25

25

லாக்கர்பீ: ஸ்காட்லாந்து சட்டங்களுக்கு உட்பட்டே மெக்ராஹிக்கு விடுதலை வழங்கப்பட்டதாக கூறுகிறார் நீதியமைச்சர்

megrahifora.jpgலாக்கர் பியில் 1988 இல் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான லிபிய நபரை விடுதலை செய்வதற்கான தனது முடிவு ஸ்காட்டிஸ் சட்டங்கள் மற்றும் பெறுமானங்களின் அடிப்படியிலானது என்றும், இராஜதந்திர, அரசியல் மற்றும் பொருளாதார அம்சங்களுக்கு அதில் இடம் கிடையாது என்றும் ஸ்காட்டிஷ் நீதியமைச்சர் கென்னி மக் அஸ்கில் கூறியுள்ளார். அப்தல் பஸத் மெக்ராஹி என்னும் அந்த நபர் விடுதலை செய்யப்பட்டமை மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட வெற்றிவீரருக்கான வரவேற்பு ஆகியவை குறித்து சர்வதேச கண்டனம் எழுந்துள்ளது.

ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், அந்த வரவேற்பு பொருத்தமற்றது என்று கூறிய மக் அஸ்கில் அவர்கள், வரவேற்பு குறைந்த அளவிலேயே நடக்கும் என்று தமக்கு உறுதி வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறினார். குணப்படுத்த முடியாத புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், மனிதாபிமான அடிப்படையில் மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டார்.

தமிழர் அரசியல்ரீதியாக தம்மை ஒழுங்கமைத்துக் கொள்வதை நோக்கி… : ரகுமான் ஜான்

Rahuman Janஓகஸ்ட் 2ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழர்களுடைய அரசியல் எதிர்காலத்தின் குறைந்தபட்ச வரையறை’ என்ற தலைப்பிலான சந்திப்பில் தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்பகால உறுப்பினரும் பின்னர் தீப்பொறிக் குழுவாகச் செயற்பட்டவரும் தீப்பொறியின் வெளியீடாக அமைந்த உயிர்ப்பு சஞ்சிகையின் ஆசிரியருமான ரகுமான் ஜான் (ஜான் மாஸ்ரர்) வழங்கிய ஆரம்ப உரை.
._._._._._._._._.

நீண்ட காலத்தின் பின்பு ஒரு பகிரங்க அரங்கில் உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேசம்நெற் இந்த கூட்டத்திற்கு என்னை அழைத்த போது நான் பலரது கருத்துக்களையும் கேட்கலாமே என்ற ஆர்வத்தில் சம்மதித்து விட்டேன். ஆனால் இங்கு வந்த பின்புதான் நான் உரையாற்ற வேண்டும் என்று கூறினார்கள். இதில் சற்று சங்கடங்கள் இருந்தபோதிலும், எல்லா உரையாடல்களும் ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கித்தானே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் நான் சம்மதித்தேன். இப்போதும் கூட, நான் ஒரு உரையாடலை தொடக்கி வைப்பவன் என்ற வகையிலேயே பேச ஆரம்பிக்கிறேன். இதனைத் தொடர்ந்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடலுக்கு இது வழிகோலுமாயின் எனது முயற்சியில் நான் வெற்றி பெற்றதாக கருதுவேன்.

ஒரு இருண்ட காலத்தில் இருந்து இப்போதுதான் நாம் படிப்படியாக வெளியே வந்து கொண்டிருக்கிறோம். நந்திக் கடற்கரையில் தோற்கடிக்கப்பட்டது புலிகள் அமைப்பின் தலைமை மட்டுமல்ல. தமிழ் தேசமும், அதன் அரசியலும் கூடத்தான் முறியடிக்கப்பட்டது. அங்கு அவமானப்படுத்தப்பட்டது ஒரு தனிமனிதன் மட்டுமல்ல, முழுத் தமிழருக்கும் தான் சிங்கள பேரினவாதம் கோவணம் கட்டி அசிங்கப்படுத்தியது. தனியொரு அமைப்பிடமும், அதன் தலைமையாக அமைந்த தனியொரு மனிதனிடமும் விடப்பட்டிருந்த தமிழரது தேசியவிடுதலைப் போராட்டமானது, அதன் தலைமையை இழந்து தோற்று அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலைமையில் போராட்டத்தை தொடர்வது என்பது ஒரு புறமிருக்க, கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை பெற்றுக் கொள்வது கூட கேள்விக்குரிய ஒரு விடயமாகிவிட்டுப் போயுள்ளது. ஈழத்தமிழர் அரசியல்ரீதியாக அநாதைகளாக்கப் பட்டுள்ளார்கள். அரசியல் தலைமையானது வெற்றிடமாக விடப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட கையறு நிலையில் இருந்து மீண்டெழும் முகமாக, எஞ்சியுள்ள போராளிகளையும், ஏற்கனவே சிதறடிக்கப்பட்டிருந்த செயற்பாட்டாளர்கள் (Activist) போன்றோரை ஒருங்கிணைத்து ஒழுங்கமைப்பது என்பது கூட பல சிக்கல்களை முறியடித்தே முன்னேறியாக வேண்டியுள்ளது. கடந்த காலத்தில் நடந்து முடிந்துபோன கசப்பான அனுபவங்களும், அவை ஏற்படுத்திவிட்டுப் போயுள்ள வடுக்களும் ஒரு புறம் என்றால், இப்போது எம்மத்தியிலே உள்ள கருத்து வேறுபாடுகள் அதினைவிட பெரிய தடையாக வியாபித்து நிற்கிறது. இந்த தடைகளையும் விதமாக சில விவாதங்கள் ஆங்காங்கே, ஒழுங்கமைக்கப்படாத விதத்தில் என்றாலும் நடைபெறுவது உண்மையே என்றாலும், துரதிஸ்டவசமாக இவை வெறுமனே பொதுப்புத்தி (commonsense) மட்டத்திலேயே நடைபெற்று வருவது வேதனை தரும் விடயமாக இருக்கிறது.

பொதுப்புத்தி என்பது விஞ்ஞானபூர்வமான கோட்பாட்டினால் அறிவொளியூட்டப்பட்டது (Enlighten) அல்ல. மாறாக, ஆதிக்க சித்தாந்தத்தினால் அறிவுறுத்தப்படுவது (Informed) ஆகும். ஆதிக்க சக்திகள் தமது அதிகாரப்படிநிலைகளை பேணிக் கொள்ளும் விதத்தில் பல கருத்துப் படிமங்களை கட்டமைத்து, அவற்றை தமது கைகளில் உள்ள வெகுஜன சாதனங்களின் துணை கொண்டு ஜனரஞ்சகப்படுத்தி வைத்துள்ளது. இந்த வகையான கருத்துப்படிமங்களே எமது பொதுப்புத்தியில் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. எனவே, பொதுப்புத்தி மட்டத்தில் நாம் எனது விவாதங்களை, உரையாடல்களை தொடரும் வரையில், நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஆதிக்க உறவுகளையே மீளக்கட்டமைத்துக் கொண்டு இருக்கப்போகிறோம். இந்த இடர்பாட்டில் இருந்து விடுபடுவதானால் நாம் இந்த ஆதிக்க சிந்தாந்தகளில் மேலாதிக்கத்தை முறியடித்து, புரட்சிகர சித்தாந்த மேலாண்மையை நிறுவியாக வேண்டியுள்ளது. விடயங்களை நாம் கோட்பாட்டு, அரசியல் மட்டத்தில் அணுகும் போது மட்டுமே இப்படியான ஒரு நிலைமை சாத்தியப்படும்.

இன்று எம்மிடையே நடைபெறும் விவாதங்களை சற்று உற்று நோக்கினால் நாம் பயங்கரவாதம் பிரிவினைவாதம் பெரும்பான்மை – சிறுபான்மை போன்ற பல சொற்பதங்களை சர்வசாதாரணமாக காண முடியும். சற்றே இவற்றை கட்டுடைக்கமுயன்றால் இவை ஒவ்வொன்றும் ஆதிக்க சக்திகளான ஏகாதிபத்தியம் மற்றும் சிங்கள பேரினவாதம் என்பவற்றால் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை இனங்கண்டு கொள்ள முடியும். உதாரணத்திற்கு ஒரு விடயத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். பயங்கரவாதம் என்றால் என்ன?. இவர்கள் சொல்வது போல அரசியல் நோக்கங்களை வன்முறை மூலமாக அடைய முயல்வது பயங்கரவாதமா? அப்படியானால் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி மாற்றத்தை வன்முறை மூலமாகத்தானே இவர்கள் செய்தார்கள். அல்லாவிட்டால் பொதுமக்களை இலக்காக கொள்வது பயங்கரவாதமா? ஈராக்கின் அதிர்ச்சி வைத்தியமும், இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் நடைபெறும் வெறும் பக்கவிளைவுகள் (collateral damage) என்று இவர்கள் உதாசீனப்படுத்தும் பொது மக்களது இழப்புகள் இவர்களைப் பொறுத்தவரையில் பயங்கரவாதமாக ஆகாமற் போவது எப்படி சாத்தியமாகிறது? ஒரே விளக்கத்தைதான் நாம் எட்ட முடியும். அதாவது, இந்த ஆதிக்க சக்திகள் வன்முறையை பயன்படுத்துவதற்கான உரிமையை தமது ஏகபோகமாக வைத்துக் கொள்ள முயல்கிறார்கள். மக்களது போராட்ட முயற்சிகள் அத்தனையையும் களங்கப்படுத்த கட்டமைக்கப்பட்ட புனைவுதான் இந்த பயங்கரவாத பூச்சாண்டியாகும்.

அமெரிக்காவில், ஆயுதம் தாங்கிய வன்முறைகள் மூலமாக பெருமளவிலான அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் அநியாயமாக கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்: இந்த நிலையில், சமுதாயத்தில் கட்டற்ற விதத்தில் புளக்கத்தில் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மக்கள் நலன் விரும்பிகள் எடுக்கும் அத்தனை முயற்சிகளையும், ஆயுதம் ஏந்துவதற்கான தனிமனிதனது அரசியல் அமைப்பின் மூலமாக உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள உரிமை பற்றி கூச்சலிட்டு ஒரு வலதுசாரிக் கும்பல் குழப்பியடித்துக் கொணடிருக்கிறது. அதேவேளை இதே கும்பல் தேசங்கள் தம்மை தற்காத்து கொள்வதற்காக ஆயுதம் தரிப்பதற்காக உள்ள உரிமையை பயங்கரவாதம் என்று பூச்சாண்டி காட்டுகிறது. இது மிகவும் அயோக்கியத்தனமானதாகும். இப்படியாக நாம் எம்மையும் அறியாமல் ஆதிக்க சக்திகளது ஆய்வுச் சட்டகத்துள் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதில் விழிப்பாக இருக்க வேண்டும். இது நிறைவேறாத வரையில் நாம் எமது நோக்கத்தில் ஒரு அங்குலமேனும் முன்னேறுவது சாத்தியமில்லாமல் போய்விடும். “நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்ற வாசகங்களை நாம் எண்பதின் ஆரம்பம் வரையில் அடிக்கடி கேட்கக் கூடியதாக இருந்தது. பிற்காலத்தில் இந்த வாசகம் மட்டுமல்ல, அது சுட்டி நிற்கும் கருத்துச் சுதந்திரம் என்பது கூட எமது சமூகத்தில் தொலைந்துதான் போனது. எண்பதுகளில் புலிகளது ஏக பிரதிநிதித்துவம் பற்றிய ஒற்றைப் பரிமாண சிந்தனையுடன் தமிழரது அரசியலானது முடங்கிப் போனது. அதனால்தான் இப்போது நாம் 1976 ம் ஆண்டின் “வட்டுக்கோட்டை தீர்மானத்தை” தூசு தட்டி எடுத்து மீண்டும் ஒரு தடவை கருத்துக் கணிப்பு நடத்தியாக வேண்டியுள்ளது.

இந்த முப்பத்தி மூன்று ஆண்டுகால இழப்புகளையும் ஈடு செய்வது என்பது அத்தனை இலகுவான காரியமல்ல. நாமெல்லோரும் வெளிப்படையாகவும், மனம் திறந்தும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதுவும் கோட்பாட்டு, அரசியல் தளத்தில் தீவிரமாக சிந்தித்து, விரிவான கருத்தாடல்களை மேற்கொண்டாக வேண்டியுள்ளது. அப்படியாக செய்தால் மட்டுமே நாம் ஒவ்வொருவரும் எங்கெங்கு நிற்கிறோம் என்பது தெளிவாகும். இந்த நிலையில் மட்டும்தான் கருத்தொற்றுமை காண்பதும், அல்லது குறைந்தபட்சம் எமக்குள் உள்ள வேறுபாடுகள் எவை எப்பது பற்றியாவது எல்லைக் கோடுகளை நாம் கீறிக் கொள்வது சாத்தியப்படும். அப்படியாக செய்வதனால் மட்டுமே ஒருங்கிணைவதோ, அல்லது கூட்டு செயற்பாட்டிற்கான அடித்தளங்களை இடுவதோ சாத்தியப்படும். இதனால் நாம் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது, விவாதித்தாக வேண்டியுள்ளது.

மாற்று கருத்தை கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ள, ஆங்கிலத்தில் சொல்வார்களே Agree to Disagree என்று, அது போல. விட்டுக் கொடுக்க, தேவைப்படும் போது சமரசங்கள் செய்து கொள்ள நாம் புதிதாக கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இன்னோர் அர்த்தத்தில் பார்த்தால் அரசியல் என்பது விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்பவற்றின் மூலமாக கருத்தொற்றுமையை அடைய முயல்வது என்றும் வரையறை செய்யலாம் அல்லவா? ஆதலால் நாம் எல்லோரும் நிறையவே பேசியாக வேண்டியுள்ளது. அதிலும் அடுத்தவர் தமது கருத்தை முன்வைப்பதற்கான உரிமையை ஏற்றுக் கொள்ளுவதற்கு கற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. ஒத்த நலன்கள் கொண்ட நட்பு சக்திகள் தமக்குள் விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்வது, இணக்கம் காண்பது என்பவை ஒன்றும் மோசமான குற்றச் செயல்கள் அல்ல. இவைதாம் மனித நாகரீகத்தின் அச்சாணிகள் என்ற புரிதல் வந்தால் அதுவே அரை கிணறு தாண்டியது போலத்தான்.

இப்போது நாம் தேசிய பிரச்சனையை அரசியல், கோட்பாட்டு தளத்தில் அணுகுவது பற்றிய பிரச்சனைக்கு வருவோம். நவீன சமுதாயத்தில் தேசத்திற்கு பொருத்தமான அரசியல் வடிவம் தேச – அரசு தான் என்பது அடிப்படையான அரசியல் உண்மையாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும் தனக்கென தனியான அரசை கொண்டிருக்கும் போதுதான் அது தனது முழுமையான உள்ளாற்றலையும் வெளிப்படுதுவதும், உயர்ந்தபட்ச சுபீட்சத்தை அடைவதும் சாத்தியப்படுககிறது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ புரட்சிகளின் பிரிக்க முடியாத ஒரு கூறாக தேச– அரசை நிறுவுவது நடைபெற்றது ஒன்றும் தற்செயலானதல்ல. இதற்கு மாறாக பல்தேச அரசுகள் நிலவ முடியாது என்பதல்ல. ஆனால் இப்படிப்பட்ட நிலையில் தேசங்களுக்கிடையில் தப்பெண்ணங்களும் (Prejudice), சண்டைகளும் சச்சரவுகளும் நிகழ்வது வழக்கமாகிவிடும். இது எவ்வாறு நடைபெறுகிறது என்று பார்ப்போம்.

அரசானது தனது சட்டங்களை முதலாளித்துவ ஜனநாயக நடைமுறைப்படி பெரும்பான்மை மூலமாக நிறைவேற்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு சமூகமும் தான் பிறர் எனக் கருதும் சமூகங்கள் தொடர்பாக பல தப்பெண்ணங்களை (Prejudice) கொண்டிருப்பது இயல்பானதாகும். இப்படிப்பட்ட சூழலில், தேசங்களது எண்ணிக்கையில் மோசமான அசமத்துவம் நிலவும் பட்சத்தில், எண்ணிக்கையில் பலம் கூடிய ஒரு தேசம் ஏனைய தேசங்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் “ஜனநாயகபூர்வமாகவே” சட்டங்களை இயற்றுவதும், அவற்றை செயற்படுத்துவதும் சாத்தியமானதாகிறது. இங்கு நிகழ்வது முதலாளித்துவ ஜனநாயகம் அல்ல. மாறாக ‘பெருன்பான்மைவாதமாகும்’ (Majoritarianism). அதாவது, முதலாளித்துவ ஜனநாயகத்தை அதன் எழுத்துக்களின் அளவில் ஏற்றுக் கொண்டு, அதன் ஆத்மாவை சாகடிக்கும் செயலாகும். ஆனால் ஜனநாயகத்தில் இரண்டாம் தர பிரசைகள் என்ற கருத்தாக்கத்திற்கு இடமில்லையானால், இந்த முரண்நிலையை தவிர்ப்பது எவ்வாறு என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

இங்குதான் பல்தேச அரசுகள் தமது ஏற்பாடுகளை கவனமாக மேற்கொண்டன. அதாவது, முதலாளித்துவ ஜனநாயகமும் இருக்க வேண்டும், ஆனால், அது வெறுமனே பெரும்பான்மைவாதமாக குறுக்கப்படவும் கூடாது. இதனை சாத்தியப்படுத்துவதாயின் நாம் முதலில் ஒவ்வொரு தேசத்திற்கும் குறிப்பான விடயங்களையும், பொதுவில் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதும் என்று விடயங்களை பிரித்துக் கொண்டு, குறிப்பிட்ட தேசங்களுக்கு பிரத்தியேகமாய் அமைந்த விடயங்களை அந்தந்த தேசங்கள் மட்டுமே தீர்மானிப்பதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை பொதுவில் பெரும்பான்மை மூலமாக தீர்மானிப்பது என்றும் வரையறுத்தாக வேண்டியுள்ளது. இப்படியாக ஒவ்வொரு தேசத்தினதும் மொழி, கலாச்சாரம், பிரதேசம், பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி போன்றவற்றை தனித்தனியே அந்தந்த தேசங்களே தீர்மானித்துக் கொள்வதாகவும், எல்லா தேசங்களுக்கும் பொதுவான அம்சங்களை மாத்திரம் எல்லா தேசங்களும் சேர்ந்து மத்தியில் தீர்மானிப்பதாகவும் ஒரு ஏற்பாட்டை கற்பனை செய்து கொள்வோமேயானால், அதுவே கூட்டாட்சி (Confederation), சமஷ்டி (Federal system), மாநில சுயாட்சி (Regional Autonomy) என்று வெவ்வேறு பெயர்களுடன், வேறுபட்ட அளவிலான அதிகாரப் பகிர்வு மத்திய – மாநில அரசுகளுக்கிடையில் நிலவும் ஏற்பாடுகளாக இருப்பதை நாம் காண முடியும்.

இந்த வகையான ஏற்பாட்டின் மூலமாக ஒவ்வொரு தேசமும் தனது தனித்துவ தன்மைகளை பேணிக் கொள்வதுடன், பல்தேசிய அரசில் இடம் பெறுவது சாத்தியப்படுகிறது. இந்த ஏற்பாடுகள், அந்தந்த நாடுகளில் “பிரிவினைவாதத்தை” தோற்றுவித்து விடவில்லை. மாறாக, இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டின் மூலமாக மட்டுமே அந்தந்த நாடுகளில் இருந்த தனியரசுக்கான கோரிக்கைகள் கூட தனிக்கப்பட்டன. ஆகவே பல்தேச அரசு என்பது வரலாற்றில் என்றுமே சாத்தியப்படாதது அல்ல. தற்போதும் நடைமுறையில் இருந்து வரும் ஒரு ஏற்பாடேயாகும். எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தேசம் தானாக முன்கையெடுப்பதன் மூலமாக, எண்ணிக்கையில் சிறியனவாக இருக்கும் தேசங்களது சந்தேகங்களை களைந்து, அவர்களது பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமையையும் உத்தரவாதப்படுத்துவதன் மூலமாகவே இப்படிப்பட்ட பல்தேச அரசுகளை சாத்தியமானதாக ஆக்கின. இப்படிப்பட்ட ஒரு விரிவான சுயாட்சிக்கான ஏற்பாடுகள் இல்லாதவரையில் தேசங்களுக்கிடையில் சண்டைகளும், சச்சரவுகளும் தோன்றுவதும், அது ஒரு கட்டத்தில் யுத்தங்களாக வெடிப்பதும் தவிர்க்கப்பட முடியாததாகிறது. சோவியத் யூனியனது தகர்வை அடுத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற, இன்றும் தொடர்ந்து வரும் யுத்தங்களும் பேரழிவுகளும் இதற்கான சான்றுகளாக அமைகின்றன.

இலங்கையின் நிலைமைகளை எடுத்துக் கொண்டால் சிங்கள தேசத்தின் தலைவர்கள் இலங்கையை ஒரு பல்தேச அரசாக கட்டமைக்கும் அரசியல் முதிர்ச்சியும், தாராள மனப்பான்மையும் இல்லாதவர்களாக இருந்தார்கள். பொன். அருணாச்சலம் கோரிய கொழும்பு மேற்கு தமிழருக்கென தனித் தொகுதி விடத்திலேயே அந்த நம்பிக்கையை பேணத்தவறிவிட்டார்கள். இந்த கோரிக்கை ஒன்றும் ஒரு தேசம் தனக்கென தனிச்சலுகை கோரும் நோக்குடையது அல்ல. எண்ணிக்கையில் குறைந்த அல்லது குடிசன பரம்பலில் அல்லது வேறொரு காரணத்தால் தமது அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்காமற் போய்விடும் என்று ஒரு குறிப்பிட்ட சமூகம் பயப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இப்படிப்பட்ட ஏற்பாடுகள் மூலமாகவே இந்த அச்ச உணர்வு களையப்பட்டுள்ளது. இன்று கூட இந்தியாவில் பெண்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என்று விசேட தொகுதிகள் ஒடுக்கப்பட்டுள்ளன. மலையக மக்களது வாக்குரிமை மற்றும் பிரஜா உரிமை பறிப்பும் இந்த அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய கணிப்பிலிருந்து பிறந்தவையாகும். இதன் மூலமாக தேசிய மற்றும் வர்க்கரீதியில் அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் என்பதும் முதலில் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் வகையில குடிசன பரம்பலை மாற்றியமைக்கும் (Altering Demographic Pattern) ஓர் நடவடிக்கைதான். ஆனால் இது ஒரு நாட்டின் பொருளாதார வளங்களை பகிரும் நடவடிக்கையாக நியாயப்படுத்தப்பட்டது. அப்படி பகிர்வதாயினும் அதனை செய்வதற்கு சிங்கள தேசம் தமிழ் தேசத்தின் அனுமதியை பெற்றாக வேண்டாமா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிந்தனையே சிங்கள அரசியல் தலைவர்களுக்கு சகிக்கமுடியாததாக இருந்தது. ஒருக்கால் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்ட பின்பு அது மூலவளங்களுக்கான போட்டியாக மாறி (Resourse War), அந்த பிரச்சனை இனக்கலவரத்தில் தமிழர்களை வெளியேற்றியதன் மூலமாக தீர்வு காணப்பட்டது. ஆயினும் முதலில் இதுவோர் தமிழரது அரசியல் பிரதிநிதித்துவம் பற்றிய பிரச்சனை என்பதும் பின்னர் ஒரு கட்டத்தில்தான் இது வளங்கள் பற்றிய போட்டியாக மாறியது என்பதும் வலியுறுத்தப்பட வேண்டியதொன்றாகிறது.

இப்படியாக அடுத்தடுத்து வந்த மொழி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம், ஒற்றையாட்சி மற்றும் சிங்கள பௌத்தர்களுக்கு முதலிடத்தை அரசியமைப்பின் மூலமாக வழங்கும் அரசியலமைப்புச் சட்டம் போன்ற அனைத்துமே இலங்கையின் பாராளுமன்றத்தில் “ஜனநாயக பூர்வமான” செயற்பாடுகளின் ஊடாகவே நிறைவேற்றப்பட்டனவாகும். அவ்வாறே, இந்த பிரச்சனைகள் தொடர்பாக சட்ட மற்றும் காவல் துறையின் பாதுகாவல் தேடுவதற்கு தமிழர் எடுத்த முயற்சிகளின் போதும் இந்த அமைப்புக்களும் சிங்கள அமைப்புக்களே என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே அவை நடந்து கொண்டன. இந்தவிதமான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தமிழ்மக்கள் ஜனநாயகரீதியாகவும், அகிம்சை வழியிலும், வெகுஜனப் போராட்ட வடிவலுமே தமது ஆரம்ப எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இவையெல்;ம் அரசினால் வன்முறை கொண்டு நசுக்கப்பட்ட நிலையிலேயே எதிர்ப்பியக்கங்களும் வன்முறை வடிவத்தைப் பெற்றன. இறுதியில் அது சென்று முடிந்த இடம் பற்றி பலரும் மிகவும் அதிருப்பியுறுவது புரிந்து கொள்ளத்தக்கதே. ஆனால் தமிழ் மக்கள் அடாவடியாக வன்முறையை நாடினார்கள் என்ற கருத்து தவறானது என்பதை குறித்துக் கொள்வது அவசியமானதாகிறது.

முதலாளித்துவ புரட்சிக்கு முந்திய காலத்தில் மக்கள் படிப்பறிவு அற்றவர்களாகவும், தமது மொழி, கலாச்சாரம் பற்றிய போதிய விழிப்புணர்வு அற்றவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பொதுக்கல்வி, சர்வஜன வாக்கெடுப்பு நிகழும் சமூக அரசியல் சூழலில் இப்படிப்பட்ட அடக்குமுறைகள் அவர்களுக்கு சகிக்கவொண்ணா நிலைமைகளை இலகுவில் தோற்றுவித்து விடக்கூடியவை ஆகின்றன. மக்களது ஜனநாயகபூர்வமான எதிர்ப்பியக்கங்கள் வன்முறை கொண்டு நசுக்கப்படும் பொழுது அவை தன்னியல்பாகவே ஆயுதம் தாங்கிய வடிவை பெற்று விடுகின்றன. இதுதான் வரலாறு திரும்பத் திரும்ப படிப்பிக்கும் பாடமாகும். மக்கள் எவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்டாலும், அவர்களது போராட்டத்திற்கு அடிப்படையான ஒடுக்குமுறைகள் தொடரும் வகையில் அவர்கள் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டங்கள் திரும்பத் திரும்ப வெடிக்கவே செய்யும். இப்போது இன்னமும் தீவிரமாக, கடந்த கால படிப்பினைகளுடன் இன்னமும் எச்சரிக்கையுடன் இது நிகழவே செய்யும். ஆகவே பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள் இந்தவிதமான போராட்டங்களை நசுக்குவது எப்படி என்று சிந்திப்பதிலும் பார்க்க, இந்த போராட்டத்திற்கு திரும்பவும் இட்டுச் செல்லக் கூடிய நிலைமைகளை தணிப்பது எப்படி என்றுதான் சிந்திக்கத் தலைப்பட வேண்டும்.

இப்போது நாம் எம்முன்னுள்ள பிரச்சனைக்கு வருவோம். இன்று தமிழரது போராட்டம் புலிகளது தலைமையில் இவ்வளவு மோசமாக தோற்கடிக்கப்பட்ட நிலையில் நாம் எப்படிப்பட்ட தீர்வுகளை நோக்கி நகரப்போகிறோம் என்பதுதான் இப்போதுள்ள பிரச்சனையாகும். இன்றுள்ள நிலைமையில் மகிந்த ராஜபக்ஷவினால் ( உத்தியோகப்பற்ற விதத்திலும் ஒருவித ஜனரஞ்சக பாணியிலும்) முன்வைக்கப்படும் தீர்வான தமிழரும், சிங்களவரும், முஸ்லிம்களும் தமக்குள் திருமண உறவுகளை மேற்கொள்வது, எல்லா மக்களும் நாட்டின் எந்த பிரதேசத்திலும் சுதந்திரமாக குடியிருப்பதற்கான உரிமைகளை உள்ளடக்கிய ‘ஒன்றுகலப்பது’ (Assimiliation) தொடக்கம், தனியான அரசை அமைப்பது வரையிலான பல தரப்பட்ட தீர்வுகளும் இங்கே சாத்தியமானவைதாம். கூட்டாட்சி, சமஷ்டி, மாநில சுயாட்சி, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த, தனித்தனியாக பிரிந்த சுயாட்சி அலகுகள், மாவட்ட சபைகள், உதவி அரசாங்க அதிபர் பிரிவு மற்றும் கிராம அளவிலான அதிகாரப் பகிர்வு ஆகியவை உள்ளடக்கிய பல தரப்பட்ட விதமான, பல தரப்பட்ட அளவிலான அதிகாரப்பகிர்வு மாதிரிகளையும் ஒருவர் இங்கு கருத்திற் கொள்ள முடியும். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், தனியான ஒரு அரசை நிறுவது என்ற ஒரு முடிவைத்தவிர ஏனைய எல்லா தீர்வுகளுமே எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள, அரசதிகாரத்தை தனது கைகளில் வைத்துள்ள சிங்கள தேசத்தின் நல்லெண்ணம் மற்றும் முன் முயற்சியிலேயே தங்கியுள்ளன.

இப்போதுள்ள பிரச்சனை என்னவென்றால், இலங்கைளில் தேசிய பிரச்சனை என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களுடன், சமஷ்டி என்ற சொல்லையே அசூசையாக நினைப்பவர்களுடன், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பிரிந்த நிலையில் கூட அந்தந்த மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்களை வழங்க மறுப்பவர்களுடன் எவ்வளவு தூரம் சமரசம் செய்து கொள்ளலாம் என்பதுதான். (இந்த இடத்தில் நாம் மேற்கு நாடுகளில் சாதாரண சிறிய நகரங்களுக்கே பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள் இருப்பதை ஒரு ஒப்பீட்டுக்காக குறித்துக் கொண்டு செல்வோம்) இங்கு பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு ஒடுக்கப்படும் தேசம் விரும்பினால் மட்டும் போதாது. ஒடுக்கும் தேசம் தன்னிடம் நியாயமற்ற முறையில் குவித்துக் கொண்டுள்ள அதிகாரங்களை கைவிடத்தயாராக இருக்க வேண்டும். ஒடுக்கும் தேசம் இப்படிப்பட்ட ஒரு முடிவை தானாக முன்வந்து எடுப்பதற்கான நிலைமைகள் தற்போது இலங்கையில் இல்லை என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் இந்த நிலைமைகளை மாற்றியமைக்கும் விதத்தில் நாம் ஏதாவது செய்வது சாத்தியமா? அப்படியானால் அந்த பணியை எங்கிருந்து தொடங்கலாம் என்பதில்தான் எமக்குள் கருத்த வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகளை களைவதற்கு நாம் தீவிரமாக உழைத்தாக வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் இந்த வேறுபாடுகளுடன் நாம் கூட்டு செயற்பாடுகளை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது மேற்கொண்டு கூட்டுத்தண்டனைக் குள்ளாக்கப்பட்டிருக்கும் (Collective punishment) வன்னி மக்களது இன்றைய அவலங்களை குறைக்க முடியுமா என்றாவது சிந்திக்காவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இத்தோடு இன்னொரு விடயத்தையும் நான் தொட்டுச் செல்வது அவசியம் என்று நினைக்கிறேன். இன்றை விவாதங்களில் பேசப்படும் ஒரு குறிப்பான விடயம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது அவசியம் என்று கருதுகிறேன். கடந்த காலத்தில் ஆயுத போராட்டம் நடத்தப்பட்ட விதம், அது கொண்டுவந்து விளைவுகள், இறுதியில் அது தோற்கடிக்கப்பட்ட விதம் என்பவற்றை பார்க்கும் பலரும் வன்முறை மற்றும் வன்முறையற்ற போராட்ட வடிவங்களை ஒன்றிற் கொன்று எதிரெதிரானவையாக வைத்துப் பார்க்கும், இவற்றுள் ஒன்றை முற்றாக நிராகரித்து மற்றொன்றை மாத்திரம் ஆதரிக்கும் போக்கு தென்படுகிறது. இது ஆரோக்கியமான ஒரு போக்கல்ல என்பதுதான் எனது கருத்தாகும். இதன் அர்த்தம் நான் கடந்த கால படிப்பினைகளை நிராகரிப்பதாகவோ அல்லது இன்றுள்ள மக்களதும், செயற்பாட்டாளர்களதும் உணர்வுகளை புரிந்து கொள்ள மறுப்பதாகவோ அர்த்தப்படுத்தப்படக் கூடாது. ஆனால் அவ்வப்போது போராட்டத்தில் ஏற்படும் வெற்றி – தோல்விக்கு ஏற்ப, போராட்டத்தின் வேகம் எழும் – தணியும் நிலைமைக் கேட்ப எமது கொள்கைரீதியான முடிவுகள் அமையக் கூடாது என்ற கருத்தையே நான் இங்கு வலியுறுத்த முனைகிறேன். ஒரு மக்கள் கூட்டம், தேசம் தனது உரிமைகளை வென்றெடுக்க தன்னிடமுள்ள அத்தனை சாதனங்களையும், வழிமுறைகளையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை உடையது என்பதை மறந்துவிடக் கூடாது. மால்கம் எக்ஸ் (Malcom X) கூறியது போல, தேவைப்பட்டால் அத்தனை வழிகளிலும் போராடுவதற்கான உரிமை (If necessary by any means) ஒவ்வொரு சமூகத்திற்கும் இருக்கிறது.

கடந்த காலத்தில் தவறு எங்கு நேர்ந்தது என்றால், போராட்டத்தில் வடிவங்களை அதிகாரப்படிநிலைப்படுத்தியதில்தான். நாம் ஆயுதப் போராட்டத்தையும் ஏனைய போராட்ட வடிவங்களையும் ஒன்றிற்கொண்று எதிரெதிரானவையாக பார்த்தோம். அவற்றுள் ஆயுத போராட்டமே உயர்ந்தது என்றும், இறுதியில் அதுவே ஒரே போராட்ட வடிவம் என்று ஆகிவிட்டது. இப்போது நாம் பெற்ற தோல்வியின் பின்பு அடுத்த கோடிக்கு செல்லும் போதும் அதேவிதமான இன்னொரு தவறைத்தான் மேற்கொள்கிறோம். என்னை பொறுத்தவரையில் போராட்ட வடிவங்கள் ஒவ்வொன்று அவற்றிற்கே உரிய பாத்திரத்தை கொண்டவையாகும்: ஒன்றிற் கொன்று துணையானவை: ஒன்றையொன்று நிரப்பிச் செல்பவை (Compoimentary). போராட்டத்தின் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு போராட்ட வடிவங்கள் முதன்மை பெறும். வரலாற்று நிலைமைகளும், மக்களது எழுச்சியின் தன்மையும், ஏன் எதிரியின் நடவடிக்கைகளும் போராட்ட வடிவங்களை தீர்மானிக்கக் கூடியவையாகும். இவற்றுள் ஒன்றை விலையாகக் கொடுத்து மற்றொன்றை முன்னெடுக்க முனைவது மீண்டும் ஒரு தோல்விக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இது குறித்து எச்சரிக்கையாக இருப்பதும், இந்த பிரச்சனைகள் குறித்தும் விவாதங்களில் கவனத்தை குவிப்பதும் அவசியமானதாகிறது.

சரி இப்போது அரசியல் தீர்வு பற்றிய விடயத்திற்கு வருவோம். சிறீலங்கா அரசுகள் கடந்த பல தசாப்தங்களாக தாம் அரசியல்ரீதியான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க முயன்று வருவதாக பாசாங்கு காட்டி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு தீர்வுத் திட்டத்தை வரைவது என்ன ஒரு காரிய சாத்தியமற்ற ஒரு விடயமா என்று யோசித்துப் பார்ப்போம். குறைந்த பட்சம் தமிழ் மக்கள் தரப்பில் இதுவரையில் பலவிதமான முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, தமிழ் மக்கள் முன்

அவற்றை வைத்து அதனை அவர்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்ய விடுவதில் கொள்கைரீதியாக எனக்கு பிரச்சனைகள் ஏதும் இருப்பதாத தோன்றவில்லை. இதற்கு முன் மாதிரிகள் இலங்கை அரசியலிலேயே ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபை அமைப்பில், கிழக்கு மாகணம் வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருப்பதா இல்லையா என்பதை இரண்டு வருடகாலத்தில் கிழக்கு மாகாண மக்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்கலாம் என்று முன் மொழியப்பட்டு இருக்கிறது. இதே நியாயம் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற வகையிலும் கூட சாத்தியமானதுதானே. தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் எப்படிப்பட்ட அரசில் ஒழுங்கமைப்பிற்குள் சேர்ந்திருக்க விரும்புகிறார்கள்: அல்லது முற்றாக தனியான அரசை அமைப்பதுதான் அவர்களது அரசியல் முடிவாக இன்னமும் இருக்கிறதா என்பதை கண்டறிவது ஒன்றும் காரியசாத்தியமற்ற விடயம் அல்லவே? இது சர்வதேச ரீதியில் கூட அங்கிகரிக்கப்பட்ட நடைமுறையே. கிழக்கு தீமோர் உட்பட அன்றாடம் பல தேசங்கள் இந்த விதமான தீர்வை நோக்கி சர்வதேச அனுசரனையுடன் முன்னேறி வருகின்றன.

இங்கே தேவைப்படுவது பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற அரசியல் முனைப்பேயன்றி, சாத்தியப்பாடுகள் பற்றிய பிரச்சனை அல்ல. இலங்கையில் தேசிய பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது என்று சாதிக்க முனைபவர்கள் மத்தியில் இதனை சமாதானபூர்வமாக தீர்வுகாண முடியுமா என்பது கேள்விக்குறியதே. இப்படியாக அரசியல் தீர்வை சிங்கள தேசத்துடன் இணக்க பூர்வமாக அடைவது சாத்தியப்படாதபோது நாம் எமது முயற்சிகளை சர்வதேச அளவிற்கு நகர்த்துவது தவிர்க்க முடியாததாகிறது. அடுத்த கட்டமாக தமிழர் தாயகத்தை சர்வதேச சமூகத்தின் பொறுப்பில் ஒப்படைக்குமாறு கோருவதும், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ், ஆயுதங்கள் களையப்பட்ட ஒரு அமைதியான சூழ்நிலையில் தனிநாடு அமைப்பது உட்பட விரிவான அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய அரசியல் தேர்வுகளின் ஒரு பட்டியலில் இருந்து தமிழ் மக்கள் தாம் தமது பிரச்சனைகளுக்கு உண்மையான தீர்வாக அமையும் என உறுதியாக நம்பும் ஒரு முடிவை நோக்கி நகரவும், அந்த ஜனநாயகபூர்வமான தேர்வை சிறீலங்கா அரசு அங்கிகரித்தாக வேண்டும் என்ற நிலைமையை தோற்றுவிப்பதை நோக்கி நாம் முன்னேற முடியும்.

இப்போதும் கூட நாம் இலங்கையில் சிங்கள தேசத்துடன் ஒரு முறையாக அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசில் தீர்வை எட்டுவது கொள்கையளவில் சாத்தியமானதே. ஆனால் இது ஒற்றையாட்சி அமைப்பு என்பதன் கீழ் ஒருபோதும் சாத்தியப்பட மாட்டாது. சிங்கக் கொடி உட்பட, சிங்கள பௌத்தத்திற்கு முதலிடம் வழங்கும் அரசியலமைப்பு போன்ற அனைத்தையும் சிறீலங்கா அரசு ஒரு பல்தேச கூட்டாட்சி அமைப்பினை நோக்கி மாற்றிக் கொள்ள முன்வருவது இந்த அரசியல் தீர்வு எதற்கும் முன்னிபந்தனையாகிறது. அதற்கான அரசியல் மனத்திட்பம் (Political Will) சிங்கள தேசத்திடம் இருக்கிறதா என்பதே இப்போதுள்ள பிரச்சனையாகும். சிங்கள தேசத்திடம் இப்படிப்பட்ட ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவது, அது முடியாத போது தமிழர் தாமே சுயாதீனமான ஒரு அரசியல் ஒழுங்கமைப்பை நோக்கி முன்னேறுவது என்பதே இப்போது எம்முன்னுள்ள தேர்வுகளாகும். இதில் எந்தவிதமான ஒரு முடிவை நோக்கி நாம் முன்னேறுவதாக இருப்பினும் முதலில் தமிழர் தம்மை அரசியல்ரீதியாக ஒழுங்கமைத்துக் கொள்வது அவசியமானதாகிறது. இதுவே இப்போது எம்முன்னுள்ள உடனடிப்பணியாகிறது. அதனை தொடங்குவதற்கே நாம் ஒரு விரிவான கருத்துப் பரிமாற்றத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணம் வைத்தியசாலைகள் ரூ. 460 மில். செலவில் அபிவிருத்தி

north-governor.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 460 மில்லியன் ரூபா செலவில் யாழ். குடா விலுள்ள ஆஸ்பத்திரிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்ரசிறி தெரிவித்தார்.

ஆளுநர் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அடங்கலான குழுவினர் சாவகச்சேரி தள வைத்திய சாலை உட்பட்ட அங்குள்ள ஏனைய ஆஸ்பத்திரிகளை நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்படி யாழ். போதனா வைத்திய சாலை, சாவகச்சேரி தள வைத்தியசாலை, மானிப்பாய் பிரசவ விடுதி, கரவெட்டி ஆஸ்பத்திரி, இளவாலை மருத்துவ நிலையம் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டு வருவ தோடு மண்டைதீவு, புங்குடுதீவு, ஊர்காவற் றுறை பகுதிகளில் மருத்துவ வசதிகளை மேம் படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது.

சாவகச்சேரி தள வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவு நிர்மாணப் பணிகள் 80 வீதம் பூர்த்தி அடைந்துள்ளன. இதற்காக 40.2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நீர் விநியோகம் மற்றும் மருத்துவ களஞ் சியம் என்பவற்றுக்காக 10 மில்லியன் ஒது க்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண ஆளு நர் கூறினார்.

இதேவேளை மானிப்பாய் பிரசவ விடுதி 11 மில்லியன் ரூபா செலவில் அமைக்க ப்பட்டு வருகிறது. கரவெட்டி ஆஸ்பத்திரி யின் வெளிநோயாளர் பிரிவு 15 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.  50 வீத பணிகள் பூர்த்தியடைந்துள் ளன. இளவாலை மருத்துவ நிலையம் 9 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப் பட்டு வருகிறது. இதில் 45 வீத பணிகள் பூர்த்தி பூர்த்தியடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. ஊர்காவற்றுறை, மண்டைதீவு, புங்குடுதீவு மற்றும் வேலணை ஆஸ்பத்திரிகள் 41 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரை நகரில் மருத்துவர்களுக்கான விடுதி 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. தென்மராட்சி, கொடிகாமம் ஆஸ்பத்திரிகளில் 10 மில்லியன் செலவில் பிரசவ விடுதிகள் அமைக்கப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோப்பாய், அச்சுவேலி, ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் 8.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இவற்றுக்கான நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாகவும் ஆளுநர் கூறினார்.

இதேவேளை வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் தென்மராட்சி, வடமராட்சி, கோப்பாய், வலிகாமம், சண்டிலிப்பாய் ஆஸ்பத்திரிகளின் சுகதார வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆளுநர் சந்ரசிறி குறிப்பிட்டார். ஆஸ்பத்திரிகளின் நிர்மாணப் பணிகளை நேரில் பார்வையிட்ட ஆளுநர் மேற்படி நிர்மாணப் பணிகளை துரிதமாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முரளிதரன் பந்தை எறிகிறார் – குற்றம் சுமத்துகிறார் மார்க் ரிச்சர்ட்சன்

murali.jpgஇலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பந்தை எறிவதாக நியூசிலாந்து முன்னாள் வீரர் மார்க் ரிச்சர்ட்சன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ரிச்சர்ட்சன் நியூசிலாந்து பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிகிறார். இதனால் தான் அவரது பந்து வீச்சை அடிக்கவும், எதிர்கொள்ளவும் திணற வேண்டி உள்ளது. ஏற்கனவே சில முறை சந்தேகம் எழுந்ததால் அவரது பந்து வீச்சு குறித்து மீண்டும், மீண்டும் சோதனை நடத்தப்பட்டதும், அதில் அவர் விதிமுறைக்குட்பட்டு பந்து வீசி நிரூபித்து இருப்பதும் எனக்கு தெரியும்.

கிரிக்கெட்டில் இப்போது நிறைய தொழில் நுட்பம் வந்துள்ளது. அதன் உதவியுடன் அவரது பந்து வீச்சை பார்க்கும்போது எனது கருத்தை வலுப்படுத்தும் விதமாக காட்சிகள் அமையும். அவரது ஆக்ஷன் காட்சியை டி.வி. ரிப்ளேயில் நுணுக்கமாக பார்க்கும்போது, பந்து வீசுகையில் முழங்கையினை 15 டிகிரிக்கு மேல் வளைக்ககூடாது என்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) விதியை மீறுவது தெரியும்.

திருத்தம் தேவை

பந்து வீச்சு பரிசோதனையின்போது அவரது உடல் முழுவதும் ஏதோ பல்புகள் பொருத்தப்பட்ட படத்தை பார்த்து இருக்கிறேன். பந்தை எறியவில்லை என்று அவர் பரிசோதனை கூடத்தில் நிரூபித்து உள்ளார். ஆனால் சோதனை கூடத்தில் கிரிக்கெட் விளையாடப்படவில்லை. களத்தில் அவரது பந்து வீச்சு வேறு விதமாக இருக்கிறது.

ஐ. சி. சி. யின் மெத்தன போக்கால் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசுபவர்கள் கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க முடிகிறது. எனவே அதற்கு தகுந்தாற்போல் விதிகளை ஐ. சி. சி. திருத்த வேண்டியது அவசியமாகும். தொழில்நுட்பத்தின் உதவியுடன் பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆகிறது. எப்படி சுழல்கிறது என்பதை எல்லாம் பார்க்கிறோமோ தவிர, அதை வீசியவர் யார், எப்படி வீசுகிறார் என்பதை பார்ப்பதில்லை என்றார்.

கிழக்கில் 149 அரச ஊழியர்களுக்கு அமெரிக்க உதவியில் மொழிப்பயிற்சி

tri0000.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள, பதினோரு உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவு செய்யப்பட்ட 149 அரசாங்க அலுவலர்களுக்கும் பதவியாளர்களுக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி தமிழ் மொழி, சிங்கள மொழிப் பயிற்சிகளை வழங்குகின்றது.

பிராந்திய ஆட்சிக்கு ஆதரவளிக்கும் இத்திட்டத்துக்குமூன்று வருடங்களுக்குத் தேவையான  நிதி வழங்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சியில் நவீன மொழிப் பயிற்சி நுட்பங்கள்,  அரசாங்க மொழிகள் கொள்கை, மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்பவை பங்குபற்றுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் ஏறத்தாழ இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிட்டத்தகக்தாகும். 

புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது ஆயுதங்களை வழங்குமாறு இலங்கையின் கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்தது

britain.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது சில வகை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை அரசாங்கம் கோரிய போதிலும், பிரித்தானியா கோரிக்கையை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக 30மி.மி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளைக் கூட வழங்க பிரித்தானியா மறுத்துள்ளது. ஆரம்பத்தில் 30மிமி துப்பாக்கிகளையும், அதற்கான ரவைகளையும் பிரித்தானியா வழங்கியதாகவும், பின்னர் ஆயுத விநியோகத்தை நிறுத்திக் கொண்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

அரை இறுதிக்கு செரினா தகுதி

serena-williams.jpgரோஜர்ஸ் கோப்பைக டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரினா வில்லியம் வெற்றிப் பெற்று அரையிறுக்கு முன்னேறியுள்ளார்.

ரோஜர்ஸ் கோப்பைக்கான மகளிர் டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், உலகின் 2ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செக் குடியரசு நாட்டை சேர்ந்த லூசி சபரோவாவை எதிர்கொண்டார்.

இதில், 6 – 3, 6-  2 என்ற நேர் செட்டில் லூசி சபரோவாவை வென்று, செரினா அரை இறுதிக்கு முன்னேறினார்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் மரியா ஷரபோவா (ரஷியா), எலீனா டெமன்டிவா (ரஷியா), அலிசா கிளைபனோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புபட்டவர் தலிபான் தலைவராக நியமனம்

24082009.jpgபாகிஸ் தானில் புதிய தலிபான் இயக்கத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் பாரிய ஹோட்டல் தாக்குதல் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்கர தாக்குதல் ஆகியன உட்பட பல தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய உயர் கமாண் டோ அதிகாரியாவார். அந்நாட்டில் இயங்கும் அந்நாட்டில் இயங்கும் தலிபான் குழு இன்னமும் சக்திவாய்ந்ததாகவும் தீவிரமானதாகவும் இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால் 28 வயதான ஹக்கிமுல்லா மெஹ்சூத்தின் இந்த நியமனம் அந்நாட்டில் அதிகரித்த தாக்குதல்களுக்கு கட்டியம் கூறலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

முன்னாள் பாக் தலிபான் பய்துல்லா மெஹ்சூத் வடமேற்கு பாகிஸ்தானில் அமெரிக்க சி.ஐ.ஏ. ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுவதை அடுத்து அவரது இடத்திற்கு புதிதாக ஒருவரை தெரிவு செய்வது குறித்து தலிபான் கமாண்டர்களுக்கிடையே இடம்பெற்ற உட்பூசல்களை தொடர்ந்து சில வாரங்களாக நிலவிய ஊகங்களின் பின்னர் புதிய நியமனம் இடம்பெற்றுள்ளது.

பல உயர் தலிபான் கமாண்டர்கள் முன்னாள் தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று வலியுறுத்திய போதிலும் அவர்களால் அதனை நிரூபிக்க முடியவில்லை. தாக்குதலில் அவர் அநேகமாக கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அமெரிக்க, பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகிறார்கள் 

14 மாதங்களுக்கு பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றிய பிடெல் காஸ்ட்ரோ

castro.jpgகியூபா முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ, 14 மாதங்களின் பின் முதல் தடவையாக தொலைக்காட்சியில் தோன்றியுள்ளார். 2006 ஆம் ஆண்டு சுகவீனமடைந்து அறுவைச் சிகிச்சையொன்றுக்கு ஆளாகிய பிடெல் காஸ்ட்ரோ, அது முதற்கொண்டு பொதுமக்கள் முன்னிலையில் தோன்றாது இருந்து வருகிறார்.

வெனிசுலாவைச் சேர்ந்த மாணவர்களுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடும் மேற்படி காட்சியானது கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்டதாக அதிகõரிகள் தெரிவித்தனர்.

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிடெல் காஸ்ட்ரோ மிகுந்த ஆரோக்கியமாகவும் உற்சாகத்துடனும் காணப்பட்டார்.

மேற்படி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர், அந்நாட்டு அரச ஊடகமான “ஜுவென்டட் ரெபல்டி’ பத்திரிகையானது பிடெல் காஸ்ட்ரோவின் புதிய புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.

அந்த புகைப்படமானது ஈகுவடோரின் இடதுசாரி ஜனாதிபதி ராபயல் கொர்ரியாவுடன் பிடெல் காஸ்ட்ரோ உரையாடுவதை பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது

முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான சுற்று நிருபம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு

sri-lankan-students.jpgமுதலாம் ஆண்டுக்கு மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை 6ஆம் ஆண்டுக்கு சேர்த்துக் கொள்வது தொடர்பான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்தார்.

குறிப்பிட்ட சுற்று நிருபத்தின்  பிரகாரமே மாணவர்கள் முதலாம் ஆண்டுக்கும்  5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் 6ஆம் ஆண்டுக்கும் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக இடை வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டுமாயின் அதிபருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பாடசாலையில் இடமிருப்பின் தவறாது மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இதனைவிடுத்து தமது பிள்ளைக்கு பாடசாலைக்கு அனுமதி பெறுவதற்காக வீணே அமைச்சுக்கு வரத் தேவையில்லை என்றும்  அவ்வாறு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்