16

16

மனித உரிமை மீறல் மோசமடைவதுடன் பொலிஸ் அடாவடித்தனமும் அதிகரிப்பு – ஐ.தே.க.

நாட்டில் இன்று பொலிஸ் அடக்குமுறை தலைவிரித்தாடத் தொடங்கியிருப்பதாக கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, அடுத்தடுத்து மாணவர்களும், இளைஞர்களும் பொலிஸ் அடாவடித் தனத்துக்குள்ளாக்கப் பட்டுவருவதாகவும் விசனம் தெரிவித்தது. பொலிஸ் தலைமையகமும் பிராந்திய பொலிஸ் உயரதிகாரிகளும் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

பயங்கரவாதம் நாட்டில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும் அமைதியும் சுமுக நிலையும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் உள்நாட்டிலும் சர்வதேசமட்டத்திலும் பிரசாரம் செய்துவரும் அரசாங்கம், மறுபுறத்தில் தமக்கு எதிரானவர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை மறைமுகமாக முன்னெடுத்துள்ளதை காணமுடிகிறது. மிகமோசமாக மனித உரிமை மீறப்படும் நாடாக இலங்கை மாறிவருகிறது.  மன்னாரிலிருந்து குண்டு நிரப்பிய வாகனம் வந்ததாகவும் அதனை ஒரு உயர் பொலிஸ் அதிகாரி கண்டுபிடித்ததாகவும் பொலிஸ் தலைமையகமும் பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகரவும் தெரிவித்துள்ளனர். மறுபுறத்தில் வட பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் நிமல் லெவ்கே அப்படியொரு வாகனம் வந்தமைக்கான ஆதாரமெதுவுமே கிடையாதென பகிரங்கமாகவே அறிவித்துள்ளார். இதுவொரு நாடகமாகவே இன்று காணப்படுகிறது.

இந்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட பொலிஸ் உயரதிகாரியும் அவரது மனைவியும் மகனும் மாலபேயிலுள்ள தகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் நிபுண ராமநாயக்க மீது மேற்கொண்ட அடாவடித்தனமான செயல்கள் தொடர்பில் அரசாங்கமோ பொலிஸ் தலைமையகமோ இன்று வரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை மூடி மறைப்பதற்காகவே இந்த குண்டு வாகன விவகாரத்தை பெரிதுபடுத்திக்காட்ட முனைகின்றனர்

இதற்கிடையில் கம்பஹா மாவட்டத்தில் சேவைபுரியும் பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் புலிகளிடமிருந்து அவருக்குப் பெரும் தொகை நிதி கைமாறப்பட்டிருப்பதாகவும் தெரியவந்ததையடுத்து அந்த அத்தியட்சர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கை பேணவேண்டிய பாதுகாப்புத் தரப்பினரே அவை மீறப்படுவதற்கு துணை போயிருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.

இது இவ்விதமிருக்க, அங்குலானையில் இரு இளைஞர்கள் பொலிஸ் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததையடுத்து அப்பகுதி யுத்தகளமாக மாறியுள்ளது. மாலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை பெற்றோர்கள் பார்க்கச் சென்றபோது காலையில் வருமாறு அங்குலான பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலையில் போனபோது மொரட்டுவ, அல்லது கல்கிஸை பொலிஸில் போய்ப்பார்க்கும் படி கூறியுள்ளனர். இதற்கிடையில் அந்த இளைஞர்கள் இருவரும் லுனாவை பாலத்திற்கருகில் சடலங்களாக போடப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்தே பிரதேச மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுபோன்ற மோசமான, கண்டிக்கத்தக்க வெறியாட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னணியில் பெரும் அரசியல் சக்தி ஒன்று காணப்படுவதாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.  நாட்டில் இன்று ஜனநாயகம் காணப்படவில்லை. பொலிஸ் அதிகார இராஜ்ஜியமொன்று படிப்படியாக உருவாகிவருகிறது. இந்த நிலை தொடருமானால் நாட்டில் அராஜகமும் படுகொலைகளும் வீதிக்கு வீதி இடம்பெறலாம் என்ற அச்சம் தலைதூக்கியுள்ளது.

இத்தகைய வெறியாட்டங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கின்றது. ஜனநாயகமும் மனித உரிமைகளும் சுதந்திரமும் முற்று முழுதாகக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

2002 இல் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை அமைத்ததன் மூலம் சட்டம், ஒழுங்கு சீராகப் பேணப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு பதவிக்கு வந்த பின்னர் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை. சுயாதீன ஆணைக்குழு இருந்தால் இன்று நடக்கும் எத்தகைய அடாவடித்தனமும் இடம்பெற்றிருக்காது.  அரசாங்கம் தொடர்ந்தும் இவ்விடயத்தில் மௌனப் போக்கைக் கடைப்பிடித்தால் நாடு மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம். தவறிழைத்தவர்களை, குற்றவாளிகளை உடனடியாகச் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் சட்டத்தைக் கையிலெடுக்கும் நிலைமை உருவாவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது போகலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் துரிதம் – வடமாகாண ஆளுநர் அறிவிப்பு

north-governor.jpgமோதல் கள் காரணமாக இடம் பெயர்ந்தவர்களை யாழ்.  மாவட்டத்தில்  மீளக் குடியமர்த்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். திருமலை மற்றும் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் செயற்திட்ட அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆளுநர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டம் வடமாகாணம் முழுவதும் வெற்றிகரமான முறையில் மேற்கொள்ளப்படுகின்றது.  இதுதவிர யாழ் மாவட்ட மீனவர்கள் மற்றும்  பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகாணும் பொருட்டு பாதுகாப்புதரப்புடன் தான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலாபூஷண விருதுக்கு தெரிவானவருக்கு இன்னமும் பணம், சான்றிதழ் இல்லை

கடந்த வருடம் (2008) கலாபூஷணம் விருதுக்கென கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சமய,சமூக சேவையாளரான நாகலிங்கம் வியாக்கிரத பாதர் என்பவருக்கு விருதுக்குரிய பணமும் சான்றிதழும் வழங்கப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வில் யுத்த நிலைமை காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாது போய்விட்டது. இவ்வருடம் ஜனவரி 6 ஆம் திகதி கிளிநொச்சி செயலகத்தில் இவ்விருது வழங்கப்படுமென அரச அதிபர் அறிவித்திருந்த போதும் இடம்பெயர்வு காரணமாக அவ்வேளையிலும் அவரால் விருதைப்பெற்றுக்கொள்ள முடியவில்லை.

செட்டிக்குளம் முகாமில் தங்கியிருந்த இவர் தற்போது வவுனியா தோணிக்கல்லில் தங்கியிருக்கும் நிலையில் வவுனியாவில் இயங்கும் கிளிநொச்சி அரச அதிபர் அலுவலகத்தில் விருதைக் கோரியபோது அதற்குரிய ஆவணங்கள் தம்மிடம் இல்லையென்றும் அவற்றை கிளிநொச்சி தர்மபுரத்தில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக மிகவும் வறுமை நிலையில் இருக்கும் இம்முதியவர் தன் நிலை கருதி தனது விருதையும் பணத்தையும் சான்றிதழையும் வழங்கி உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓட்டப் போட்டியில் தமிழ் அரசியல் தலைமைகள் : த ஜெயபாலன்

Election_Campaign_in_Jaffnaதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் சடுதியான அழிவு தமிழ் மக்களுடைய அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்திய புலிகளின் ஒற்றைப் பரிமாண அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இது பன்மைத்துவ அரசியலுக்கு வித்திட்ட போதிலும் மூன்று சகாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருந்த புலிகள் மே 18ல் ஒரு சில மணிநேரத்திலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது சர்வதேசத்திற்குமே அதிர்ச்சியாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுக்கு வலிந்து நிறுவிய ஏகதலைமைத்துவமும் இத்தலைமைத்துவத்தின் துதிபாடிகளும் தமிழ் மக்கள் மத்தியில் காத்திரமான அரசியல் உரையாடலைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்தன. காத்திரமான அரசியல் தலைமைகள் உருவாகிவிடக் கூடாது என்பதிலும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இதன் விளைவு தற்போது தமிழ் மக்களுடைய அரசியலை முன்னெடுப்பதற்கான அரசியல் தலைமைத்துவம் வெற்றிடமாக்கப்பட்டு உள்ளது. இவ்வெற்றிடத்தை நிரப்புவதற்கான மரதன் ஓட்டங்களில் பல்வேறு அரசியல் சக்திகளும் ஈடுபட்டு உள்ளன. இவை பெரும்பாலும் இலங்கை அரசு வரைந்துள்ள எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே தங்கள் ஓட்டங்களை ஓடக் கூடியனவாக உள்ளன.

மே 18ல் இலங்கை அரச படைகள் வெற்றி கொண்டது தமிழீழ விடுதலைப் புலிகளையே அன்றி தமிழ் மக்களையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளோ அதன் காலம்சென்ற தலைவர் வே பிரபாகரனோ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் எப்போதும் பிரதிநிதித்துவப்படுத்தியதில்லை. தங்கள் இருப்பை உறுதிப்படுத்துவதற்கு தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை பயன்படுத்திக் கொண்டனர். தங்கள் இருப்புக்கு தமிழ் மக்களை பணயம் வைக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அவர்கள் அதற்கும் தயங்கவில்லை. எல்லாவற்றினதும் உச்சகட்டமாக ஒட்டு மொத்த வன்னி மக்களையும் இலங்கை அரசபடைகளின் போர் இயந்திரங்களுக்கு முன் நிறுத்தி அம்மக்கள் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்படுவதற்கும் பல்லாயிரக் கணக்கானோர் ஊனமாவதற்கும் இரண்டு லட்சத்து எண்பதிணாயிரம் மக்கள் முகாம்களில் அடைக்கப்படுவதற்கும் வழிவகுத்து உள்ளனர்.

இதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏகதலைமை மட்டுமல்ல அதற்கு துதிபாடிய பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்காவில் இயங்கும் பேர்ள் அமைப்பு, பிரான்ஸில் உள்ள புலிகளின் மனித உரிமை அமைப்பு, கனடாவில் உள்ள உலகத் தமிழர் இயக்கம் இப்படி புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ஐபிசி, ஒரு பேப்பர், ஈழமுரசு, ஜிரிவி, தீபம் போன்ற ஊடகங்களும் அவற்றில் அரசியல் அவியல் படையல் செய்தவர்களும் பொறுப்பானவர்கள்.

அரசியல் தந்திரோபாயம் என்ற பெயரில் அல்லது மக்களை விடுவிக்கும்படி புலிகளைக் கோருவது தத்துவார்த்த ரீதியில் பொருத்தமற்றது அது இலங்கை அரசுக்கே உதவும் என்று மௌனமாக சில அரசியல் ஆர்வலர்கள் அமைப்புகள் இருந்துள்ளன. குறிப்பாக கனடாவில் உள்ள தேடகம் போன்ற தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இனம்காணப்படாத அமைப்புகளின் அரசியல் பலவீனமும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று புலி எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்காக வன்னியில் நிகழ்ந்த அவலத்தில் இலங்கை அரசின் பாத்திரம் பற்றி புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள பல குழுக்கள் மௌனம் சாதித்தன. இவர்களது மௌனமும் ஆபத்தானதே.

தற்போது தமிழ் சூழலில் அரசியல் மரதன் ஓடுபவர்களுக்கு குறைவில்லை. புலிகளின் புதிய தலைவர் கே பி ஓரடி வைக்கு முன்னரேயே கவிழ்ந்துவிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி, அவரோடு கூட்டுச் சேர்ந்த ஈபிஆர்எல்எப் தலைவர் சுகு, புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் முதல் சுற்றிலேயே தடக்கி வீழ்ந்துவிட்டனர். இவர்கள் மீண்டும் தங்களைச் சுதாகரித்துக் கொண்டு ஓடுவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்கள்’இன் நிலையே இப்படி இருக்க சிறிரெலோ, ஈரோஸ் என்று தத்தித் தத்தி மரதன் ஓடத் தொடங்கியவர்கள் பற்றி என்ன சொல்ல. கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன், அமைச்சர் கருணா, அமைச்சர் டக்ளஸ் இவர்களும் தமிழ் மக்களுக்காகவே ஓடுவதாகக் கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக ஓடுகிறார்களா என்ற சந்தேகம் வலுவாகவே உள்ளது. இவர்களைவிடவும் இத்தலைவர்களுக்கப் பின்னால் பெரும் கூட்டம் ஒன்று புலம்பெயர்நாடுகளிலும் ஓடுகின்றனர். அதைவிட புலிகளின் தலைமையைப் பிடிப்பதற்கு புலிகளுக்குள்ளும் சில இடையோட்டங்கள் நடக்கின்றது.

இவ்வாறான பல்வேறு ஓட்டங்களுக்கு இடையே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுவதற்கான அவசியமும் அவசரமும் தற்போது ஏற்பட்டு உள்ளது. தனித்து சுயநலன்களுடன் ஓடும் மரதனோட்டக்காரர்களை பின்னடித்து இவர்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழ் சமூகமும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை கையிலெடுத்து ஓடுபவர்களை அடையாளம் கண்டு அவர்களை பலப்படுத்துவதே இன்றைய தேவையாக உள்ளது.