22

22

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் ஹமீட் கர்ஸாய் மாபெரும் வெற்றி

vote000.jpgஆப்கானிஸ் தான் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாயே முன்னிலையில் உள்ளதாகவும் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பொன்றை எதிர்கொள்ள அவசியமற்ற வகையில் அவர் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று உள்ளதாகவும் அவரின் பிரசார தலைவர் டீன் மொஹமட் தெரிவித்தார்.

அதேசமயம் ஹமீட் கர்ஸாயின் பிரதான போட்டியாளரான அப்துல்லா அப்துல்லாவும் தானே இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக உரிமை கோரியுள்ளார்.  உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளியிடப்படாத நிலையில் தேர்தல் வெற்றி தொடர்பில் இவ்வாறு தகவல்கள் வெளியிடுவது தொடர்பில் அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மேற்படி உத்தியோகபூர்வ தேர்தல் பெறுபேறுகள் வெளிவர இரு வாரங்கள் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் நிறைவு பெற்று விட்டதாக ஆப்கான் தேர்தல் ஆணையகம் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வத் தேர்தல் முடிவுகளை எதிர்வரும் வாரம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையக அதிகாரியான ஸெக்ரியா பராக்ஸாய் கூறினார்.

வெளிநாட்டு இராணுவத்தினருக்கு இலங்கையில் பயிற்சி.

இலங்கை இராணுவம் வெளிநாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிவழங்கும் நடவடிக்கை என கூறி கிளிநொச்சி முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இராணுவ பயிற்சி முகாம்களை ஆரம்பிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை தோல்வியடைய செய்ததைத் தொடர்ந்து இந்த பயிற்சிகளை வழங்கவிருப்பதாக இராணுவ தளபதி ஜகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இராணுவ பயிற்சி முகாம்களை ஆரம்பிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சி வழங்களின் போது சிங்கள மொழியிலான இராணுவ பயிற்சி விபரங்கள் ஆங்கிலத்திற்கு மொழிப்பெயர்க்கப்பட்டு இலகுபடுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துகள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கோட்டபாய கோரிக்கை

gothabaya.jpgவிடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும், பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான அவர்களது சொத்துக்களையும் தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ வெளிநாடுகளை கேட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவரான செல்வராசா பத்மநாதனின் கைதை அடுத்தே கோட்டபாய ராஜபக்ஷவின் இந்த கோரிக்கை வந்துள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு பல மேற்கத்தைய நாடுகளில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் மேற்கு நாடுகள் சிரத்தையுடன் இருப்பது உண்மையானால், அவை விடுதலைப்புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ள உறுப்பினர்களை தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறார்.

மாலத்தீவுகளுக்கு இந்தியா இராணுவ உதவி

antony222.jpgமாலத்தீ வுகளுக்கு இந்தியா வழங்குகின்ற பாதுகாப்பு உதவிகள் இந்தியாவின் சொந்த நலன் கருதி செய்யப்படுபவை என்று வந்துள்ள ஊடக அறிக்கைகளை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. ஆண்டனி மறுத்துள்ளார்.

மாலத்தீவுகளுக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள ஆண்டனி, இருநாடுகளும் பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், மாலைதீவுகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் அண்டனிக்கும், மாலத்தீவுகளின் அதிபர் மொஹமது நஷீத் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின்போது பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்கள் குறித்து பல தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மாலத்தீவுகளின் தேசிய பாதுகாப்புப் படைக்கு இந்தியா ஒரு ஹெலிக்கொப்டரை வழங்கவுள்ளது.இரு நாடுகளின் இராணுவமும் கடற்படையும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.

“பிரபாகரன் திரைப்படம்” – மாவீரர் தினத்திற்கு பிறகு படப்பிடிப்பு ஆரம்பம்

Pirabakaran_in_Timeதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பற்றி இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் திரைப்படம் இயக்கவுள்ளார். இப்படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படவுள்ளது.  விடுதலைப் புலிகளின் தற்கொடையாளிகளைப் பற்றி ஏற்கனவே இவர் இயக்கிய ‘சயனைட்’ திரைப்படம் விருதுகளையும் பெற்றுள்ளது.

இயக்குநர் ரமேஷ், ‘’பிரபாகரனைப் பற்றிய படத்துக்கான திரைக்கதை தயாராகி விட்டது. ஆனால், பிரபாகரனாக யார் நடிப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவுள்ளது.

அந்தப் பாத்திரத்தில் நடிப்பதற்கு மிகத் திறமையுள்ள நடிகரை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், ஏற்கனவே தமக்கு என ‘இமேஜ்’ ஒன்றைக் கொண்டிருக்கும் நடிகர் எவரும் வேண்டாம்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் “எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளுக்குப் பின்னர் தான் படப்பிடிப்பை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

நவம்பர் 27 ஆம் நாளை கடந்த இரு பத்தாண்டு காலமாகப் புலிகளின் தலைவரும் தமிழ் மக்களும் மாவீரர்கள் நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த நாளில் பிரபாகரன் தனது உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் உரையாற்றுவது வழக்கம்.

எதிர்வரும் நவம்பர் 27 ஆம் நாளில் பிரபாகரன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவில்லை எனில் அது, பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக சிறிலங்காப் படையினர் கூறுவதை மேலும் உறுதிப்படுத்திவடும் என உலகு எங்கும் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் கவலைப்படுகிறார்கள். அப்படி அவர் நவம்பர் 27 ஆம் நாள் மக்கள் முன் வரவில்லை என்றால், எனது திரைக்கதையிலும் உச்சக்கட்டக் காட்சியிலும் நான் மாற்றங்களைக் கொண்டுவருவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

அவரேதான் இந்தத் திரைப் படத்தைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார். மலேசியா வாழ் தமிழர்கள் இருவர் படத்துக்கு நிதி வழங்குவார்கள் எனத் தெரிவித்த அவர், நிதி வழங்குனர்களின் பெயர்களை வெளியிட மறுத்துவிட்டார்.

பிரபாகரனின் மரணம் பற்றி ஏன் சந்தேகம் என்று ரமேஷிடம் கேட்கப்பட்டதற்கு, பிரபாகரன் தனது கழுத்தில் சயனைட் அணிந்திருக்கவில்லை. அத்துடன், தனது அடையாள அட்டையையும் வைத்திருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் உளவியலை அறிந்தவர்கள் இவை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறார்கள் என்று பதிலளித்தார்.

மகஸின் சிறைச்சாலை தமிழ்க் கைதிகள் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதம்?

remant.jpgமகஸின் சிறைச்சாலை தமிழ் அரசியல் கைதிகள் இன்றுமுதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாம் முன்வைத்த கோரிக்கைகள் இது வரை நிறைவேற்றப்படாமையை ஆட்சேபித்தே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைச்சாலை அரசியல் கைதிகள் ஆரம்பிக்கின்றனர் எனவும் கூறப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டும் அதற்குரிய பதில் இதுவரை கிடைக்கவில்லை என்று சிறைக்கைதிகள் தெரிவித்தனர் எனத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

இந்தப் போராட்டம் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை நீதி அமைச்சர் மிலிந்த மொரகொடவிடம் அரசியல் கைதிகள் கையளிக்கவுள்ளனர் எனவும் அறியப்படுகிறது.

இலங்கை விமானப்படையே உலகின் முதல்தர படையாகும் – பாதுகாப்பு செயலர்

gothabaya.jpgபயங்கர வாதத்திற்கு முகம் கொடுத்து அதனை வெற்றி கண்ட உலகிலேயே முதல்தர விமானப் படை இலங்கை விமானப் படையாகுமென்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். 30 ஆண்டுகளாக எமது நாடு பாரதூரமான பிரச்சினைகளுக்கும், யுத்தங்களுக்கும் முகம் கொடுத்து அதனை வெற்றிகொண்டுள்ளது. இது போன்று நிலைமை மீண்டும் ஏற்படாத வகையில் பாதுகாத்துக் கொள்வது சகலரதும் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை, சீனக்குடா விமானப் படை பயிற்சி கல்லூரியில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் விமானப் படைவீரர்களுக்கான கேடயங்களும், சான்றிதழ்களும் வழங்கும் வைபவம் நேற்று இடம்பெற்றது.

சீனக் குடா விமானப் படைத்தளத்தில் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விமானப் படையில் பல்வேறு பயிற்சிகளை முடித்துக் கொண்ட 329 விமானப் படைவீரர்கள் நேற்று வெளியேறினார்கள். இவர்களில் சுமார் இரண்டரை வருடகால பயிற்சிகளை பூர்த்தி செய்த 6 விமான ஓட்டிகளும், 16 அதிகாரிகளும் அடங்குவர். பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,

உலகிலேயே எம்மைவிட பலமான விமானப் படைகள் உள்ளன. எம்மைவிட ஆயுத பலங்கள் மற்றும் விமான பலங்களையும் வளங்களையும் கொண்ட விமானப் படைகள் உள்ளன. எனினும் மிகவும் குறைந்த வளங்களையும் விமானங்களையும் பயன்படுத்தி பயங்கரவாதத்தை வெற்றி கண்ட உலகிலேயே முதல்தர விமானப் படை இலங்கை விமானப் படையாகும்.

பயங்கரவாதத்தை வெற்றி கொள்ளும் பாரிய நடவடிக்கையில் விமானப் படையின் பங்களிப்பு மிகவும் மகத்தானது பாராட்டுக்குரியது. தாய்நாட்டை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சகலருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

தொழில் ரீதியாக பெற்ற பயிற்சிகளை மிகவும் அர்ப்பணிப்புடன் எமது படை வீரர்கள் வெளிக்காட்டினார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த காலக்கட்டத்தில் விமானப் படைக்குரிய கடமைகளுக்கு மேல திகமாக தரைவழி பாதுகாப்பு கடமைகளையும் சிறந்த முறையில் முன்னெடுத்தனர் என்றும் தெரிவித்தார். விமானப் படைக்குச் சொந்தமான எம்.ஐ.24 ரக தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மூன்றும், மிக்-27 ரக தாக்குதல் விமானங்கள் மூன்றும் வானில் பறந்து சாகசங்கள் செய்தது அனைவரையும் வியக்கச் செய்தன. பல்லாயிரம் அடி உயரத்திலிருந்து பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து பரசூட் மூலம் பறந்து பதினொரு விமானப் படை வீரர்கள் தங்களது சாகசங்களை காண்பித்தனர்.

மின்னல் வேக உசைன் போல்ட் 200மீ. உலக சாதனை

17-husain-bolt222.jpgஉலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உசைன் போல்ட் பெர்லினில் நடைபெறும் உலக தடகள அமைப்பின் உலக சாம்பியன்ஷிப் 200மீ ஓட்டப்பந்தயக்தில் 19.19 வினாடிகளில் இலக்கை எட்டி மீண்டும் ஒரு புதிய உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே பெர்லினில் 100மீ. சாம்பியன் பட்டத்தை உலக சாதனையுடன் வென்றார் உசைன்போல்ட்.

சரியாக ஒரு ஆண்டிற்கு முன் உசைன் போல்ட் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 200மீ. ஓட்டத்தில் 19.30 வினாடிஅக்ள் என்று உலக சாதனையை நிகழ்த்தினார். ஆனால் நேற்று மேலும் 11 வினாடிகளை மிச்சம் பிடித்தார் உசைன் போல்ட்.

இவருக்கு அடுத்தபடியாக பனாமா வீரர் அலான்சோ எட்வர்ட், 0.62 வினாடிகள் கூடுதல் எடுத்துக் கொண்டு இலக்கை எட்டி இரண்டாவது இடம் வந்தார்.

அமெரிக்க வீரர் வாலஸ் ஸ்பியர்மன் 3-வது இடம் பிடித்தார். ஐ.ஏ.ஏ.எஃப். சாம்பியனான டைசன் கே காயம் காரணமாக இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தயான் ஜயதிலகவை திருப்பி அழைத்தது யார்? பிரதி வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்க மறுப்பு

26parliament.jpgஜெனீவா விலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தயான் ஜயதிலகவை நாட்டுக்குத் திருப்பி அழைத்தது யார் என்பதைத் தன்னால் கூற முடியாதென பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா புதன்கிழமை சபையில் கூறியதுடன், இது தொடர்பாக பதிலளிக்க மறுத்துவிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட எம்.பி.யான லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கே பிரதி அமைச்சர் பைலா இவ்வாறு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அளப்பரிய சேவை புரிந்த தயான் ஜயதிலகவை இலங்கைக்கு திருப்பி அழைத்தது ஏனென்றும் அவரை இவ்வாறு அழைத்தது யார் என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதியமைச்சர் பைலா, “அதற்கு நான் பதிலளிக்க மாட்டேன்’ என்று கூறிவிட்டார்.

அத்துடன், தயான் ஜயதிலக இஸ்ரேல் அழுத்தத்தினாலா அல்லது வேறு ஏதேனும் அழுத்தத்தினாலா நாட்டுக்குத் திருப்பி அழைக்கப்பட்டாரென மற்றொரு ஐ.தே.க. எம்.பி. எழுப்பிய கேள்விக்கும் பிரதியமைச்சர் பதிலளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டார். இதேநேரம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதால் இலங்கைக்கான அனைத்து உதவிகளும் நெதர்லாந்தினால் நிறுத்தப்படுவதாக நெதர்லாந்து அமைச்சர் ஒருவர் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார் என்றும் இதன் பிரகாரம் நெதர்லாந்து உதவிகள் எதுவும் நிறுத்தப்பட்டிருக்கிறதா என லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த ஹுசைன் பைலா;

அவ்வாறு எதுவுமில்லையென மறுத்ததுடன் நெதர்லாந்து அரசின் 2009 ஆம் ஆண்டின் புதிய கொள்கைக்கு அமைய எதிர்காலத்தில் நிதி வழங்க வேண்டிய திட்டங்கள் குறித்து தீர்மானிக்கும் உரிமை கொழும்பிலுள்ள தூதுவராலயம் மற்றும் நெதர்லாந்து அரசுக்கு உள்ளதென அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கை தொடர்பாக மனிதாபிமான உதவிகளும் மனித உரிமை விடயங்கள் தொடர்பான ஒத்துழைப்புகளும் தொடர்ந்தும் இருந்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 1,12,543 வீடுகள் நிர்மாணம்

dinesh.jpgசுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை ஓர் இலட்சத்து 12 ஆயிரத்து 543 வீடுகள் மீள நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுனாமி மீள்கட்டுமானத்திற்கெனக் கடன் உதவியாவும், நிதி உதவியாகவும் 1006.58 மிலியன் அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றதாகவும் அமைச்சர் கூறினார். ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய வாய்மூல விடைக்கான கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே அமைச்சர் குணவர்தன இந்தத் தகவலை வெளியிட்டார்.

சுனாமியால் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு, பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களின் தொகை யாது என்றும், மீள நிர்மாணித்துக் கொடுக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, கிடைக்கப்பெற்ற நிதி உதவிகள் தொடர்பாக விளக்கமளிக்குமாறும் ரவி கருணாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, ‘சுனாமிப் பேரலையால் 23,275 பேர் மரணித்துள்ளனர். 1,93,765 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் தவிர்ந்த பகுதிகளில் அரசாங்கத்தினால் 68,814 வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர், வெளியூர் அரச சார்பற்ற நிறுவனங்களால் 43,729 வீடுகள் மீள நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சுனாமி மீள் கட்டுமானத்திற்காக கடனுதவியாக 300.43 மில்லியன் அமெரிக்க டொலரும், நிதியுதவியாக 706.15 மில்லியன் டொலரும் கிடைக்கப்பெற்றன’ என்றும் குறிப்பிட்டார்.