அகதி முகாம்களிலுள்ள 2 இலட்சத்து 70 ஆயிரம் மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்றும் அவதிப்படும் அந்த மக்களில் சிறுவர்கள், முதியவர்களையாவது உடனடியாக விடுவிக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, உலகில் இந்தநிலைமை எங்குமே கிடையாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. முகாம் மக்களை உடனடியாக விடுவிக்காவிடின் ஆயிரக்கணக்கில் மரணங்கள் சம்பவிக்கும் நிலைமை இருப்பதாக கண்டி மாவட்ட ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியல்ல செவ்வாய்க்கிழமை எச்சரித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனை தெரிவித்த லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி.மேலும் கூறியதாவது; யுத்தத்தின் போது பலவந்தமாக அடைத்து வைக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. அம் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. எனவே, பிள்ளைகள் மற்றும் வயது முதிர்ந்த ஆண்கள், பெண்களை விடுவிக்குமாறு கேட்கின்றேன்.
இவ்வாறான நிலைமை உலகில் எங்கும் கிடையாது. இந்த மக்கள் எமது பிரஜைகளே. அண்மையில் எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்க வன்னியில் 70 சதவீதமான வீடுகள் சிறுசேதத்துக்குள்ளானதால் முகாம்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்துமாறு கோரினார். ஐ.நா. மற்றும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் 6 மாதத்தில் குடியமர்த்தப்பட வேண்டும் இதற்கான உதவிகளை வெளிநாடுகள் அளிக்கவுள்ளதாக கூறியபோதும் மீளக்குடியமத்தல் செயற்பாட்டு முறைமை சம்பந்தமான அறிக்கையை தூதரங்களுக்குச் சமர்ப்பிக்காமையாலேயே இவ்வுதவிகள் கிடைக்கவில்லை. முகாம்களில் குறைபாடுள்ளதை அரசாங்கமே ஏற்றுள்ளது.
பயங்கரவாதிகளைக் கைது செய்து தனியாக வைக்க வேண்டுமென்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. நாம் எதிர்க்கவில்லை. இந்நிலையில் முகாம்களிலுள்ள 2 இலட்சத்து 70 ஆயிரம் மக்களுடன் அரசு விளையாடக் கூடாது. முகாம்களிலுள்ளவர்களுக்கு நாடெங்கும் அதேபோல் வெளிநாடுகளிலும் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் தடுக்கப்படாது விட்டால் உறவினர்களின் உதவியைப் பெற்றுத் தமது வாழ்வை அவர்களால் கட்டியெழுப்ப முடியும்.
முகாம்களிலுள்ளவர்களை தடுத்து வைப்பதானது மனித உரிமை மீறல் ஆகும். ஜெனீவாவில் மனித உரிமை ஆணைக்குழுவில் அரசு வெற்றி பெற்றதற்குக் காரணம் எதிர்காலத்தில் மனித உரிமை மீறப்படாதென உறுதியளித்த காரணத்தினாலாகும்.
யுத்த வேளையில் மனித உரிமைகள் சில சமயம் மீறப்பட்டதெனினும் எதிர்காலத்தில் மீறப்படாதென உறுதியளித்ததன் பேரிலேயே வெளிநாடுகள் அதனை ஏற்று மனித உரிமை ஆணைக்குழு விவாதத்தில் ஆதரவளித்தன. சுமார் 3 இலட்சம் மக்களை அடைத்து வைப்பது என்ன நீதியென கேட்கின்றேன்?
இவ்வாறு அடைத்து வைப்பதன் மூலம் நாட்டில் நீதி உள்ளதா இல்லையா என்பது உலகத்திற்குத் தெரியும். முகாம்களுக்குள் எதிர்க்கட்சிப்பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்லவிடாது தடுக்கப்பட்டுள்ளனர். அரச தரப்பினர் செல்லும் போது எதிர்க்கட்சியினர் அங்கு செல்வதற்கு அனுமதி கேட்கப்படுகின்றது.
யுத்தம் முடிந்துள்ள நிலையில் பொலிஸாரின் அடாவடித்தனம் தலைதூக்கியுள்ளது. பொலிஸில் 90 சதவீதமானவர்கள் நல்லவர்கள் உள்ள நிலையில் மீதியானோரே அரசுக்காக தேவையற்ற வேலைகளை மேற்கொள்கின்றனர். அங்குலான தாக்குதலை மேற்கொண்டது புலிகளா? என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும் லசந்த மற்றும் ரவிராஜ், மகேஸ்வரன் மீதான தாக்குதலில் திரைமறைவில் யார் இருந்துள்ளது என்பது தற்போது வெளிப்பட்டுள்ளது.
வடக்கில் யுத்தம் முடிந்துள்ள நிலையில் அது தெற்கிற்குப் பரவியுள்ளது. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஜோன் பிள்ளையின் வீட்டின்மீது எண்ணெய்யூற்ற அரச தரப்பினரே எடுத்துக் கொடுத்தனர். மற்றவர்களுக்கு நடக்கின்ற போது மௌனம் காத்தால் எமக்கு நடக்கும் போது கதைப்பதற்கு யாரும் இருக்கார்.
பயங்கரவாதிகள் அழிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துமாறு பிள்ளைகள், பெற்றோர்கள் கேட்கின்றனர். வடக்கிலும் தெற்கிலும் சாதாரணமாக தேர்தல் இடம்பெற 17 ஆவது அரசியல் திருத்தத்தை அமுல்படுத்துமாறு கேட்கின்றனர். அரசு அதனைச் செய்யாது புலிகளை ஒழித்ததாகக் கூறி அரச பயங்கரவாதத்தை ஆரம்பித்துள்ளது. இதனை மக்களால் தாங்க முடியாது.
அரசாங்கம் பயங்கரவாதிகளை அழித்த நிலையில் நாட்டின் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமென்றால் மனித உரிமை பாதுகாக்கப்பட்டு நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை அரசு உணராதுள்ளது. யுத்தம் முடிந்த நிலையில் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு முன்வைக்க வேண்டும். ஐ.நா. வின் இலங்கைப் பிரதிநிதியான தயான் ஜயதிலக அரசியல் தீர்வாக 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுமென ஜெனீவாவில் கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் வெற்றி பெறவைத்தார். அவருக்கு என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
முகாம்களிலுள்ள மக்களைத் தடுத்து வைத்திருப்பதானது பௌத்த சமய கலாசாரத்தை அவமதிப்பதாகும். புலிகள் இருப்பின் அவர்களைத் தனித்தனியாக தடுத்து வைக்க வேண்டும். இதை எதிர்க்கவில்லை. முகாம்களில் 3 அடி அளவுக்கு நீர் உள்ளது. இப்படங்கள் பத்திரிகையில் வெளியாகியுள்ளன. இவர்களை அரசாங்கம் விடுதலை செய்யாது விடின் எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாவர். இதனால் நாட்டுக்கு அவமானம் ஏற்படும். எனவே, இதனை அரசு கவனத்திலெடுக்க வேண்டுமென கேட்கின்றேன் என்றார்.