18

18

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

எண்பது கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த-44 கிளேமோர் குண்டுகள், ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களை பாதுகாப்புப்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தின் பல பிரிவுகள் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களிலிருந்து கனரக ஆயுதங்களின் உபகரணங்களையும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளையும் படையினர் மீட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் 1, 5, 7, 10, 15, 20 கிலோ எடைகளைக் கொண்ட 44 கிளேமோர்கள், கைக்குண்டுகள்-31, எம். பி. எம். ஜி. ரவைகள்- 4350, எம்-16ரக துப்பாக்கி ரவைகள்- 1000 மற்றும் மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பின் கிழக்கிலிருந்து படல் துப்பாக்கி ரவைகள்-160, 82 மி. மீ.ரக மோட்டார் குண்டுகள்- 270,ரி.56 ரக துப்பாக்கிரவைகள்- 950, ஆர். பி. ஜி குண்டுகள் மற்றும் படகு இயந்திரம் ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர்.

தமிழ் யுவதிகள் இருவரின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பிரதியமைச்சர் பொலிஸாரிடம் வலியுறுத்தல்

girl2222.gifகொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் இரு தமிழ் யுவதிகளின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து உண்மை நிலையினை வெளிக் கொணர வேண்டும் என்று நீதி சட்ட மறுசீரமைப்பு பிரதியமைச்சர் வீ.புத்திரசிகாமணி கேட்டுள்ளார்.

இவ்விரு தமிழ் யுவதிகளின் மர்மமான மரணம் தொடர்பாக மேல் மாகாணப் பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,

அப்பாவி தமிழ் யுவதிகள் உழைப்பதற்கென்று இப்படி வருகின்றபோது அவர்களது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாத நிலையில் இருப்பது கவலைக்குரியது. கறுவாக்காட்டு பொலிஸார் காலம் தாழ்த்தாது இவர்களது மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டறிய வேண்டும்.

வறுமைக்காக ஏழை பெற்றோர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பினார்கள். இப்படி மர்மமான மரணம் எமது இளைஞர், யுவதிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தவித தராதரம் பார்க்காமல் மரணமான யுவதிகள் சேவை செய்த வீட்டின் உரிமையாளர்கள் பூரண விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அச்சமின்றி வாழும் ஒரு சூழலை உருவாக்குவதில் பொலிஸாரின் பங்கு மிக முக்கியமானது. மலையக இளைஞர், யுவதிகள் ஆயிரக்கணக்கானோர் கொழும்பில் தொழில் நிமித்தம் வந்துள்ளனர்.

இத்தகைய கொடூர சம்பவங்களும் அவர்களது உடல்கள் கிடந்த இடங்களை பார்க்கும்போது அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஜீவராணி, சுமதி இருவரின் மரணத்தை விசாரிக்குமாறு அமைச்சர் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளார்.

அலிக் அலுவிகாரவின் மூன்றாம் மாத நினைவஞ்சலியில் ஜனாதிபதி

normal_.jpgஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள்; அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாத்தளை மாவட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கிய அலிக் அலுவிகாரயின் மூன்றாம் மாத நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது இல்லத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.
 
இந்த வைபவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஜனாதிபதி சினோகபூர்வமாக கலந்துறையாடினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்திய அரசாங்கம் 3 மில். அ.டொலர் பெறுமதியான பொருட்கள் அன்பளிப்பு

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோருக்காக இந்திய அரசாங்கம் மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

இவை ஐ.நா அமைப்புக்களினூடாக நிவாரணக் கிராமங்களில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. இவற்றின் ஒரு தொகுதியை இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத் நேற்று ஐ.நா வதிவிட பிரதிநிதி நீல் பூனேயிடம் கையளித்தார். மேற்படி அறுநூறு தொன் நிவாரணப் பொருட்கள் கடந்த எட்டாம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இந்நிவாரணப் பொருட்களுள் ஆறு இலட்சம் பக்கற்றுக்களுக்கு அதிகமான உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், உடுதுணிகள், வீட்டு உபகரணங்கள், சிறுவர்களுக்கான ஆடைகள், பாதணிகள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நிவாரணக் கிராமங்களிலிருக்கும் சுமார் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களே நேற்று யு. என். வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டன.

“தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ உலக ஆய்வு மாநாடு அக்டோபர் 3 – 6 வரை

muslim-prayer.jpgதென் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தனது 1 ஆவது உலக ஆய்வு மாநாடொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. “தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் தமிழியல் பண்பாடு சமூகம்’ எனும் தலைப்பில் நடத்தவுள்ள இந்த உலக ஆய்வு மாநாடு நம்நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துகளைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டை எதிர்வரும் அக்டோபர் 3 ஆம் திகதி தொடக்கம் 6 ஆம் திகதி வரை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேற்படி உலக ஆய்வு மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுச் செயலாளர்களுள் ஒருவரும் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கே.ரகுபரன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தெரிவித்துள்ளது.

மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல்பண்பாடு, சமூகம்’ எனும் கருப்பொருளுக்குட்பட்டு கட்டுரைகளைச் சமர்ப்பிக்கலாம். இலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல், நாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ் பேசும் முஸ்லிம்களின் மறுமலர்ச்சி எனும் ஏதாவது தலைப்பில் ஆய்வுச் சுருக்கத்தினையும் கட்டுரையையும் சமர்ப்பிக்கலாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்குபற்ற விரும்புபவர்கள் மாநாட்டு ஒழுங்கமைப்பு செயலாளர்களான கே.ரகுபரன்(சிரேஷ்ட விரிவுரையாளர்),ஜனாபா எம்.ஏ.எஸ்.எப். சாதியா (விரிவுரையாளர்) ஆகியோருடன் 0094718218177,0094718035182 எனும் கைத்தொலை பேசிகளுக்குகோ,மொழித்துறை,தென் கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில் எனும் முகவரிக்கோ தொடர்பு கொள்ளலாம்.

இராணுவ வீரரின் அடையாள அட்டையை பயன்படுத்தி தற்கொலையாளி அ.புரம் வந்தார்

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட குழுவினரை படுகொலை செய்த தற்கொலையாளி யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரின் அடையாள அட்டையை உபயோகித்தே அநுராதபுரத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இக்கொலையை புலிகள் இயக்கமே செய்துள்ளதாகவும் தற்கொலையாளியின் பெயர் வசந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர் கல்முனை பிரதேச சிங்கள ஹோட்டல் ஒன்றில் வேலைசெய்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஏனைய சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற நீதவான் தர்சிகா விமலசிறி உத்தர விட்டார்.