19

19

யாழ் உயர்பாதுகாப்பு வலயங்களில் விரைவில் மீள் குடியேற்றம்!

north-governor.jpgயாழ் மாவட்ட உயர்பாதுகாப்பு வலயங்களில் விரைவில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ் மாவட்டத்தில் மக்களை மீள் குடியேற்றுவதற்காக இனம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்களை உடனடியாக யாழ் அரசாங்க அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி யாழ் படை அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை படிப்படியாக மீளக் குடியமர்த்துவது தொடர்பாக கடந்த 13 ஆம் திகதி படை அதிகாரிகளுடன் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி கலந்துரையாடினார்.

இதேவேளை,  மணற்காடு உட்பட உயர்பாதுகாப்பு வலயமாகவுள்ள பிரதேசங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விபரங்களை இன்னும்சில தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக யாழ் செயலக வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள் குடியேற்றப்படும் மக்களின் வதிவிடங்கள் அடையாளம் காணப்பட்டு,  கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான உத்தரவாதப் பத்திரம் யாழ் மாவட்ட செயலகத்தின் கண்ணிவெடி அகற்றல் பிரிவினரால் வழங்கப்பட்ட பின்னரே மீள் குடியேற்றத்திற்கான இறுதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென யாழ் மாவட்ட செயலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் பொலிஸாருக்கு எதிராக கடும் நடவடிக்கை – பாராளுமன்றத்தில் பிரதமர் தெரிவிப்பு

26parliament.jpgமாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்;படும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்தமைக்காக பாதுகாப்பு படையினரையும் பொலிஸாரையும் மக்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் மாலபே மற்றும் அங்குலாணப் பகுதில் அன்மையில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து பொலிஸார் தமது கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என பிரதமர் மேலும் தெரிவித்தார். 

இதேவேளை,  வடக்கில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் அவர்களது சொந்த இடங்களில் விரைவில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்றும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

செப்டெம்பர் முதல் தனியார் பஸ் கட்டணம் 5.3% அதிகரிப்பு – 6 ரூபாவில் மாற்றம் இல்லை

bus_luxury.jpgதனியார் பஸ் கட்டணங்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.  ஆரம்பக் கட்டணமான ஆறு ரூபா அதிகரிக்கப் படாதெனவும் ஏனைய கட்டணங்களே 5.3 வீதத்தினால் அதிகரிக்கப்படுமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ் உரிமையாளர் சங்கம் நாரஹன்பிட்டியிலுள்ள அதனது தலைமையலு வலகத்தில் நேற்று திங்கட் கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் தலைவர் கெமுனு விஜயரட்ண உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது;  பஸ் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு மற்றும் எரிபொருள் கட்டணம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு 7 வீத பஸ் கட்டண உயர்வைக் கோரினோம். எனினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு 5.3% அதிகரிப்பையே அனுமதித்தது. ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலையில் நாம் அரசுக்கு காலக்கெடு வழங்கினோம்.

நாம் 45 நாள் காலக்கெடு வழங்கி கடந்த சனிக்கிழமை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், மக்களின் நலன்கருதி 5.3 வீத அதிகரிப்புக்கு இணங்குகின்றோம். இந்நிலையில், இக்கட்டண அதிகரிப்பை அடுத்த மாதம் முதல் அமுல்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

இவ்விலையதிகரிப்பின் படி ஆரம்பக் கட்டணமான 6 ரூபா அதிகரிக்கப்படமாட்டாது. எனினும், ஏனைய கட்டணங்கள் அதிகரிப்பு வீதத்திற்கு ஏற்ற வகையில் அதிகரிக்கப்படும். பஸ் கட்டண அதிகரிப்பை அரசியல் கட்சிகள் அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது.  நாம் நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்துமாறு கோருகின்றோம். குறிப்பாக ஒன்றிணைக்கப்பட்ட நேர அட்டவணை இதுவரை முழுமையாக அமுல்படுத்தாத வகையில் இதனை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.  இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் முதலில் 7 வீத கட்டண உயர்வைக் கோரியது. தற்போது 5.3% உயர்வுக்கு இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள போதும் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையெனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை தேசிய பஸ் போக்குவரத்து ஆணைக்குழுவுடன் பேசவுள்ளதாகத் தெரியவருகின்றது.

வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களை கைது செய்ய நடவடிக்கை

pr-mahi.jpgஇந் நாட்டில் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் செயற்பட எவருக்கும் இடமளிக்க முடியாது. அவ்வாறு செயற்படுபவர்களைப் பாதுகாக்கவும் நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தோற்கடிக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகள் மீண்டும் அணி சேர்கின்றார்களா என்பதை மிகுந்த அவதானத்துடன் நோக்கி வருகின்றோம். இதேவேளை வெளிநாடுகளில் ஒழிந்திருக்கும் பயங்கரவாதிகளின் தலைவர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

அதனால் இலங்கையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடியவர்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை முறியடிக்க நாம் தயாராக உள்ளோம் என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், பாதுகாப்புச் செயலாளரையும், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை சப்ரகமுவ மாகாண சர்வமதத் தலைவர்களும், மாகாண மக்களும் இணைந்து பாராட்டு சாசன பத்திரம் மற்றும் பேரானந்தி விருது வழங்கி கெளரவித்த வைபவம் இரத்தினபுரி சமன் தேவாலய வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கும் யுத்தத்தில் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் இளைஞர், யுவதிகள் தம்முயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். பலர் ஊனமுற்றிருக்கிறார்கள்.

மாவிலாற்றை விடுவிக்கும் மனிதாபிமான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 16 ஆம் திகதியுடன் 3 வருடங்கள் நிறைவுற்றன. மூன்று வருட காலப் பகுதியில் பயங்கரவாதிகளையும் அவர்களது தலைவர்களையும் தோற்கடித்துள்ளோம். இப்பணி நிறைவுற்று மூன்று மாதங்களாகின்றன. இவ்வாறு குறுகிய காலப்பகுதியில் இப்பாரிய பணியை எம்மால் செய்யமுடியும் என்பதை உலகில் எவரும் நம்பவில்லை.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையைக் கண்டு பயங்கரவாதிகள் ஆச்சரியமடைந்தார்கள். நாம் அவர்களை மட்டுமல்லாமல் முழு உலகையுமே ஆச்சரியப்படச் செய்தோம். அதனால் உலகம் இன்று எம்மை வலுவான புதுமை மிக்க நாட்டினராகப் பார்க்கின்றனர். அப்படியிருந்தும் நாம் இந்த வெற்றியைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்ததோடு எம்பணியை நிறுத்திக் கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தலைவர்களையும், அவர்களது தற்கொலையாளர்களையும் ஒழித்துக் கட்டிவிட்டோம் என்பதற்காக தேசிய பாதுகாப்பு பூரணத்துவம் அடையாது. அதன் காரணத்தினால் இதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதேநேரம் மக்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பதில் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை அற்ப அரசியல் லாபம் பெறும் நோக்கில் முன்னெடுத்திருந்தால் இப்பாரிய வெற்றியை எம்மால் பெற்றிருக்கவே முடியாது.

மாறாக நாம் பாரிய நோக்கத்தை முன்நிறுத்தியே இந்நடவடிக்கையை முன்னெடுத்தோம். அதுவே தேசிய பாதுகாப்பு ஆகும். நாம் பயங்கரவாதத்தைத் தோற்கடித்து வெற்றி பெற்றதுடன் மக்கள் பாரிய சந்தோஷத்திற்கு உள்ளாகினர். இருந்தும் நாம் நாட்டின் பாதுகாப்பு, சுதந்திரம் என்பவற்றில் செலுத்தி வருகின்ற கவனத்தில் சிறிதளவேனும் குறைவை ஏற்படுத்தவில்லை. உலக வல்லரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாம் நாட்டை விடுவித்திருக்கிறோம். அது எமக்கு மிகவும் பெறுமதியானது.

நாம் பொருளாதார ரீதியாக வலுவான தேசமாக மாறவேண்டும். நாட்டை விடுவிக்கவென மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்த நாம் இப்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கான மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றோம்.

எவரிடமும் கையேந்தாமல் வாழக் கூடிய நாட்டைத் துரிதகதியில் கட்டியெழுப்புவது அவசியம். பயங்கரவாதத்தை ஒழித்து கட்டியது போல் நாட்டையும், கட்டியெழுப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இதனை சகல அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ளவேண்டும்.

அதேநேரம் எம்மிடம் ஒழுக்கம் இருக்க வேண்டும். எம்மிடம் காணப்படுகின்ற ஒழுக்கம் காரணமாக உலக நாடுகளின் கெளரவத்தைக் கடந்த காலங்களில் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்தது.

என்றாலும் இந்த ஒழுக்க நிலை தொடர்ந்தும் காணப்பட வேண்டும். ஒரு சிலரின் தவறான செயற்பாடுகள் முழு நாட்டிலுமே அபகீர்த்தியை தேடித்தர முடியும். தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத எவரும் முப்படையிலோ, பொலிஸ் துறையிலோ கடமையாற்ற முடியாது. இந்நாட்டின் சட்டம், ஒழுங்குக்கு அப்பால் யாரும் செல்லவும் முடியாது.

இந்த புனித பூமியில் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் அளிக்கப்படும் கெளரவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

முகாம்களில் மக்கள் ‘எலிகளைப் போல வாழ்கிறார்கள்’- ஆனந்த சங்கரி

இலங்கையின் வடக்கே வவுனியாப் பகுதியில் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி செவ்வாய்கிழமை சென்று சந்தித்துள்ளார்.  முகாம்களில் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட இன்னமும் தங்கியிருப்பது எதனால் என்றும், எதனால் என்று தனக்கு தெரியவில்லை என்றும் ஆனந்தசங்கரி தெரிவிக்கிறார்.

“முகாம்களில் இருக்கும் கூடாரங்களில் எலிகளே வாழ முடியும்” என்றும் அங்கு மனிதர்கள் பல மாதங்களாக வாழ்ந்து வருவதாகவும் அவர் BBC தமிழோசையிடம் தெரிவித்தார்.  எனினும் முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வந்துள்ளதையும் தாம் காணக் கூடியதாக இருந்தது என்றும் ஆனந்த சங்கரி கூறுகிறார்.

விடுதலைப் புலிகள் சிறார்களை பிடித்துச் சென்றார்கள் என்கிற குற்றச்சாட்டை கடுமையாக முன்வைத்த அரசு தற்போது முகாம்களில் சிறார்களை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதில் நியாயம் இல்லை என்று அங்குள்ளவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ரமழான் தலைபிறை தீர்மானிக்கும் மாநாடு

muslim-prayer.jpgஹிஜ்ரி 1430 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (21) வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.24 மணி தொடக்கம் ரமழான் மாதத்திற்கான தலைமைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக் கொள்கின்றது.

அவ்வாறு புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-2390783, 2432110, 2434651 மற்றும் 0777-366099 ஆகிய தொலைப்பேசி இலக்கங்களுடனோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளவாசலின் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், ஸாவியா, தக்கியா, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் ரூ.31 பில். இலங்கையில் முதலீடு – பல நாடுகள் முதலீடு செய்ய முன்வருகை அமைச்சர் ஜீ. எல்.

இலங் கைக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. இந்த பணத்தின் மூலம் ஹில்டன் ஹோட்டல் போன்று மூன்று ஹோட்டல்கள் அமைக்க முடியும். இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியக் கடன் கிடைத்துள்ள நிலையில் பல நாடுகள் இலங்கையில் முதலீடு செய்ய தயாராகி வருகின்றதென ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதிய கடன் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது :-

நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய தொகையை விட கூடுதலான தொகை எமக்குக் கிடைத்துள்ளது. 2011 மே மாதம் வரை 8 தவணைகளில் இந்த கடன் தொகை இலங்கைக்கு கிடைக்க உள்ளது. இலங்கை மீதான நம்பிக்கை காரணமாகவே சர்வதேச நாணய நிதியம் இந்தளவு பாரிய கடன் தொகையை வழங்கியுள்ளது.

இந்தக் கடனின் மூலமாக நாட்டுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறதென ஐ. தே. க. கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கடனின் காரணமாக நாடு மேலும் அபிவிருத்தி அடையும். பெருமளவு பணம் கிடைத்திருப்பதால் மத்திய வங்கிக்கு தனியார் வங்கிகளிடம் கடன்பெற வேண்டிய தேவை ஏற்படாது.

இலங்கைக்கு பெருமளவு பணம் கிடைத்திருப்பதால் தனியார் வங்கிகளுக்கு சிறப்பாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னர் வட்டி வீதம் அதிகமாக காணப்பட்டதோடு சர்வதேச நாணய நிதிய கடன் காரணமாக வட்டி வீதம் மேலும் குறையும், தொழில் வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும். கடந்த 24 மணி நேரத்தில் இலங்கைக்கு 31 பில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

இந்த நிதியினூடாக ஹில்டன் ஹோட்டல் போன்று 3 ஹோட்டல்கள் நிர்மாணிக்க முடியும்.

வரவு – செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை 7 வீதமாக வைத்திருக்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. ஆனால், 2010ஆம் ஆண்டாகும் போது துண்டு விழும் தொகையை 5 வீதமாக வைத்திருக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாட்டை அபிவிருத்தி செய்ய பெருமளவு நிதி செலவிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தக் கடன் எம்மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டதாக ஜே. வி. பி. தெரிவித்துள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. அரசாங்கம் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்தக் கடனின் மூலம் நாணய நிதிய தேவைகள் நிறைவேறுவதாக கருத முடியாது என்றார்.

நிவாரண கிராமங்கள் மழையால் பாதிக்கப்படும் மக்களை வேறு இடங்களில் தங்கவைக்க ஏற்பாடு – பிரதமர்

flood.jpgசெட்டிக் குளம் நிவாரண கிராமங்களில் மழையின் காரணமாகப் பாதிக்கப்படும் மக்களைத் தற்காலிகமாக வேறு இடங்களில் தங்கவைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்படுமென்றும் பிரதமர் கூறினார்.

செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர் டியூ குணசேகர நேற்று அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதற்குப் பதில் அளிக்கும் வகையிலேயே பிரதமர் இந்த அறிவிப்பைச் செய்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களை அவசரப்பட்டு அரசாங்கம் குடியமர்த்தி அவர்களைக் கண்ணிவெடிகளுக்கு இரையாக்கப்போவதில்லை.

அவை நிதானமாக முற்றாக அகற்றப்பட்டதன் பின்னரே மக்களை மீளக்குடியமர்த்த முடியும். எனினும் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக மக்களைத் தற்காலிகமாக வேறு இடத்தில் தங்க வைப்பதுபற்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் பிரதமர் கூறினார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தலைமையில் கூடியபோது, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்திற்குப் பின்னர் விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பித்த அரசியலமைப்பு விவகார, தேசிய நல்லிணக்க அமைச்சர் டியூ குணசேகர, கடந்த 16 ஆம் திகதி வவுனியா சென்ற போது செட்டிக்குளம் நிவாரண கிராமங்களில் உள்ள மக்களுக்கு மழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்துக் கட்சித் தலைவர்கள் பலர் தமது கவனத்திற்குக் கொண்டு வந்ததாகக் கூறினார்.

இடைப் பருவப் பெயர்ச்சி மழையின் காரணமாக மக்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாகக் கட்சித் தலைவர்கள் முறையிட்டதாகக் கூறிய அமைச்சர் டியூ, அருணாச்சலம் முகாமுக்குச் சென்று நிலைமைகளை நேரில் அவதானித்ததாகவும், அதுபற்றி ஒரு கட்சித் தலைவர் என்ற வகையில் சபையில் அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் கூறினார்.

நாட்டின் வேறு பகுதிகளில் குறிப்பாக கலவானை, கிரியெல்லை, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் டியூ சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் தமது பதிலில் குறிப்பிட்டார்.

இன்று நல்லூர் கந்தன் தேர்

jaffna_8.jpgநல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ரதோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்தும், தென் இலங்கையில் இருந்தும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொள்ளவிருப்பதால் இரத்மலானைக்கும் – பலாலிக்குமிடையே நடைபெற்று வருகின்ற உள்ளூர் விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வருட உற்சவ காலங்களில் நேர்த்திக் கடன்களை நிறைவு செய்வதற்காக பெருந்தொகையான பறவைக் காவடிகள், தூக்குக் காவடிகள், பாற்காவடிகள் என பல்வேறுபட்ட பெயருடைய காவடிகள் இடம்பெறவுள்ளன.

பக்தர்களினது வசதியினைக் கருத்தில் கொண்டு யாழ். மாநகர சபையின் நிர்வாகத்தினர் அதிகமான கழிவறைகள், குடி தண்ணீர் தாங்கிகள் என்பவற்றினை ஆலய வீதிகளிலும் முக்கியமான இடங்களிலும் வைத்துள்ளனர். ஆலயத்திற்கு வருகை தரவிருக்கும் பக்தர்கள் அதிக அளவிலான தங்க நகைகளையோ, பணங்களையோ, கையடக்க தொலைபேசிகளையோ, ஒலிப்பதிவு கருவி மற்றும் கமரா போன்ற பொருட்களை கொண்டு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அங்கு கடமையில் அமர்த்தப்பட்ட பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும் நேரடி அஞ்சல் செய்யவுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபை யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் ஆகிய இடங்களில் உள்ள பஸ் டிப்போக்கள் மேலதிக பஸ் சேவைகளை நடாத்தி வருவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றன.

இதேபோன்று, குடாநாட்டில் உள்ள தனியார் சிற்றூர்தி சேவை சங்கத்தினரும் பக்தர்களினதும் போக்குவரத்து வசதிகளைக் கருதி அதிக அளவிலான பஸ்களை சேவையில் அமர்த்துவதற்கு முன்வந்துள்ளனர்.

ஆலயத்திற்கு வந்து செல்கின்ற பக்தர்கள் தங்கி இருந்து செல்வதற்கும் தாக சாந்தி அருந்திச் செல்வதற்கும் பல வீதி சந்திகளில் பந்தல்கள் அமைக்கப்பட்டு குருகு மணல்கள் பரப்பில் போடப்பட்டிருக்கின்றன. இரவில் தாக சாந்தி பந்தல்களில் கோப்பி, தேனீர் என்பன வழங்கப்பட்டும் வருகின்றன.

தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் – தமிழகத்தில் அறிவிப்பு

t-n-govt-logo.jpgஇந்தியா வில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்படுவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது அவற்றின் கொடி மற்றும் சின்னங்கள், தலைவர்களின் படங்களைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வது போன்ற நடவடிக்கைகள் சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் கூட்டங்களில் நடத்துபவர்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பிரகடன நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.