மாலபே யிலுள்ள இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் SLIIT மாணவரான நிபுன ராமநாயக்காவின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான ரவிது வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில பிரதம நீதவான் வசந்த ஜினதாச உத்தரவிட்டுள்ளார். மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி களுபோவில போதனா வைத்தியசாலையின் 3 ஆம் மாடியில் சிகிச்சை பெற்று வந்த எஸ். எஸ். பி. வாஸ் குணவர்தனவின் மகனான ரவிது வாஸ் குணவர்தனவின் உடல் நிலை குறித்து ஆராய்வதற்காக கங்கொடவில பிரதம நீதவான் வசந்த ஜினதாச நேரில் சென்று பார்வையிட்ட போதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, நிபுன ராமநாயக்காவின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வாஸ் குணவர்தனவின் மனைவிக்கு எதிராக சாட்சிகள் இருந்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அடுத்து வாஸ் குணவர்தனவின் மனைவியை கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாணவன் நிபுன ராமநாயக்காவின் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்னவின் உத்தரவின் பேரில் பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் அனுர சேனாநாயக்கவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
விசாரணைகளை மேற்கொண்ட இந்தக் குழு, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 03 சப் இன்ஸ்பெக்டர்கள், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் ஏழு பொலிஸ் கான்ஸ்டபிள்களை (11 பேர்) கைது செய்து நேற்று முன்தினம் 17 ஆம் திகதி கடுவெல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் எஸ். எஸ். பி. வாஸ் குணவர்தனவின் மகனும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபருமான ரவிது வாஸ் குணவர்தன அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகவில்லை. 17 ஆம் திகதி திங்கட்கிழமை களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ரவிது வாஸ் குணவர்தனவின் உடல் நிலை குறித்து பரிசோதித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கடுவெல மேலதிக நீதவான் மஹதில் பிரசன்ன த சில்வா கங்கொடவில பிரதம நீதவானை கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை அடுத்து வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட கங்கொடவில பிரதம நீதவான் வசந்த ஜினதாச பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கங்கொடவில நீதவானின் அறிக்கைப்படியும், கடுவெல மேலதிக நீதவானின் உத்தரவின் பிரகாரமும் ரவிது வாஸ் குணவர்தனவை சிறைச்சாலை காவலர்களின் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன மற்றும் அவரது மனைவிக்கும் எதிரான சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் வாஸ் குணவர்தனவின் மனைவியை கைது செய்ய தேவையான சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.