தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தார் எனக் குற்றம் சாட்டப்படும் கிறிஸ்தவப் பாதிரியாரான ஜெயநேசன் கைது செய்யப்பட்டிருப்பதாக இணையத் தள செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட அமைச்சர் ஒருவரே இவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்ததாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் எனக் கூறப்படுகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்துக்குப் பொறுப்பாக இருந்த குறிப்பிட்ட அமைச்சர், அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அந்தப் பொறுப்பு பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கிறிஸ்ரியன் கெயர்’ என்ற மனிதாபிமான நிறுவனம், ‘லடர் ஹோப்’ (Ladder of Hope) என்ற அமைப்புடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றது. ‘லடர் ஹோப்’ நிறுவனத்தின் தலைவராகவும் இலங்கையில் ‘கிறிஸ்டியன் கெயர்’ நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளராகவும் அருட்தந்தை ஜெயநேசன் பணிபுரிந்து வருகின்றார் எனவும் மேற்படி இணையச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது