பங்களா தேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி 194 ஓட்டங்கள் எடுத்து பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் உலக சாதனையை சமன் செய்தார். இப்போட்டியில் பங்களாதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.
ஜிம்பாப்வே சென்றுள்ள பங்களாதேச அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-1 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் நான்காவது போட்டி நேற்று புலவாயோ நகரில் நடந்தது.
இதில் ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. ஆரம்ப வீரர் வெர்மூலன் 5 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து மூன்றாவது வீரராக சார்லஸ் கவன்ட்ரி வந்தார். அதிரடியாக துடுப்பாட்டம் செய்த இவர் வரிசையாக சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசினார். இவருக்கு மட்சிகின்யெரி (37 ) ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார்.
மற்ற வீரர்கள் சொல்லி கொள்ளும்படி துடுப்பெடுத்து ஆடவில்லை. என்றாலும் கவன்ட்ரி தொடர்ந்து துடுப்பெடுத்தாடி 7 சிக்சர், 16 பவுண்டரி உட்பட 156 பந்தில் 194 ஒட்டங்கள் எடுத்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் சையத் அன்வரின் 12 ஆண்டு கால சாதனையை சமன் செய்தார்.
இதையடுத்து ஜிம்பாப்வே 50 ஓவரி்ல் 8 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்கள் எடுத்தது.
கடின இலக்கை நோக்கி துடுப்பாட்டம் செய்த பங்களாதேச அணிக்கு தமிம் இக்பால் சிறந்த ஆரம்பத்தை வழங்கினார். இவர் 154 ஒட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பாதை நோக்கி அழைத்து சென்றார். சித்திக் 38, ஹசன் 35, மகமூத்துல்லாஹ் 21 ஓட்டங்கள் எடுத்தனர்.
பங்களாதேசம் 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 313 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து பங்களாதேசம் 3-1 என தொடரை கைப்பற்றியது.