ஒற்றைப் பரிமாண ஏக தலைமைத்துவ அரசியல் இயக்கம் மே 18ல் தனது வரலாற்று முடிவைச் சந்தித்ததைத் தொடர்ந்து பன்மைத்துவ அரசியல் செயற்பாடுகள் தீவிரமாகி உள்ளது. உறங்கு நிலையில் தங்கள் அரசியல் அபிலாசைகளை தக்க வைத்துக் கொண்டவர்கள் பலரும் தற்போதுள்ள சூழலை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகக் கவனமாக உள்ளனர்.
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் புலிகளும் புலிகள் அல்லாத பிரிவினரும் ஈடுபட்ட உள்ளனர். இவர்களை பெரும்பாலும் மூன்று வகைக்குள் கொண்டுவரமுடியும்.
அ) புலி ஆதரவாளர்கள் – தேசியத் தலைவர் வே பிரபாகரனின் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து அவர் கொள்கை வழி செல்ல வேண்டுமென்பவர்கள்.
ஆ) அரச ஆதரவு சக்திகள் – இலங்கை அரசுடன் அனுசரித்து நடந்தே தீர்வை ஏற்படுத்த முடியும் என நம்புகின்றனர்.
இ) அரசுடனும் புலிகளுடனும் தங்களை அடையாளப்படுத்தாத அணி சேரா அணி.
இம் மூன்று அரசியல் பிரிவுகளைச் சார்ந்தவர்களும் வெவ்வேறு வகையான தீர்வுகளை நோக்கி செயற்படுகின்றனர்.
அ) தமிழீழ் – புலிகள் தங்களுக்குள் முரண்பட்டாலும் கொள்கையளவில் தமிழீழத்தைக் கைவிடவில்லை. அவ்வாறு கைவிடும் பட்சத்தில் அவர்கள் புலிகள் என்ற அடையாளத்தைக் கொண்டிருக்க முடியாது. அதே சமயம் புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ள சிறு பிரிவினரும் கொள்கையளவில் தமிழிழத்தை தொடர்ந்தும் வைத்துள்ளனர்.
ஆ) ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு – புலிகளுடனும் அரசுடனும் அணி சேரா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இம்முடிவிலேயே ஏற்கனவே இருந்தனர். இன்று இவர்கள் தீவிரமாக இதனை வலியுறுத்துகின்றனர். அதேசமயம் புலிகளின் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி தமிழீழம் சாத்தியப்படாது என்ற முடிவுக்கு இன்னும் சிலரை நிர்ப்பந்தித்து உள்ளது.
இ) இலங்கை அரசு தருவதை பெற்றுக் கொண்டு நகர்வது – இயலாமையின் மொத்தத் தீர்வாக இது உள்ளது. பெரும்பாலும் தீவிர புலி எதிர்பாளர்களும் அரச ஆதரவு அணியினரும் இந்நிலையில் உள்ளனர்.
இம்முரண்பட்ட அரசியல் பிரிவினர் முரண்பட்ட அரசியல் முடிவுகளுடன் உள்ளனர். இவ்வாறான தமிழ் அரசியல் சக்திகளிடையே குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தி தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான குறைந்தபட்ச வரையறையை நிர்ணயம் செய்வது இன்று காலத்தின் அவசியமாக உள்ளது. இதன் மூலம் பல்வேறு முரண்பட்ட அரசியல் சக்திகள் தற்போதுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முற்பட்டாலும் அவர்கள் குறைந்தபட்ச வரையறைக்குக் கீழ் செல்வதை தமிழ் அரசியல் சமூகம் தடுத்து நிறுத்த முடியும்.
இதையொட்டிய இரு சந்திப்புக்களை தேசம்நெற் ஒழுங்கு செய்திருந்தது. முதலாவது சந்திப்பு யூன் 21இலும் இரண்டாவது சந்திப்பு ஓகஸ்ட் 2 இலும் இடம்பெற்றது. இவ்விரு நிகழ்வுகளுக்கும் பேரின்பநாதன் தலைமை வகித்தார்.
._._._._._.
யூன் 21ல் இடம்பெற்ற முதற் சந்திப்பு அடுத்த கட்ட நகர்வை நோக்கிய பன்மைத்துவ அரசியல் கலந்துரையாடல் என்ற தலைப்பில் இடம்பெற்றது. பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தும் 40க்கும் மேற்பட்டவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர். இக்கலந்துரையாடலில் பின்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
அ)
வசந்தன் : கடந்த காலப் போராட்டம் பௌத்த பிக்குக்களையும் இஸ்லாமியரையும் மற்றும் பலரையும் துரோகிகள் ஆக்கிவிட்டது. எங்களுடைய அரசியல் முன்னெடுப்பிற்கு தமிழீழம் என்பதே முட்டுக்கட்டையாக அமைந்தது.
பாண்டியன் : ஒரு சமூகம் தான் தன்னை எவ்வாறு அடையாளப்படுத்த வேண்டும் என்பதனைத் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு தமிழீழம் வேண்டுமா இல்லையா என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தக்கு வேண்டாம் என்பதற்காக எங்களுக்கும் வேண்டாம் என்ற முடிவுக்கு நாங்கள் வர வேண்டியதில்லை. குறிப்பாக பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். 1) உண்மையறியும் குழுவொன்று அவசியம். 2) ஆயுதப் போராட்டம் தேவையா? இல்லையா? 3) அதிகாரப் பரவலாக்கம் தமிழ் மக்களுக்கு மட்டுமா? அல்லது அனைவருக்குமா? 4) 13வது திருத்தச் சட்டம் ஏற்கனவே உள்ளது. 5) குடியேற்றம்
ரவி சுந்தரலிங்கம் : தமிழ் மக்கள் தேசிய இனமா என்பதில் எனக்கு கேள்விகள் உண்டு. இலங்கை மக்களுக்கு பொதுவான பிரச்சினைகள் பல உண்டு. அவர்கள் தங்களை பொதுவாகவும் அடையாளம் காண்கிறார்கள். ஒரு பொதுத் தேசியம் ஒன்றை உருவாக்குவது பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும்.
நிஸ்தார் மொகமட்: ரிஎன்ஏ தங்கள் பதவிகளைத் துறந்து மறு தேர்தலுக்கு தயாராக வேண்டும். ரெடிமேட் தீர்வுகள் எதுவும் சரிவராது. அனைவரையும் உள்வாங்கிய ஒரு தீர்வுக்கு தயாராக வேண்டும்.
சார்ள்ஸ் : இலங்கையில் தமிழர்கள் தமிழன் என்ற காரணத்தினாலேயே ஒடுக்கப்படுகிறார்கள். புலிகளுடைய தோல்வி செப்ரம்பர் 11க்குப் பின்னர் விடுதலை அமைப்புகளுக்கு ஏற்பட்ட தோல்வியின் தொடர்ச்சியே. தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை.
பாலசுகுமார் : ஊரில் உள்ளவர்கள் கோபத்துடன் உள்ளார்கள். அவர்களது கோபம் நியாயமானது. இதுவெல்லம் ஏன் நடந்தது எனக் கேட்கிறார்கள். ஊரில் உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பது மிக முக்கியம்.
கணநாதன்: தமிழர்களுடைய போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டம் சரியானதா இல்லையா என்பதை எப்படி தீர்மானிப்பது? மக்கள் இன்னமும் மிகுந்த ஒடுக்கு முறைக்குள் தள்ளப்பட்டு உள்ளார்கள். இலங்கை அரசு தற்போது தனது ஒடுக்குமுறையை மேலும் தூண்டியுள்ளது. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளுக்கான எந்தத் தீர்வையும் இலங்கை அரசு முன்வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. இடம்பெயர்ந்து முகாம்களில் அடைக்கப்பட்டு உள்ளவர்களின் தேவைகள் உடனடியானது. அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சேனன் : இன்று நாங்கள் எந்தக் கட்டத்திற்கு வந்திருக்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு அடையாளங்களாகப் பிளவுபடத்தப்பட்டு அவை கூர்மைப்படுத்தப்பட்டும் உள்ளது. பொதுத் தேசியத்தை அமைப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சிங்கள அரசுடன் – இலங்கை அரசுடன் சேர்ந்து செயற்படுவது ஆபத்தானது.
நித்தி : அரசாங்கம் ஏதோ ஒரு தீர்வை முன்வைக்க முயற்சிக்கிறது. அதில் நாம் கூடிய தீர்வைப் பெறுவதற்கு ரிஎன்ஏயைப் பலப்படுத்த வேண்டும்.
ராஜேஸ் பாலா: முதலில் இந்த தமிழீழம், ஈழம் என்ற கதைகளை நாங்கள் விட வேணும். அங்குள்ள இடம்பெயர்ந்த முகாம்களில் உள்ள மக்களின் நலன்கள் தான் இப்பொழுது முக்கியம். நாங்கள் முரண்டு பிடித்து அரசியல் செய்து எதையும் சாதிக்கவில்லை. இனிமேல் இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே தமிழ் மக்களுக்கு எதையாவது செய்ய முடியும்.
சிறி : தமிழ் மக்களுடைய அரசியல் அரங்கு பலவீனமாக உள்ளது. மேலும் பல்வேறு மூலதனங்கள் நாட்டினுள் நுழைந்து இலங்கை மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இவற்றுக்கான ஒன்றுபட்ட போராட்டங்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.
நடாமோகன் : நான் மனைவி பிள்ளை என்று வாழ்கிறேன். என்னைப் போன்று என் மொழி பேசுபவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ஆ)
ஆர் ஜெயதேவன்: நாங்கள் எவ்வளவுதான் கூட்டம் போட்டு பேசினாலும் இந்தியாவின் நிலைப்பாடு முக்கியமானது. இப்போது நடந்து முடிந்த அவலம் எதிர்பார்க்கப்பட்டது தான். பிரபாவும் – பொட்டரும் செய்த அரசியலின் விளைவு இது. புலம்பெயர்ந்தவர்களின் குரல்கள் டெல்லியை நோக்கிச் செல்ல வேண்டும். இது தொடர்பாக நான் இந்திய அதிகாரிகளிடமும் பேசி உள்ளளேன்.
ரவி சுந்தரலிங்கம் : இந்தியாவின் பாத்திரம் முக்கியமானது. பிந்திரன் வாலேயை உருவாக்கி சீக்கிய தேசியத்தை அதன் உச்சத்திற்குக் கொண்டு சென்று வேரறுத்தது இந்தியா. அதுவே முள்ளிவாய்க்காலிலும் நடந்தது. சிங்கள தேசியத்தின் உச்சத்திற்குச் செல்லும் மகிந்த ராஜபக்சவிற்கும் இது நடக்காது என்றில்லை. புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் பாத்திரத்தை அசட்டை செய்ய முடியாது.
சையட் பசீர் : தமிழர்கள் என்று மட்டுமல்ல முஸ்லீம்கள் என்றும் சேர்த்துப் பேசப்பட வேண்டும். இப்போது முகாம்களில் உள்ள மக்களின் அவலம் வேதனையானது. அவர்கள் மீளவும்குடியமர்த்தப்பட வேண்டும். அதேசமயம் பலவருடங்களுக்கு முன் யாழில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் இன்னமும் புத்தளம் முகாம்களில் தான் வாழ்கிறார்கள். அதற்காக எந்தக் கூட்டமும் கலந்துரையாடலும் நடாத்தப்படாதது மனவருத்தமானது.
போல் சத்தியநேசன்: புத்தளம் முகாமில் உள்ளவர்களின் விடயங்கள் பேசப்படாதது வேதனையானதே. அனால் இன்றுள்ள ஊடகத் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அன்றிருக்கவில்லை. இன்றைய அவலம் உடனுக்குடன் வந்தடைவதால் அதற்கான பிரதிபலிப்புகளும் உடனடியானவையாக உள்ளது. ஆனால் இங்குள்ள எல்லோருமே புத்தளம் முகாம்களில் உள்ளவர்கள் மீது அனுதாபமுடையவர்களே. அவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களுமே.
எஸ் வசந்தி : இலங்கையின் நிலை அதன் பிராந்திய நிலைகளாலும் தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இலங்கையின் அரசியல் சூழலில் இந்தியாவின் தாக்கம் முக்கியமானது.
எஸ் அரவிந்தன் : நாங்கள் எந்த அடிப்படையில் வேலை செய்ய முற்படுகிறோம் என்பதை நிர்ணயித்த பின்னரே பிராந்திய அடிப்படையில் எவ்வாறு செயற்படப் போகின்றோம் என்ற முடிவுக்கு வர முடியும்.
கணநாதன் : இந்தியா தொடர்பாக தலைமுறையாக எங்களுக்குள் பிளவு உள்ளது. சிவசங்கர் மேனனைக் கொண்டு இந்தியாவைக் கையாள முடியாது என்றே நினைக்கிறேன். இலங்கை இந்தியாவின் விளையாட்டு மைதானம். ராஜபக்சவுக்கு ஒரு அதிஸ்டம் அடித்தள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவை வைத்து அரசியல் நகர்த்துவது தவறானது என்றே நான் கருதுகிறேன்.
பாலா : இந்தியாவில் தமிழ் நாட்டிலும் ஏராளமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். இந்தியாவில் தங்கி நிற்கும் வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை அங்குள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கே கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
சையட் பசீர் : நாங்கள் இலங்கையர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளை வைத்துக் கொண்டு இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இலங்கைப் பிரச்சினைக்கான உள்ளுர்த் தீர்வு, சுய தீர்வு ஒன்றே பொருத்தமானது.
இ)
போல் சத்தியநேசன் : இடைக்கால அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலமே தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்சி பெறமுடியும். நாங்கள் முன்நோக்கி நகர்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
ரவி சுந்தரலிங்கம் : தாயகத்தில் உள்ளவர்கள் சமூக மாற்றம் ஒன்றிற்கு உள்ளாகி உள்ளனர். அவர்களுடைய வர்க்க நிலையும் மாற்றமடைந்துள்ளது. இவற்றை கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஆர் ஜெயதேவன் : இலங்கையில் உள்ள அமைப்புகள் மிகுந்த கஸ்டத்தை எதிர்நோக்குகின்றன. அரசாங்கம் மோசமான அழுத்தங்களை வழங்குகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு இனக்கலப்பான சமூகம் ஒன்றை உருவாக்கவும் அரசு முயல்கிறது.
வாசுதேவன் : பொது வேலைத் திட்டம் ஒன்றின் கீழ் நாங்கள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். இதுவரை இருந்த ஏகபிரதிநிதித்துவம் ஜனநாயக மறுப்பு என்பவற்றைக் கடந்து பொது வேலைத்திட்டத்திக் கீழ் செயற்பட வேண்டிய காலம் இது.
ஆர் யூட் : இதுவரை காலமும் நடந்த செயற்பாடுகள் எங்களை இரகசிய சமூகமாக மாற்றி விட்டது. ஒருவரை ஒருவர் நம்ப முடியாத புலனாய்வுச் சமூகமாக நாம் இருந்துவிட்டோம். மனம் திறந்து பேசுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
பாலசுகுமார் : பொது வேலைத்திட்டத்தின் கீழேயே நாங்கள் அடுத்த கட்ட நகர்வுக்குச் செல்ல முடியும்.
சார்ள்ஸ் : சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பொது வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கிச் செயற்பட வேண்டும்.
சுகுண சபேசன் : புலம்பெயர்ந்தவர்களுக்கு கடமையொன்று உள்ளது. அவர்கள் ஜனநாயகச் செயன்முறையை ஊக்குவிக்க வேண்டும்.
தயா : இப்போது இங்குள்ள இணைவும் இணக்கப்பாடும் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
சேனன் : ஜனநாயக நடைமுறையை ஜனநாயகச் செயன்முறையூடாகவே ஏற்படுத்த முடியும். மக்களை ஜனநாயகச் செயன்முறையில் எப்படி ஈடுபடுத்துவது என்பது பற்றி நாங்கள் கவனமெடுக்க வேண்டும்.
எம் பாலன் : பொது அடிப்படையில் ஒரு உடன்பாடு எட்டப்படுவது அவசியம்.
பாலமுரளி: தமிழ் அரசியல் அமைப்புகளிடையே குறைந்தபட்ச உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும்.
பாண்டியன் : தாயகத்தில் உள்ள மக்களைப் பலப்படுத்துவதற்கான பொது வேலைத்திட்டம் ஒன்று அவசியம். காலப் போக்கில் அவர்களுக்கு என்ன தேவையோ அதை அவர்களே பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகளைச் செய்வார்கள்.
ரவி சுந்தரலிங்கம் : எங்களுக்கு கலாச்சாரப் புரட்சி ஒன்று அவசியமாகத் தேவைப்படுகிறது. அதன் மூலமாக ஒரு சமூக மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இக்கலந்துரையாடலில் தமிழ் மக்களுடைய அரசியல் அவர்களுடைய எதிர்காலம் பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டது. ஆயினும் பொது இணக்கப்பாடும் பொது வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் பலரும் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி இருந்தனர். அதன் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் சக்திகளுக்கு இடையே புரிந்தணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தினர். அதற்கு குறைந்த பட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தின் தொடர்ச்சியாக குறைந்தபட்ச புரிந்துணர்வு எட்டப்பட வேண்டிய விடயங்கள் அதன் வரையறைகள் பற்றி கலந்தரையாடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவின் அடிப்படையில் ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பில் இரண்டாவது சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் 70 பதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்தக்களைப் பகிர்ந்து கொண்டனர். இச்சந்திப்பிற்கும் பேரின்பநாதன் தலைமை தாங்கினார்.
._._._._._.
ஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) ஆரம்ப உரையை வழங்கினார்.
”இலங்கைத் தமிழர்களின் அரசியல் தீர்வு விடயத்தில் அரசுடன் இணைந்து செயற்படுவது முதல் தனியாகப் பிரிந்து சென்று தனியரசு அமைப்பது வரை பல்வேறு சாத்தியக்கூறுகள் உண்டு. கிராம சபை மாவட்ட சபை, 13வது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம், சமஸ்டி என்று இவற்றை விரித்துச் செல்லலாம்” என்று குறிப்பிட்ட ரகுமான் ஜான் ”நாங்கள் குறைந்தபட்சம் எதற்குச் செல்லலாம்” என்பது பற்றி முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ”பொதுப் புத்தியில் உள்ள விடயங்கள் ஆதிக்க சித்தாந்தத்தினாலேயே நிர்ணயம் செய்யப்படுகின்றது. கருத்துத்தளத்தில் பேரினவாதம் கட்டமைத்த சொல்லாடல்களே மேலாண்மை செலுத்துகின்றது.” என்றும் தெரிவித்தார். ”குறைந்தபட்ச வரையறையைச் செய்யும் போது பேரினவாதம் கட்டமைக்கின்ற கருத்தியல் மேலாண்மையை தகர்க்கின்ற கருத்தியல் மேலாண்மையை நாங்கள் ஏற்படுத்த வேண்டும்” என அவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டார். அவருடைய உரை முழுமையாக வெளியிடப்பட உள்ளதால் அதற்குள் செல்வது இங்கு தவிர்க்கப்பட்டு உள்ளது.
ரகுமான் ஜானுடைய உரையைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
எஸ் தவராஜா: தமிழ் சூழலில் தற்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் 1) அகதிகள் 2) சமூகத்தை – குழுக்களை ஒன்றிணைப்பது 3) உரிமைகள். தமிழ் சமூகத்தில் உள்ள அடிப்படைத் தவறு வேறுபாடுகளுக்கு மத்தியில் எவ்வாறு வாழ்வது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமை. 1977க்குப் பின்னர் மாறிய சூழலில் மக்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்கப்படவில்லை. அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே பொருத்தமான தீர்வாக அமையும். எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எம் ஜெயக்குமார் : புலிகளுடைய அழிவு அவர்கள் தேடிக்கொண்டது. எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகள் அடைய முடியாதவை என்றாகிவிடாது. அவற்றை அடையலாம் என்பதில் இன்றும் எனக்கு நம்பிக்கையுண்டு. எதிர்காலத்தில் போராட்டங்கள் சிங்கள பெரும்பான்மை மக்களையும் இணைத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
பாண்டியன் : சிறுபான்மை இன மக்களுக்கு இனிரீதியான ஒடுக்குமுறையுள்ளது. அன்று புலிகள் இருக்கும் போது பயன்படுத்திய கொத்தை நாங்கள் தொடர்ந்தும் பயன்படுத்த முடியாது. நியாயமான கொத்தை பயன்படுத்த வேண்டும்.
சஞ்ஜீவ் ராஜ்: புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் புலத்தில் உள்ளவர்களுக்கு தாயகத்தில் உள்ள மக்கள் பற்றி பேச உரிமையில்லை என்கிறார்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. இலங்கையில் நடைபெறும் தேர்தல் தொடர்பாக லண்டனிலும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லும்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களே அங்குள்ளவர்களுக்கு குரல்கொடுக்க முடியும்.
தனபாலன் : 98 வீதமான மக்களுக்கு அரசியல் அறிவு இல்லை. நாங்கள் நகர்சார்ந்த மனோ நிலையில் இருந்து சிந்திக்கிறோம். ஆனால் கிராமங்களில் வாழும் மக்களின் மனோநிலை வேறு.
வாசுதேவன்: கடந்த கால எங்கள் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிப் பார்க்க வேண்டும். எங்கள் பலத்தையும் பலவீனத்தையும் ஆராய வேண்டும். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
ப்பாமி மொகமட்: MOU வரை நிறைய திட்டங்கள் தமிழ் மக்கள் மத்தியில் வந்தள்ளது. நீலன் திருச்செல்வம் அவர்கள் வரைந்த தீர்வுப் பொதி மிகச் சிறந்தது. ஆனால் அவரும் கொல்லப்பட்டார். வரதராஜப் பெருமாள் மாகாண சபையை நடத்துவதில் இருந்து தடுக்கப்பட்டார். இந்த நிலையில் இருந்து தமிழ் சமூகம் மாற வேண்டும்.
கணநாதன்: தமிழர்களுடைய உரிமைப் போராட்டம் பின்னடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. சர்வதேசச் சூழல் எமக்கு எதிராகவும் ராஜபக்ச அரசுக்கு சாதகமாகவும் அமைந்துவிட்டது. இந்நிலை இப்படியே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச அரங்கிற்கு அழுத்தங்களைக் கொடுத்து இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.
டேவிட் ஜெயம் : தமிழ் கடற்தொழிலாளர்கள் பாரம்பரியமாக கடற்தொழில் செய்த இடங்களில் தற்போது சிங்கள மீனவர்கள் தொழில் செய்கின்றனர். இதனால் இன முரண்பாடுகள் இன்னமும் கூர்மையாகின்றது. மேலும் பல ஆண்டுகளாக நீடித்த மீன் பிடித்தடை நீக்கப்பட்ட போதும் தமிழ் மீனவர்களுடைய பொருளாதாரத்தில் அது முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை.
சண்முகரட்ணம் : இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் ஆவணங்களை முற்றாக இழந்துள்ளனர். மேலும் விடுதலைப் புலிகளால் மக்களுக்கு கையளிக்கப்பட்ட காணிகளில் அரச காணிகளும் அடங்குகிறது. இவையெல்லாம் வன்னி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினையாக உள்ளது. இவை பற்றி கவனிக்கப்பட வேண்டும். இலங்கை அரசின் தன்மை தவறான வழியில் இறுக்கமடைந்துள்ளது. இலங்கை அரசின் பிரச்சினை ஒற்றையாட்சி அல்ல. அரசைப் பற்றிய அறிவு, சீர் திருத்தம், இராணுவ மயமாக்கல் போக்கு பற்றிய விடயங்களில் கவனமெடுக்க வேண்டும்.
சையட் பசீர் : திம்புப் பேச்சுவார்த்தை, ஒஸ்லோ உடன்படிக்கை எதிலுமே முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. பாலஸ்தீனப் பிரச்சினையை நீங்கள் விளங்கிக் கொண்ட விதத்தில் இஸ்ரேலை ஒத்த அரசக் கட்டமைப்பையே தமிழர்கள் உதாரணத்திற்கு எடுக்கின்றார்கள். உதாரணத்திற்குக் கூட பாலஸ்தீனியர்களின் வாழ்நிலை கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. இந்தச் சிந்தனைமுறையே தவறானது.
வி சிவலிங்கம் : சிங்கள மக்களுடனும் ஏனைய சிறுபான்மையின மக்களுடனும் இணைந்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் போராட்ட தந்திரோபாயங்களை வகுக்க வேண்டும்.
வரதகுமார்: குறைந்தபட்ச புரிந்தணர்வை ஏற்படுத்தவதற்கான வரையறையை நிர்ணயிப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானது. ஆனால் அதுவொரு பாரிய வேலை. அதனைச் செய்வதன் மூலமே தமிழ் அரசியல் தளத்தைப் பலப்படத்த முடியும். இன்றைய நிலையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வு காணப்பட வேண்டுமானாலும் இன்றுள்ள இலங்கை அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்.
._._._._._.
ஓகஸ்ட் 2ல் ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான ஐந்து மணி நேரம் வரை நீடித்த இக்கலந்தரையாடலில் பின்வரும் எட்டு விடயங்களில் குறைந்தபட்ச புரிந்தணர்வு ஏற்பட வேண்டும் என உடன்பாடு காணப்பட்டது.
1. முகாம்களில் உள்ள மக்களது மீள்குடியேற்றம்
2. இராணுவ மயமாக்கலை அகற்றுவது
3. மனித உரிமைகளை மேம்படுத்துவது
4. தமிழ் மக்களின் அரசியலை ஜனநாயகப்படுத்துவது
5. வடக்கு – கிழக்கு முஸ்லீம் மக்கள்
6. குடியேற்றம் – வளங்கலும் குடிபரம்பலும்
7. மனிதவள விருத்தி – அபிவிருத்தி
8. அரசியல் தீர்வு
இவ்விடயங்கள் தொடர்பான வரையறைகளை வகுப்பதற்கு செயற்குழு உருவாக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு விடயத்தையும் தனித் தனியாக ஆராய்ந்து அறிக்கையைத் தயாரிப்பார்கள். அதில் குறைந்த பட்ச வரையறையையும் நிர்ணயிப்பார்கள்.
செயற்குழுவில் உள்ள அங்கத்தவர்கள் வருமாறு:
என் சண்முகரட்ணம்
வி சிவலிங்கம்
நிஸ்தார் மொகமட்
ரவி சுந்தரலிங்கம்
ஏ கனநாதன்
வரதகுமார்
ஜோசப் ஜெயம்
எஸ் தவராஜா
பேரின்பநாதன்
அரோ தீபன்
எஸ் வசந்தி
மாசில் பாலன்
ப்பாமி மொகமட்
ரி சோதிலிங்கம்
ஜெயக்குமார் மகாதேவா
த ஜெயபாலன் (ஒருங்கிணைப்பாளர்)
கலந்துரையாடலின் முடிவில் செயற்குழு ஒரு குறுகிய சந்திப்பொன்றை மேற்கொண்டது. அவர்கள் குறைந்தபட்ச புரிந்துணர்வை எட்டவேண்டிய விடயங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்கான தலைப்புகளை ஏற்றுக் கொண்டனர்.