யாழ்ப் பாணத்தில் 80 சதவீதமான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என்பதும் ஆனால், “எப்படியும் வெற்றி பெறும்’ என்ற அறிவிப்பை அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; யாழ். மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ள நிலையில், வவுனியா நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது ஆறுதல் தரும் செய்தியாகும்.
யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்குகளே பதியப்பட்டுள்ளன. ஒரு இலட்சத்து நாலாயிரம் வாக்காளர்களில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. இராணுவத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளே இருந்துள்ளன. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. 81.74 வீத மக்கள் இத்தேர்தலில் பங்குபற்றவில்லை என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
கரையோரப் பகுதி மக்கள் இராணுவத்தினால் அன்றைய தினம் காலை கடலுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டு வாக்களிக்க அனுப்பப்பட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. தேர்தலில் 18.26 வீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதியப்பட்டமைக்கு மக்களிடம் ஏற்பட்டிருந்த அச்சம், பீதி மட்டுமல்ல மனவிரக்தியும் அதனால் ஏற்பட்ட தேர்தலில் ஈடுபாடற்ற தன்மையும் ஒரு காரணமாகும்.
அரசின் அதிகார பலம், இராணுவத்தின் தொடர்ச்சியான பிரசன்னமும் நடமாட்டமும், அமைச்சர்கள் தொடர்ச்சியாகத் தேர்தல் காலங்களில் யாழ்ப்பாணம் வந்து அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகம் முதலான பல துறைசார் அரச ஊழியர், மாணவர்களை நிர்ப்பந்தமாக அழைத்து நடத்திய கூட்டங்களில் சலுகைகளை அறிவித்து வந்தமை, தேர்தலில் அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுமென அறிவுறுத்தப்பட்ட அச்சம் மற்றும் அரசாங்கத்தில் முழு வளங்களும் இத்தேர்தலில் பாவிக்கப்பட்டுள்ளமை, அதற்கும் மேலாகப் புத்தளம் போன்ற இடங்களில் இடம்பெயர்ந்த மக்களில் 47 வீதமான வாக்குகள் பதியப்பட்டமையும், அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10,600 வாக்குகளைப் பெறுவதற்கு காரணிகளாகும். அத்துடன் தேர்தலில் அரசு வெற்றி பெறாவிட்டால் தமக்கு ஆபத்து ஏற்படுமென மக்கள் அச்சமுற வைக்கப்பட்டிருந்தனர்.
அரசாங்கம் திட்டமிட்டவாறு, எதிர்பார்த்தவாறு தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிக்கவில்லை என்பது வெளிப்படை. எப்படியும் அரசு வெற்றிபெறும் என்ற அறிவிப்பை அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், உண்மையில் அரசு எதிர்பார்த்த அளவுக்குத் தமிழ் மக்களிடம் வெற்றி பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் 18.26 வீத வாக்களிப்பையும் வவுனியாவில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்று ஆளுங்கட்சிக் கூட்டமைப்பு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டமையும் தமிழ் மக்களிடம் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பதை நிரூபிப்பதாயுள்ளது.
எவ்வாறெனினும் வவுனியா நகர சபைத் தேர்தலில் எமது வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டு மக்களும் அச்சுறுத்தப்பட்டிருந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெற வைத்தமைக்காக அங்குள்ள மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பதியப்பட்டுள்ளன. பல இடங்களில் எமது மக்கள் தேர்தலில் அக்கறை காட்டாது வாக்களிக்காமல் இருந்தமை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இத்தனை மனிதப் பேரவலம், அடக்கு முறைச் சூழல், அச்சம் நிலவிய போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.