13

13

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: ரஞ்சித் அலுவிகார பா.உ.

ranil0111.jpgஎதிர் வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் எனவும், அத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் குறித்து இறுதி நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும்  மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிகார கூறினார்.
 
கலேவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்கள் தோறும் அமைக்கப்பட்டுள்ள ஐ.தே.கட்சிக் கிளைகளை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ் கலேவெல நகரத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிலைப்படுத்தி அதில் வெற்றியை எதிர்பார்த்து அரசாங்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பி வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதென்பது அரசாங்கத்தின் சுலபமான காரியமாகாது.  ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அத்தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் தொடர்பாக இறுதி நேரத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு மாத்தளை மாவட்ட ஐ.தே.கட்சியின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் அலுவிகார கூறினார்.

யுத்த வெற்றியைக் கொண்டாடியவாறு நாட்டின் பாரிய பல பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொண்டு தேர்தல்களை நடத்திவரும் ராஜபக்ஷ அரசாங்கம் தற்போது ரணவிரு உபஹார என்று இராணுவ வீரர்களை கௌரவிக்கும் வைபவங்களை பிரதேச செயலக மட்டங்களில் நடத்தி மக்களின் கவனத்தை அதன்பால் ஈர்க்க முயற்சித்து வருகின்றது.  தொடர்ந்து கிராம சேவகர் பிரிவுகள் தோறும் இத்தகைய இராணுவ வீரர்களைப் பாராட்டும் வைபவங்களை இன்னும் இரண்டொரு மாதங்களுக்கு அரசாங்கம் நடத்தும். அதன் பிறகுதான் நாட்டில் விஸ்வரூபமெடுத்து வரும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படப் போகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் நடைபெறும் வரையில் இத்தகைய விழாக்களைக் கொண்டாடி மக்களது அன்றாடப் பொருளாதார பிரச்சினைகளுட்பட ஏனைய பிரச்சினைகளை மூடி மறைத்துக்கொள்ள அரசாங்கம் முயல்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிபந்தனைகளுடனான பாரிய கடன்தொகையை அரசாங்கம் கட்டம் கட்டமாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. இவற்றை எவ்வாறு எந்தெந்தத்துறைகளில் செலவிட வேண்டும் போன்ற நிபந்தனைகள் பலவும் உள்ளன. இப்பாரிய கடன்தொகையை மீளவும் செலுத்த முடியாத நிலையில் நாட்டில் வரிச்சுமைகள் அதிகரிக்கும். தனியார் மயமாக்கல் அதிகரிக்கும். எனவே, டிசம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலை நோக்கிச் செல்லும் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமை நாம் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

சென்னையில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

அந்தமான் அருகே இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை நகரிலும் இன்று கட்டடங்கள் குலுங்கின. அந்தமான் அருகே கடல் பகுதியில் இன்று பகல் 2.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 5.7 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் சென்னையிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடையாறு, தியாகராய நகர், பட்டினப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் உணர முடிந்தது.

இந்த நிலநடுக்கத்தால் பட்டினப்பாக்கத்தில் 8 மாடிக் கட்டடம் குலுங்கியதால் அதிலுள்ள அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு இறங்கி ஓடினர். அதே போல தி.நகர், அடையாறு உள்பட பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு 1.26 மணியளவில் அந்தமானுக்கு வடக்கே கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உணரப்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. அந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சி தான் (aftershock) இன்றைய நிலநடுக்கம் என்று நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மைய அதிகாரி கோபால் கூறினார்.

கே.பி. கைது சர்வதேச சட்டத்திற்கு முரண் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவிப்பு

pathmanathan.jpgவிடு தலைப்புலிகளின் புதிய தலைவர் கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் அல்லது செல்வராஜா பத்மநாதன் கைதுசெய்யப்பட்டமை சர்வதேச சட்டத்திற்கு எதிரானது என்று சர்வதேச மன்னிப்புச்சபை கூறியுள்ளது.  செல்வராஜா பத்மநாதனின் கைது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சாம் ஷரிபி ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்;

எந்தவொரு நாடென்றாலும் புலி உறுப்பினர்களை கைதுசெய்திருந்தால் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும். கைதுசெய்யப்பட்ட நாட்டில் அவர்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

இலங்கைக்கு செல்வராஜா பத்மநாதனை கையளித்ததன் மூலம் சர்வதேச சட்டத்தை மலேசியா மீறியுள்ளதாக மனித உரிமை பணியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குற்ற சந்தேக நபர் உட்பட எவரையும் திருப்பி அனுப்புவதை சர்வதேச சட்டம் தடுக்கிறது. திருப்பி அனுப்பப்படும் நாட்டில் தவறாக நடத்தப்படுதல் தொடர்பான சாத்தியப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் சர்வதேச சட்டம் அதனை தடுக்கிறது என்று ஷரிபி கூறியுள்ளார்.

ஆதலால், கே.பி. எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது தொடர்பான சில உண்மையான கேள்விகள் உள்ளன’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கே.பி. மலேசியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டாரா இல்லையா என்பது பற்றி அந்த நாடு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

கே.பி. தொடர்பாக உரிய நீதியும், உரிய நடவடிக்கைகளும் இடம்பெறுவதை பார்க்க நாம் விரும்புகிறோம் என்று சாம் ஷரிபி கூறியுள்ளார்.

வவுனியா நகரில் தற்கொலைத் தாக்குதலுக்கான உபகரணங்கள் கண்டுபிடிப்பு

suicide_jacket.jpgவவுனியா நகரின் இரண்டாம் குறுக்குத் தெருவில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தக் கூடியது என்று சந்தேகிக்கப்படும் 3 டைமர்களும், 3 ரிமோட் கண்ரோல்களும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து இவை கண்டுபிடிக்கப்பட்டு, படையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்கொலைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படுவது போன்ற அங்கியொன்றில் பொருத்தப்பட்ட நிலையில் இந்த டைமர்களும், ரிமோட் கண்ரோலர்களும் கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் போடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் அவ்விடத்தைச் சுற்றி வளைத்து, இரண்டாம் குறுக்குத் தெருவின் அப்பகுதி போக்குவரத்தைத் தடை செய்தனர்.

குண்டுகளைச் செயலிழக்கும் படையினர் வந்து இந்தப் பொருட்களை எடுத்துச் சென்றதன் பின்னர் இந்த வீதியின் ஊடான போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

கே.பி.விவகாரத்தில் சர்வதேச சட்டம் எதுவும் மீறப்படவில்லை – அரசாங்கம் திட்டவட்டமாக அறிவிப்பு

pathmanathan.jpg
விடுத லைப்புலிகளின் புதிய தலைவரான கே.பி. அல்லது குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச சட்ட விதிகளை மீறிச் செயற்படவில்லை என உறுதிபடத் தெரிவித்திருக்கும் அரசாங்கம் சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்ட விதத்திலேயே சகலதும் இடம்பெற்றிருப்பதாகவும் சில உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைந்துள்ள ஊடகத்துறை அமைச்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கே.பி.கைது தொடர்பாக சர்வதேச நெருக்கடிக்குழு தெரிவித்திருக்கும் கருத்துகள் மிகவும் அவதானமாக நோக்கப்பட வேண்டியதாகவே காணப்படுகிறது. புலிகளை யுத்தத்தில் வெற்றி கொண்டபோதிலும் சர்வதேச மட்டத்தில் நிதி திரட்டுதல், சர்வதேச ஒத்துழைப்பை தம்பக்கம் ஈர்த்தெடுத்தல் போன்ற விடயத்தில் கே.பி. இயங்கும் வரை அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்பைப் பெற முடியாது போகும் என அது குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அரசாங்கம் இன்று அதில் வெற்றிகண்டுவிட்டது. இனி மேல் புலிகளின் பெயரால் எதனையும் செய்யக்கூடிய சிறிய முயற்சிக்குக் கூட இடம் கிடையாது. கே.பி.யை கைதுசெய்ய எடுக்கப்பட்ட மூன்றாவது முயற்சியிலேயே அது கைகூடியுள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதி பிரேமதாஸ எடுத்த முயற்சி ஆரம்பத்திலேயே கைநழுவிப்போனது. அடுத்த கட்டமாக ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்திலும் முயற்சிக்கப்பட்டது. அதுவும் இடைநடுவில் செயலிழந்து போனது. எனினும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சரியான வியூகம் அமைத்துச் செயற்பட்டதன் மூலம் காரியத்தை கச்சிதமாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடிப்பதில் படைத்தரப்பு தான் வெற்றி கண்டபோதிலும் அதற்குப் பின்புலமாக இருந்தது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தான். யுத்தத்தை வழிநடத்தியது அரசாங்கம் தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

கே.பி. கைது விவகாரத்தில் சர்வதேச சட்டம் மீறப்பட்டதாக சில சக்திகள் தெரிவிக்கின்றன. இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். சர்வதேச சட்டவிதிகளில் ஒரு துளியளவும் மீறப்படவில்லை. அவசியப்படும் போது அது குறித்து பாதுகாப்பு விளக்கமளிக்கும். பாதுகாப்புத்தரப்பு அமைச்சுடன் தொடர்புகொண்டால் இது குறித்து போதிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த விடயத்தில் இதற்கு மேலாக தம்மால் எதனையும் கூறமுடியாது என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மலுக்கு அபராதம்

saeedajmal.jpgநேற்று இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சங்கக்காராவை வீழ்த்திய பிறகு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயீத் அஜ்மல் அவரை வசை பாடியபடி பெவிலியன் நோக்கி செல்லுமாறு செய்கை செய்ததால் அவரது ஆட்டத் தொகையில் 15% அபராதம் செலுத்துமாறு ஆட்ட நடுவர்கள் உத்தரவிட்டனர்.

இலங்கை விளையாடும் போது 14-வது ஓவரில் இது நடந்தது. இந்த மோசமான நடத்தையை நடுவர்களான அஷோக டிசில்வா, விஜேவர்தனே ஆகியோர் கண்டித்தனர்.

இதனால் உடனேயே தவறை உணர்ந்த சயீத் அஜ்மல் இருவரிடம் மன்னிப்பு கேட்டதோடு, ஆட்டம் முடிந்த பின்பு சங்கக்கராவிடம் தன் தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார்.

ஐ.நா இலங்கைப் வதிவிடப் பிரதிநிதியாக டாக்டர் பாலித கோஹன தெரிவு

Dr Kohonaஐ.நா விற்கான இலங்கைப் வதிவிடப் பிரதிநிதியாக நியூ யோர்க்கில் தங்கியுள்ள எச்.எம்.எஸ் பலியகாரவின் இடத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித கோஹன நியமனம் பெறுகின்றார். எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்படுவதற்கு டாக்டர் பாலித கோஹகன பாரிய பங்களிப்பைச் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மடு ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் : வசதி, வாய்ப்புகள் திருப்தி எனவும் தெரிவிப்பு

madhush_2.jpgவிடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் நடத்தப்படும் முதலாவது மடு ஆலய திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து குழுமியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 6 ஆம் திகதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடு மாதாவுக்குத் தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர்.

சுமார் 30 ஆயிரம் மக்கள் இதுவரை எதுவித அச்சமோ தயக்கமோ இன்றி மடு அன்னையைத் தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.

முழு இரவும் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று புதன்கிழமை மட்டும் 13,000 பக்தர்கள் ஆலயத்தில் தங்கியிருந்தனர். பாதயாத்திரையாக வந்த சுமார் ஆயிரம் வாகனங்கள், உரிமையாளர்களின் வசதிக்கேற்ப பாதுகாப்பான இடங்களில் தரித்து வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்து வசதிகளும் சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை ஆலயத்துக்கு வந்த தமக்கு வழக்கத்தை விடவும் தாராளமான வசதி வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தாம் மகிழ்ச்சியுடன் மடு அன்னையின் பிரார்த்தனை, வழிபாடுகளில் கலந்து கொள்வதாகவும் அங்கு சென்று தங்கியுள்ள அடியார்கள் திருப்தி தெரிவிக்கின்றனர்.

யாழ் பஸ் சேவை வவுனியா வரையில் கட்டணங்களும் குறைப்பு

25sri-lankan-road.jpgயாழ்ப் பாணத்திலிருந்து மதவாச்சி வரை ஆரம்பத்தில் நடத்தப்பட்ட யாழ் பஸ் சேவை வவுனியா வரையிலுமே இப்போது நடத்தப்படுகின்றது. பயணிகள் வவுனியா பஸ் நிலையத்தில் இறக்கிவிடப்படுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவுக்கு 200 ரூபா மட்டுமே இப்போது கட்டணமாக அறவிடப்படுகின்றது. முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கென 475 ரூபா கட்டணமாக அறவிடப்பட்டு, பயணிகள் மதவாச்சி வரையில் கொண்டு சென்று இறக்கிவிடப்பட்டார்கள்.  எனினும் மதவாச்சியில் இருந்து இந்த பயணிகளுக்கான இணைப்பு பஸ் சேவைகள் சீராக இடம்பெறாத காரணத்தினாலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் மதவாச்சியில் பஸ் வண்டிகள் ஒழுங்கு படுத்தப்படாத காரணத்தினாலும், இந்த பஸ் சேவை வவுனியா வரையில் மட்டுமே நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காலை 11 அல்லது 11.30 மணிக்குப் புற்பபடும் பஸ் வண்டிகள் இராணுவத்தினரின் வழித்துணையுடன் தொடரணியாக வவுனியாவை பிற்பகல் 2 அல்லது 2.30 மணிக்கு வந்தடைகின்றன.

வவுனியா பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிடுகின்ற இந்த பஸ் வண்டிகள் வவுனியா கண்டிவீதியில் அமைந்துள்ள ரம்யா ஹவுஸ் இராணுவ சிவில் அலுவலகத்தில் யாழ்ப்பாணத்திற்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 5 மணி அல்லது 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி இராணுவ பாதுகாப்புடன் தொடரணியாகப் புறப்பட்டுச் செல்கின்றன.

வீதிச் சிறுவர்களை கண்டுபிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தகவல்

police_man.jpgபாடசா லைக்குச் செல்லாது வீதிகளில் கவனிப்பாரின்றி சுற்றித் திரியும் சிறுவர்களைத் தேடிக் கண்டு பிடிக்க பெண் பொலிஸார் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

பாடசாலை செல்லாதுள்ள அனைத்து சிறுவர்களையும் கண்டுபிடிக்குமாறு கொழும்பு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாறான சிறுவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் பெண் பொலிஸார் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வார்கள். இரவுவேளைகளில் சிறுவர்கள் பிடிக்கப்பட்டால் அவர்கள் நகரிலுள்ள பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுவார்கள்.ஆனால் சிறுவர்கள் விளக்கமறியல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட மாட்டார்கள். பிடிக்கப்படும் சிறார்களின் பெற்றோரோ பாதுகாவலர்களோ கண்டுபடிக்கப்பட்டால் அவர்கள் அழைப்பாணை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவார்கள்.

இவ்வாறான சிறுவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் பணிக்கும். அக்குடும்பங்களிடம் அதற்கான பண வசதி இல்லாவிட்டால் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்கும். இலங்கையில் 14 வயது பூர்த்தியாகும் வரை அனைத்து சிறார்களும் பாடசாலைக் கல்வியை கட்டாயமாக பெறவேண்டும் என்பது சட்டமாகும் என்றும் அவர் கூறினார்