கிழக்காசியாவில் திங்களன்று வீசிய பாரிய சூறாவளியால் தாய்வான், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கரையோரங் களிலிருந்து 10 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.
ஜப்பானில் வீசிய கடும் சூறாவளி மற்றும் கனமழை காரணமாக 13 பேர் பலியாகினர். இன்னும் பெருந்தொகையானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை உடனடியாக மீட்கும் பொருட்டு ஆயிரம் படை வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இரண்டாயிரம் பேர் வெள்ளத்தி லிருந்து மிட்கப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை ஜப்பான், சீனா, தாய்வான் ஆகிய நாடுகளில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்டது.
வேகமாக வீசிய காற்றில் மரங்கள், வீட்டுக் கூரைகள், மின்கம்பிகள் என்பன நிலத்தில் விழுந்தன. பின்னர் பெய்த கடும் மழையால் கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீதியால் சென்ற வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தலை நகர் டொக்கியோவின் சில பகுதிகளும் இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. சரிவு ஏற்பட்டதில் சுமார் 450 வீடுகள் சேதமடைந்தன. 180 கி. மீற்றர் வேகத்தில் காற்று வீசியது. இடிபாடுகளுக்குள் சில பேர் சிக்கியுள்ளதால் தேடும் பணிகள் துரிதமாக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனோரைத் தேடவென விசேட படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன. கிழக்காசியாவில் வீசிய இந்தப் பாரிய சூறாவளி வெள்ளம் என்பன தாய்வான், சீனா ஆகிய நாடுகளையும் தாக்கியது.
இடம்பெயர்ந்தோருக்கான உணவுகள், குடிபானங்கள், இருப்பிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை தொண்டர் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. வெள்ள நீர் வடியும் வரை இயல்பு நிலை பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு அரசாங்கம் அறிவித்ததையடுத்து தாய்வான், ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுமார் பத்து இலட்சம் பேர் வெளியேறியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.