10

10

கொழும்பு – யாழ் சொகுசு பஸ் சேவை – கட்டணம் 1000 ரூபாவென அமைச்சு அறிவிப்பு

bus_luxury.jpgகொழும் புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான சொகுசு பஸ் சேவை விரைவில் ஆரம்பிக்கப்டும் என்றும் அதற்கான ஒரு வழிக் கட்டணமாக 1000 ரூபா அரவிடப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது, அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய நகரங்களுக்கும் சொகுசு பஸ் சேவையினை ஆரம்பிக்கும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு யாழ் சொகுசு பஸ் சேவை கொழும்பு – மதவச்சி, மதவச்சி – யாழ்ப்பாணம் என இரு கட்டங்களாக நடத்தப்படும் என்றும் முதல் கட்டமாக ஐந்து சொகுசு பஸ் வண்டிகள் சேவையிலீடுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதியூடான சேவை பதிவை மேற்கொள்ள கோரிக்கை

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் லொறிப் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான பதிவுகளை யாழ்.வணிகர்கழகம் மேற்கொள்ளவுள்ளது.
இதுவரை லொறி உரிமையாளர்கள் தமது பதிவினை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தில் செய்யாதிருந்தால் இன்று திங்கட்கிழமை அதற்கான பதிவை மேற்கொள்ளுமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டியுள்ளது.

கனடா வீராங்கனையிடம் சானியா இறுதிப் போட்டியில் தோல்வி

sania-mirza.jpgகனடா நாட்டில் நடைபெற்ற வான்கூவர் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை ஸ்டெஃபானி டுபாய்ஸிடம் சானியா மிர்சா 6- 1, 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் இறுதிவரை கடுமையாக போராடி தோல்வி தழுவினார். இதனால் டுபாய்ஸ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

முதல் செட்டில் 6- 1 என்று ஸ்டெஃபானியை ஊதித் தள்ளினார் சானியா. ஆனால் உள் நாட்டு ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் விளையாடிய ஸ்டெஃபானி தன் ஆட்டத்தை பல்வேறு விதங்களில் மேம்படுத்த சானியா மிர்சா நிறைய தவறுகளிழைக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தனது சர்வை வெற்றி பெறுவதில் சானியா தடுமாறினார். கடந்த வாரம் லெக்சின்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சானியா, இந்த முறை வென்று தொடர்ச்சியாக இரண்டு சர்வதேச டென்னிஸ் பட்டங்களை வெல்லலாம் என்ற கனவில் இருந்தார். ஆனால் அந்த கனவு தகர்ந்தது. ரன்னராக வந்த சானியாவிற்கு 6,080 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைத்தது.

சானியா பற்றி குறிப்பிட்ட ஸ்டெஃபானி, மற்ற ஆட்டங்களில் மற்ற கனடா வீராங்கனைகள் சானியாவை சற்றே களைப்பாக்கிவிட்டனர் இதனால் அவர் இந்த இறுதியில் சற்றே களைப்படைந்து விட்டார் என்றார்.

யாழ் மாநகரசபைக்கு ஐந்து முஸ்லிம்கள்

election000.jpgயாழ் மாநகரசபைக்கு ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.  சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இதன்படி முஸ்லிம்கள் ஐவர் யாழ். மாநகரசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.

யாழ். மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபையில் ஐ. ம. சு. முன்னணியுடன் இணைந்து போட்டியிட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐந்து ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது. யாழ். மாநகர சபைக்கு அ. இ. மு.கா. சார்பாக போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளதுடன், வவுனியா நகர சபைக்கும் ஒருவர் தெரிவாகியுள்ளார்.

இதன்படி,  வவுனியா நகர சபைக்கு எம். எஸ். எம். பாரி என்பவர் தெரிவாகியுள்ளார். இவர் பெற்ற விருப்பு வாக்கு 2270 ஆகும்.

யாழ். மாநகர சபைக்கு தெரிவாகியுள்ள முஹம்மது மீரா சாஹிப் முஹம்மது ரமீஸ் 1338 விருப்பு வாக்குகளையும்,  முஹம்மது மீராசாஹிப் முஸ்தபா 1029 விருப்பு வாக்குகளையும், பதூர்தீன் அஸ்கர் ரூமி 979 விருப்பு வாக்குகளையும்,  அஜ்மயின் அஸ்பர் 960 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதேவேளை வவுனியா நகர சபைக்கு மு. கா. உறுப்பினர் ஒருவரும் தெரிவாகியுள்ளார். 587 வாக்குகளை மாத்திரமே பெற்ற மு. கா வுக்கு இந்த ஒரு  ஆசனம் கிடைத்துள்ளது.

யாழ். மாநகர சபைக்கு சுயேட்சைக் குழுவாக போட்டியிட்ட சுபியான் மௌலவி 1779 விருப்பு வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். யாழ். மாநகர சபைக்கு வாக்களிக்க தகுதி பெற்றிருந்த சுமார் 6000 இடம்பெயர்ந்த முஸ்லிம் வாக்காளர்களில் 70 வீதமானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர

முஸ்லிம் பெயரில் புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி கொழும்பில்!

lady00000.jpgபுலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரியொருவர்  பொய்யான தகவல்களை சமர்ப்பித்து கொழும்பு நகருக்குள் பிரவேசித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான  ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ஒக்டோபர் 09 ஆம் திகதி பிறந்த அப்துல் சலாம் பாத்திமா யெஸ்மின் என்னும் பெயரில் நடமாடும்  தற்கொலைப் படையைச் சேர்ந்த இந்தப் பெண் உறுப்பினர் தற்போது பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தேடப்பட்டு வருகின்றார்.

இவர் கொழும்பு 12,  பழைய சோனகத்தெருவை வசிப்பிடமாகக் கொண்டிருப்பதாக அவருடைய தேசிய அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பெண்ணினது தேசிய அடையாள அட்டை இலக்கம் 857835641எ யாகும். இவர் பற்றிய தகவல் தெரிவோர் பொலிஸ் தலைமையகத்துடன் 011-2421111 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது பயங்கரவாத தடுப்புப் பிரிவுடன் 011-2321839,  011-2451636,  011-2384401 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனும் அல்லது குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துடன் 011-2320141 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் அல்லது கொழும்புப் பொலிஸின் அவசர நடவடிக்கைப் பிரிவின் 011-2243333 என்ற தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்களை அறியத்தருமாறு தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

5-வது ஒரு நாள்: பாகிஸ்தான் வெற்றி

kumar.jpgஇலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் குவித்தது. இலக்கை துரத்திய இலங்கை 147 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இலங்கை தொடரை 3- 2 என்று கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் யூனிஸ்கான் 74 ரன்களும், மிஸ்பா உல்-ஹக் 73 ரன்களும் முகமது யூசுப் 43 ரன்களும், நவீத் உல்-ஹசன் 33 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் சரிவு ஆரம்பமானது. அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. ஒரு கட்டத்தில் 74 ரன்களுக்குள் 8 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆமீரும், நவேது உல் ஹஸனும் முறையே 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன் பிறகு கண்டம்பி (42 ரன்), பண்டாரா (31 ரன்) ஆகியோர் தாக்குப்பிடித்து ஆடியதால் இலங்கை அணியால் மூன்று இலக்க ஸ்கோரை தாண்ட முடிந்தது. முடிவில் 34.2 ஓவர்களில் இலங்கை அணி 147 ரன்களில் ஆட்டமிழந்து தோல்வி தழுவியது.

132 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமீர், நவீத் உல்-ஹசன் தலா 4 விக்கெட்டுகளும், அப்ரிடி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும்.

பாகிஸ்தான் வீரர் நவீத் உல்-ஹசன் ஆட்டநாயகன் விருதினையும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா (தொடரில் 9 விக்கெட் எடுத்துள்ளார்) தொடர்நாயகன் விருதினையும் பெற்றனர். அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

அமைதியான தேர்தல் – தேர்தல்கள் ஆணையாளர்

election000.jpgயாழ். மாநகர சபை, வவுனியா நகர சபை உட்பட ஊவா மாகாண சபை என்பவற்றுக்கான தேர்தல்கள் அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெற்றதாகத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நேற்றுத் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியாகியதைத் தொடர்ந்து நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பத்து வருடங்களுக்கு பின்னர் நடந்தன. இத்தேர்தல்களும் ஊவா மாகாண சபைக்கான தேர்தலும் மிகவும் அமைதியாகவும், சுமூகமாகவும் நடைபெற்றன.

இத்தேர்தல்களை அமைதியாகவும், சுமூகமாகவும் நடாத்தி முடிப்பதற்கு உதவி ஒத்துழைப்பு நல்கிய பொலிஸாருக்கும் முப்படையினருக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும், தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஈஎன்டிஎல்எப் இந்தியப் பிரதமரை சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பாக முறையிட்டுள்ளது : வி அருட்செல்வன்

Indiain PM Manmohan Singhஈழம் தேசிய ஜனநாயக முன்னணித் (ஈஎன்டிஎல்எப்) தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை ஓகஸ்ட் 7ல் சந்தித்தார். இந்தச் சந்திப்பினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்இ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற செயலருமான இரா. அன்பரசு ஏற்பாடு செய்திருந்தார். அன்பரசு இச்சந்திப்பிலும் கலந்துகொண்டார்.

‘இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள வரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும்” என்று ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரன் இந்தியப் பிரதமரிடம் கோரி உள்ளார்.

இச் சந்திப்பின் போது பின்வரும் கோரிக்கைகளை ஈஎன்டிஎல்எப் முன்வைத்தது.

(01) ‘இந்திய – இலங்கை’ ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

(02) இலங்கை அரசு ‘இந்திய-இலங்கை’ ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள் என்பதை அனுபவரீதியாக நாங்கள் கண்டுள்ளோம். எனவே இந்தியா அமைதிப் படையை அனுப்புவதன் மூலமாகத்தான் ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியும். இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாதப்பட்சத்தில் இந்தியா ஐ.நா.வின் அமைதிப்படையை அனுப்பும்படி ஐ.நா.வை வற்புறுத்த வேண்டும்.

(03) இலங்கை அரசு தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்களவரை குடியமர்த்தும் பணியினை மிக வேகமாக செய்து வருகிறது. தமிழர்களது பாரம்பரிய பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை பகிரங்கமாகவே அமைத்து வருகிறது. திருகோணமலை நகர் பகுதியில் தமிழர்களின் கோவிலான கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் மிகப்பெரிய பௌத்த விகாரையை கட்டி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தவோஇ சுட்டிக்காட்டவோ யாராலும் முடியவில்லை. எனவேதான் இந்தியா நேரடியாக இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தலையிட்டு உரிமைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோருகிறோம்.

(04) வடக்கு மாகாணத்தில் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற மூன்றரை லட்சம் தமிழர்களை நிபந்தனை எதுவும் இல்லாமல் விடுவிக்க வேண்டும். அவர்கள் விரும்பும் தங்களது பகுதியில் குடியமர இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

(05) தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக போதிய கல்வி அறிவு இல்லாமலும்;இ தொழிற்பயிற்சி பெறாமலும் முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கல்வியும்இ தொழில்; வாய்ப்புப் பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும்.

(06) புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக இந்தியாவில் ஒரு மகாநாடு நடத்துவதற்கு இந்திய அரசும்இ தமிழக அரசும் அனுமதி வழங்கவேண்டும்.

இதற்க்கு பதிலித்த இந்தியா பிரதமர் ‘வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என உறுதி அளித்தாக ஈஎன்டிஎல் தெரிவித்துள்ளது.
ஓகஸட் 7; நடைபெற்ற சந்திப்பின் போது இந்தியப் பிரதமர்இ ஈ.என்.டி.எல்.எப் க்கு கீழ்கண்டவாறு உறுதிமொழியழித்துள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்து உள்ளது.

* இந்திய-இலங்கை ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.

* வடக்குக் கிழக்கில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை நாங்கள் (இந்தியா) அவதானித்து வருகிறோம். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

* அகதிகளாக்கப்பட்ட தமிழர்களை மீளக் குடியமர்த்துவதற்காக நாங்கள் 500 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். மேலும் அதற்கான உதவித் தொகைகளை கொடுப்போம். மீளக்குடியேற்றங்களையும் நேரடியாக அவதானித்து வருகிறோம்.

* தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கான கல்வியும்இ தொழிற்பயிற்சியும் அளிக்கப்படும்.

* நிச்சயமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்களுக்கு சுதந்திரமான ஒரு நல்லத் தீர்வினை இந்தியா ஏற்படுத்திக் கொடுக்கும்.

* புலம்பெயர்ந்த தமிழர்களை ஒன்றிணைப்பதற்கான மாநாட்டிற்கு இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. எம்.கே. நாராயணன் அவர்களிடம் கலந்து பேசி அதற்கான ஆவணம் செய்யப்படும்
என்ற உறுதிமொழிகளை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்  ஈஎன்டிஎல்எப் தலைவர் ஞா ஞானசேகரக்கு வழங்கி உள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவிக்கின்றது.

வீட்டுப் பணியாளர் தொழில் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான விசேட கருத்தரங்கு

housemaids.jpg
இலங்கையில் வீட்டுப் பணியாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் செங்கொடிச் சங்கம் அதன் மகளிர் பிரிவுடன் இணைந்து கருத்தரங்கொன்றை நடத்தியுள்ளது.  வீட்டுப் பணியாளர் தொழில் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன. இவர்கள் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர்களாகவுள்ளதால் தொழில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. புதிதாத அத்தொழிலாளர்களின் தேவைகளுக்கு அமைய சட்டத்தை உருவாக்கும் நோக்கில் கொழும்பு,ஜானகி ஹோட்டலில்  நடைபெற்றபோது பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் அரச தனியார் தொழிற்சங்கங்கள் பங்குபற்றின.

வீட்டுப் பணியாளருக்கு உரிய சட்டமொன்று அவசியமானது. எனினும், இவர்கள் வரையறையற்றிருப்பதால் சட்டத்தை உருவாக்க சிரமமாகவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் இங்கு பேசுகையில் தெரிவித்தார்.

அத்துடன் தேசிய சட்டத்தின் கீழ் வீட்டுப் பணியாளர்களின் சில உரிமைகள் மீறப்படுமெனின் நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணாக வயது குறைந்த பணியாளர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். அதேநேரம், முக்கியமாக வீட்டுப் பணியாளர்கள் குறைந்த சம்பளத்தைப் பெறுவதே பெரிய பிரச்சினையாக உள்ளதாக செங்கொடிச் சங்கத்தின் மகளிர் பிரிவு தெரிவித்தது.

எனவே, சம்பள ரீதியில் பாதுகாப்பைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமெனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நாளை ஆரம்பமாகிறது

000stud.jpgக.பொ.த. உயர்தரப் பரீட்சை நாளை 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். இப்பரீட்சையில் மோசடிகள் இடம்பெறாது தடுப்பதற்கு இம்முறையும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக பரீட்சைத் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவு ஒன்று இயங்கும் எனவும் இப்பரீட்சையில் ஆள்மாறாட்டம் அல்லது வேறு மோசடிகள் இடம்பெற்றால் இப்பிரிவுக்குத் தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பரீட்சை மண்டபம் மற்றும் பரீட்சை அதிகாரிகள் தொடர்பாகவும் முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0112784208 அல்லது 0112785220 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் 1,827 பரீட்சை மண்டபங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. 2 இலட்சத்து 42 ஆயிரத்து 91 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள 1,263 மாணவர்களுக்கு வவுனியாவில் 10 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.