09

09

21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது – பொலிஸ் அதிகாரி தெரிவிப்பு

மஸ்கெலியா நகர் வர்த்தகர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.எஸ். பத்திரனவின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மஸ்கெலியா பீ.எம்.டி. கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

பொறுப்பதிகாரி சி.எஸ்.பத்திரன அங்கு உரையாற்றுகையில்;

பாடசாலை மாணவர்கள் மத்தியிலும், சிறுவர்கள் மத்தியிலும், தற்போது பான்பராக், என்சி மேலும் போதை தரக்கூடிய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பாடசாலை அதிபர்களினால் ஜனாதிபதிக்கு புகார் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அது சம்பந்தமாக இந்நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்படுகின்றது. ஆகையால் 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என்றும் சிறுவர்களிடம் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்களை விற்பனை செய்து எதிர்கால சந்ததியை அழித் தொழிக்க வேண்டாம் என சகல வர்த்தகர்களிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் பான்பராக், என்சி போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவ்வாறு விற்பனை செய்வோரை இனம்கண்டு உடன் தகவல் தருமாறும் கேட்டுக் கொண்டார்.

கைதான பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும்: வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் பத்மநாதன் மலேசியாவில் கடத்தப்பற்றமை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.  மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:-

திரு.செல்வராசா பத்மநாதன் மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டமை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையைத் தலைமைதாங்கி வழிநடத்தி  வந்த திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஓகஸ்ட் 5ம் நாள் தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு  இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகளை ஆதாரம் காட்டி  இலங்கை மற்றும் அனைத்துலக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் எல்லைக்குள் இவ்வாறான கைது நடைபெற்றதென்பதை தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. மேலும் திரு பத்மநாதன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்துக் கடத்தப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் உட்பட, தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தரப்புகளிடமிருந்து பெறாப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள ‘ரியூன்’ விடுதியில் இக்கடத்தல் நடத்தப்பட்டதாக நாம் அறிகின்றோம். இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கை, இலங்கையின் இராணுவப் புலனாய்வுத் துறையினரால், மலேசிய பாதுகாப்பு அல்லது புலனாய்வு நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக நாம் கருதுகின்றோம்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களின் இயற்பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின் அனைத்துலக அரசுகள் அவற்றின் துறைகளினால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நாம் தீர்க்கமாக நம்புகின்றோம்

திரு.செல்வராசா பத்மநாதன் சித்திரவதைகளுக்கெதிரான சட்டமுறையின் மூன்றாம் சரத்திற்கு அமைய பாதுகாப்பு உரிமை உடையவர். அதன்படி எந்தவொரு நாட்டிலும் ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்படும் சாத்தியமிருந்தால் அந்நாட்டுக்கு அவர் எடுத்துச் செல்லப்படுதல் தடைசெய்யப்படுகிறது.

இவ்விடத்தில், அனைத்துலக நடைமுறைகள் தமிழர் விடயத்தில் மீளவும் சட்ட நியமங்களை மீறியதையே காண்கின்றோம். திரு.பத்மநாதன் அவர்கள் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அப்பாற்பட்டு சூறையாடும் கூட்டங்கள் காடையர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் போலியங்கி அவரைச் சிறைபிடிப்பதற்கு பதிலாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மீள் உருவாக்க முயற்சிகளின் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டத்தினை அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட  விரும்புகின்றோம்.

இப்பணியில் அவர் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்த போதும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான நீதியான அரசியல் எதிர்காலம் நோக்கிய நகர்வினை நம்பிக்கையுடனும் தீவிர மன உறுதியுடனும் முன்னெடுத்து வந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் வாக்களிப்பின் மூலம் உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான அடிமட்டத்திலிருந்து உருவாகுமொரு சனநாயக நிறுவனமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்களாட்சி வழியானதொரு தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதை அவர் ஆதரித்தார்.

திரு.பத்மநாதனை வழிப்பறிக் கும்பலினரது பாணியில் கைப்பற்றியவர்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் மீளுருவாக்க முயற்சியைத் தடுக்கவே விரும்புகின்றனர். ஆயினும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான தமிழீழ தேசியச் செயற்றிட்டம் ஒரு தனிமனிதனின் ஆற்றல் அர்ப்பணிப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை என்பதால் எண்ணிலடங்காத பற்றுறுதி மிக்க பலரது உழைப்பின் மூலம் இத்திட்டம் வெற்றி கிட்டும்வரை தொடரும் என்பது உறுதி.

திரு.பத்மநாதன் அவர்கள் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் கடத்தப்பட்டிருப்பின் அக்கடத்தல் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு மலேசிய அரசாங்கத்தினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பாக நாம் வேண்டுகின்றோம். மலேசிய அரசாங்கத்திடம் இது விடயத்தில் தகவலேதும் இல்லையெனில் நடந்தேறிய இச்சட்ட விரோத கடத்தல் தொடர்பான விசாரணைகளை மலேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென நாம் உறுதியாக வேண்டி நிற்கின்றோம்.

திரு.பத்மநாதன் அவர்கள் இலங்கை அரசாங்கம் கூறுவது போல் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அனைத்துலக நியமங்களுக்கமைய அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அவருக்கு வேண்டிய சட்ட அறிவுரைகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தவும், அனைத்துலக சமூகம் இதில் தலையிட வேண்டுமெனவும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

இலங்கை அரசு ஏலவே மூன்று இலட்சம் தமிழ் மக்களை நாசி முகாம் வகையிலான வதைமுகாம்களில் கால வரையறையின்றி தடுத்து வைத்திருப்பதையும் இது விடயத்தில் கவனத்தில் கொண்டுவர விரும்புகின்றோம். திரு.பத்மநாதன் அவர்களது உயிர்ப் பாதுகாப்பு தொடர்பாக அஞ்சுவது போலவே இந்த மக்களது பாதுகாப்பு தொடர்பாகவும் நாம் அஞ்சுகின்றோம்.

இதனால் இம்மூன்று இலட்சம் மக்களின் பரிதாப நிலைக்கு விரைவில் தீர்வுகாண்பதிலும் திரு.பத்மநாதன் அவர்கள் எல்லாவித அனைத்துலக  விழுமியங்களுக்கமைய பாதுகாப்பினை பெறுவதையும் உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தை வேண்டி நிற்கின்றோம்.

இவண்

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு