15

15

யாழ்நகரில் வீதி விளக்குகள் எரிய வேண்டுமென பணிப்பு

யாழ்நகரப் பகுதியெங்கும் வீதி விளக்குகள் எரிய வேண்டும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.சந்திரசிறி பணித்துள்ளார். சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த யோசனைக்கமைய இப்பணிப்புரையை விடுத்துள்ள ஆளுநர், யாழ்நகரப் பகுதிகள் தோறும் வீதி விளக்குகள் எரிய வேண்டும் என்றும் யாழ். உள்ளூராட்சி சபையும் மின்சார சபையும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களில் பரீட்சார்த்திகள் மிகவும் ஆர்வம் உயர்தர பரீட்சைக்கு மாணவர் 100 வீத பங்களிப்பு

000stud.jpgக.பொ.த உயர்தர பரீட்சைகள் ஆரம்பமான தினம் முதல் இன்று வரை நிவாரணக் கிராமங்களிலுள்ள பரீட்சார்த்திகள் மிகவும் ஆர்வமுடன் பரீட்சைக்குத் தோற்றுவதாகவும் 100 வீதம் மாணவர்களின் பங்களிப்பு உள்ளது என்றும் வவுனியா தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ரஞ்ஜனி ஒஸ்வர்ல்ட் தெரிவித்தார். சரணடைந்தவர்களுள் 27 மாணவிகள் காமினி வித்தியாலயத்திலும் 138 மாணவர்கள் பம்பைமடு வளாக முகாமிலும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

இவர்களுடன் நிவாரணக் கிராமங்களில் 1190 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். கலைத்துறையில் 771 மாணவர்களும், வர்த்தக துறையில் 230 மாணவர்களும், கணித துறையில் 64 மாணவர்களும், உயிரியல் விஞ்ஞானத்தில் 125 மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்

புதிய 6 உதவி ஆளுநர்களை நியமித்தது மத்திய வங்கி

மத்திய வங்கி 6 அதிகாரிகளை உதவி ஆளுநர்களாக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் பதவி உயர்த்தியுள்ளது.  டபிள்யூ.எம்.கருணாரட்ண, பி.லியனகே, ஜே.பி.மாம்பிட்டிய, சி.கே.நாணயக்கார, பி.டி.டபிள்யூ.ஏ.சில்வா, பி.என்.வீரசிங்க ஆகியோரே உதவி ஆளுநர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் புதிய சவால்களுக்கு தீர்வு காணும் விதத்தில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  மத்திய வங்கியில் 30 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் பிராந்திய அபிவிருத்திப் பணிப்பாளர் கருணாரட்ணவுக்கு முகவர் செயற்பாடுகளுக்கு (பிராந்திய அபிவிருத்தி) பொறுப்பான உதவி ஆளுநராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

30 வருடங்கள் சேவையாற்றியிருக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கான முன்னாள் பணிப்பாளர் லியனகே பொருளாதார விலை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

28 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் கொடுப்பனவுகள், செலுத்துகைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் மாம்பிட்டிய நிதிமுறைமை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்கியில் 34 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் செயலாளர் நாணயக்கார ஒருங்கிணைப்பு சேவைகளுக்கு (மனித வளமுகாமைத்துவம்) பொறுப்பான உதவி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியில் 26 வருடங்கள் சேவையாற்றிய வங்கிமேற்பார்வை பணிப்பாளர் சில்வா, நிதி முறைமை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராகவும் 18 வருடங்கள் சேவையாற்றிய முன்னாள் பிரதம பொருளியலாளரும் பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளருமான வீரசிங்க பொருளாதார விலை ஸ்திரத்தன்மைக்கு பொறுப்பான உதவி ஆளுநராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

இந்திய வம்சாவளி இலங்கை பிரஜைகளின் பிரச்சினை – கொழும்பில் 22இல் உயர்மட்ட மாநாடு

sri-lanka-tea.jpgஇந்திய வம்சாவளி இலங்கைப் பிரஜைகளின் கல்வி நிலை மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராயும் மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறுகின்றது. இதனை வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளி பிரஜைகளின் சர்வதேச அமைப்பான ‘கோபியோ’ ஏற்பாடு செய்துள்ளது.

ஐந்து அமர்வுகளாக நடைபெறும் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வு எம். மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெறும். இவ் ஆரம்ப நிகழ்வில் ‘கருத்தரங்கின் குறிக்கோளும் அடிப்படை வசதிகளும்’ எனும் தலைப்பில் கோபியோவின் சர்வதேசத் தலைவர் பி. பி. தேவராஜ் உரையாற்றுவார். முதலாவது அமர்வு குமார் நடேசன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக கல்வித்துறைத் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன் ‘அறிவுப் பொருளாதார வளர்ச்சிக்கு கல்வியின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

இரண்டாவது அமர்வு தெ. ஈஸ்வரன் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் பெருந் தோட்டப் பகுதிகளில் இந்திய வம்சாவழி இலங்கை பிரஜைகளின் தற்போதைய கல்வி நிலை குறித்து மத்திய மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை மத்திய மாகாண அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் சமர்ப்பிப்பார். அத்துடன் என். வாமதேவன் ‘பெருந்தோட்ட சமூகத்திற்கு கல்வியுடன் கூடிய தேசிய சமூக அபிவிருத்தித் திட்டமும் நடவடிக்கை யும்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

ராஜு சிவராமன் தலைமையில் நடைபெறும் மூன்றாவது அமர்வில் கல்விப் பிரச்சினைகள் குறித்து ஆழமாக குழுநிலையில் ஆராயப்படும். அத்துடன் ‘முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி’ எனும் தலைப்பில் சி. நவரட்ண உரையாற்றுவார். ரி. தனராஜ் ‘கல்வியாளர்களுக்கான முகாமைத்துவ தொழில்சார் அபிவிருத்தி’ எனும் தலைப்பில் உரையாற்றுவார். பேராசிரியர் எம். எஸ். மூக்கையா தலைமையில் பேராசிரியர் எம். சின்னத்தம்பி, டாக்டர். ஏ. எஸ். சந்ரபோஸ் ஆகியோர் கலந்துகொள்ளும் ‘மூன்றாம் நிலைக் கல்வி’ தொடர்பான குழுநிலைக் கலந்துரையாடலும் இடம்பெறும்.

நான்காவது அமர்வு டாக்டர். எஸ். செளலா தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி அமைச்சர் பி. இராதாகிருஷ்ணன் ‘தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சித் துறையிலுள்ள வசதி வாய்ப்புக்கள்’ எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

ஐந்தாவது அமர்வு எம். முத்துசாமி தலைமையில் இடம்பெறும். இந்நிகழ்வில் இந்திய தூதரகத்தின் முதலாவது செயலாளர் ஆர். ஸ்ரீவஸ்தவா கலந்துகொண்டு உரையாற்றுவார். அத்துடன் ஏ.கே. சுப்பையா மற்றும் ஆர். விஜயலிங்கம் ஆகியோர் கலந்துகொள்ளும் கருத்தாடலும் இடம்பெறும்.

பஹ்ரைன் 20 மெ. தொன். பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பு

புனித ரமழானை முன்னிட்டு பஹ்ரைன் அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்கென 20 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்களை அனுப்பி வைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பஹ்ரைன் பிரதமர் கலீபா பின் சல்மான் அலி ஹலிபா அவர்களிடம் அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி விடுத்த வேண்டுகோளுக்கு அமையவும் இலங்கை-பஹ்ரைன் நல்லுறவைப் பேணும் விதத்திலும் பஹ்ரைன் இதனை அனுப்பி வைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினூடாக பணிப்பாளர் மேலும் கூறினார்.

அப்பலோ மருத்துவமனை பணிப்பாளர்களில் ஒருவராக கோத்தபாய நியமனம்

gothabaya.jpgஇலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தினால் நிர்வகிக்கப்படும் கொழும்பு அப்பலோ மருத்துவமனையின் பணிப்பாளர்களில் ஒருவராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்பலோ மருத்துவமனையின் உரிமையாளர்களான லங்கா ஹொஸ்பிடல்ஸ் கோர்ப்பரேஷன் நிறுவனத்தினர், இந்த நியமனம் குறித்து கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளனர்.

வைத்தியசாலையின் அதிகளவான பங்குகளைக் கொண்டுள்ள இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் சார்பிலேயே கோத்தபாய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை தனியார்மயப்படுத்தியமை தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக தெரிவித்த உயர்நீதிமன்றம், கூட்டுத்தாபனத்தை கடந்த ஜூன் மாதம் பிரபல வர்த்தகரான ஹெரி ஜெயவர்தனவிடம் இருந்து பெற்று அரசாங்கத்திடம் ஒப்படைத்தது.

இந்திய அப்பலோ நிறுவனம் நிர்மாணித்த அப்பலோ மருத்துவமனையின் அதிகளவான பங்குகளை கடந்த 2006 ஆம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை நிர்வகித்து வந்த ஹெரி ஜயவர்தன கொள்வனவு செய்திருந்தார். 

காதல் ஜோடியிடம் 10,000 ரூபா இலஞ்சம் வாங்கிய கான்ஸ்டபிள் கைதானார்

10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வியாழக்கிழமை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  கெக்கிராவ பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இவர் காதல் ஜோடியிடம் இருந்து இதனை வாங்கும் போதே கைது செய்யப்பட்டார்.

சில தினங்களுக்கு முன்னர் இந்தக் காதல் ஜோடி கலாஓயா குளக்கட்டில் தனிமையில் இருந்து உரையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் அவர்களின் அடையாள அட்டைகளைப் பார்த்துவிட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவ்வாறு செய்யாதிருக்க 15 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாகத்தர வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

தம்மால் 15 ஆயிரம் ரூபாவைத் தர வசதியில்லை எனவும் 10 ஆயிரம் ரூபாவை தருவதாகவும் அந்த இளைஞனும் யுவதியும் தெரிவித்தனர்.

இதனையடுத்து இளைஞனின் வாகன அனுமதிப்பத்திரம், மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் என்பனவற்றைப் பெற்றுக் கொண்டு 10 ஆயிரம் ரூபாவைத் தந்துவிட்டு அவற்றை மீளப்பெறுமாறும் பொலிஸ் கான்ஸ்டபிள் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த இளைஞனும் யுவதியும் இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவுக்கு முறையிட்டிருந்தனர். ஆணைக்குழுவின் ஆலோசனையின்படி இளைஞனும் யுவதியும் நேற்று வியாழக்கிழமை கெக்கிராவ நகரில் வைத்து அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் 10 ஆயிரம் ரூபாவைக் கொடுத்தனர்.

அங்கு ஏற்கனவே மறைந்து நின்ற இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அந்தக் கான்ஸ்டபிளை கையும் மெய்யுமாகப் பிடித்தனர்.

வன்னி நடவடிக்கையின் போது அநாதரவான இரண்டு குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க பணிப்பு

வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து அநாதரவான நிலையில் யாழ். சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலுள்ள பெற்றோரிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கினார்.

சுமார் 3 வயது மதிக்கத்தக்க மைதிலி என்ற பெண் குழந்தையும், சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையும் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாமல் நேற்றுவரை சாவகச்சேரி ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சாவகச்சேரி ஆஸ்பத்திரியின் புதிதாக கட்டப்பட்டுவரும் வார்ட் தொகுதியை பார்வையிடுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆளுநர் ஆஸ்பத்திரிக்குச் சென்ற போதே மேற்படி இரண்டு குழந்தைகளையும் கண்டார். இவ்விரண்டு குழந்தைகளும் வவுனியா செட்டிக்குளத்திலுள்ள தாய், தகப்பனுடன் இன்று இணைகின்றன.