற்காக?
சுருக்கமாக எமது இன மக்களை கூறுவதானால் ஏனைய சமூக மக்களிடம் இருந்து வேறுபடுகிறார்கள். முதலில் எமது சமுதாயத்தில் எது சரி எது பிழை என்பதை பிரித்துப் பார்ப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். நாம் ஒரு நல்ல சமுதாயமாக முதலில் உருவெடுக்க வேண்டும். பின்புதான் எமது விடுதலையைப் பற்றிப் பேச வேண்டும்.
குறிப்பாக LTTE, PLOTE, TELO உட்பட விடுதலை என்ற பெயரில் அமைப்புக்கள் செய்த கொடூரங்கள் வெளிக் கொண்டுவரப்பட வேண்டும். விவாதிக்கப்பட வேண்டும். தமது மக்களுக்கு அவர்கள் எந்த கொடுமைகளும் செய்யாத மாதிரி அடுத்த கட்டத்திற்கு தாவ முற்பட அனுமதிக்கக் கூடாது. இப்பொழுது இருக்கும் தலைவர்களுக்கு விசாரணைகளின் பின் குற்றவாளிகளாக காணுமிடத்தில் தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.
எவ்வளவோ உன்னத சிந்தனையுடனும் தியாக மனப்பாங்குடனும் இந்த அமைப்புக்களுக்குள் சென்ற எத்தனையோ போராளிகள் இந்த இயக்கங்களின் தலைவர்களின் சுயநல சுகபோகங்களுக்கு இடைஞ்சலாக இருந்தபடியால் கொன்று ஒழிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் முதன்மையானவர் பிரபாகரனே!
மேலும் புலம் பெயர் நாடுகளில் இயங்கும் தொலைக்காட்சிகள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். குறிப்பாக தீபம், ஐரிவி ஆகியவை பிரபாகரன் தமிழ் மக்களுக்கு செய்த கொடூரங்களையும் துரோகங்களையும் மூடி மறைத்து இன்று வரை ஐரோப்பா வாழ் தமிழ் மக்களை பிழையான பாதையில் இட்டுச் செல்லுகின்றன. இவர்கள் யார் ஏன் எதற்காக இப்படி நடந்து கொள்ளுகிறார்கள்? இவர்கள் பத்திரிகை துறை தொடர்பாக எதையும் கற்றுக் கொள்ளவில்லை. ஆதலால் ஒரு ஊடகம் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்;, எப்படி மக்களை வழி நடத்த வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உயிரை அழித்தவனை விட சமுதாயத்தை முன்னேற விடாமல்;, உண்மைகளை மக்கள் முன் கொண்டு செல்ல தயாராக இல்லாத மோசமான கருத்துக்களைப் பரப்புரை செய்த இந்த தொலைக்காட்சி சேவையை நடத்துபவர்கள் முதன்மையான குற்றவாளிகளாவர்.
பத்திரிகைத் துறை என்றால் இந்த ஐரோப்பாவில் இந்த நாடுகளை அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டி செவ்வனே நடத்துவதற்கு உதவி வருகின்றன. அமைதியும் அபிவிருத்தியும் கண்டு மேலும் முன்னேறி வருகின்றன. நடுநிலை, உண்மைகளை வெளிக் கொண்டு வருதல், துரோகத்தனத்தை எதிர்தல் என மக்களை நல்வழிப்படுத்துவதே சிறந்த பத்திரிகையாளனுக்கு அழகு. அதுவே பத்திரிகைத் துறையின் மக்கள் பணி! ஆனால் தீபமும் ஐரிவியும் புலம்பெயர் மக்களுக்கு ஆற்றிய பணிகளினால் அங்குள்ள மக்களும் இங்குள்ள மக்களும் இன்று நடுத் தெருவில் நிற்கிறார்கள்!
மேலும் ஆங்காங்கு தலைவர்கள் முளைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் உருப்படியான, தமிழ் மக்களுக்கு விடிவை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களை காணவில்லை. தனது குடும்பம் – எப்படி காசு அடிக்கலாம் – எப்படி அண்டிப் பிழைக்கலாம் போன்ற எண்ணங்களுடனேயே தலைவர்கள் முளைக்கிறார்கள்.
தமிழ் மக்களே!! உசாராக இருக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. இனிமேலும் காலம் தாழ்த்தாதீர்கள். நல்ல தலைவன் ஒருவனை தேட வேண்டும். செயற்பட வேண்டும். முகத்தை மூடி மறைக்கும் பத்மநாதன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு தலைமையை வழங்க முடியாது. பத்மநாதன் பிரபாகரனின் கொள்கைகளை முன்னெடுக்கப் போவதாக கூறுகின்றார். பிரபாகரன் கொலைகள் மீது கொண்ட அடங்காத தாகத்ததால் எண்ணுக்கணக்கற்ற அப்பாவி இளைஞர்கள்;, யுவதிகள் கொன்றொழிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டார்கள். இந்த தமிழினத்தின் வரலாற்றில் இப்படியொரு கற்பனைக்கெட்டாத கொடூரமான அழிவை பிரபாகரனைத் தவிர வேறெவராலும் நடத்திக் காட்டியிருக்க முடியாது. மீண்டும் ஒரு பிரபாகரன் வாரிசாக வரும் பத்மநாதனை முளையோடு கிள்ளி எறியுங்கள். (KP இன் கைதுக்கு முன் ஓகஸ்ட்/ 1 /2009 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.)
தமிழ் மக்களே! இப்பொழுது மிக மோசமான இனப்படுகொலை நடந்து முடிந்து உள்ளது. தயவு செய்து இதை மறக்க வேண்டாம். இந்த இனப் படுகொலையை எப்படியாவது சர்வதேச உலகத்திற்கு வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாக ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டும். உதாரணத்திற்கு யூதர்கள் தங்களுடைய இனப்படு கொலையை எப்படி வெளிக் கொண்டுவந்து வருடா வருடம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதே போல் எமது உடன்பிறப்புக்கள் பல உருத் தெரியாமல் அழிந்து விட்டார்கள். இதை ஒவ்வொரு தமிழனும் தமது மூச்சுக் காற்றுடன் சேர்த்து நினைவு கூருதல் வேண்டும். வருடா வருடம் தமிழர்கள் அழிக்கப்பட்ட நாள் எமது விடுதலையின் தொடக்கமாக தீபங்கள் ஏற்றப்பட வேண்டும். தமிழர்களுடைய தாயகம் மலர வேண்டும்.