பாகிஸ் தானுடனான முதல் 20க்கு 20 போட்டியில் 52 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இலங்கை அணி. இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் 20க்கு 20 போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இரவுப் போட்டியாக நடைபெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றியிட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணிக்கு சஹிட் அப்ரிடி தலைமை தாங்கினார் அவர் தலைமை தாங்கிய முதல் 20க்கு 20 போட்டியில் 37 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை இம்ரான் 28 பந்துகளை எதிர் கொண்டு 40 ஓட்டங்களையும் பெற்றார். இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய உமர் அக்மல் 20 பந்துகளை எதிர் கொண்டு 30 ஓட்டங்களைப் பெற்றார். இலங்கை அணியின் பந்து வீச்சைப் பொறுத்தவரையில் துஷாரா 2 விக்கெட்டையும், குல சேகர, மெத்திவ், மலிங்க தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணி 6.1 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி 100 ஓட்டங்களை 12.1 பந்துகளில் பெற்றது. இதேவேளை 4வது விக்கெட் இணைப்பாட்டமாக 50 ஓட்டங்கள் பெறப்பட்டது. அப்போது அப்ரிடி 21 ஓட்டங்களையும், உமல் அக்மல் 28 ஓட்டங்களையும் உதிரியாக ஒரு ஓட்டமும் பெறப்பட்டிருந்தது.பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்களை 17.5 பந்து களில் பெற்றது. 20 ஓவர் முடிவில் 172 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்தது.
173 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனப் பதிலெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் சங்கக்கார 38 ஓட்டங்களையும் ஜயசூரிய 23 ஓட்டங்களையும் பெற்றனர். எனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றனர்.
பந்து வீச்சில் நவிட் 3 விக்கெட்டையும் அஜ்மல் 3 விக்கெட்டையும் அப்ரிடி, ஆமிர், அன்ஜும் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதேவேளை பாகிஸ்தான் அணி நாங்கள் தான் 20க்கு 20 உலக சம்பியன் என்பதை மிண்டும் நிரூபித்துவிட்டது மட்டுமல்லாமல் இப்போட்டியில் வெற்றியீட்டி கிண்ணத்தைக் கைப்பற்றியது. ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவானார்.